நவம்பர் 23, 2016

எழுப்புதலைப் பெற விண்ணப்ப ஜெபம்

Image result for revival

அனுதினமும் தனிப்பட்ட வாழ்வில் எழுப்புதலைப் பெற விண்ணப்ப ஜெபம்


1.   பாவ வாழ்க்கை, பின்மாற்றம், ஆவிக்குரிய குளிர்ந்த தன்மை நீங்க
2.   பாவத்தைக் குறித்து ஆழ்ந்த உணர்வடைய, மனந்திரும்ப
3.   உலகப்பிரகாரமான வாழ்க்கையில் அதிக ஈடுபாடு ஏற்படாதிருக்க
4.   சின்ன பாவம், பெரிய பாவம், இரகசிய பாவம், துணிகரமான பாவம், வெளியரங்கமான பாவம், மறைவான பாவம் செய்யாமலிருக்க…
5.   பொய், பொறாமை, புறங்கூறுதல், கசப்பு, விரோதம், பகைமை, வைராக்கியம், கோபம், சண்டை, சபித்தல், வாக்குவாதம், மாய்மாலம், அவிசுவாசம், கவலை, வஞ்சனை, வதந்திகள் பரப்புவது, பொருளாசை, திருடுவது, விபச்சாரம், வேசித்தனம், கொலை செய்தல், பழிவாங்குதல், குடிவெறி, போஜனவெறி, களியாட்டு, சூதாட்டம், போதைபழக்கம், அடிமைத்தனம் இவையனைத்தும் நீங்க …
6.   உலகில் உள்ள அனைத்து காரியங்களையும்விட ஒவ்வொருநாளும் தேவனை நேசித்திட … “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் நீ அன்புகூறுவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக” லூக்கா: 10:27 ன்படி தேவனிடத்திலும், பிறனிடத்திலும் அன்புகூர….
7.   அனுதினமும் தேவபிரசன்னம், மகிமை, கிருபையை பெற
8.   அனுதினமும் தேவாதி தேவனுக்கு கீழ்படிய … ஆவியானால் நடத்தப்பட
9.   அனுதினமும் வேதத்தை வாசித்திட
10.  அனுதினமும் ஜெபித்திட
11.  அனுதின பரிசுத்த வாழ்விற்காக
12.  அனுதின விசுவாச வாழ்விற்காக
13.  அனுதினமும் ஆத்துமபாரம், ஆத்துமாதாயம் செய்ய
14.  விழிப்புணர்வோடு நடக்க, தெளிந்த புத்திக்காக
15.  அனுதினமும் ஆராதிக்க, துதிக்க, பாட, கீர்த்தனம் பண்ண
16.  அனுதினமும் அபிஷேகத்தில் நிறைய, அந்நியபாஷைகள் பேச, நவமொழிகளால் துதிக்க

சபையில் எழுப்புதல் கடந்து வர …


1.   ஆவியானவரின் அசைவாடுதல் கண்கூடாக வெளிப்பட
2.   சபை உயிர்மீட்சி அடைய
3.   ஆவியானவருக்கு கீழ்படிய, அவர் பேசும்போது, அவரோடு இணைந்து செயல்பட
4.   ஆவியானவரின் ஆளுகைக்கு வாழ்வை முழுவதுமாய் ஒப்புக்கொடுக்க … வழிநடத்துதலை புரிந்து கொள்ள
5.   குடும்ப உறவில் சீர்பட … சாத்தானால் தாக்கப்படாதபடி பாதுகாக்கப்பட … ஒருவரை ஒருவர் கனம் பண்ண
6.   குடும்பத்தில் எழுப்புதல் வர … சாட்சியாய் வாழ …. தனிப்பட்ட வாழ்வில் எழுப்புதல் வர ….
7.   சபையை சுத்திகரிக்கப்பட … சபை உயர்த்தப்பட …. சபை தனது அழைப்பை தெரிந்து கொள்ள …
8.   பாவிகளை ஈர்க்கிற சபையாக மாற … பரிசுத்தாவியானவரின் வல்லமையால் இரட்சிப்பு பெற …
9.   விசுவாசிகள் இயேசுவின் மீது அளவற்ற அன்பு வைக்க … வாஞ்சிக்க … நேசிக்க …
10.  சபையானது : அன்பின் வீடாக … ஆறுதலின் வீடாக … ஜெப வீடாக … வெற்றியின் வீடாக … எழுப்புதலின் வீடாக … சுகமாக்கும் வீடாக … ஆவியானவரின் கனிகள், வரங்கள், அடையாளங்கள் நடக்கும் சபையாக …
11.  ஆவிக்குரிய மறுமலர்ச்சி, ஆவிக்குரிய எழுப்புதல், ஆவிக்குரிய புதுப்பித்தல் ஏற்பட …
12.  தனிநபர் எழுப்புதல் உண்டாக … ஸ்தலசபைக்கு எழுப்புதல் ஏற்பட … மூப்பர் குழுவிற்கு எழுப்புதல் ஏற்பட …
13.  சிறுவர் எழுப்புதல் … மாணவர் எழுப்புதல் … ஆண்கள் எழுப்புதல் … பெண்கள் எழுப்புதல் … வாலிபர் எழுப்புதல் ஏற்பட
14.  ஆராதனையில் எழுப்புதல் … ஆத்துமாதாயத்தில் எழுப்புதல் … தேசத்தில் எழுப்புதல் … ஏற்பட …
15.  கர்த்தருக்குப் பயந்த தகப்பன்மார், கர்த்தருக்குப் பயந்த தாய்மார், கர்த்தருக்குப் பயந்த பிள்ளைகள் எழும்ப …

உயிர்மீட்சி அடைய … எழுப்புதல் பெற … வசன விசுவாச அறிக்கை


சங்கீதம்: 80:18 – “… எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம்”.
சங்கீதம்: 119:25 – “என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்”.
சங்கீதம்: 119:37 – “மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:40 – “இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்”.
சங்கீதம்: 119:88 – “உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்”.
சங்கீதம்: 119:107 – “நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்”.
சங்கீதம்: 119:149 – “உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:154 – “எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக் கொள்ளும்; உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:156 – “கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 119:159 – “இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்”
சங்கீதம்: 143:11 – “கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கி விடும்”

ஆபகூக்: 3:2 – “… கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும்; வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்”.

ஏசாயா: 62:1-3 – “சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப் போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன். ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்”.






நவம்பர் 19, 2016

கொர்பான் – Corban - (קרבן)

Image result for Mark: 7:1-13

கொர்பான் – Corban - (קרבן)

ஒரு ஆய்வுக் கட்டுரை

“கொர்பான்” என்னும் சொல் அரமேய பாஷை ஆகும். இது Korban ;  Qorban ; Corban – (Kopßav – Korban – கொர்பான் –  קרבן )  என்றும் சொல்லப்படுகிறது.

இச்சொல் கர்த்தருடைய சமூகத்தில் படைக்கப்பட்ட அல்லது ஏறெடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும் பொதுவாக குறிப்பிட்டு நின்றது. உதாரணமாக … லேவியராகமம்: 1:2; நெகேமியா: 10:35; 13:31 ஆகிய வசனங்களை வாசித்தறியலாம்.
 “கொர்பான்” என்னும் அரமேயச்சொல்லானது - “அண்மையில் கொண்டு வரப்பட்ட பொருள்” என்று அர்த்தமாம். அதாவது, “கர்த்தருடைய சமூகத்தில் காணிக்கையாக கொண்டு வரப்பட்டவை” என்பது கருத்து.

பின்னாட்களில் இது எப்படி மாறிப்போயிற்று என்றால்…


இயேசுவின் நாட்களில் வாழ்ந்து வந்த யூதர்கள் வாழ்க்கைமுறை மாற்றத்தினால் இவ்வழக்கம் வேறுவிதமாக மாறிப்போனது. அதாவது, வயது முதிர்ந்த பெற்றோர்களை தங்களோடு வைத்து பராமரிக்க மனதில்லாமல், அவர்களுக்கு எவ்வித உதவியும் செய்யாமல், அதற்குப் பதிலாக கர்த்தருக்கு காணிக்கை கொடுப்பது போன்று, ஒரு குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து ஒதுக்கி விடும்படி, பரிசேயர்கள் சுயாதீனமாய் உருவாக்கிக் கொண்ட ஒரு முறைமைக்குப் பெயர்தான் “கொர்பான்” என்று அழைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தங்கள் பெற்றோருக்கு கொர்பான் காணிக்கை மூலம் செலுத்திவிட்டு, பெற்றோர்களை ஓரங்கட்டி, கைகழுவி விட்டுவிடுவார்கள். இதனால், அவர்களுடைய பிக்கல்பிடுங்கல்கள் இல்லாமல், தங்கள் மீது எவ்வித உரிமையும் அவர்கள் எடுத்துக் கொள்ளாமல் தங்களை அவர்களிடமிருந்து பிரித்துக் கொண்டு, தங்களை சுதந்தரமாக்கிக் கொண்டார்கள். இது அவர்களுடைய இருதயக் கடினத்தைக் காட்டுகிறது. இதைத்தான் ஆண்டவர் இயேசு கடிந்து கொண்டார்.

மாற்கு: 7:9-13 – “பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்பபடிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்களும் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்”.

வயதான பெற்றோருக்கு பணம் மட்டுமே அவசியம் இல்லை. பெற்ற பிள்ளைகளின் பாசம், அரவணைப்பு, அருகாமை இதைத்தான் விரும்புவார்கள்.  பெற்றோர்கள் மரிக்கும்வரைக்கும் அவர்களுக்கு செய்ய வேண்டிய சகலவிதமான சவரத்தனைகளும், பராமரிப்புகளும் இறுதிவரை பிள்ளைகள் மற்றும் வாரிசுகள் செய்தாக வேண்டும். 

கடமை தீர்ந்தது என்றெல்லாம் சொல்லி ஒதுக்கிவிடவோ, தங்கள் வாழ்நாளில் குற்றமற்ற மனசாட்சியில்லாமலோ வாழ்ந்திட முடியாது. பெற்றவர்கள் பிள்ளைகளை வளர்த்துவிட்டது போல பிள்ளைகளும் பெற்றோர்களை இறுதிவரை வைத்து பராமரிப்பதுதான் தேவநீதி. 

பரிசேயர்கள் சுயமாக தாங்கள் ஏற்படுத்தின கொர்பான் காணிக்கையெல்லாம் கர்த்தருக்கு முன்பாக நீதியாகாது; எடுபடாது என்பதை நாம் ஒருவராகிலும் மறந்துபோகலாகாது.
  




உறவாடுதலா? உபயோகப்படுதலா?

Image result for hebrews 11 1 kjv

உறவாடுகிறோமா? உபயோகப்படுகிறோமா?


திறவுகோல்வசனம்: எபிரேயர்: 11:32 – “பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது”.

இந்த வசனத்தில் ஆறு பேரை எபிரேய நிருபக்காரன் குறிப்பிடுகிறார். இந்த ஆறு பேரில் தாவீது ஒருவன் மட்டும் அரசன். தாவீதைத் தவிர மற்ற ஐந்து பேரும் நியாயாதிபதிகள். இதில் சிம்சோன், சாமுவேல் மட்டும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். காரணம் என்ன? அதைத்தான் இப்பகுதியில் நாம் தியானிக்கப்போகிறோம்.

தனிச்சிறப்பிற்கு காரணம் இவர்கள் இருவரும் நசரேய விரதம் பூண்டவர்கள். இதில் சாமுவேல் – ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், நியாயாதிபதியாகவும் செயல்பட்டான். நசரேயனாகவும் காணப்பட்டான். 

இஸ்ரவேல் மக்கள் சமயத்திற்கேற்றவாறு, காலத்திற்கேற்ப கலாச்சாராம் விட்டு கலாச்சாரம் மாறிப்போக எத்தனித்தாலும், நசரேய விரதம் பூண்டவர்கள் ஒருபோதும் கர்த்தருடைய வேதகலாச்சாரத்தை விட்டு பாரம்பரியத்தை விட்டு பக்திமார்க்கத்தைவிட்டு மாறிப்போகவோ, விலகிப்போகவோ மாட்டார்கள். சகல இஸ்ரவேல் ஜனத்தினின்று தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டு கர்த்தருக்குப் பிரியமானவர்களாகத்தான் வாழ்வார்கள். அதுதான் நசரேய விரதங்காப்பவர்களின் குணாதிசயம்.

ஒருகாலத்தில் நசரேயர் மற்றும் தீர்க்கதரிசிகளும் சேர்ந்து, இஸ்ரவேல் மார்க்கத்துடன் அல்லது யூத மதத்திற்குள் முழுவதுமாக அக்கால கானானிய கலாச்சாரம் மற்றும் புறஜாதிய கலாச்சாரம் கலந்து விடாதபடி அதனைக் காத்தனர் என கூறலாம். அது மட்டுமல்ல… இஸ்ரவேல் மார்க்கம் வேரூன்றி நிலைத்திருக்கிறதென்றால் அதற்கு இந்த நசரேயர்களும், தீர்க்கதரிசிகளுமே காரணம் என சொல்லாம்.

சிம்சோன் – தேவனால் உபயோகப்படுகிறவனாயிருந்தான்.
சாமுவேல் – தேவனோடு உறவாடுகிறவனாயிருந்தான்.

நாம் தேவனால் உபயோகப்படுத்தப்படுகிற பாத்திரமாயிருக்கிறோமா? அல்லது தேனோடு உறவாடுகிற பாத்திரவானாயிருக்கிறோமா? அல்லது பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிற பாத்திரமாயிருக்கிறோமா?

கர்த்தருக்காக உபயோகப்படுகிற பாத்திரமாயிருப்பது சரிதான். அதற்குப் பிறகு என்ன? தூக்கியெறியப்படுகிற நிலைமைக்குள் இருக்கிறோமா? அல்லது தொடர்ந்து உபயோகப்படவும் உறவாடவும் என்கிற நிலைமைக்கு வருகிறோமா?!

உபயோகமா? உறவாடுதலா? எது முக்கியம்?


சாமுவேல் - ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், நியாயாதிபதியாகவும், நசரேயனாகவும் காணப்பட்டான். சாமுவேலின் தனிச்சிறப்பைப் பாருங்களேன். 

தேவனோடு உறவாட ஆசாரிய சேவை; தேவனுடைய பட்சத்திலிருந்து மக்களுக்கு பணியாற்ற தீர்க்கதரிசன ஊழியம்; ஜனத்தை நீதிபரிபாலனம் செய்ய நியாயாதிபதி; தனிப்பட்ட வாழ்வை பரிசுத்தமாக காத்துக்கொள்ளவும், இஸ்ரவேல் மார்க்கத்துடன் அல்லது யூத மதத்திற்குள் முழுவதுமாக அக்கால கானானிய கலாச்சாரம் மற்றும் புறஜாதிய கலாச்சாரம் கலந்து விடாதபடி தடுக்க நசரேய விரதம். கர்த்தரோடு உறவாடுகிற ஒரு மனுஷனை தேவன் எவ்விதம் உபயோகப்படுத்துகிறார் என்று பாருங்கள்.

முதலாவது தேவனோடு உறவாடுங்கள். பின்பு, தேவனால் உபயோகப்படுத்தப்படுவீர்கள்.

வெறும் உபயோகத்திற்காக மாத்திரம் இருந்தால் … வேறு எவ்வித விசுவாச வாழ்வும் நம்மிடம் இராது. ஆவிக்குரிய வாழ்வு வெறுமனே வெறுமையாக போய்விடும். அதேபோல உறவாடுகிற நிலை மட்டும் போதுமானதல்ல; உறவாடுதலோடுகூட உபயோகப்படுதலும் தேவை.

நமது இரட்சகரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்து – இரவெல்லாம் பிதாவோடுகூட உறவாடினார்; ஜெபித்தார்; பகலெல்லாம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தம் ஊழியத்தை செய்தார். உபயோகப்பட்டார். உறவாடுதலும், உபயோகப்படுதலும் அவரது அநுதின வாழ்வில் கிரமமாய் காணப்பட்டது. நாம் அவருடைய பிள்ளைகளல்லவா?! நமது அன்றாடக வாழ்விலும் உறவாடுதலும், உபயோகப்படுதலும் கிரமமாய்க் காணப்படுமானால் … பிதாவின் சித்தம் பட்டணங்களிலும், கிராமங்களிலும் நிறைவேறுமல்லவா?! எனவே,

உறவாடுவோம்! உபயோகப்படுவோம்! கர்த்தர் உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!







நவம்பர் 17, 2016

ஏபோத் - EPHOD

Image result for ephod in the bibleImage result for ephod in the bibleImage result for ephod in the bible

ஏபோத் 

(EPHOD)

ஒரு ஆய்வுக்கட்டுரை

1.   ஏபோத் - ஒரு விக்கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது:


கிதியோன் பொன்னினால் ஒரு ஏபோத்தைச் செய்து ஓப்ராவில் வைத்தான் என்று காண்கிறோம். நியாயாதிபதிகள்: 8:27 – “அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத்தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப்பின்பற்றிச் சோரம் போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிருந்தது”. மீகா இதர விக்கிரகங்களுடன் தொழுகைக்காக ஒரு ஏபோத்தையும் செய்தான். 

நியாயாதிபதிகள்: 17:5 – “மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, …”. நியாயாதிபதிகள்: 18:17,18,20 – “தேசத்தை உளவுபார்க்கப் போய்வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறபோது, …”. “அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான்”. இங்கு ஏபோத் ஒரு விக்கிரகமாகக் குறிப்பிடப்படுகிறது.

2.   ஏபோத் - ஆசாரியன் அணியும் ஒரு ஆடையாகக் குறிப்பிடப்படுகிறது:


சாமுவேல் சிறு பையனாக இருந்தபோது ஒரு சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான் என்றும், அவன் தாய் ஆண்டுதோறும் பலி செலுத்துவதற்கு வரும்போதெல்லாம் அவனுக்கு ஒரு சணல்நூல் ஏபோத்தைத் தைத்துக் கொண்டு வந்தாள் என்றும் அறிகிறோம். 1சாமுவேல்: 2:18,19 – “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்”.

நோபின் ஆசாரியர்கள் 85 பேர் சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தார்கள். 1சாமுவேல்: 22:18 – “அப்பொழுது ராஜா தேவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்று போடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்து பேரை அன்றையத்தினம் கொன்றான்”.

கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தாவீது சணல்நூல் ஏபோத்தை தரித்துக் கொண்டவனாய் நடனமாடினான். 2சாமுவேல்: 6:14 – “தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுபலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம் பண்ணினான்”.

பிரதான ஆசாரியனுக்குரிய ஓர் ஏபோத்தைக் குறித்து வேதம் கூறும்போது … இது ஒரு விலையுயர்ந்த அங்கியாகக் காணப்படுகிறது. யாத்திராகமம்: 28:28,29 – “மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும். ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின் மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்”.  

3.   ஏபோத் – ஒரு நிமித்தம் பார்க்கும் கருவி எனவும் கூறலாம்:


கர்த்தருடைய சித்தத்தை அறிவதற்காக இது பயன்படுத்தப்பட்டது. ஆசாரியர் இதனைச் சுமந்து திரிந்தனர். இப்படியாகச் சவுல், கர்த்தருடைய சித்தத்தை அறிய விரும்பி, அகியாவைப் பார்த்து, “ஏபோத்தைக் கொண்டு வா” என்றான். 1சாமுவேல்: 14:3,18 – “சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்;” “அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்;”.

சவுலுக்கு எதிரான போராட்டத்தில் கர்த்தருடைய சித்தத்தை அறிய, தாவீதும் அபியத்தாரைப் பார்த்து “ஏபோத்தை இங்கே கொண்டு வா” என்கிறான். 

1சாமுவேல்: 23:9 – “தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம் பண்ணுகிறான் என்று தாவீது அறிந்து கொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: “ஏபோத்தை இங்கே கொண்டு வா” என்றான்”.

மேற்கூறிய ஆதாரங்களைக் கொண்டு வேதஅறிஞர்கள் மூன்று வகையான முடிவுகளைக் கொண்டுள்ளனர். அவை:


1.   இது வழிபாட்டுக்குரிய விக்கிரகம்

2.   ஒருவகை அங்கி; இதில் இரு உறைகள் காணப்பட்டன. இது சாதாரணவேளைகளில் விக்கிரகங்களுக்குப் போர்த்தப்பட்டன. ஆனால், கர்த்தருடைய சித்தத்தை அறிய வேண்டிய வேளையில் இதனை ஆசாரியன் போர்த்துக் கொண்டான். இதன் பைகளில் ஊரீம் – தும்மீம் கட்டைகள் காணப்பட்டன. (யாத்திராகமம்: 28:28,29; 35:27,39; 1சாமுவேல்: 2:18).

2ராஜாக்கள்: 23:7 – ல் பெண்கள் அஷோராவுக்கு (அஸ்தரோத்துக்கு) (ஸ்தம்பத்துக்கு) அங்கிகள் தைத்தனர் என்பது, ஏபோத்து விக்கிரகங்களுக்கான ஒருவகை அங்கியாக இருக்கலாம் என்பதற்கு சாட்சி.

3.   ஏபோத்தும் கர்த்தருடைய பெட்டியும் ஒன்றே. இக்கருத்து 1சாமுவேல்: 14:18 –ல் எபிரேய மொழியில் “கர்த்தருடைய பெட்டி” என்பதற்கு செப்துவஜிந்தில் “ஏபோத்” என்று குறிப்பிடப்படுவதால் வந்தது. உடன்படிக்கைப்பெட்டியும் கர்த்தருடைய சித்தத்தை அறிய பயன்பட்டதென்று நாம் அறிவோம். பிந்தின காலத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பெட்டிகள் தோன்றின. ஏபோத் என்பது இந்தப் பெட்டிகளுக்குரிய மற்றொரு பெயர் என்பர் இக்கருத்துடையோர்.

மேலே கூறியவற்றில் இரண்டாவது கருத்து ஒருவேளை உண்மைநிலையை விளக்குவதாக இருக்கலாம். ஏபோத்து ஆரம்பத்தில் ஒரு அங்கியாக இருந்திருக்கக்கூடும். இது ஆரம்பத்தில் சுரூபங்களுக்கு போர்த்தப்பட்டு வந்தது. இவ்வாறு போர்த்தப்பட்டதால் ஒருவேளை அந்த சுரூபமும் ஏபோத்து என்று குறிப்பிடபட்டடிருக்க வேண்டும். சில அங்கிகள் விலையுயர்ந்த பொருட்களால் செய்யப்பட்டு பாரம் மிகுந்தனவாகக் காணப்பட்டன.
கர்த்தருடைய சித்தத்தை அறிய வேண்டிய வேளைகளில் ஆசாரியர் இதனைப் போர்த்துக் கொண்டனர். அல்லது சுமந்து சென்றனர். அல்லாத வேளைகளில் வழிபாட்டிடத்தில் தனியாகவோ அல்லது விக்கிரகங்களுக்குப் போர்த்தப்பட்டோ இது பாதுகாக்கப்பட்டு வந்திருக்கலாம்.
  



நசரேயர், ரேகாபியர் - Nazarite, Rechabites

Image result for Nazarite

நசரேயர், ரேகாபியர்

Nazarite, Rechabites

ஒரு ஆய்வுக் கட்டுரை

யோசுவாவின் தலைமையின் கீழ் கானானுக்குள் புகுந்த இஸ்ரவேலர், யோசுவாவின் காலத்திற்குப் பின்னர் கானானிய வழிபாட்டுடன் ஓரளவு சமரசம் கொண்டு, தேவனாகிய கர்த்தரை விட்டு விலகி, பாகாலை சேவிக்கவோ அல்லது கர்த்தரைப்போலவே பாகாலையும் சேவிக்கவோ முற்பட்டனர். இத்தகைய வழிபாடுகளில் கானானிய செழுமை வழிபாட்டு அம்சங்களான திராட்சை இரசம் குடித்தல், நடனமாடுதல், வேசித்தனம் பண்ணுதல் ஆகிய சீர்கேடுகள் அதிகமாகக் காணப்பட்டன. இவை அனைத்தும் விவாசாய வேளாண்மை சூழ்நிலையிலிருந்துத் தோன்றியவைகள். எனவே, நாடோடிகளாயிருந்து வந்த இஸ்ரவேல் மக்களுக்கு இவை முற்றிலும் புதியவை. பலர் இவற்றை ஆவலுடன் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், வெகு விரைவிலேயே வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தேவனாகிய கர்த்தருடைய மார்க்கத்தின் தனிச்சிறப்பை உணர்ந்த ஒருசில பரிசுத்தவான்கள், இயற்கையை அடிப்படையாகக் கொண்ட இந்த வழிபாட்டின் சீர்கேடுகள், ஆவிக்குரிய மக்களின் பரிசுத்தத்தை எவ்வளவாக பாதிக்கிறது என்பதை உணர்ந்தனர். அதனை வெறுக்கவும் முற்பட்டனர். இவற்றில் புதிதாகக் காணப்பட்ட பல அம்சங்களை வெறுத்து, விசேஷித்த பொருத்தனைகளைச் செய்து தங்களை அந்த கானானிய கலாச்சாரத்திலிருந்து விலக்கிக் காத்துக் கொண்டனர். காத்துக் கொண்டவர்கள் முறையே நசரேயர், ரேகாபியர், தீர்க்கதரிசிகள் போன்றோர். இதனால், இவர்களது தோற்றங்களும் மற்றவர்களைப் பார்க்கிலும் இச்சூழ்நிலையினிமித்தம் விந்தையாகவும் வித்தியாசப்பட்டும் மாறிப்போயிருந்தன.

நசரேயர்


நசரேயர் என்ற எபிரேயச் சொல் “பிரதிஷ்டை செய்யப்பட்டவர்” என்றும் “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்” என்றும் “பிரத்தியேகப்படுத்தப்பட்டவர்” என்றும் பொருள்படும்.

நசரேயப் பொருத்தனை செய்து கொண்ட ஒருவன் தன்னைக் கர்த்தருக்காகப் பிரத்தியேகப்படுத்திக் கொண்ட அல்லது பிறரால் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒருவனாவான். எண்ணாகமம்: 6:2,6-8 – “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: புருசனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை பண்ணினால்,” “அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்”

நியாயாதிபதிகள்: 13:5,7 – “நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்;…”. “அவர் என்னை நோக்கி: நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள்”.

1சாமுவேல்: 1:11 – “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகலநாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்”.

இந்தப் பொருத்தனைகளெல்லாம் தேவனாகிய கர்த்தருக்குள் ஒருவன் உத்தமமாக இருப்பதைக் காட்டப்படுவதற்காகச் செய்யப்படும் ஒன்றாகும். தோற்றத்தில் இது ஒருவனுடைய ஆயுட்காலம் முழுவதும் கொண்டு செயல்பட வேண்டிய ஒன்றாகக் காணப்பட்டது. சிம்சோன், சாமுவேல் இவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக தங்களை ஒப்படைத்தவர்கள். ஆமோஸ்: 2:11,12 – “உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார். நீங்களோ நசரேயருக்குத் திராட்சம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்ல வேண்டாம் என்று கற்பித்தீர்கள்”. ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக பணிக்காக ஒப்படைக்கப்பட்ட இவ்விரதங்கள், பொருத்தனைகள் பிற்காலத்தில் அது மார்க்கத்திற்கேற்ற பொருத்தனையாக மாறிப்போயிற்று.

நசரேயர்களைக் குறித்த பிரமாணம் எண்ணாகமம்: 6 ஆம் அதிகாரத்தில் தரப்பட்டுள்ளது. இதன்படி ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நசரேயப் பொருத்தனை செய்து கொள்ளலாம். எண்ணாகமம்: 6:2,5 – “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: புருசனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை பண்ணினால்,” “அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது, அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்”.

நசரேயன் மூன்று காரியங்களில் தன் பொருத்தனைகளை காத்துக் கொள்ள வேண்டும்:


1.   திராட்சைச் செடியிலிருந்து கிடைக்கும் எதையும் சாப்பிடக்கூடாது; மதுபானம் அருந்தக்கூடாது
2.   பொருத்தனை நாட்களில் முடி சிரைக்கப்படக் கூடாது
3.   மரித்தோர் உடலுடன், பெற்றோர் உடலாயிருந்தாலும் சரி, எந்தவித தொடர்பும் கொள்ளக்கூடாது

இவை யாவற்றையும் முற்கால நசரேயர் பின்பற்றினார்களா? என்பது கேள்விக்குரியது. சிம்சோன் இவற்றை அனுசரிக்கவில்லை என்பது நமக்குத் தெரிந்த ஒன்று.  

லேவியராகமம்: 21:11 –“பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளாமலும்,” – மரித்தோருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்பது இதற்குமுன் கூறப்படவில்லை. இந்த விஷயத்தில் நசரேயரும், பிரதான ஆசாரியனும் ஒரே விதிமுறைக்குட்பட்டனர் என அறியலாம்.
மயிர் கத்தரிக்கக்கூடாது என்பது முன்னமே உள்ள நியதி. முற்காலங்களில் நசரேயன் ஆயுள் முழுவதும் மயிரை வளர்க்க வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால், பின்னால் பொருத்தனை முடிந்ததும் மயிரை வெட்டி காணிக்கையாகப் படைக்க வேண்டும் என சொல்லப்பட்டது. 

எண்ணாகமம்: 6:18 – “அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின் கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்”.

இரத்தத்தைப்போலவே மயிரும் மனிதனுடைய உயிரை அவனுடைய மகிமையைக் குறிப்பிட்டு நின்றது. இப்படியாக சிம்சோனின் மயிரில் அவன் பலம் அடங்கியிருந்ததாக கருதப்பட்டது.

நசரேயர்கள், திராட்சைரசம் பருகாதிருப்பதன் மூலம் கானானிய விவசாய வேளாண் கலாச்சாரத்திற்கு நேரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ரேகாபியர்


இராஜாக்களின் காலத்தில் ரேகாபியர் என்னும் ஒரு வகுப்பாரும் தேவனாகிய கர்த்தரின்மேல் பக்தி வைராக்கியமுள்ள ஒரு கூட்டம் எழுந்தனர் என வேதத்தில் காண்கிறோம். ஆகாப் வீட்டாரால் ஏற்பட்ட பாகால் வழிபாட்டை அகற்றுவதில் யெகூவுக்கு துணையாயிருந்தது யோனதாபின் தகப்பன் ரேகாப் என்பதாக காண்கிறோம் (2ராஜாக்கள்: 10:15-27).

பிற்பாடு, இப்பெயரானது நாடோடி வாழ்க்கையை ஆதரித்த நசரேயரைப் போன்றதோர் கூட்டத்தாரைக் குறிப்பிட்டு நின்றது. இவர்கள் தேவனாகிய கர்த்தருடைய வழிபாட்டு ஆதரவாளர்கள். இக்கூட்டத்தாரைப்பற்றி நமக்கு கிடைக்கும் விவரமெல்லாம் எரேமியா: 35 ஆம் அதிகாரத்தில் அடங்கியுள்ளது. நேபுகாத்நேச்சார் படையெடுப்பின்போது இவர்கள் எருசலேமில் அடைக்கலம் புகுந்தனர் என அறிகிறோம். எரேமியா: 35:11 – “ஆனாலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்”.

ரேகாபியர்கள் மற்ற வேளைகளில் வனாந்தரங்களில் நாடோடிக் கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வந்தனர் என தெரிய வருகின்றது. இவர்கள் வாழ்க்கை ஒழுங்கை ரேகாபின் குமாரன் யோனதாப் வகுத்தான் என்றும், இவ்வொழுங்கின்படி இம்மக்கள் வீடுகளைக் கட்டாமலும், விதை விதையாமலும், கூடாரங்களில் பரதேசிகளாய் வாழ்ந்து வந்தவரென்றும், இவர்கள் திராட்சரசம் குடிப்பதில்லையென்றும் அறிகிறோம் (எரேமியா: 35:6-10). எரேமியாவின் காலமளவும் இக்கூட்டத்தார் இந்த ஒழுங்குகளை தவறாது கைக்கொண்டு வாழ்ந்து வந்தனரென்று அறிகிறோம்.

நசரேயர் மற்றும் தீர்க்கதரிசிகளுடன் சேர்ந்து இந்த ரேகாபிய கூட்டத்தாரும் இஸ்ரவேல் மார்க்கத்துடன் அல்லது யூத மதத்திற்குள் முழுவதுமாக கானானிய கலாச்சாரம் கலந்து விடாதபடி அதனைக் காத்தனர் என கூறலாம். அது மட்டுமல்ல… இஸ்ரவேல் மார்க்கம் வேரூன்றி நிலைத்திருக்கிறதென்றால் அதற்கு இந்த நசரேயர்களும், ரேகாபியரும், தீர்க்கதரிசிகளுமே காரணம் என சொல்லாம்.