டிசம்பர் 06, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - IV


6. நற்குணம் - Goodness

நற்குணம் - மற்றவர்களுக்கு நன்மை செய்யும் குணம், தீங்காய் தோன்றுகிற யாவற்றையும் விட்டு விலகுவதற்கான வாஞ்சை

மத்தேயு:5:44 - "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்."

- நமது நண்பர்களுக்கு மட்டுமின்றி, நம்முடைய சத்துருக்களையும் சிநேகித்து, சபிக்கிறவர்களை ஆசீர்வதித்து, பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்து, நிந்திக்கிறவர்களுக்கு ஜெபம் செய்து நம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்தலாம்.

ரோமர்:12:20 - "அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்."

நீதிமொழிகள்:25:21 - "உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு."

- நமது சத்துருவாக இருந்தாலும் அவர்களுக்கு நம்முடைய நற்குணத்தை வெளிப்படுத்தும்படி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

ரோமர்:15:14 - "என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன்;"

- நாம் சகலவித நற்குணங்களாலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

மத்தேயு:5:16 - "இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது."

- நம்மிடத்தில் மற்றவர்கள் நற்குணங்களைக் காணும்போது தேவ நாமம் நம் மூலமாக மகிமைப்படும்.


நற்குணமுள்ள ரூத்: 



  •   தன் கணவன் இறந்த பின் மாமியாரை விட்டு தன் இனத்தாரிடம் சென்று மறுமணம் செய்து வசதியாக வாழ விரும்பாமல், வேதனையின் மத்தியிலும் தன் மாமியாரை நேசித்து, வாழ்நாள் முழுவதும் ஆதரிக்கும் நற்குணம் ரூத்திற்கு இருந்தது.  (ரூத்:1:15-18)



  •    சோம்பலாயிருந்து நகோமிக்கு பாரமாய் இருக்காமல் சுறுசுறுப்பாய் வேலை செய்து, தனக்கு மட்டுமன்றி, தன் மாமிக்கும் ஆகாரம் கொண்டு வந்தாள். தான் வயலில் சாப்பிட்ட போது, சிறிது எடுத்து வைத்திருந்து நகோமிக்கும் கொடுத்தாள். தன் குடும்பத்தின் மேல் அக்கறை உள்ளவளாக இருந்தாள். 


ரூத்:2:14,18 - "பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள், அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள். அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்."


  •  தனக்கு துணையை தானே தேடிக்கொள்ளாமல், தேவனுடைய வழியின்படி செல்வதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தாள். 


ரூத்:3:10,11 - "அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்."


  • ரூத்தின் நற்குணம் போவாஸைக் கொண்டு வந்தது. அவள் நற்குணமுள்ளவள், குணசாலி என்று ஊரெல்லாம் பரவியது. மேலும் அரசனாகிய தாவீதையும் இயேசு கிறிஸ்துவையும் வாரிசாக பெறும் பாக்கியம் பெற்றாள்.


இப்படிப்பட்ட நற்குணமுள்ள ரூத்தின் பெயர் இன்று வரை சொல்லப்பட்ட வருகிறது. நற்குணத்தை உடையவர்கள் தேவனுக்கு புகழ்ச்சியைக் கொண்டு வருவார்கள்.


7. விசுவாசம் - Faithfulness

கிரேக்க வார்த்தை - "பிஸ்டிஸ்"

விசுவாசம் - அனுதின வாழ்வின் தேவைகளுக்காக, வழிநடத்துதலுக்காக நாம் தேவனிடம் சார்ந்திருப்பது (அ) நம்பத்தக்கவர்களுக்காக இருப்பது

நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நமது வாழ்வின் ஒவ்வொரு பிரச்சனையிலும் நமது விசுவாசத்தை வெளிப்படுத்த வேண்டும்.

1 யோவான்:5:4 - "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."

எபிரேயர்:11:1 - "விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது."

தோமாவைப் போல் "பார்த்தால் தான் நம்புவேன்" என்பது விசுவாசமல்ல; ஆபிரகாமை போல் காணாதிருந்தும் நம்புவதே விசுவாசம்.

 2கொரிந்தியர்:5:6 - "நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்."

நமது விசுவாசம் வாக்குத்தத்தங்களைக் கொண்டு வரும்! நாம் எல்லா காரியங்களிலும் தேவனை நம்பி, அவரை விசுவாசித்தால் அவர் நமக்கு வாக்குத்தத்தங்களைக் கொடுப்பார்.

ரோமர்:1:17 - "விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது."

யோவான்:1:50 - "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்."

இயேசு நாத்தான்வேலிடம் கேட்ட கேள்வி இதுதான் - "நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய் ?"

யோவான்:20:29 - "அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்."

ஏனென்றால் தேவன் நமது விசுவாசத்தின் அளவை சோதிக்கிறார். நமது விசுவாசம் எத்தகையது என்று தேவன் பார்க்கிறார். நாம் காண்கிறதினால் தேவனை விசுவாசிக்கிறோமா அல்லது சொன்னதினால் விசுவாசிக்கிறோமா அல்லது காணாதிருந்தும் விசுவாசிக்கிறோமா என்றெல்லாம் அவர் நம்மை சோதித்தறிகிறார்.

எபேசியர்:3:12 - "அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது."

நாம் விசுவாசமென்னும் கேடகத்தை பிடித்தவர்களாய் எந்த பிரச்சினை வந்தாலும் விசுவாசத்தில் உறுதியாய் இருக்க வேண்டும். தேவனை விசுவாசிக்கிறவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை.

2 தீமோத்தேயு:4:7 -  விசுவாசத்தை காத்துகொள்ள வேண்டும்

தீத்து:1:14 - விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்க வேண்டும்.

எபிரேயர்:11:17 - 40 - விசுவாசத்தினாலே ஜெயித்தவர்கள்

செயலில் காட்டப்பட வேண்டிய விசுவாசம்:


யாக்கோபு:2:18 - "கிரியை இல்லாத விசுவாசம் செத்தது"

எல்லா காரியங்களிலும் விசுவாசம் காணப்பட வேண்டும். நம் குடும்பத்திலும் சுற்றுபுறத்திலும் வெளிப்படுத்த வேண்டும்.

மாற்கு:2:5 - "இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்."

இயேசு நோயாளிகளை குணமாக்கும்போது, அவர்களது விசுவாசத்தை கண்டு குணமாக்கினார். ஆகவே நமது செயலில் விசுவாசம் காணப்பட வேண்டும். நமது விசுவாசத்தின் அளவை கண்டு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

விசுவாச பலவீனம்:


வாழ்வில் பிரச்சினைகள் வந்தாலும் விசுவாசத்தில் பலவீனம் ஏற்படக்கூடாது.


  • ஆபிரகாம் தனக்கு வயதாகி கொண்டே வருகிறது என்று தன்னுடைய விசுவாசத்தில் சோர்ந்து போகாமல் தனக்கு ஒரு மகனை தருவார் என்று உறுதியுடன் வாக்குத்தத்தங்களை விசுவாசித்தார். சரீரம் செத்து போயிற்று என்று சொல்லப்பட்டாலும் தேவனால் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்திற்கு உயிர் இருந்தது. ஆகவே ஏற்ற காலத்தில் ஒரு மகன் பிறந்தான். (எபிரேயர்:11:12)


விசுவாசத்தில் பலவீனம் ஏற்பட்டால், தொடர்ந்து வாழ்க்கை முழுவதும் பலவீனம் ஏற்படும். ஆபிரகாம் ஒரு கட்டத்தில், விசுவாசத்தில் பலவீனப்பட்டு ஆகார் மூலமாக சந்ததி உண்டாக செய்ததினால், தொடர்ந்து அந்த சந்ததி மூலம் அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டது.


  • பேதுரு கற்பாறையாக இருந்தாலும் விசுவாசத்தில் பலவீனப்பட்டவனாக இருந்தான். இயேசுவை விசுவாசித்து கடலின் மேல் நடக்க முற்பட்டான். ஆனால் ஒரு கட்டத்தில் அவன் சந்தேகத்தினால் தண்ணீரில் மூழ்க நேரிட்டது. (மத்தேயு:14:31) பின் நாட்களில் அவன் விசுவாச வீரனாக மாறி பெரிய காரியங்களை செய்தான்.


யோபுவின் வாழ்க்கையிலும் விசுவாச சோதனை வந்தது. ஆனாலும் பலவீனத்துக்கு இடங்கொடுக்காமல், எல்லாவற்றையும் தாங்கி கொண்டும் சகித்து கொண்டும் தேவனை இன்னும் அதிகமாக விசுவாசித்தான். கர்த்தர் அவனது விசுவாச அளவினை பார்த்து அவன் முன்னிலைமையை பார்க்கிலும் அவன் பின்னிலைமையை அதிகமாக ஆசீர்வதித்தார். 

"தேவன் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் 
அவர்மேல் விசுவாசம் வை; திரும்ப கொடுக்கப்படும்"

தொடரும்....

டிசம்பர் 02, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits - Part III

4. நீடிய பொறுமை - Long Suffering

நீடிய பொறுமை - சோதனைகளையும் வேதனைகளையும் சகித்து கொள்ளுதல்

2 பேதுரு:3:9 - "ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்."

தேவன் நீடிய பொறுமையுள்ளவராக இராதிருந்தால், நாம் பாவம் செய்த போது நம்மை அழித்திருப்பார். அவர் நாம் மனந்திரும்புவதற்கு அநேக வாய்ப்புகளை தந்து கொண்டிருக்கிறார்.

எபிரேயர்:12:2 - "அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்."

1பேதுரு:2:23 - "அவர் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்."

தம்மால் உருவாக்கப்பட்ட மனிதன் தம்மை அவமதித்து, பாடுபடுத்தி, சிலுவையில் அறைந்த போதும் அவர் நீடிய பொறுமையோடு சகித்தார்.

நீடிய பொறுமையுடன் இருந்த பரிசுத்தவான்கள்:


1. யோபு

யோபு:13:15 - "அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்."

தன்னுடைய பொருள்கள் யாவும் அழிந்து போன போதிலும், தன் பிள்ளைகள் யாவரும் சடுதியில் மரணமடைந்த போதிலும், தன் உடல் முழுவதிலும் வியாதியால் வேதனைப்பட்ட போதிலும், தன் மனைவி, நண்பர்கள் நிந்தித்த போதிலும் தேவனை குறை கூறாமல் யாவற்றையும் சகித்துப் பொறுயோடே இருந்தான்.

2. தாவீது

தான் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட போதிலும், அரசராக இருந்த சவுலின் கொடுமைகளை பொறுமையுடன் சகித்து, சவுலை கொல்வதற்கு தனக்கு வாய்ப்புகள் கிடைத்த போதும் அதை வெறுத்து தள்ளினான். அபிஷேகம் பண்ணப்பட்டவர் மேல் தன் கையை போட கூடாது என்று தன் காலம் வரும் வரை பொறுமையுடன் சோதனைகளை சகித்து வந்தான்.

இவர்கள் இருவருமே பொறுமையுடன் துன்பங்களை சகித்துக்கொண்டனர். முடிவில் ஆசீர்வதிக்கப்பட்டனர்.  யோபுவின் முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை மேலானதாக இருந்தது. தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாகி 40 வருஷம் அரசாண்டான்.

நீதிமொழிகள்:25:15 - "பொறுமையினால் பிரபுக்களையும் சம்மதிக்கப்பண்ணலாம்"

லூக்கா:21:19 - "உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்."

யாக்கோபு:1:4 - "நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது."

1பேதுரு:2:19,20 - "ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்."

எப்பொழுது பொறுமையை இழக்கிறோம்?


  • தேவனைப் பார்க்காமல் சூழ்நிலையை பார்க்கும்போது பொறுமையை இழக்கிறோம்.


சங்கீதம்:106:32,33 - "மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது.அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான்."

எண்ணாகமம்:20:3- 11 - மோசே தேவனை பார்க்காமல் தன்னை சுற்றியுள்ள முறுமுறுக்கும் ஜனங்களை பார்த்து தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான். 


  • தேவனை முழுமையாக நம்பாமல், மாம்சத்துக்கு இடம் கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம்.


ஆதியாகமம்:16:2-4 - "சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளை பெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்"

ஆபிரகாம் தேவன் கொடுத்த வாக்கை விசுவாசிக்காமல், தன் மனைவியின் பேச்சை கேட்டு ஆகார் மூலம் தன் சந்ததி உருவாகட்டுமென்று தவறான முடிவை எடுத்து பொறுமையை இழந்தான்.


  • கோபத்திற்கு இடங்கொடுக்கும் போது பொறுமையை இழக்கிறோம். 
பிரசங்கி:7:8,9 - "ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும்."


பொறுமையின்மையின் விளைவுகள்:


  • பகை
  • பிரிவினை 
  • சண்டை
  • கொலை


நாம் நீடிய பொறுமையை தரித்துக்கொள்ளும்படி தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நம் தேவன் நீடிய பொறுமையாக இருந்தது போல நாமும் அதே பண்பை எல்லா சூழ்நிலையிலும் வெளிப்படுத்த வேண்டும்.

5. தயவு


தயவு - இரக்கம் காட்டுவது, மன்னிப்பது

எபேசியர்:2:6,7 - "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."

கர்த்தர் நம்மேல் வைத்த தயவினால், பாவத்திலிருந்து நம்மை இரட்சித்து, நீதிமானாக்கி, ஆபிரகாமின் பிள்ளைகளாகும் பாக்கியத்தை தந்து, உன்னத பரலோகத்தை பெறும்படி செய்தார்.


தயவுள்ளவனாயிருந்த யோசேப்பு:

         தன் சகோதரர்கள் தன்னை பகைத்து, துன்புறுத்தி, அடிமையாக விற்ற போதிலும், தன்னுடைய ஆளுகைக்கு கீழ் வந்தபோதிலும் அவர்களை வெறுக்காமலும், கடிந்து கொள்ளாமலும், தண்டிக்காமலும் தயவாய் அவர்களை மன்னித்து இரக்கம் பாராட்டினான்.
(ஆதியாகமம்:50:15-21)

தயவுள்ளவனாயிருந்த தாவீது:

         சவுல் தன்னை எவ்வளவு தான் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்தாலும், தன்னை ஏமாற்றியிருந்தும், அவன் இறந்த பின் அவன் வீட்டாரை அழிக்காமல் அவர்களுக்கு தயை செய்தான். யோனத்தானின் மகன் மேவிபோசெத்திற்கு சவுலின் நிலங்களை திரும்பக் கொடுத்து ஒரு இளவரசன் போல அனுதினமும் தன்னுடைய பந்தியில் விருந்துண்ணும் படி தயை செய்தான். (2சாமுவேல்:9:1-13)

தயவுள்ளவர்களாயிருக்க நாம் செய்ய வேண்டியவை:


1. மன்னிக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.

கொலோசெயர்:3:12,13 - "ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்."

மற்றவர்களுடைய குறைகளை மிகைப்படுத்தாமல், கிறிஸ்து நமக்கு மன்னித்தது போல நாமும் மன்னிக்க வேண்டும்.

2. கடுஞ்சொல்லை தவிர்த்து இனிமையான சொல்லை பேச வேண்டும்

எபேசியர்:6:9 - "... கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள்."

நீதிமொழிகள்:25:15 - "நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப் பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்."

மற்றவர்களிடம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தாமல் தேவ அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை பயன்படுத்தும் போது நம்மில் உள்ள தேவ சாயலை கண்டு அநேகர் கிறிஸ்துவின் அன்பை ருசிக்க வாய்ப்புள்ளது.

3. இரக்க குணமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

லூக்கா:10:29-37 -  நல்ல சமாரியனை போல மற்றவர்கள் மேல் இரக்கப்பட வேண்டும்.

நாம் தயவை தரித்துக்கொண்டு (கொலோசெயர்:3:12), பிறர் குறைகளை பெரிதாக எண்ணாமல் ஒருவருக்கொருவர் மன்னித்து இரக்கம் காட்டவேண்டும்.



தொடரும்......




நவம்பர் 26, 2019

ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - II



கடந்த பகுதியில் முதலாவது கனியான அன்பை குறித்து பார்த்தோம். தொடர்ந்து மற்ற கனிகளை குறித்து தியானிப்போம்.

2. சந்தோஷம் - Joy


லூக்கா:2:10 - "தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்."

சந்தோஷம் - ஆனந்தம், மகிழ்ச்சி, களிகூறுதல்

இயேசு இந்த உலகத்தில் மனிதனாக அவதரித்த போது, அது ஜனங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கிற்று.இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வரும்போது மிகுந்த சந்தோஷம் உண்டாகும். ஆவிக்குரிய சந்தோஷம் உண்டாகும். இது துன்பங்கள், பாடுகள் மத்தியிலும் காணப்படும் சந்தோஷம். இது தேவ கிருபையினால் நமக்கு வருவது; இது நமது இரட்சிப்பின் சந்தோஷம்.

"இயேசு வந்த வீட்டில் சந்தோஷமே"

யோவான்:15:11 - "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்."

பிலிப்பியர்:4:4 - "கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்."

நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். கர்த்தருடைய இரட்சிப்பின் சந்தோஷம் நம் மனதில் நிலைத்திருக்க வேண்டும்.

இரட்சிக்கப்படும்போது நாம் ஆவிக்குரிய சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். அடிக்கடி நமது இரட்சிப்பைக் குறித்து தியானித்து அதற்காக சந்தோஷத்துடன் நன்றி செலுத்துவது நமது கடமை.

சங்கீதம்:35:9 - "என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்."

தாவீது, தேவன் தன்னை இரட்சித்ததை நினைத்து களிகூர்ந்து, எந்நாளும் நன்றி சொல்லி மகிழ்ந்தான். இரட்சிக்கப்பட்ட புதிதில் அனுதினமும் மகிழ்ச்சியை அனுபவித்து களிகூர்ந்து நன்றி சொல்லி வருவோம். கொஞ்ச காலத்தில் நமக்கு வரும் துன்பங்கள், பாடுகள், சோதனைகள் நம் சந்தோஷத்தை குலைத்து விடும். நம்மை பாவத்தில் தள்ளி, நமது இரட்சிப்பின் சந்தோஷத்தை கெடுத்து விடும். தாவீது, பத்சேபாளிடத்தில் பாவம் செய்து தனது இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்தான். ஆனாலும் தனது பாவத்தை அறிக்கை செய்து மனந்திரும்பினான். மீண்டும் தான் இழந்த சந்தோஷத்தை பெற்றுக்கொண்டான்.

சங்கீதம்:51:12 - "உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்."

பின்மாற்றத்திலிருந்து திரும்பவும் கர்த்தருக்குள் வரும்போது நாம் இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் பெற்றுக்கொள்கிறோம்.

கெட்டகுமாரன் தான் செய்த பாவத்தை நினைத்து வருந்தி, திரும்பவும் தன் தகப்பனிடம் சென்று மன்னிப்பு கேட்டு, இழந்து போன இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டான்.

லூக்கா:15:32 - "உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமே என்று சொன்னான் என்றார்."

லூக்கா:19:10 - "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்."

ஆம்! இழந்து போன இரட்சிப்பின் சந்தோஷத்தை நாம் பெறவேண்டுமென்பதற்காக இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்தார். அவர் பிறப்பிலே சந்தோஷம் உண்டாயிற்று.

இயேசுவின் பிறப்பில் சந்தோஷம் - ஏன்?

பாவம், வியாதிகள், வேதனைகள், போராட்டங்கள் ஆகியவற்றில் சிக்கியிருக்கும் மனிதனுக்கு இயேசுவின் மூலம் ""விடுதலை உண்டு" என்பது நற்செய்தி அல்லவா? நரகத்திற்கு செல்ல வேண்டிய நம்மை மீட்டெடுக்க இயேசு பிறந்தது நமக்கு சந்தோஷம் தானே!?!!

தேவ ராஜ்யத்தின் பிள்ளைகளான நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

ரோமர்:14:17 - "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது."

நாம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். எல்லா நிலைகளிலும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

சங்கீதம்:118:24 - "இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்."

ஒவ்வொரு நாளும் கர்த்தர் உண்டு பண்ணின நாள். ஆகவே எதை கண்டும் கவலைப்படாமல் மகிழ்ந்து களிகூறுவோம்.

ஆபகூக்:3:17-19 - "அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்."

எந்த இழப்பு நேர்ந்தாலும் என்ன தொல்லை வந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து தேவனுக்குள் களிகூறுவதே ஆவியின் கனியாகிய சந்தோஷத்தின் அறிகுறியாகும்.

ஏசாயா:51:11 - "அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன்பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்."

ஏசாயா:35:10 - "கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்."

ஒரு நாள் வரும்! நாம் பரம சீயோனுக்குள் சேருவோம். அப்பொழுது நித்திய சந்தோஷம் நமது தலைமேல் இருக்கும்.

3.சமாதானம் - Peace

சமாதானம் என்பது நாம் பாவம் செய்து மனம் நொருங்குண்டு தேவனிடம் மன்னிப்புக்கு கெஞ்சி, பயம் கலக்கம் நீங்கி, மன்னிப்பை பெற்றுக்கொண்ட நிச்சயத்தை அடையும்போது உண்டாகும் சலனமற்ற தெய்வீக அமைதி எனலாம்.

சமாதானத்தின் தேவன்:

2கொரிந்தியர்:13:11 - "சமாதானத்திற்கு காரணராகிய தேவன்"

நமது சமாதானத்தைக் கெடுக்க நினைக்கும் சாத்தானை நமது காலின் கீழ் நசுக்கிப்போடும் சமாதானத்தின் தேவன் அவர். (ரோமர்:16:20)

ஏசாயா:9:6 - "சமாதான பிரபு"

ஏசாயா:53:5 - "நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது."

யோவான்:14:27 - "தன்னுடைய சமாதானத்தை நமக்காக வைத்துப்போயிருக்கிறவர்"

நாம் பாவிகளாக இருக்கையில், சமாதானமின்றி வாழ்ந்து வந்தோம். நமது பாவங்களுக்கேற்ற தண்டனையை அடைந்த பின்னர் தான் நமக்கு சமாதானம் உண்டாகும். நாம் அனுபவிக்க வேண்டிய ஆக்கினையை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் சிலுவையிலே சிந்திய இரத்தத்தினாலே பிதாவிடம் நமக்கு சமாதானம் உண்டாகி இருக்கிறது.

கொலோசெயர்:1:20 - "அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று."

நாம் செய்ய வேண்டியது:

மாற்கு:9:50 - "ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் "

இயேசு கிறிஸ்து மூலமாக ஆத்தும சமாதானத்தை பெற்று கொண்ட நாம் மற்றவர்களோடும் சமாதானமாக இருக்க வேண்டும்.

ரோமர்:12:18 - "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்"

ஆத்தும சமாதானமின்றி வாழ்கிறவர்களை நிலையான சமாதானம் அளிக்கும் சமாதான பிரபுவாகிய இயேசுவண்டை வழிநடத்தி அவர்களும் சமாதானம் பெற வழிசெய்வது நமது கடமையாகும்.

சமாதான வாழ்த்துதல்:

லூக்கா:10:5,6 - "ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும்."

- ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும் போது அவ்வீட்டாரை சமாதானத்தை கூறி வாழ்த்த வேண்டும்.

ஏசாயா:52:7 - "சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன"

- எங்கும் சமாதானத்தை கூற வேண்டும்.

சமாதானத்தோடு வாழ்வதன் இரகசியம்:

1. கர்த்தருடைய வேதத்தை நேசிக்க வேண்டும். 

சங்கீதம்:119:165 - "உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை."

2. கர்த்தருடைய கற்பனைகளை கைக்கொள்ள வேண்டும்

ஏசாயா:48:18 - "ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்."

3. நன்மை செய்ய வேண்டும்

ரோமர்:2:10 - "முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்."

4. ஆவியின் சிந்தையுடையவர்களாக இருக்க வேண்டும்

ரோமர்:8:6 - "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்."





தொடரும்.....








நவம்பர் 25, 2019

பரிசுத்த ஆவியானவரின் அடையாளங்கள்

1. தண்ணீர்   

 யோவான்:7:37,38 - "பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்."

பரிசுத்த ஆவியினால் நாம் மீண்டும் பிறந்திருக்கிறோம். (யோவான்:3:5)

தொடர்ந்து பரிசுத்த ஆவியை பருகுவதினால், நாம் நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை காத்து கொள்ள முடியும். தாகமே அடையாத திருப்தியான வாழ்க்கை நடத்த பரிசுத்த ஆவியானவர் உதவுகிறார். 

யோவான்:4:13,14 - "இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்."

நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை பரிசுத்த ஆவியால் தினமும் கழுவப்பட வேண்டும். பரிசுத்த ஆவியானவர் நம் இருதயத்தை புதிதாக்குகிறார். 

தீத்து:3:5 - "நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்."

2. அக்கினி

மத்தேயு:3:11 - "மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்."

பழைய ஏற்பாடு முழுவதிலும் தேவனுடைய சமூகம் அக்கினியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டது. 

யாத்திராகமம்:3:1-5 - முட்செடியின் நடுவிலிருந்து அக்கினியின் மூலம் தேவன் மோசேயை சந்தித்தார்.

1இராஜாக்கள்:18 - "அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்" என்பதை பாகால் தீர்க்கதரிசிகள் உணர்ந்து கொள்ளும்படியாக  எலியாவின் நாட்களில் பரிசுத்த ஆவியானவர் அக்கினியின் மூலம் வெளிப்பட்டார்.

அப்போஸ்தலர்:2:2,3 - "அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது."

-  எல்லாவகையான அசுத்தமான பொருட்களையும் அக்கினி சுட்டெரிக்கிறது. அவர் நம்மிலுள்ள பாவங்களை அழிக்கிறார். 

எபிரேயர்:12:29 - "நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே."

-  அக்கினி ஒளியை கொடுக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வரும்போது பரலோகத்தின் தெய்வீக ஒளியை பாய்ச்சி, நித்திய ஜீவனையும் பரலோகத்தின் இரகசியங்களையும் உணர உதவி செய்கிறார். 

-  அக்கினி வல்லமையையும் வாஞ்சையையும் தருகிறது.

3. காற்று 

யோவான்:3:8 - "காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்."

கிரேக்க வார்த்தை: நியூமா (Pneuma) - பரிசுத்த காற்று

காற்று பூமியில் எங்கும் நிறைந்திருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் இல்லாத இடம் எங்குமில்லை. அவர் எங்கும் எப்போதும் கிரியை செய்து கொண்டே இருக்கிறார்.

காற்று தொடர்ந்து அசைவிலேயே இருக்கிறது. தட்பவெப்ப நிலைக்கேற்ப உயர் அழுத்த மண்டலத்திலிருந்து குறைவான அழுத்த மண்டலத்திற்கு காற்று வீசிக்கொண்டேயிருக்கிறது. அதேபோல பரிசுத்த ஆவியானவரும் பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் கிரியை செய்தததுபோல் இப்போதும் கிரியை செய்து கொண்டே இருக்கிறார்.

4.எண்ணெய்

1சாமுவேல்:16:13 - "அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான்."

தேவனுக்கென்று பிரித்தெடுக்கும்படி அபிஷேகம் செய்யப்படுவதற்கு அடையாளமாக எண்ணெய் சொல்லப்படுகிறது.

பரிசுத்த ஆவியானவரின் எண்ணெயில் எரியும் வெளிச்சம் மட்டுமே தேவனுடைய வசனத்தை பிரகாசிக்கச் செய்யும். பரலோகத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்தின் இரகசியங்களை வெளிப்படுத்திக்காட்டும்.

5. மழை

சங்கீதம்:72:6 - "புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப் போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்".

மழை இல்லாமல் கனிகளை காண முடியாது. ஆவிக்குரிய ஜீவியத்திலும் ஆவிக்குரிய கனிகளும் ஆவிக்குரிய வல்லமைகளையும் பெற்று எழுப்புதலை அடைய வேண்டுமானால் பரிசுத்த ஆவியாகிய மழையை பெற்றால் மட்டுமே முடியும்.

பரிசுத்த ஆவியானவரின் "முன்மாரி" பழைய ஏற்பாட்டு காலத்திலும், பெந்தெகோஸ்தே நாளில் மேல்வீட்டறையில் கூடியிருந்த 120 பேர் காலம் வரைக்கும் பொழிந்தருளப்பட்டது. தற்போது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக "பின்மாரி" பொழியப்படுகிறது.

6. புறா

யோவான்:1:32 - "பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்."

உலகத்தின் எல்லா பகுதிகளிலும் புறா சமாதானத்தின் சின்னமாக இருக்கிறது. தேவன் நோவா காலத்தில் உலகத்தை அழித்தபோது கர்த்தருடைய கண்களில் நோவாவுக்கும் அவன் குடும்பத்தாருக்கும் கிருபை கிடைத்ததினால் பேழையினால் காக்கப்பட்டார்கள். தண்ணீர் வற்றிவிட்டதா என்பதை தெரிந்து கொள்ளும்படி நோவா புறாவை வெளியே விட்டான். அது ஒலிவ இலையை கொண்டு வந்தது. (ஆதி:8:10,11)

தேவனுடைய ஆக்கினை தீர்ப்பு கடந்து சென்று விட்டது என்பதையும், பூமியின் மீது சமாதானம் வந்துவிட்டது என்பதையும் காட்டும் முதல் ஆதாரம் புறா தான். 

புறா கபடற்றதும், தூய்மையுமான ஒரு உயிரினம். பரிசுத்த ஆவியானவர் புறா ரூபங்கொண்டு இறங்கி வந்தார். அவர் பரிசுத்தமுள்ள தேவன். அவரில் அசுத்தமில்லை. 

புறா மிக சுலபமாக பயந்து விடும். மீண்டும் மீண்டும் துன்பப்பட்டால் நிரந்தரமாக அந்த இடத்தை விட்டு போய் விடும். நம் இருதயத்தில் பரிசுத்தாவியானவர் என்றும் தங்கியிருக்க வேண்டுமானால் நாம் மிகவும் கவனமும், பயபக்தியுடனும் நடந்து அவரை துக்கப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டும். நாம் தொடர்ந்து எதிர்ப்போமானால் அவர் நம்மை விட்டு போய் விடுவார்.

எபேசியர்:4:30 - "அன்றியும், நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."

7. திராட்சரசம்

எபேசியர்:5:18 - "துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;"

பரிசுத்த ஆவியானவரின் நிறைவு திராட்சரசத்தை போல இருதயத்திற்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. ஆவிக்குரிய மகிழ்ச்சியையும் பரலோக பேரின்பத்தையும் கொண்டு வருகிறது.

திராட்சரசம் மக்களை மகிழ்ச்சியூட்டுவது போல் தோன்றுகிறது. அநித்தியமான சமாதானத்தை தருகிறது.அச்சத்தையும் கவலைகளையும் பாரங்களையும் மறக்க வைக்கிறது. ஆனால் பரிசுத்த ஆவியானவர் உலக கவலைகளை நம்மை விட்டு அகற்றி விடுகிறார்.

பரிசுத்தாவியின் நிறைவு பாவத்தின் மீது நாம் வெற்றிக்கொள்ள தைரியத்தையும் தந்து ஜெயஜீவியம் செய்ய ஏதுவாயிருக்கிறது.

பரிசுத்தாவியின் நிறைவு எதிர்ப்புகளின் நடுவே நாம் உறுதியாய் நிற்பதற்கு பெலன் தருகிறது.

8. முத்திரை

முத்திரை - திறக்காமலிருப்பதற்கான ஒரு பாதுகாவல்

எபேசியர்:1:13 - "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்."

இயேசுவின் இரத்தத்தால் முத்திரையிடப்பட்டால், நாம் பாவத்தில் வீழ்ந்து விடாதபடி  பரிசுத்தாவியின் வல்லமையால் தேவன் நம்மை காத்துக்கொள்கிறார். பொல்லாங்கன் நம்மை தொடான்.

முத்திரை ஒரு தனி உரிமையை காட்டுகிறது. நம் கையொப்பமோ முத்திரையோ இல்லாமல் வங்கியிலிருக்கும் நமது பணத்தை எடுக்க முடியாது. அதேபோல தேவன் தம் மக்கள் மீதுள்ள தனிப்பட்ட உரிமையை நிரூபிக்க பரிசுத்த ஆவியின் முத்திரையை பதிக்கிறார். யாராவது அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கு தீங்கிழைத்தால் தேவ கோபாக்கினை வரும்.

முத்திரை அதிகாரத்தை காட்டுகிறது. சீஷர்கள் இயேசு தங்களோடு இருந்த வரையிலும் அதிகாரத்தோடும் வல்லமையோடும் செயல்பட்டனர். இயேசு பரமேறிய பின்பு தோல்வியடைந்தவர்களாக காணப்பட்டார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்ற பின் பெரிய அதிகாரத்தை பெற்றார்கள். வல்லமை வெளிப்பட்டது.

9. உத்திரவாதம்

2கொரிந்தியர்:1:21,22 - "உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்."

நாம் இரட்சிக்கப்பட்டிருந்தாலும் விசுவாசத்திலும் குறைவுப்பட்டிருப்போம். சாத்தான் சந்தேக அம்புகளை எய்யும் போது சில சமயம் வீழ்ந்துவிடுவோம். ஆனால் அவ்வாறு விழ்ந்து விடாமலிருக்க பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றவர்களுக்கு அவர் சத்திய வசனத்தின் மூலம் உத்திரவாதமளித்து கொண்டேயிருப்பார்.

ஆவியின் கனிகள் - Spiritual Fruits part - I


    Image result for spiritual fruits images


திறவுகோல் வசனம்: கலாத்தியர்:5:22,23 - "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்"


கனிகள் 


உலகத்திற்கு பாவம் ஒரு கனி மூலம் தான் வந்தது. (ஆதியாகமம்:3:6)

கனிகளுள் நல்ல கனிகளும் உண்டு; கெட்ட கனிகளும் உண்டு. 

ஆதியாகமம்:1:29 - "பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;"

ஆதியாகமம்:2:17 - "ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்."

தேவன் இந்த உலகத்தை படைத்த போது சகலவித விருட்சங்களையும் ஆகாரமாக கொடுத்தார். ஆனால் ஒரே ஒரு கட்டளையை மட்டும் கொடுத்தார். தோட்டத்தின் நடுவில் இருக்கும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை மட்டும் சாப்பிட வேண்டாமென்று கட்டளையை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கொடுத்தார்.

சில சமயம் நமக்கு நன்மையான ஈவுகள் கொடுக்கப்பட்டாலும் நாம் அதை தெரிந்துகொள்ளாமல், கெட்ட குமாரனை போல கீழான ஆசீர்வாதத்தையே நாடி போகிறோம்.

அதேபோல் தான் முதல் மனுஷி ஏவாளும் செய்தாள். தோட்டத்திலுள்ள எல்லா கனிகளையும் ருசித்தாலும் இந்த நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை ருசித்து பார்க்க ஆசைப்பட்டாள். சில சமயம் கெட்ட கனிகளும் பார்ப்பதற்கு இனிமையாக தோன்றும். நம்மை அதன் பக்கமாக ஈர்க்கும். ஏவாளுக்கு பகுத்தறிய தெரியாததனால், பார்வைக்கு இன்பமாய் தோன்றினவுடன் அதை புசித்து பாவத்தை உலகத்திற்குள் கொண்டு வந்தாள். 

 நாம் கனி கொடுக்கும்படியாகவும் நமது கனி நிலைத்திருக்கும்படியாகவும் கர்த்தர் நம்மை ஏற்படுத்தியிருக்கிறார். (யோவான் :15:16 - "நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனி கொடுக்கும் படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.")

கர்த்தர் நம்மை இரட்சித்து கெட்ட கனிகளை நம்மை விட்டு அகற்றி, ஆவியின் கனிகளால் நம்மை ஆசீர்வதித்து அலங்கரித்திருக்கிறார். இந்த 9 கனிகளை குறித்து நாம் தியானிப்போம்.


1. அன்பு - Love


1கொரிந்தியர்:13 - ம் அதிகாரம் முழுவதிலும் அன்பை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. 


மூன்று வகையான அன்பு:


1. அகாபே - தேவ அன்பு


ரோமர்:5:8 - "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்."

தேவன் நம்மேல் காட்டும் அன்பு எப்படிப்பட்டது?

  • பாரபட்சமில்லாத அன்பு
  • வஞ்சனையில்லாத அன்பு
  • கபடற்ற அன்பு
  • களங்கமில்லாத அன்பு
  • நிபந்தனையில்லாத அன்பு


தேவன் நமக்கு கொடுத்த பிரதான கட்டளை: 

மத்தேயு:22:37-39 - "இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே."

தேவனிடத்திலும் பிறனிடத்திலும் அன்பாயிருக்க வேண்டுமென்பதே அவர் நமக்கு கொடுத்த கட்டளை.

தேவன் தன்னுடைய அன்பை எப்படி வெளிப்படுத்தினார்?

தேவன் நம்மேல் அன்பு வைத்ததினால் தான் தம்முடைய ஒரே பேரான குமாரனை பலியாகக் கொடுத்தார்.

1யோவான்: 4:8 - "தேவன் அன்பாகவே இருக்கிறார்."
1யோவான்:4:9 - "தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது."

யோவான்:3:16 - "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

1யோவான்:4:10 - "நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது."

கர்த்தர் நம்மேல் அன்பு வைத்ததினால் நாம் மரிக்கவேண்டிய இடத்தில் தம்முடைய குமாரனை கிருபாதார பலியாக கொடுத்தார். அவர் நம்மேல் அன்பு வைத்ததினால், நம்முடைய பாவங்களை பாராமலும், எண்ணாமலும் நம்மை தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டார். 

தேவன் புதிய ஏற்பாட்டு காலத்தில் மட்டுமல்ல; பழைய ஏற்பாட்டு காலத்திலும் அன்பாகவே இருந்தார். பழைய ஏற்பாட்டு காலத்தில் நியாயப்பிரமாணங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். 

ஆதாம் பாவம் செய்திருந்தும் அவனை கொல்லாமல் அவன் மேல் அன்பு வைத்து அவனுக்கு தோல் உடைகளை கொடுத்து ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே அனுப்பினார்.  இஸ்ரவேல் ஜனங்கள் ஒவ்வொருமுறையும் கீழ்ப்படியாமையினால் தவறுகள் செய்தாலும் அவர்களை முழுவதுமாக அழிக்காமல் அவர்கள் மேல் அன்பு வைத்து அவர்களை மனந்திரும்ப வைப்பதற்காக ஒவ்வொரு காலத்திலும் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார். கடைசியில் தம்முடைய ஒரே பேரான குமாரனையும் அனுப்பினார். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தம்முடைய அன்பை தேவன் வெளிப்படுத்திக்கொண்டே தான் இருந்தார். ஆனால் ஜனங்கள் அதை உணரவில்லை.

தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது - நாம் தேவனிடமும் மற்றவர்களிடம் அன்புகூரவேண்டுமென்பதே.

இயேசு தான் மனிதனாக வாழ்ந்த நாட்களில் அன்பையே வெளிப்படுத்தினார். கடைசி நாட்களில் மனிதர்களின் அன்பு மாறி போகும்.மாறாத ஒரே அன்பு - இயேசுவின் அன்பு மட்டுமே.

2. எராஸ் - கணவன் - மனைவி அன்பு


மத்தேயு:19:4-6 - "அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்."

எபேசியர்: 5:21-33 - கணவன் மனைவி இல்லற வாழ்க்கையில் எப்படி இசைந்து இருக்க வேண்டுமென்பதை கற்றுக்கொடுக்கிறது.

எந்த ஒரு காரணத்தாலும் பிரிவினை வரக்கூடாது. பிரிவினை என்பது பிசாசினால் கொண்டு வரப்படுகிறது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டால் பிசாசுக்கு இடங்கொடுக்காமல், தேவ அன்பு வெளிப்படும்படியாக குடும்பத்தில் சமாதானம் நிலவும்படியாக ஜெபத்தினால் குழப்பங்களை தீர்க்கவேண்டும்.

கணவன் மனைவிக்குள்ளான அன்பு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?


  • பிரிவினையில்லா அன்பு
  • கறைதிரையில்லா அன்பு
  • கீழ்ப்படிதலுள்ள அன்பு
  • பயபக்தியுள்ள அன்பு


தவறு செய்வதில் ஒருமனப்பட்ட கணவன்-மனைவி:

இந்த உலகில் பாவம் வந்ததே ஒரு குடும்பத்தினால் தான். கணவன் தவறு செய்தால் மனைவியும், மனைவி தவறு செய்தால் கணவனும் கண்டிக்க வேண்டும்.


  • ஆதாமும் ஏவாளும் இந்த காரியத்தை செய்ய தவறி, இருவரும் பாவத்தை செய்தனர். பழத்தை சாப்பிட்டு, தவறு செய்தனர். தேவன் அவர்களை கேட்கும் போது ஒருவர்மேல் ஒருவர் குற்றஞ்சாட்டினார்கள். பிசாசு அவர்களிருவருக்கிடையில் பாவத்தை கொண்டு வந்து கீழ்ப்படியாமையை கொடுத்து பின்னர் பிரிவினையை கொண்டு வர முயற்சி செய்தான். அனனியா சப்பீராளும் தவறு செய்வதில் ஒருமனப்பட்டிருந்தார்கள். 
  • மனைவி குழியில் விழுந்துவிட்டாள்;உடனே கணவனும் சேர்ந்து குழியில் குதித்து விட்டால் ஏதாவது பிரயோஜனம் உண்டாகுமா? விழுந்த மனைவியை தூக்கியெடுத்து காப்பாற்றும் வழிகளை முயற்சிக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள கணவனின் கடமை. ஆனால் ஆதாமோ இந்த காரியத்தில் பொறுப்பற்ற கணவனாக இருந்துவிட்டார்.
  • தேவன் ஒன்றை சொல்லியிருக்க, தன் மனைவி அதற்கு முரணானதை சொல்ல - ஆதாம் தேவ வார்த்தையை விட்டுவிட்டு தன் மனைவியின் வார்த்தைக்கு செவிகொடுத்தான்.நல்லதும் பிரயோஜனமான காரியங்களை சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் மனைவியின் ஆலோசனை தேவனுக்கோ, ஆவிக்குரிய வளர்ச்சிக்கோ முரண்பாடாக இருந்தால் கணவன் தன் மனைவிக்கு புத்திசொல்ல வேண்டும். இதற்காக தான் வேதாகமத்தில் ஆதாம் - ஏவாள் தோட்டத்தை இழந்ததும், அனனியா - சப்பீராள் ஜீவனையே இழந்ததும், ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் இஸ்மவேல் என்னும் நீங்காத வேதனை உருவானதும் நமக்கு திருஷ்டாந்தங்களாக எழுதப்பட்டுள்ளது.
  • ஆவிக்குரிய குடும்பத்தில் தவறான காரியத்தை தூண்டும் நபரை மற்றவர் வேத வசனம் மூலம் எச்சரிக்க வேண்டும். ஆவிக்குரிய குடும்பங்களை தகர்ப்பதற்கு பிசாசு பல முயற்சிகள் எடுத்து வருகிறான். தேவ ஆவிக்குள் ஒருமனமாய் வாழும் குடும்பங்களை உடைப்பதற்காக கணவன் - மனைவி இவர்களுள் யாரோ ஒருவருக்குள் இடம்பிடித்து தன் ஆலோசனையை விதைக்க துடிக்கிறான்.பிசாசு ஒரு குடும்பத்திற்குள் பிரிவினையை கொண்டு வர முதலாவது அவர்களுக்குள் தொடர்பை துண்டிக்க முயற்சி செய்கிறான். பல நாட்கள் பேசாமலிருக்கும்படி செய்து விடுகிறான். ஒரே வீட்டில் இருப்பார்கள்;ஆனால் பேசிக் கொள்ளாமல் இருப்பார்கள். முடிவில் விவாகரத்து செய்து விடுவார்கள். பிரிவினைக்கு இடங்கொடுக்காமல் தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  • எனவே தவறு செய்ய தூண்டும் ஆலோசனை வரும்போது தேவ ஆவியின் ஒத்தாசையுடன் அதை முறியடித்து உண்மையும் நன்மையுமாவைகளுக்கு ஒருமனப்பட வேண்டும்.

3. பிலேயா - சகோதர அன்பு


எபிரேயர்:13:1 - "சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது."

சங்கீதம்:133:1 - "இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?"

1யோவான்:4:20,21 - "தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்."

நாம் தேவனிடத்தில் அன்பு கூருவது போல  சகோதரனிடத்திலும் அன்பு கூரவேண்டுமென்பதே கற்பனை. 

யோசேப்பை அவனது சகோதரர்கள் பகைத்து வெறுத்து ஒதுக்கினார்கள். அடிமையாக விற்றுப்போட்டார்கள். ஆனாலும் அவர்களை அவன் வெறுக்காமல் அன்பு செலுத்தினான். அவனிடம் அவர்கள் உதவிக்காக வந்து நின்ற போது அவர்கள் தனக்கு செய்த அநேக கெடுதியினிமத்தம் பழி வாங்காமல் அவர்கள் மேல் அன்பாக இருந்தான். அவனது சகோதரர்கள் யோசேப்பு பெரிய ஸ்தானத்திலிருப்பதினால் தங்களை பழிவாங்குவான் என்று நினைத்து மன்னிப்பு கேட்டார்கள். யோசேப்பு சகோதர அன்பினால் நிறைந்தவனாய், அவர்களுக்காக அழுது அவர்களிடம் பட்சமாய் பேசினான். இது தான் சகோதர சிநேகம்! (ஆதி:50:19-21)

தொடர்ந்து ஆவியின் கனிகளைக் குறித்து தியானிப்போம் அடுத்த பதிவில்.... 

நவம்பர் 20, 2019

வெளியரங்கமாய் பலனளிக்கும் உன் பிதா

மத்தேயு:6:18 - "அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்."

நம்முடைய பிதா எப்படிப்பட்டவர்?

1. அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா - Father who see the secret
2. வெளியரங்கமாய் பலனளிக்கும் பிதா - Father who reward openly

சங்கீதம்:44:21 - "தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே."

மாற்கு:4:22 - "வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை."

தேவன் அந்தரங்கத்தில் எதை பார்க்கிறாரோ அதின் அடிப்படையில் வெளியரங்கமாய் பலனளிப்பார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தரங்க வாழ்க்கை (Secret Life), வெளியரங்க வாழ்க்கை (Open life) என்று இரண்டு வாழ்க்கை உள்ளது. உலகம் நம் வெளியரங்க வாழ்க்கையை மட்டுமே அறியும். தேவன் ஒருவரே நம் அந்தரங்க வாழ்க்கையை அறிவார். 

மத்தேயு:26:14 - 16 - "அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப்போய்:நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள்.அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்."

யூதாஸ் காரியோத்து இயேசுவின் சீடர்களில் ஒருவன். அவன் இயேசுவோடு இணைந்து பல இடங்களுக்கும் சென்றும்,  அவருடைய போதனைகளை கேட்டுமிருக்கிறான். ஆனாலும், அவன் வெளியரங்கமாக இயேசுவுக்கும் அவர் போதனைகளுக்கும் ஆதரவளிப்பவனாக தெரிந்தாலும் அவன் அந்தரங்கத்தில் எதிர்த்து கொண்டிருந்தான்.

வெளியரங்க வாழ்க்கை - இயேசுவின் சீஷன்
அந்தரங்க வாழ்க்கை - இயேசுவை காட்டிக்கொடுக்கும் எண்ணமுடையவன் (பணஆசை உள்ளவன்)

அவன் அந்தரங்க வாழ்க்கையில் எப்படி  இருந்தானோ அதையே செயல்படுத்தினான். முடிவில் தான் செய்தது தவறு என்று உணர்ந்தான். குற்ற மனசாட்சி குத்தியது. ஆனால் மன்னிப்பு கேட்காமல் தற்கொலை செய்து கொண்டான். ஒருவேளை தன் அந்தரங்க வாழ்க்கையை குறித்து மன்னிப்பு கேட்டு மனந்திரும்பியிருந்தால் அவன் மேலான ஆசீர்வாதம் பெற்றிருப்பான்.

மத்தேயு:26:74,75 - "அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று.அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துகொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்."

பேதுரு இயேசுவின் சீஷர்களில் ஒருவன். அவன் இயேசுவோடு நெருங்கி இருந்த சீஷர்களில் ஒருவன். அவன் இயேசுவின் போதனைகளை கேட்டு அவரை விசுவாசித்தான்.அவன் வெளியரங்க வாழ்க்கை பரிசுத்தமானதாக விசுவாசம் நிறைந்ததாக இருந்தது. ஆனாலும் சில நேரங்களில் தவறி விழுந்துவிடுவான். அவன் இயேசுவை மறுதலித்தாலும், மனங்கசந்து அழுது ஒப்புரவாகினான். பரிசுத்த ஆவியானவர் அவனை நிறைத்தார். பெரிய அப்போஸ்தலனாக மாற்றி, முதல் பெந்தேகொஸ்தே சபையை நிறுவ செய்தார். 

தேவன் நம் அந்தரங்க வாழ்க்கையை பார்த்து நம் வெளியரங்க வாழ்க்கையை ஆசீர்வாதத்தினால் நிறைப்பார். ஆகவே நாம் அந்தரங்க வாழ்க்கையில் எப்படி இருக்கிறோம் என்று கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம்.

1. யாரும் காணாத இடத்தில் எப்படி இருக்கிறோம்?

ஆதியாகமம்:39:8,9 - "அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார்.இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான்."

யோசேப்பு யாரும் காணாத இடம் என்று பாவம் செய்திருக்க முடியும். ஆனால் தன்னை காண்கிற தேவன் ஒருவர் இருக்கிறார்; அவருக்கு விரோதமாக பாவம் செய்ய கூடாது என்ற தெளிவுடன் இருந்ததினால் பாவம் அவனை மேற்கொள்ள முடியாமல் போனது. அவன் அந்தரங்க வாழ்க்கை தெய்வ பயத்துடன் கூடிய பரிசுத்தத்துடன் காணப்பட்டது. அவன் வெளியரங்க வாழ்க்கை ஒரு அடிமையின் வாழ்க்கையாக காணப்பட்டது.  அவனது பரிசுத்த வாழ்க்கையை பார்த்த தேவன் அவனை பார்வோனுக்கு அடுத்த அதிபதியாக மாற்றி அவன் அடிமையாக இருந்த தேசத்தில் அவனை உயர்த்தினார்.  

அந்தரங்க வாழ்க்கை - பரிசுத்த ஜீவியம்
வெளியரங்க வாழ்க்கைகௌரவமான அடிமை

வெளியரங்கமான பலன்: 

அடிமையாக போன தேசமாகிய எகிப்தின் இரண்டாம் அதிபதியாக மாற்றம்

2. வெற்றி அடைந்திருக்கும் போது எப்படி இருக்கிறோம்?

நெகேமியா:9:25,26 - "அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும் ஏராளமான திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தை தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்."

இஸ்ரவேல் ஜனங்களை குறித்து நெகேமியா சொல்லுகிற காரியத்தை இங்கே பார்க்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் அடிமையாக எகிப்து தேசத்தில் பாடனுபவித்து தாங்க முடியாமல் தேவனை நோக்கி மன்றாடினார்கள். தேவன் அவர்களை கண்ணோக்கி பார்த்து, அவர்களை மோசேயை கொண்டும் யோசுவாவை கொண்டும் நடத்தி வந்து கானானை சுதந்தரிக்க செய்தார். அவர்களுக்கு தேவையான எல்லா காரியங்களையும் கொடுத்தார். 

யாத்திராகமம்:2:23-25 - "இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்."

அவர்கள் எல்லாவற்றையும் பெற்று கொண்டு திருப்தியாக இருக்கையில், அவர்கள் தேவனை மறந்தார்கள். அவர்கள் கீழ்ப்படியாமற்போனார்கள். அவர்கள் நியாயப்பிரமாணத்தை தூக்கி எறிந்தார்கள். கண்டித்த தீர்க்கதரிசிகளை கொலை செய்தனர்.தேவனுக்கு கோபமூட்டுகிற காரியத்தை செய்தனர். கிடைத்த பலன் என்ன தெரியுமா? அவர்கள் மீண்டும் மீண்டும் அடிமைத்தனத்துக்கு போனார்கள். ஆசீர்வாதத்தை இழந்தார்கள். சுதந்தரித்த பொருட்களை இழந்து போனார்கள். காரணம், அவர்கள் புசித்து திருப்தியாக இருக்கையில் (வெற்றி அடைந்திருக்கையில்) "தேவனை மறந்தார்கள்". 

நீ புசித்து திருப்தியாயிருக்கையில்.... தேவனை மறவாதே! அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி சொல்லு!!!

சங்கீதம்:103:1,2 - "என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே."

தாவீது தான் ராஜாவாக மாறின போதிலும் தேவனை மறக்காமல், அவரை அனுதினமும் நினைத்து அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி சொன்னான். தான் ஆடு மேய்க்கிறவனாக இருந்த காலத்தில் தேவனை எப்படி துதித்து ஆராதித்து அவருக்கு நன்றி செலுத்தி வந்தானோ, அதே போல அவன் இராஜாவான பிறகும் தான் செய்து வந்தபடியே கர்த்தருக்கு நன்றி செலுத்தினான். அவன் புசித்து திருப்தியாக இருக்கையில் இஸ்ரவேல் ஜனங்களை போல தேவனை மறக்காமல் அவர் செய்த நன்மைகளை நினைத்து நன்றி செலுத்தினான். அவன் தேவனை நினைத்ததினால், அவனுடைய விளக்கு என்றைக்குமே அணைந்து போகாமல் எரிந்து கொண்டேயிருக்கும் என்று வாக்குத்தத்தத்தை தேவன் கொடுத்தார்.

இன்று நீங்கள் யோசித்து பாருங்கள். நீங்கள் வெற்றி அடைந்திருக்கும்போது, எப்படி இருக்கிறீர்கள்? இஸ்ரவேல் ஜனங்களை போல தேவன் செய்த நன்மையை மறக்கிறீர்களா அல்லது தாவீதை போல நன்றி சொல்லுகிறீர்களா? உங்களை உய்த்து ஆராய்ந்து பாருங்கள்.

நீங்கள் அந்தரங்க வாழ்க்கையில் தேவனுக்கு பிரியமாக நடந்து கொண்டால், வெளியரங்கமாக பலனளிப்பார். வெளியரங்கமான பலனை பெற்று ஆசீர்வாதமாக வாழ கர்த்தர் உங்களுக்கு கிருபையளிப்பாராக! ஆமென்!




நவம்பர் 16, 2019

பரிசுத்த ஆவியானவர்

பரிசுத்த ஆவியானவர் யார்?


  • பரிசுத்த ஆவியானவர் தேவன்


மத்தேயு:28:19 - "ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,"

- இங்கே இயேசு, பிதா குமாரன் ஆகியோருக்கான அதே ஸ்தானத்தை பரிசுத்த ஆவியானவருக்கும் கொடுக்கிறார்.


  • தேவனால் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் பரிசுத்த ஆவியானவரும் செய்கிறார்.
  1. வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் (ஆதி:1:2, யோபு:26:13)
  2. மரித்தவரை எழுப்பினார் (ரோமர்:1:5)
  3. மறுபடியும் பிறப்பதற்கு காரணமானார் (யோவான்:3:5-7)
  4. நியாயத்தீர்ப்பை குறித்து உலகத்துக்கு கண்டித்து உணர்த்துவார் (யோவான்:16:8)
  5. பிசாசுகளை துரத்துவார் (மத்தேயு:12:28)
  • பரிசுத்த ஆவியானவருக்கு தேவனின் எல்லா குணாதிசயங்களும் உண்டு. 
  1. சர்வத்தை  அறிந்தவர் - Omniscient (1கொரி:2:10)
  2. சர்வ வல்லவர் - Omnipotent (லூக்கா:1:35)
  3. சர்வ வியாபி - Omnipresent (சங்:139:7,8)
  4. நித்தியர் - Eternal (எபிரேயர்:9:14)
  • பரிசுத்த ஆவியானவர் ஆள்தத்துவமானவர்.                                              (யோவான்:15:26 - " பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார். "; யோவான்: 16:7,8,13 - "நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.")
  • பரிசுத்த ஆவியானவர் ஒரு உண்மையான நபர். அவருக்கு அறிவு, உணர்வு, சித்தம் ஆகியவைகள் உண்டு. அவர் நம்மிலே அமர்ந்து நம்மிலே செயல்படுகிறார். தேவனை போல அவரும் பூரணர்!

பரிசுத்த ஆவியானவரின் பெயர்கள்:

1. பரிசுத்த ஆவி:  1தெசலோனிக்கேயர்:4:7,8 - "தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டை பண்ணுகிறான்."

திரித்துவத்தின் மூன்று நபர்களுள் பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தம், தூய்மை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்கிறார். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் தேவனுடைய ஆவி எது? பிசாசின் ஆவி எது? என்றும் விளங்கி கொள்ளலாம்.

2. தேவ ஆவி: எபேசியர்:4:30 - "அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்."

        பரிசுத்த ஆவியை வேதாகமும் தேவ ஆவி என அழைக்கிறது. ஏனெனில் அந்த ஆவி தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டது.
 (1கொரி:2:12 - "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.").

         தேவன், பரிசுத்த ஆவியின் மூலமாக கிரியை செய்கிறார். பாவிகளை, இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவிடம் இழுக்கின்றார்.
(யோவான்:6:44 - "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.")

        சத்தியத்தை வெளிப்படுத்துகின்றார். (மத்:11:25 - "அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.")

       விசுவாசிகளை நடத்துகிறார். (ரோமர்:8:14 - "மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.")

3. கிறிஸ்துவின் ஆவி: ரோமர்:8:9 - "தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல."

பரிசுத்த ஆவியானவர் 'கிறிஸ்துவின் ஆவி' என்றும் அழைக்கப்படுகின்றார். ஏனெனில், இயேசு பிதாவினிடமிருந்து பரிசுத்தாவியை பெற்று விசுவாசிகள் மீது பொழிந்தருளினார். (அப்:2:33 - "அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.")

4. தேற்றரவாளன்: யோவான்:15:26 - "அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்."

இயேசு பரிசுத்த ஆவியானவரை 'தேற்றரவாளன்' என்று அழைக்கிறார். அது எல்லையற்ற இரக்கத்தின் பெயர்.

பரிந்து பேசுகிறவர் (அ) தேற்றரவாளன் - Greek word: Paraclete 
                                                                                     பொருள்:  ஒருவர் பக்கமாக பேசுவது

யோவான்:14:16 -  "நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்."

முதலாம் தேற்றரவாளன் - இயேசு 
இரண்டாம் தேற்றரவாளன் - பரிசுத்த ஆவியானவர்  


பரிசுத்த ஆவியானவரின் அடையாளங்களை குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்!!! கர்த்தர் உங்களோடு இருப்பாராக! ஆமென்!!!


நவம்பர் 13, 2019

என்னுயிரில் கலந்தவரே - புதுப்பாடல்


"என்னுயிரில் கலந்தவரே" என்ற இந்த பாடல் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள பூரண சுவிசேஷ சபையின் போதகர்.இம்மானுவேல் அவர்களால் எழுதப்பட்டு நமது போதகர்.சார்லஸ் அவர்களின் மகள் லிடியா மெக் லிசி பாடியுள்ளார்கள். உங்களை ஆற்றுவதற்கு தேற்றுவதற்கு யாருமில்லை என்று கவலைப்படுகிறார்களா? இந்த பாடல் மூலம் தேவன் உங்களோடு இடைபடுவாராக! தேற்றுவதற்கு யாருமில்லை என்றாலும் பரம தகப்பனாகிய இயேசு நம்மை தேற்றுவதற்கு இருக்கிறார். கலங்காதிருங்கள்! 

பாடலை கேட்க கீழ்க்காணும் இணைப்பை அழுத்தவும்.

https://youtu.be/1DI4mjFBCAM

நவம்பர் 08, 2019

வேதத்தில் உள்ள வாலிபர்கள்

இந்த காலத்தில் வாலிபர்கள் தேவனுக்காக செயல்படுவதைக் காட்டிலும் உலகத்தின் அதிபதிக்காக செயல்படுவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். தங்கள் நேரத்தை செல்போனிலும், சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் தான் அதிகம் செலவழிக்கிறார்கள். வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் நேரத்தை செலவழிப்பதை வீண் என கருதுகிறார்கள். சாத்தான் தன்னுடைய வலையில் வாலிபர்களையும் வாலிப பிள்ளைகளையும் சிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறான். இளைய குமாரனை போல வழி தப்ப செய்து மேலான ஆசீர்வாதங்களை பிடுங்கிக் கொண்டு கீழானவைகளை கொடுத்து பரம தகப்பனின் அன்பை விட்டு விலக்கி விடுகிறான். அதை அறியாத வாலிபர்கள் அவன் தந்திர வலையில் சிக்குண்டு பாடுகளை அநுபவித்த பின்னர் தான் "ஐயோ! நான் பரத்துக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் என் தந்தையின் வீட்டில் ஒரு வேலைக்காரனை போலாகிலும் வேலை செய்ய போகிறேன்." என்று இளையகுமாரனை போல மனந்திரும்பி வருகின்றனர். ஆகவே வாலிபர்களே! வாலிப பிள்ளைகளே! மாயையான இந்த உலகத்தின் காரியங்களில் சிக்குண்டு போகாமல், நல் நேசராகிய இயேசு கிறிஸ்துவை பிடித்து கொள்ளுங்கள்.

வேதத்தின் வாயிலாக சில வாலிபர்களை குறித்தும் அவர்களின் ஜீவியத்தை குறித்தும் அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதத்தை குறித்தும் இந்த செய்தியில் பார்ப்போம்.

1. இயேசு கிறிஸ்து


இயேசு இந்த பூமியில் நம் பாவங்களை நீக்க மனிதனாக வந்துதித்தார். அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் திவ்விய சுபாவங்களை வெளிப்படுத்தி பரிசுத்தமாக, தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தார். அவர் வாலிபனாக இருந்த காலங்களில் வெளிப்படுத்தின குணாதிசயங்களை பார்ப்போம்.


  • கீழ்ப்படிதல்


 லூக்கா:2:51- "பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்."

-    இயேசு தான் வாலிபனாக இருந்த நாட்களில் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிதலுள்ள மகனாக இருந்தார்.தன் ஊழியத்திற்கான நேரம் வரும் வரை காத்திருந்து தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து வந்தார். தான் தேவகுமாரன் என்று அவர் மேன்மைபாராட்டாமல் தாழ்மையுள்ளவராக இருந்து எல்லா காரியங்களிலும் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்திருந்தார்.

  • வேத அறிவு பெற்றவர்
லூக்கா:2:46 - "மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்."

- தன்னுடைய 12 வது வயதிலேயே போதகர்கள் நடுவில் சந்தேகங்களை தீர்க்கவும் தியானிக்கவும் பேசவும் வேத அறிவு பெற்றவராக விளங்கினார்.


  • கடமையை நிறைவேற்றுதல்


யோவான்:19:25-27 - "இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்."

- தான் மரிக்க வேண்டிய நேரம் வரும்போது தன் தாயை கண்ட இயேசு தனிமையாக இருப்பதை பார்த்து தன் தாயை கடைசி காலத்தில் கவனித்து கொள்ளும்படியாக தன் சீஷனாகிய யோவானை ஏற்படுத்தினார். ஒரு மகனாக தன் பூமிக்குரிய கடமையை நிறைவேற்றினார்.


இயேசு தன் வாலிப நாட்களில் பரிசுத்தமாக தன்னைக் காத்துக்கொண்டு தேவனுக்கு பிரியமாக பெற்றோருக்கு நல்ல மகனாக இருந்ததினால் அவருக்கு தேவன் சில காரியங்களில் வளர்ச்சியை தந்தார்.

லூக்கா:2:52 - " இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்."

1. ஞானம் 

ஞானம் - தேவனிடத்திலிருந்து வருவது

யாக்கோபு:1:5 - "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்."

யாக்கோபு:3:17 - "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது."

தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஞானம் குறைவற்றது. சாலொமோனை போல ஞானவான் அவனுக்கு முன்னிருந்ததுமில்லை. அவனுக்கு பின் எழும்பினதுமில்லை. ஏனென்றால் அவன் தேவனிடத்திலிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டான். கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு ஞானம் கொடுக்கப்படும். (நீதி:1:7) கர்த்தரிடத்தில் சாலொமோன் ஞானத்தை விரும்பி கேட்டான். அவனுக்கு கொடுக்கப்பட்டது. 

நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாக இருந்தால் கர்த்தரிடத்தில் கேளுங்கள். பரத்திலிருந்து வருகிற ஞானத்தை பெற்று கொண்டால் உலகத்தின் காரியங்களை எளிதில் எதிர்கொள்ளலாம். 
-  இயேசு ஞானத்தை பெற்றுக்கொண்டு தேவாலயத்திலுள்ள அறிவுசார் பெரியோர்களான பரிசேயர்களையும் வேத பாரகரையும் எதிர்கொள்ள முடிந்தது. அவர்கள் தங்களது பேச்சு சாதுர்யத்தினால் ஜனங்கள் மத்தியில் இயேசுவை வீழ்த்த வேண்டுமென்று பல முறை முயன்றும் தோற்று போனார்கள். காரணம், இயேசு பரத்திலிருந்து ஜோதிகளின் பிதாவினிடத்தில் ஞானத்தை பெற்று கொண்டு விருத்தியடைந்தார். 

மத்தேயு:22:17-21 - "ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்."

இயேசுவை ரோமர்களிடம் மாட்டிக்கொள்ள வைக்கும்படியாக அவரிடம் வரிகொடுத்தலை பற்றி பரிசேயர்கள் கேட்டனர். அவர்களின் திட்டத்தை அறிந்த இயேசு ஞானத்தை வெளிப்படுத்தினார்.

மத்தேயு:22:23-32 - "உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்து போனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்."

சதுசேயர் இயேசுவை குற்றங்கண்டுபிடிக்கும்படியாக அவரை சோதிக்கும்படிக்கு உயிர்த்தெழுதலை குறித்து அவரை கேள்வி கேட்டனர். பழைய ஏற்பாட்டில் பிதாவினால் நியாயப்பிரமாணம் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆகவே அந்த நியாயப்பிரமாணத்திலிருந்து இயேசுவிடம் இந்த கேள்வியை கேட்டால், அவர் பழைய ஏற்பாட்டு சட்டத்தை மீறி சொன்ன குற்றத்திற்காக  தண்டிக்க முடியும் என்ற நோக்கத்தில் அவரிடம் கேட்டனர். ஆனால் இயேசு அவர்களை தன்னுடைய ஞானத்தினால் வென்றார்.

2. வளர்ச்சி  

வளர்ச்சி என்பது சரீரத்திலும் ஆவிக்குரிய காரியங்களிலும் வளர்வது.

இயேசு தன்னுடைய சரீரத்திலும் ஆவிக்குரிய திவ்விய சுபாவங்களிலும் வரங்களிலும் கனிகளிலும் வளர்ந்தார். 

வளர்ச்சி என்பது அத்தியவாசியமானது. ஒரு செடி வளர்ந்தால் தான் கனி கொடுக்க முடியும். அந்த செடி வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்து வேண்டும். அதே போல் தான் ஒரு மனிதன் வளர்ந்து கனி கொடுக்க தேவையான  ஊட்டச்சத்து - ஜெபமும் வேதவாசிப்பும் மட்டுமே. இவையிரண்டும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி பூரணமாகும். ஊட்டச்சத்தின் அளவு குறைந்தால் வளர்ச்சியும் குறைவுபடும். கனி கொடுப்பது தடைப்படும். 

1சாமுவேல்:2:26 - "சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்."

சாமுவேல் தன்னுடைய சிறு பிராயத்திலேயே கர்த்தருடைய சந்நிதியில் வளர்க்கப்பட்டான். கர்த்தருக்கு பிரியமான பிள்ளையாக வளர்ந்ததினால், தீர்க்கதரிசியாக மாறினான்.  தாண் முதல் பெயர்செபா மட்டும் அவன் பெயர் விளங்கினது. தேவ சமூகத்தில் வளர்க்கப்பட்ட பிள்ளை ஒரு குறைவில்லாமல் பூரண வளர்ச்சியடையும்.

தேவ ஊழியக்காரனான ஏலியின் குமாரர்களும் கர்த்தருடைய சந்நிதியில் தான் வளர்க்கப்பட்டார்கள்.ஆனால் அவர்கள் கர்த்தருக்கு பிரியமாக நடந்துகொள்ளாதபடியால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

எரேமியா:18:4 - "குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்."

ஒரே குயவனின் கையில் தான் இருவரும் வனையப்பட்டார்கள். ஆனால் ஒருவன் கெட்டுப்போன மண்பாண்டம் (ஓப்னி, பினேகாஸ்); இன்னொருவன் விட்டுக்கொடுக்கும் மண்பாண்டம்(சாமுவேல்). கெட்டுப்போன மண்பாண்டம் என்று குயவன் தூக்கி எறியாமல் மீண்டும் தமக்கு ஏற்றபடி வனைய முயன்றும் திரும்ப திரும்ப கெட்டுபோன காரியங்களை செய்ததால், குயவனால் தமக்கேற்றபடி வனைய முடியவில்லை. ஆனால் விட்டுக்கொடுக்கும் மண்பாண்டத்தை தமக்கு ஏற்றபடி அழகாக வனைந்தார்.

"கெட்டுபோன மண்பாண்டமாக இருக்காதே ! விட்டுக்கொடுக்கும் மண்பாண்டமாக இரு! கர்த்தர் உன்னை உருவாக்குவார்."

1சாமுவேல்:16:7 - "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்."

இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படும்படிக்கு சாமுவேல் ஈசாயின் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொருவனையும் பார்த்தார். எலியாபை பார்த்த சாமுவேல் அவனின் சரீர வளர்ச்சியை மட்டுமே பார்த்தார். ஆனால் அவன் இருதயம் சுத்தமில்லாமலிருக்கிறதை கவனிக்கவில்லை. கர்த்தரோ ஒரு மனிதனின் சரீர வளர்ச்சியை மட்டுமல்ல ஆவிக்குரிய வளர்ச்சியையும் பார்ப்பார்.

யோசுவா ஆசரிப்பு கூடாரத்தை விட்டு பிரியாமல் ஆண்டவரோடு நெருங்கி வாழ்ந்தான். அவருடைய சமூகத்தில் வளர்ந்தான். பின்னாட்களில் அவன் மோசேக்கு அடுத்த பெரிய பொறுப்பில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி கானான் தேசத்தை சுதந்தரித்தான். கர்த்தருடைய சமூகத்தில் அவரால் வளர்க்கப்பட்டவர்கள் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றார்கள்.

3. தேவகிருபை 

கிருபை - தகுதியில்லாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் பரிசு (அ) விலைமதிப்பற்ற அன்பு

கிருபையானது மனிதனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக பரிசாக கொடுக்கப்பட்டது.  தேவ கிருபை இல்லாவிட்டால் நாம் என்றைக்கோ மரித்திருப்போம்.

தீத்து:2:11 - "ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி"

அவர் நம்மேல் வைத்த கிருபையினால், நாம் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் நமக்காக பலியானார். விலைமதிப்பில்லாத அவருடைய பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். அவர் தேவகிருபையில் விருத்தியடைந்ததினால் நமக்கும் அந்த கிருபையை ஈவாக தந்தருளினார்.

இளைய குமாரன் மனந்திரும்பி தன் தகப்பனிடத்தில் வந்த போது அவர் அவன்மேல் கிருபையை காண்பித்தார்.(லூக்கா:15:20 - 24)

1. மனதுருகி கட்டிக்கொண்டு முத்தமிட்டார்
2. உயர்ந்த வஸ்திரத்தை உடுத்துவித்தார்
3. மோதிரத்தையும் பாதரட்சைகளையும் அணிவித்தார்
4. கொழுத்த கன்றை அடிப்பித்து விருந்து வைத்தார்
5. கீத வாத்தியம் முழங்கி சந்தோஷப்படுத்தினார்

தன் தகப்பனுடைய கிருபையை விட்டு விலகின இளைய குமாரனுக்கு கிடைத்தது பன்றியின் உணவு மட்டுமே. கர்த்தருடைய கிருபையை விட்டு விலகும் போது மேலான ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். நாம் எப்போதும் அவருடைய கிருபையின் நிழலிலே இருக்கும்போது சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. தன்னுடைய தகுதியை இளைய குமாரன் இழந்துபோனான். ஆனால் அவன் மனந்திரும்பி வந்த போதோ, தகுதியில்லாத அவனுக்கு அளவில்லா அன்பு காட்டப்பட்டது. இதுதான் கிருபை!

இயேசுவானவர் கிருபையில் விருத்தியடைந்து நமக்கும் அந்த கிருபையை தந்துள்ளார். தன்னுடைய சிலுவை மரணத்தினால் நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுத்து, தகுதியில்லாத நம்மேல் அளவில்லா விலையேற பெற்ற அன்பை பொழிந்து, தகுதியுள்ளவனாகவும் தகுதியுள்ளவளாகவும் மாற்றினார். இதற்கு காரணம் அவர் நம்மேல் வைத்த கிருபை!


4. மனுஷர் தயவு  

தயவு - இரக்கம் காட்டுவது, மன்னிப்பது

எபேசியர்:2:27 - "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."

கர்த்தரின் தயவு புறஜாதிகளாக இருந்த நம்மை மீட்டெடுத்து நீதிமானாக்கி ஆபிரகாமின் பிள்ளைகளாக மாற்றி உன்னத பரலோகத்தை பெறும்படி செய்ததது.

மனுஷர் தயவும் நமக்கு தேவை. காரணம் - மனுஷருடைய தயவு அந்தந்த இடத்தில் கிடைக்கும்போது நாம் காத்திருக்க தேவையில்லாமல் நாம் நினைத்த காரியம் எளிதில் முடியும்.கர்த்தருடைய தயவினால் அந்தந்த மனிதர்கள் கண்களில் தயை கிடைத்து நாம் நினைத்த காரியம் நடைபெறும்.

மனுஷர் தயவு என்பது சுற்றுபுறத்தில் சமாதானமாக இருத்தலையும் குறிக்கும். நம்மை சுற்றியுள்ள இடங்களில் நாம் சமாதானத்தோடு இருக்கவேண்டும். நாம் படிக்கும் இடங்களில், வேலை செய்யும் ஸ்தலங்களில் எங்கும் சமாதானம் இருக்க வேண்டும். நம்மை குறித்து நல்ல சாட்சி கொடுக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் கண்களில் நமக்கு தயை கிடைக்க வேண்டும். எந்தவொரு பிரச்சினையிலும் அகப்பட்டு பெயரை கெடுத்து கொள்ளாமல் சமாதானத்துடன் இருக்க வேண்டும்.

யோசேப்பு போத்திபாரின் வீட்டில் அடிமையாக இருந்த போது அவனுக்கு போத்திபாரின் கண்களில் தயை கிடைத்ததினால் அவன் அடிமைபோல் நடத்தப்படாமல், கனத்திற்குரியவனாக நடத்தப்பட்டான். அவனோடு கர்த்தர் இருக்கிறார் என்றும் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்றும் போத்திபார் அறிந்து கொண்டான். அவன் மேல் தயவு வைத்து அவனை வீட்டு விசாரணைக்காரனாக்கினான்.

ஆதியாகமம்:39:2-4 - "கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்."

ஆகவே மனுஷர் தயவிலும் அதிகமதிகம் விருத்தியடைய வேண்டும்.

இயேசு வாலிபனாக இருந்த நாட்களில் இந்த எல்லா காரியங்களிலும் விருத்தியடைந்தார். தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தார்.

வேதாகமத்திலுள்ள இன்னும் சில வாலிபர்களின் குணாதிசயங்கள், அவர்களின் பரிசுத்த ஜீவியத்தின் காரியங்களோடு மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....

அதுவரை கர்த்தர் உங்களோடு இருப்பாராக!

                                                                                                                          தொடரும்.....