(ஊழியர்களுக்கான செய்தி)
தேவன் தரும் தரிசனம், சபை இலக்குகள், வாக்குத்தத்தம், ஆசீர்வாதப் பெருக்கம் எப்போது எப்படி நிறைவேறும்?
இவைகளை அறிய ஏசாயா: 60, 61, 62 ஆம் அதிகாரங்களை கருத்தாய் வாசித்து தியானிக்க வேண்டியது அவசியமாகிறது.
ஏசாயா: 60:22 - "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்".
கர்த்தர் சொன்ன இந்த வாக்குத்தத்தமானது எப்படி நிறைவேறும்? அதற்கு ஏசாயா: 61:1-3 வரை வாசிக்க வேண்டும். இந்த வேதபகுதியை நமதாண்டவர் இயேசு கிறிஸ்து வாசித்து இன்றைய தின்ம் நிறைவேறிற்று என்று சொன்ன வேதபகுதி இது.
வாக்குத்தத்தம் நிறைவேற ...
1. கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் நம்மேல் இருக்க வேண்டும்
2. கர்த்தர் நம்மை அபிஷேகம் பண்ண வேண்டும்
3. சுவிசேஷத்தை அறிவிக்க, காயங்கட்ட, விடுவிக்க, கட்டவிழ்க்க, ஆறுதல்
செய்ய, சீர்படுத்த, துதிக்க நம்மை அனுப்ப வேண்டும்
ஆவியானவரின் அபிஷேக வல்லமை ஊழியர்கள்மேல் வந்து விட்டால்...
1. நெடுங்காலமாய் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டுவார்கள்
2. இரட்சிப்பற்ற பாழான பட்டணங்களை புதிதாய்க்கட்டுவார்கள் (ஏசாயா: 61:4)
இப்படிச் செய்கிற ஒவ்வொரு ஊழியரையும் ஜனங்கள் இவ்விதமாய் சொல்வார்கள்: (ஏசாயா: 61:6)
1. நீங்களோ கர்த்தரின் ஆசாரியர் என்று சொல்லப்படுவீர்கள்
2. தேவனுடைய பணிவிடைக்காரர் என்பார்கள்
ஜனங்கள் உங்களை கனம் பண்ணும்படி கர்த்தர் அருள் செய்வார்.
தேவன் சபைக்காக, தம் ஜனத்திற்காக பக்தி வைராக்கியம் காண்பிக்கிறவர். ஜனங்களை நேசிக்கிறவர். அவர்களுக்காக தம் ஜீவனென்றும் பாராமல் சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுத்தவர். இப்படிப்பட்ட நல்ல தேவன் சொல்லுகிறார்:
ஏசாயா: 62:1 - சீயோனினிமித்தமும், எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்"
"சீயோனினிமித்தமும்" என்கிற இடத்தில் நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்தின் பெயரை எழுதுங்கள். "எருசலேம்" என்கிற இடத்தில் உங்கள் சபையின் பெயரை வைத்துக் கொண்டு வாசித்துப் பாருங்கள். விசுவாசம் உள்ளத்தில் வருவதை காணலாம்.
தேவன் நீங்கள் ஊழியம் செய்யும் பட்டணத்தையும், சபையையும் பிரகாசிக்க செய்து, இரட்சிப்பை வெளிப்படுத்தி, சபையின் தரிசனம், சபையின் இலக்குகள் நிறைவேறுகிற வரைக்கும் அவர் மவுனமாயிராமலும், அமராமலும் இருப்பேன் என்கிறார்.
பதிலுக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
1. ஏசாயா: 62:6 - "... கர்த்தரை பிரஸ்தாபம் பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது"
2. ஏசாயா: 62:7 - "அவர் எருசலேமை (சபையை) ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதை புகழ்ச்சியாக்கும் வரைக்கும் அவரை அமர்ந்திருக்க விடாதிருங்கள்"
3. ஏசாயா: 62:6 - "எருசலேமே, (சபையே) உன் மதில்களின்மேல் பகல் முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன்"
பொறுப்பு வகிக்கிற சபையை ஆராதனை முடிந்ததும் பூட்டி விடாமல், வார இடைப்பட்ட நாட்களில் பகலும், இரவும் ஜெபம் பண்ணுகிற ஜாமங்காக்கிறவர்களை ஏற்படுத்தி, ஜனத்தின்மேல், சபையின்மேல் வைராக்கியங் காட்டுகிற கர்த்தரை அமர்ந்திருக்க விடாது ஜெபத்தில் துதிப்பதில் ஆராதிப்பதில் சபையாரை ஊக்குவிக்க வேண்டும். ஊழியராகிய நாமும் அமரிக்கையாக இருந்து விடக்கூடாது. ஜெபங்களில், உபவாசங்களில், வேதவாசிப்பில், போதிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அப்போது நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர் தரிசனத்தை, இலக்குகளை, வாக்குத்தத்தங்களை, ஆசீர்வாதப் பெருக்கத்தை கட்டளையிடுவார்.
மேற்கண்டவாறு நாம் செய்தால்... தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்...
ஏசாயா: 62:8 ன்படி செய்வார். "இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக் கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலது கரத்தின் மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின் மேலும் ஆணையிட்டார்"
அப்படியே செய்வாராக... ஆமென்... அல்லேலூயா...
100 பேருள்ள சபையானது 1000 பேர் கொண்ட சபையாக தேவன் மாற்றுவார்
1000 பேருள்ள சபையை பலத்த ஜாதியாக மாற்றுவார்
சோர்ந்து போகாதிருங்கள் ஊழியரே
நாம் செய்வதை வசனத்தின்படி செய்து விட்டால்...
தேவன் செய்வதை வசனத்தின்படி, தான் ஆணையிட்டதின்படி அவரும் தவறாது செய்வார். திடன் கொள்ளுங்கள்! பெலன் கொள்ளுங்கள்!
சோர்வுகளைக் களைந்து ஊக்கப்படுங்கள்! கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்.
நீதியை சரிக்கட்டும் தேவன் நாம் ஆராதிக்கும் தேவன். உங்கள் நீதி விளங்கச் செய்வார். God Bless You!