நவம்பர் 03, 2012

இயேசுகிறிஸ்துவின் போதகம்

 

இயேசுகிறிஸ்துவின் போதகம்

கிறிஸ்து உபதேசிக்கும் போதக வித்தியாசத்தை ஜனங்கள் உடனே கண்டு கொண்டார்கள். இவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால் ஜனங்கள் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள். (மத்தேயு: 7:29).

அக்காலத்திலிருந்த அவர்களுடைய பெரிய போதகர்களையும் அவர்கள் உபதேசங்களையும் கண்டிக்கிறார். யூதர்களின் பாரம்பரியங்களை மட்டுமல்ல, மோசேயின் பிரமாணங்களையே அடித்துப் பேசுகிறார். "புர்வத்தாருக்கு அப்படி உரைக்கப்பட்டது; ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத்தேயு: 5:27) என்கிறார்.

யாராவது, எக்காலத்திலாவது இப்படிப் பேசினதுண்டா?!

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள், "கர்த்தர் சொல்லுகிறார்" என்று தங்களைப் பார்க்கிலும் மேலான ஒருவருடைய அனுமதியின்பேரில் பேசினார்கள். ஆனால், இயேசுவோ "மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று தாமாகவே சொல்லுகிறார். இவ்விதமாக அவர் மூன்று சுவிசேஷங்களில் 49 தடவை சொல்லியிருக்கிறார்.

தேவனுடைய கையின் கிரியையென்று யூதர் எக்காலமும் நம்பியிருக்கும் மோசேயின் ஆகமங்களை, எந்த தீர்க்கதரிசியாவது, எப்போதாவது இப்படி மாற்ற துணிந்ததுண்டா?

எந்த தீர்க்கதரிசியாவது எப்போதாவது தன்னை மோசேக்கு அல்லது ஆபிரகாமுக்கு சமமாகவல்ல, தேவனுக்கு சமமாக, இப்படி தன்னைக் காட்டினதுண்டா?

பழைய ஏற்பாட்டின் வெளிப்படுதலை மாற்றவோ, உறுதிப்படுத்தவோ, சரியென ஒத்துக் கொள்ளவோ, தனக்கிருக்கும் அதிகாரத்தை தர்க்கிக்க ஒருவரும் இல்லையென்பதுபோல போதிக்கிறார். இருண்ட உலகிற்கு தாமே வழியாகவும், ஆத்ம வாஞ்சையை திருப்தி செய்ய தாமே சத்தியமாகவும் சொல்லுகிறார். (யோவான்: 6:35,47; 4:14). ஜீவ அப்பம் நானே; ஜீவ தண்ணீர் நானே.

இயேசுகிறிஸ்து தம்மை மனிதரோடு சம்மந்தப்படுத்தி பேசும்போது, "நீங்கள் தாழ்விலிருந்து உண்டானவர்கள், நான் உயர்விலிருந்து உண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள். நான் இந்த உலகத்திலிருந்து உண்டானவனல்ல" என்கிறார். (யோவான்: 8:23).