நவம்பர் 05, 2012

உலக வல்லரசுகள்

பெரும்பாலும் சாம்ராஜ்யம் அல்லது வல்லரசுகள் என்பது  -  ஒரு நாடு தனது போர்த்திறனாலும் வலிமையனாலும் பிற ராஜ்யங்களை வென்று அங்கு தன் ஆட்சியை அமைப்பதாகும். வலிமையுள்ள இனங்கள் மற்ற இனங்களை வென்றதன் மூலமாக சாம்ராஜ்யங்கள் ஏற்பட்டன. பழைய ஏற்பாட்டு காலத்தில் பல வல்லரசுகள் தோன்றின. அதில் ஐந்து முக்கியமானவை. அது பற்றி சுருக்கமாக காண்போம்.

 
1. சீரியா:

ஆசிய மைனரில் மத்தியதரைக் கடலோரத்தில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் வடக்கில் துருக்கியும் (ரோம்), கிழக்கில் ஈராக்கும் (அசீரியா), தெற்கில் இஸ்ரவேலும், மேற்கில் மத்திய தரைக் கடலும் எல்லைகளாக உள்ளது.

சீரியாவின் தலைநகர் தமஸ்கு. இங்கு கி.மு.3000 ல் முதன் முதலாக அரபிய மக்கள் குடியேறினார்கள். சீரியாவின் பழைய பெயர் ஆராம். தாவீதின் நாட்களில் சீரியர் இஸ்ரவேலரோடு யுத்தத்தத்துக்கு வந்தபோது, தாவீது சீரியரை முறியடித்து அதை தன் வசமாக்கினான். சாலமோனின் நாட்களில்  தமஸ்கு பிரிந்து சுயாதீனம் பெற்றது. ரெகோபெயாம் ராஜாவானபோது சீரியா முழுவதும் சுயசாம்ராஜ்யமாயிற்று. கி.மு. 54 ல் சீரியா ரோம ராஜ்யத்திற்கு கீழ்பட்டது.

2. அசீரியா:

 
இது டைகிரிஸ் நதியை ஒட்டின ஒரு தேசம். (ஆதியாகமம்: 2:14). இதன் தலைநகரம் நினிவே. (ஆதியாகமம்:  10:11). சேமின் குமாரனாகிய அசுர் என்ற பெயரிலிருந்து அசீரியா என்ற பெயர் வந்திருக்கலாம். இத் தேசத்தார் அசுர்  என்ற தெய்வத்தை வணங்கி வந்தனர். அசீரியர் பாபிலோனியரோடு சம்மந்தங் கலந்திருந்தனர். அசீரியா ஒரு காலத்தில் பலத்த ராஜ்யமாக இருந்தது. அசீரியாவில் பேர் பெற்ற ராஜா திகிலாத்பிலேசர். இவன் இஸ்ரவேல் ராஜாக்களாகிய பெக்காகிய, மெனோகேம் நாட்களில் அவர்களிடமிருந்து வெகுமதிகளைப் பெற்றான்.

அசீரியாவின் ராஜாவாகிய சல்மனேசர் சமாரியாவை 3 வருடம் முற்றுகை போட்டிருந்தான். (2ராஜாக்கள்:17:3). பின்பு,  சர்கோன் என்பவன் சமாரியாவை பிடித்து இஸ்ரவேலரை சிறையாகக் கொண்டு போனான். (2ராஜாக்கள்: 17:6; ஏசாயா: 20:1). இதற்கு சில காலங்களுக்குப் பின் அசீரியா, மேதியரால் பிடிக்கப்பட்டு அழிந்து போனது. ஏசாயா: 10:9.

3. பாபிலோன்: 
 
இது ஐபிராத்து நதியின் கீழ் கரையில் இருந்த ஒரு தேசம். பாபேல் பட்டணம் ஒரு புர்வீக பட்டணம். இது நிம்ரோத் ஆரம்பத்தில் ஆண்ட தேசம். பாபேல் பட்டணத்தை ஹமுராபி என்ற ராஜா முதலாவது பாபிலோன் தேசத்தின் ராஜஸ்தானமாக்கினான். அசீரியாவின் ராஜாவாகிய சனகரிப் சிறை முற்றுகை போட்டு இடித்து தரை மட்டமாக்கினான்.

பாபிலோன் சாம் ராஜ்யத்தை ஸ்தாபித்தவர் நேபுகாத் நேச்சார். இவர் காலத்தில் யு+தர்கள் 70 வருடம் பாபிலோனில் சிறைப்பட்டு போனார்கள். பாபிலோன் சாம் ராஜ்யம் கி.மு.606 - 538 வரை , 68 ஆண்டுகள் மாத்திரமே உலகத்தை ஆண்டது. இந்நாட்களில் யு+தர்கள் பாபிலோனில் இருந்தனர். கி.மு. 539 ல் தரியுவின் நாட்களில் கோரேஸ் இதைப் பிடித்தான். இப்படி மேதி பெர்சிய சாம் ராஜ்யம் பாபிலோனை ஜெயித்த தங்களுடைய சாம் ராஜ்யத்தை உலகத்தில் ஸ்தாபித்தார்கள். பாபிலோன் கடைசியில் கீழ் நிலை அடைந்து மண்மேடாயிற்று.

4. மேதிய பெர்சிய சாம் ராஜ்யம்:

 பெர்சிய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவன் கோரேஸ். இது இரட்டை ராஜ்யம். மேதியரும் பெர்சியரும் சேர்ந்து கூட்டாட்சி நடத்தி வந்தனர். இது கி.மு. 538 - 333 வரை 208 வருடங்கள் உலகத்தை ஆண்டது. இஸ்ரவேலர் மேதிய பெர்சிய சாம் ராஜ்யத்தின் கீழ் பாபிலோனில் 2 வருடங்கள் இருந்தது. கி.மு.536 ல் அவர்களில் ஒரு கூட்டத்தார் செருபாபேல் தலைமையில் எருசலேமுக்கு முதன் முதலாய் புறப்பட்டுப் போனார்கள்.

5. கிரேக்க சாம்ராஜ்யம்:
ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த மத்தியதரைக்கடலில் நீண்டிருக்கும் ஒரு நாடு. இந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர் மகா அலெக்சாண்டர். கி.மு.500 ல் இத் தேசம் சிறப்புற்று விளங்கியது. மற்ற தேசத்தார் மெச்சப்படக் கூடிய நாகரீக வளர்ச்சியை பெற்றிருந்தது. அலெக்சாண்டர் கிரேக்க தேசம் துவங்கி, இந்தியா வரை படையெடுத்து வந்து பல இடங்களை ஜெயித்து பாபிலோனை தன் ராஜ்யத்திற்கு முக்கிய பட்டணமாக ஸ்தாபித்து, சில வருடம் கீர்த்தி பெற்று அரசாண்டான்.

கிரேக்க சாம் ராஜ்யம் உலகத்தை கி.மு. 330 - கி.மு.30 வரை 300 வருடங்கள் ஆட்சி செய்தது. ஆனால், மகா அலெக்சாண்டர் 8 வருடங்கள் மாத்திரமே உலகத்தை ஆண்டான். கி.மு. 323 ல் மரித்து விட்டான். இஸ்ரவேல் 300 வருடங்கள் கிரேக்கரின் ஆளுகைக்குள்ளிருந்தது. பின்பு கி.மு. 30 ல் கிரேக்க சாம்ராஜ்யம் ரோமர்களால் பிடிக்கப்பட்டது. இதுவே உலகத்தில் தோன்றின 5 வது சாம்ராஜ்யமாகும்.

6. ரோம சாம்ராஜ்யம்:

 
ரோம சாம்ராஜ்யம் கி.மு.30 ல் உலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் முதல் சக்ரவர்த்தி அகஸ்துராயன். இவனது காலத்தில் இயேசு பெத்லகேமில் பிறந்தார். (கி.மு.4). இயேசுவின் காலத்தில் யு+த ஜாதியினர் ரோமருடைய ஆளுகைக்குள் இருந்தார்கள். கி.பி.70 ல் யு+தர் செய்த கலகத்தினிமித்தம் ரோம சேனாதிபதி எருசலேமை அழித்து தேவாலயத்தையும் சுட்டெரித்தான். ஜனங்கள் சிறையாக கொண்டு போகப்பட்டார்கள்.

ரோம நகரம் கி.மு.753 ல் கட்டப்பட்டது. கி.மு.30 ல் ரோம கிரேக்க சாம் ராஜ்யத்தில் மீந்திருந்த எகிப்தை ஜெயித்து தனது உலக சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தது. கி.பி.46 - 180 வரை ரோம சாம் ராஜ்யத்தின் மகிமை உச்சக்கட்டத்தை அடைந்தது. ரோமை ஆண்ட சக்ரவர்த்திகளில் முக்கியமானவர்கள்.

கிமு. 46 - 44  - ஜீலியஸ் சீசர்

கி.மு. 31 - கி.பி.14  - அகஸ்துராயன்

கி.பி. 14 - 37 - திபேரியு ராயன்

கி.பி. 54 - 68 - நீரோ மன்னன்

கி.பி. 69 - 79 - வெஸ்பாசின்

கி.பி. 78 - 81 - தீத்து

கி.பி. 81 - 96 - டொமிசியன்

கி.பி. 98 - 117 - டிராஜன்

கி.பி. 117 - 138 - ஹாட்ரியன்