நவம்பர் 27, 2012

தியத்தீரா

 
(வெளிப்படுத்தல்: 2:18-29)
(போப்பின் ஆளுகை சபை - விட்டுக் கொடுக்கும் தன்மை)
கி.பி.600 - 1517 - கால சபைக்கு ஒப்பிடலாம்

தியத்தீரா பட்டணம்: (ஐரோப்பா)

இது பெர்கமுவுக்கு 40 மைல் தென் கிழக்கில் அமைந்திருக்கிறது. வியாபாரத்திற்கு சிறந்த இடம். இரத்தாம்பர வியாபாரத்திற்கு பெயர் பெற்றது. அப்போஸ்தலர்: 16 ல் கூறப்பட்ட லீதியாள் இப்பட்டணத்தைச் சார்ந்தவள்.  இங்கே ஆடைகளுக்கு சாயம் தோய்க்கும் தொழில் சிறப்பாக நடந்து வந்தது. இந்த சாயம் காய்ச்சுவதற்கு உபயோகிக்கப்பட்ட  தாவரப் பொருள் இப்பட்டணத்தை சுற்றியுள்ள இடங்களில் தான் கிடைத்தன. லீதியாளின் மூலமாய் இப்பட்டணத்தில் சுவிசேஷம் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சாம்பதி என்ற தேவதையின் கோவில் இங்கிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இப்பட்டணம் இருந்த இடத்தில் சிறு கிராமம் இருக்கிறது. அசுத்தமான இடமாயும் தற்போது இருக்கிறது.

இச் சபைக்கு கிறிஸ்துவின் வெளிப்பாடு:

பட்சிக்கிற அக்கினியாக கிறிஸ்து இச்சபைக்கு வெளிப்படுகிறார். இச்சபை மனம் திரும்பாவிட்டால் நியாயத் தீர்ப்பு சீக்கிரமாய் வரும் என்பதைக் காட்டுக்கிறது. 

நற்குணங்கள்:

1. நற்கிரியை
2. அன்பு
3. நல்ல ஊழியம்
4. பொறுமை
5. விசுவாசம்
6. அதிகமான நற்கிரியை

தீய குணங்கள்:

யேசபேலுக்கு இடம் கொடுத்தல். அதாவது, வேசித்தனத்துக்கும் விக்கிரக ஆராதனைக்கும் இடம் கொடுத்தல்.

யேசபேல்:

பழைய ஏற்பாட்டில் ஆகாப் ராஜாவின் மனைவி, சீதோனிய ராஜாவின் மகள். புறஜாதிய ஸ்திரி. விக்கிரக ஆராதனை செய்தவள். இவள் திருமணம் ஆனவுடன் தன்னுடன் 450 பாகால் தீர்க்கதரிசிகளையும் 400 தோப்பு விக்கிரக தீர்க்கதரிசிகளையும் கொண்டு வந்தாள். (1ராஜாக்கள்: 16:31-33; 18:19; 19:2). இங்கே யேசபேல் என்று கூறப்பட்டிருப்பது இருண்ட காலத்தில் எழும்பிய போப்பின் ஆளுகையைக் குறிக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். இந்நாட்களில் பரிசுத்தவான்களுடைய மற்றும் தேவதூதர்களின் சிலைகள் வைக்கப்பட்டன. கி.பி. 381 ல் கன்னி மரியாளை வணங்கும் முறை ஆரம்பமாயிற்று. இவ்வாறு தேவனுடைய பிரம்மாணத்திற்கு விரோதமாய்  விக்கிரக ஆராதனையை சபைக்குள்ளே கொண்டு வந்த போப்பின் ஆளுகையையே யேசபேலின் போதனை என்று இங்கே கர்த்தர் சுட்டிக் காட்டுகிறார்.

சாத்தானின் ஆழங்கள்: வெளிப்படுத்தல்: 2:24

ஆவியின் வரத்தினால் கடவுளின் ஆழங்களை அறியக்கூடியவர்கள் என்று வீம்பு பாராட்டிய சிலர் இச்சபையிலிருந்தனர். இக் கொள்கையை உடையவர்களுக்கு நாஸ்டிக்ஸ் கொள்கையினர் என்று பெயர். அந்த வார்த்தை மாம்சமானது. அதாவது, கிறிஸ்து மனித உருவில் வந்தார் என்பதை மறுப்பவர்கள், தங்கள் அறிவினால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ள முடியும் எனக் கூறுகிறவர்கள் இவர்கள் தான். சாத்தானுடைய ஆழங்கள் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்சரிப்பு: 

மனம் திரும்பாவிடில் உபத்திரவங்களை அனுப்புவேனென்றும், இந்த உபதேசங்களைக் கைக் கொள்ளுகிறவர்களைக் கொல்லுவேன் என்றும் கிரியைகளுக்கேற்ற பலனளிப்பேன் என்றும் எச்சரிக்கிறார். சத்தியத்தில் நடப்பவர்களை முடிவு பரியந்தம் நிலை நிற்குமாறு ஆலோசனை கூறுகிறார்.

ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்:

ஜாதிகள் மேல் அதிகாரம். கிறிஸ்துவுடன் ஆளுகை செய்யும் சிலாக்கியம். விடிவெள்ளி நட்சத்திரத்தை அவருக்குக் கொடுப்பேன். கிறிஸ்துவே விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறார். வெளிப்படுத்தல்: 22:16. ஜெயம் கொள்ளுகிறவர்களுக்கு தம்மையே கொடுக்கிறார் என்றும், விடிவெள்ளி என்பது 'இருள் நீங்கி வெளிச்சம் உண்டாவதற்கு அறிகுறியானபடியால் உனக்கு ஜெயத்தைக் கொடுப்பேன்' என்று கூறுகிறார் எனவும் பொருள் கொள்ளலாம்.