ஏப்ரல் 06, 2019

நான் நம்புகிறது கர்த்தராலே வரும்








திறவுகோல் வசனம்: சங்கீதம்:62:5 என் ஆத்துமாவே,  தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும்.”

நாம் நம்புகிறது நமக்கு கிடைக்க வேண்டுமானால், நாம் தேவனை நோக்கி அமர்ந்திருக்க வேண்டும். நம் ஆத்துமா அவர்மேல் வாஞ்சையாய் இருக்க வேண்டும்.


தேவனை நோக்கி அமர்ந்திரு


விளக்கம்: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள், ஒன்று நடக்கும் வரை, தாமதமானாலும் தேவனை நம்பி விசுவாசத்தோடு தரித்திருப்பது.

எப்படி தேவனை நோக்கி அமர்ந்திருக்க வேண்டும்?


1.பொறுமையுடன்:  சங்கீதம்:40:1 – “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.”

2. இடையூறுகளை பொருட்படுத்தாமல்: சங்கீதம்:37:7 - கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே.

3.தேவன் மேல் நம்பிக்கையுடன்: சங்கீதம்:123:2 – “இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய  கர்த்தர்  எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது.”

4. வாஞ்சையுடன்: சங்கீதம்:130:6  - எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.”

நாம் எதற்காக காத்திருக்கிறோம்?


1.   நமது ஜெபங்களுக்கு பதில் தரும்படி காத்திருக்கிறோம்

சங்கீதம்:5:3  - கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்

காலையிலேயே ஆயத்தமாகி அவருடைய சமூகத்தில் காத்திருந்து, அவருடைய சத்தத்தை கேட்டால், அந்த நாள் முழுவதும் நாம் ஆனந்தமாய் இருக்கலாம். நம் விண்ணப்பங்களை அவரிடம் ஏறெடுக்கலாம்.

நம் விண்ணப்பங்களுக்கு தேவன் பதிலளிக்க ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் நாம் நம்முடைய விண்ணப்பங்களை சரியான முறையில் ஏறெடுப்பதில்லை. தெளிவான ஜெபங்களை நாம் செய்வதில்லை.
“தேவனே என் ஜெபத்துக்கு பதில் தாரும்” என்று எப்பொழுதும் சொல்லி கொண்டே இருப்போம். ஆனால் பதில் இல்லாததால் சோர்ந்து போவோம். அந்த நிலைமை வருவதற்கு காரணமே நாம் தான்.

ஏனென்றால், நமது விண்ணப்பங்கள், ஜெபங்கள் தெளிவாக இல்லாததால் தான். சில சமயம், நம்மிடம் தேவன் ஏதோ ஒன்று எதிர்பார்ப்பதினால், அவர் பதிலளிக்க தாமதமாகும். நீங்கள் ஒரு விண்ணப்பத்தோடு ஆண்டவரிடம் வரும்போது, குறிப்பிட்ட வேண்டுதலைக் குறித்த தெளிவான நோக்கத்தோடும், திட்டமான கருத்தோடும் ஜெபியுங்கள்.

“தேவனே என்னை ஆசீர்வதியும்” என்று மட்டும் சொன்னால், 8000 வாக்குத்தத்தங்கள் உள்ளன. அதில் எந்த ஆசீர்வாதத்தை நீ விரும்புகிறாய்? என தேவன் உன்னிடம் கேட்க வேண்டியதாகும். எனவே திட்டமான நோக்கத்துடன் ஜெபிக்க வேண்டும். நிச்சயம் தேவன் பதிலளிப்பார்.

“நாம் நம்புகிறது கர்த்தராலே வரும்” என்று விசுவாசியுங்கள். நிச்சயம் கர்த்தர் சமயத்தில் தக்க பலனை கொடுப்பார்.

2.   பாதுகாப்பிற்காக காத்திருக்கிறோம்

சங்கீதம்:33:20  - நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர்.”

தேவனே நமக்கு பாதுகாப்பு. நாம் அதிகாலையில் அவருடைய சமூகத்தை வாஞ்சிக்கும் போது, அந்த நாளுக்குரிய மன்னாவை பெற்றுக் கொள்கிறோம். தேவன் நம்மை சுற்றிலும் வேலியடைத்து பாதுகாத்து கொள்கிறார்.

சங்கீதம்:62:4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம் பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். ”

நமக்கு விரோதமாக நம்முடைய மேன்மையிலிருந்து தள்ளும்படிக்கு நம் சத்துருக்கள் ஆலோசனை பண்ணுவது நமக்கு தெரியாது. ஆனால் கர்த்தருக்கு தெரியும். நாம் கர்த்தரை நோக்கி அமர்ந்திருக்கும்போது, தேவன் இதை நமக்கு வெளிப்படுத்துவார். நம்மை எல்லாவித பாதகமான சூழ்நிலையிலுமிருந்து பாதுகாப்பார். நாம் அதிகமாய் நம்புகிறவர்கள் சில சமயம் நம்மை ஏமாற்றலாம்; கைவிடலாம். நம்முன் நம்மை ஆசீர்வதித்து, முதுகுக்கு பின் சபிப்பார்கள். இப்படி பல வகையில் நமக்கு எதிர்ப்புகள், சோதனைகள் வந்தாலும், நாம் தேவனை நோக்கி அமர்ந்திருக்கையில், அவர் காரியத்தை மாறுதலாக முடியப் பண்ணுவார். நம்மை ஒருவராலும் அசைக்கமுடியாது.

ஆதியாகமம்:50:20 நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்.”

யோசேப்புக்கு அவன் சகோதரர்கள் தீமை செய்தார்கள். ஆனால் கர்த்தரோ அதை நன்மையாக முடிய பண்ணினார்.

"காரியத்தை மாறுதலாக முடிய செய்யும் தேவன் நம்மோடு இருப்பதால் நாம் அசைக்கப்படுவதில்லை"


3.   நீதிக்காக காத்திருக்கிறோம்

நீதிமொழிகள்:20:22 தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதேகர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.”

நம் சத்துரு நமக்கு தீங்கு செய்தாலும், தீமைக்கு சரிகட்டுவேன் என்று அவனிடம் போராடாமல் கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவரிடம் காத்திருக்க வேண்டும். கர்த்தரிடம் காத்திருக்கையில் அவர் நம்மை நம் சத்துருக்களுக்கு விலக்கி இரட்சிப்பார். அவர் நம் நீதியை பட்டபகலை போல் பிரகாசிக்க செய்வார்.

நம் கர்த்தர் நீதியுள்ளவர். நம் சத்துருக்களுக்கு முன்பாக நமக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துவார். அவர் நீதியை சரிகட்டுவார்.

“ஐயோ! என்னை மோசம் போக்கிவிட்டார்கள்; அநியாயமாய் ஏமாற்றிவிட்டார்கள்” என்று புலம்பி அவர்களை சபிப்போம். எப்படியாவது அவர்களை பழிவாங்கவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு.

நாம் அவர்களை முதலாவது மன்னிக்க வேண்டும். அவர்கள் நமக்கு தீங்கு செய்திருந்த போதும், அவர்களை மன்னிக்கவேண்டும். அவர்களை சபிக்காமல் ஆசீர்வதியுங்கள். அவர்களுக்காக, அவர்களின் மனந்திரும்புதலுக்காக பாரத்தோடு ஜெபியுங்கள். கர்த்தர் நிச்சயம் அவர்களை மனந்திரும்ப செய்து, நீங்கள் அவர்கள் மூலமாய் இழந்து போனதை திரும்ப அவர்களாகவே கொடுக்க உதவிசெய்வார்.  

ஒரு பழமொழி உண்டு.

“மற்றவர்கள் முகத்தில் சகதியை அடிக்க விரும்பினால் நீங்கள் முதலில் உங்கள் கையை சகதியாக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது”


ஆகவே அவர்களை ஆசீர்வதித்தால் நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் ஆசீர்வதிக்கும்போது ஆசீர்வாதம் உங்களிடமிருந்து புறப்படுகிறது. அப்போது அவர்களைக் காட்டிலும் அதிகமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள். நீங்கள் அவர்களை வெறுக்கும்போது சாபம் உங்கள் வாயிலிருந்து புறப்படுவதால் உங்களுக்கும் சாபம் வரும்.
கர்த்தர் நீதியை சரிகட்டுவார். நீங்கள் வெட்கப்பட்ட இடத்தில் நீங்கள் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக இருப்பீர்கள். அதற்கு நீங்கள் நீதிக்காக தேவ சமூகத்தில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.

எரேமியா:29:11நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர்சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.”

நீங்கள் எதை எதிர்பார்த்திருக்கிறீர்களோ, அதை தேவன் உங்களுக்கு கொடுப்பார். நீங்கள் நம்பினது கர்த்தராலே வரும்.

விசுவாசியுங்கள் ! பெற்றுக்கொள்ளுங்கள் !
ஆமென்!