சிலுவையின் மேன்மை
“சிலுவை” என்பது
…
- மீட்பு கொடுக்கும் இடம் விசுவாசிகளின் பாவத்தின் கிரயத்தை இயேசு
கொடுத்தார். (மாற்கு:10:45, 1 தீமோ:2:6)
- குற்றங்களை மன்னித்துத் தேற்றும் இடம். இயேசுவின் பூரணபலியானது அவரை விசுவாசிப்பவர்களுக்கு பிதாவின் தண்டனையை அகற்றியது. (ரோமர் 3:25)
- வெற்றி பெற்றுக் கொள்ளும் இடமாகும். மனிதவர்க்கத்தின் மீது பிசாசு வைத்த பிடியை இயேசுவின் பலி தோற்கடித்தது (யோவான்: 12:31-32)
“சிலுவை” என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் 83 தடவை எழுதப்பட்டிருக்கின்றன.
இயேசு தம்முடைய சீஷர்களுக்கு சிலுவையை
குறித்து போதித்தார்.
மத்தேயு:16:24 – “அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்”
எபேசியர்: 2:16 – “பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.”
இயேசு கிறிஸ்து தமது விலையேறப்பெற்ற
இரத்தத்தை கல்வாரி சிலுவையில் சிந்தி மனுக்குலத்துக்கு பாவமன்னிப்பாகிய நித்திய மீட்பை
உண்டுபண்ணினார். பகையை சிலுவையினால் கொன்று, சமாதானத்தை உண்டாக்கி, பரலோகத்திலுள்ளவைகளும்
பூலோகத்திலுள்ளவைகளும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கினார்.
சிலுவையின் மேன்மையான காரியங்கள்
1.
கிழக்கு திசை
முந்தின ஆதாம் பின்பு வந்த கிறிஸ்துவுக்கு
முன்னடையாளம். ஆதாம் நிமித்தம் மனுக்குலம் முழுவதும் பாவிகளானவர்கள். பிந்தின ஆதாமாகிய
கிறிஸ்துவினால் பாவத்திற்கு பரிகாரம் உண்டாயிற்று.
முந்தின ஆதாமை தேவனாகிய கர்த்தர்
“கிழக்கே” ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி
அதிலே வைத்தார். எனவே பாவம் ஆரம்பித்த உற்பத்தியான இடம் கிழக்கு திசை தான்.
ஆதியாகமம்:2:8 – “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.”
இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்து, ஆதாமின்
மீறுதலாகிய பாவத்தை போக்க கிழக்கிலே அவதரித்தார்.
மத்தேயு:2:2 – “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.”
முதல் ஆதாமால் கிழக்கு திசையில்
உண்டான பாவத்தைப் போக்க கிறிஸ்து கிழக்கு திசையிலே பிறந்தார். பாவ நிவாரணம் உண்டான
திசையும் கிழக்கு. இது தேவனின் பரம ஞானம் !!!
2.
மரம்
பாவமானது நன்மை தீமை அறியதக்க
ஒரு மரத்தினால் வந்தது. (ஆதியாகமம்:3:6,7)
இயேசுவை ‘மரத்திலே’ தூக்கிக் கொலை செய்தார்கள். (அப்போஸ்தலர்:10:39)
மரத்தினால் உண்டான பாவத்தை இயேசு கிறிஸ்து சிலுவை மரத்தினால்
போக்க வேண்டுமென்பது தேவனுடைய அனந்த ஞானம்
!!!
கலாத்தியர் :3:13 – “மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.”
3.
நடுமரம்
ஆதியாகமம்:3:3 – “ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள்.”
தோட்டத்திலிருந்த நடுமரத்தினால்
உலகத்திற்கு பாவம் வந்தது. ஆகவே பாவத்தை போக்க இயேசு கிறிஸ்து இரண்டு கள்ளர்கள் நடுவே
சிலுவையில் அறையப்பட்டார்.
யோவான்:19:18 – “அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.”
4.
தொங்கினது
ஆதியாகமம்:2:17 – “ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.”
பாவத்திற்கு காரணமாயிருந்த விருட்கத்தின்
கனி வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கிக் கொண்டிருந்தது. இயேசுவும் பாவநிவாரணபலியாக,
வானத்துக்கும் பூமிக்கும் நடுவில், சிலுவையில் தொங்கினார். தொங்கின கனியால் வந்த பாவத்தை
ஜீவ விருட்சத்தின் கனியாகிய இயேசு போக்கினார்.
5.
புசிப்பு
ஆதியாகமம்:
3:6 – “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.”
ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்
புசித்ததினால் பாவிகளானார்கள். ஒரு கனியை புசித்ததினால் வந்த பாவத்தை போக்க இயேசு கிறிஸ்து
தன் மாம்சத்தை புசிக்கும்படி செய்தார்.
யோவான்:6:53 – “அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மத்தேயு:26:26-28 – “அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.”
மரத்தில் தொங்கின கனியில் இயற்கையாகவே சதை – சாறு என இரண்டு வஸ்துக்கள் உண்டு. சதை – சாறு ஆகிய இரண்டு வஸ்துக்களுமே
மனிதனை பாவத்திற்குள்ளாக்கியது. இயேசு கிறிஸ்துவின் மாம்சம் – இரத்தம் மூலம் பாவம் நீங்கியது. பாவமன்னிப்பு உண்டானது.
பாவம் எந்த வழியில் எந்தெந்த முறையில் வந்ததோ, அதே அடையாளப்படி
பாவநிவாரணம் உண்டாக வேண்டுமென்பது தேவனுடைய அநாதி தீர்மானமாயிருக்கிறது.
- பாவம் ஸ்திரீயின் மீறுதலின் மூலமாக உலகத்தில் வந்தது. இயேசு
கிறிஸ்து ஒரு ஸ்திரீயின் மூலமாக பிறந்து, பாவத்தை போக்கினார். (ஆதியாகமம்:3:15)
- முந்தின ஆதாம் தேவ கட்டளைக்கு கீழ்ப்படியாமல் அதை மீறினதினால்
தேவ மகிமை இழந்து பாவத்துக்குள்ளானான். இரண்டாம் ஆதாமாகிய இயேசு கிறிஸ்து தேவனுடைய
எல்லா கட்டளைகளையும் நிறைவேற்றி சிலுவையிலே வெற்றி சிறந்தார். (கொலோ:2:13-15)
இயேசு கிறிஸ்து தமது சிலுவை மரணத்தினாலே சாத்தானின் தலையை நசுக்கி
வெற்றி சிறந்தார்.
எபிரேயர்:2:14,15 – “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.”
1கொரிந்தியர்:1:18 – “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.”
சிலுவையில் பூத்த 7 மலர்கள்
உலக சரித்திரத்தையே இரண்டாக பிரித்து மனுக்குலத்துக்கும் தேவனுக்கும் இடையே இருந்த திரை சீலையை இரண்டாக கிழித்த நம் இயேசு, கொல்கதா மலையில் மூன்று ஆணிகளில் தொங்கினவராய் தன்னுடைய கடைசி சொட்டு இரத்தத்தையும் நமக்காய் சிந்தி கல்வாரி சிலுவையில் ஏழு பூக்களை உதிர்த்தார்.
1)
மன்னிப்பு: "பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" லூக்கா: 23 : 34
2)
இரட்சிப்பு:
"இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரலோகத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" லூக்கா 23
: 43
3)
அரவணைப்பு: தம்முடைய தாயை நோக்கி : "அம்மா, இதோ, உன் மகன் என்றார்". சீடனை நோக்கி : "இதோ உன் தாய் என்றார். யோவான் 19 : 26-27
4)
தத்தளிப்பு:
“ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். “ மத்தேயு 27 : 46
5)
தவிப்பு: எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக : "தாகமாயிருக்கிறேன் என்றார்." யோவான் 19:28
6)
அர்ப்பணிப்பு: இயேசு காடியை வாங்கின பின்பு, "முடிந்தது" என்று சொல்லி தலையை சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார். யோவான் 19 : 30
7)
ஒப்புவிப்பு:
இயேசு பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கின்றேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு சொன்னார், இப்படி சொல்லி ஜீவனை விட்டார். லூக்கா 23:46