“முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது”
(திருமண செய்தி)
எலியேசர், ஈசாக்கு, ரெபேக்காள் – இவர்களை முப்புரிநூலுக்கு ஒப்பிடுகிறேன்.
1. எலியேசர் – பரிசுத்தாவியானவருக்கு உடந்தையாக இருக்கிறார்
*ஆதி: 24:2–4 ஆபிரகாம் தன் மகன் ஈசாக்குக்கு பெண் பார்க்கும்படி தன் வேலைக்காரனாகிய எலியேசரை அனுப்புகிறான்.
பரிசுத்தாவியானவர் ஆபிரகாம் வம்சத்தில்தான் பெண்ணைத் தெரிந்தெடுப்பார். அப்: 8:33 – “அவரது வம்சத்தை யாரால் சொல்லி முடியும்?”
**ஆதி: 24:22 – “… அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்கு பத்து சேக்கல் எடைப்பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக் கொடுத்து”
எலியேசர் 2 அணிகலன்களை தருகிறான். 1. பொற்காதணிகள் 2. கடகங்கள் இது எதைக் காட்டுகிறது?
அ) பொற்காதணி:
யாத்: 21:6 – எஜமானை நேசிக்கிற அடிமை பிரிய மனமற்றிருந்தால் நிரந்தர அடிமையாக இருக்க விரும்பினால் இப்படி செய்ய வேண்டும். “அவனைக் கதவின் அருகேயாவது, கதவு நிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதை கம்பியினாலே குத்தக்கடவன்”
ஆ) கடகம்:
கைகளில் போடும் விலங்கு போல அதாவது வளையல்போல. விலங்கு: மாற்: 8:34 – “ஒருவன் என்னை பின்னே வரவிரும்பினால் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு என்னை பின்பற்றக்கடவன்”.
கடகம் கைகளில் கொடுக்கப்பட்டது. நாம்தான் போட்டுக்கொள்ள வேண்டும்.பொற்காதணியும், கடகமும் (தன்னைத்தான் வெறுத்து, அடிமையாக அர்ப்பணித்தல்) ஆகிய இவ்விரண்டும் இருந்தால்தான் இயேசுவுக்கு பிள்ளையாக இருக்க முடியும். அதுபோல்…
2. ரெபேக்காள்:
*ஆபிரகாமின் இனத்திலும் வம்சத்திலும் பிறந்திருந்தாலும் ஆபிரகாமின் ஆசீர்வாதத்தில் ரெபேக்காளுக்கு பங்கு இல்லை. ரெபேக்காள் ஈசாக்குக்கு சொந்தமாகும்போதுதான் ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் ரெபேக்காளுக்கு கிடைக்கும்.
**ஆதி: 24:57,58 – ரெபேக்காளின் வாய்ப்பிறப்பை எலியேசர் கேட்டபோது, “போகிறேன்” என்று மனப்புர்வமாக கூறுகிறாள். சொந்தங்களை விட்டு போக மனதில்லாவிட்டாலும் அழுதுகொண்டே போயிருப்பாள். உலகை விட முடியாவிட்டாலும்… இருக்கவில்லை. விட்டு போகிறாள்.
*** வழியில் பலநூறு மைல்கள் பிரயாணத்தில் போகும்போது ஈசாக்கைப்பற்றி கேட்டுக் கொண்டே போகிறாள். ஒட்டகத்தின் திமிலின் மேல் அமர்ந்து பிரயாணம் பண்ணும்போது முன்னும் பின்னும் அசைந்து கொண்டேதான் பிரயாணம் பண்ணவேண்டியதிருக்கும். ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைக் குறித்து நினைவுகூர்ந்து கொண்டும், அவர் செய்த நன்மைகளை கேட்டுக் கொண்டும் வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தால்தான் ஆசீர்வாதம் வரும்.
உன்.பாட்: 3:6 – “வெள்ளைப் போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தகப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூப ஸ்தம்பங்களைப்போல் வனாந்திரத்திலிருந்து வருகிற இவர் யார்?” உன்.பாட்: 8:5 – “தன் நேசர்மேல் சார்ந்து கொண்டு வனாந்திரத்திலிருந்து வருகிற இவள் யார்?”.
அக்காலங்களில் புகைப்படம், கைபேசி வசதியெல்லாம் கிடையாது. எலியேசர் சொல்வதை காதால் கேட்டு நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி நம்பித்தான் ஈசாக்கை தேடி பயணப்பட்டு வருகிறாள். எலியேசரும் பத்திரமாய் ஈசாக்கிடம் கொண்டு வந்து சேர்க்கிறார். அதுபொல் பரிசுத்தாவியானவரும் மணவாட்டியாகிய சபையை பத்திரமாக இயேசுவிடம் கொண்டுபோய் சேர்ப்பிப்பார்.
3. ஈசாக்கு:
சர்வ வல்லமையுள்ள தேவனை தினந்தோறும் சாயங்கால வேளையில் தியானம் பண்ணுகிறவனாய் இருந்தான் (ஆதி: 24:63). சிந்தையெல்லாம் சர்வ வல்லவருடைய நினைவாகவே இருந்தது. பெண்ணைத் தேடியெல்லாம் போகவில்லை. ஈசாக்கு தேடியதெல்லாம் கர்த்தருடய சமூகமே தவிர வேறொன்றுமில்லை. அப்படிப்பட்டவனுக்கு பெண்ணே தேடி வந்தது. வாய்த்த பெண்ணும் தேவ சித்தப்படி வாய்த்ததினால், மனைவியினால் ஈசாக்கு ஆறுதலடைய முடிந்தது.
*** தேடித்தந்தவரும், மணவாட்டியும், மணவாளனும் சர்வ வல்லவருடைய சித்தத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களானபடியினால் அனைத்தும் ஆசீர்வாதமாக நடந்தேறியது. இப்படிப்பட்ட முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர்: 8:28)