டிசம்பர் 23, 2015

மகிமை, சமாதானம், பிரியம்

Image result for Luke: 2:4

மகிமை, சமாதானம், பிரியம்

(கிறிஸ்துமஸ் தேவ செய்தி)

திறவுகோல் வசனம்: லூக்: 2:14 – “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்”

1. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை
2. பூமியிலே சமாதானம்
3. மனுஷர்மேல் பிரியம் – இதுதான் தேவனுடைய விருப்பம். இம்மூன்று காரியங்களும் உலகில் நிறைவேற வேண்டும். இதற்காகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.

1. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை:

கிறிஸ்துவின் பிறப்பு தேவனுக்கு மகிமையைக் கொண்டு வந்தது. அவரது பிறப்பு அதிசயம். நம் ஒவ்வொருவருடைய பிறப்பிலும் கிறிஸ்துவின் சாயல் இருக்கிறது. உலக சரித்திரம் இயேசுகிறிஸ்துவால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கி.மு. என்றும் கி.பி. என்றும் பிரிக்கப்பட்டது. ஒருவரின் வயதைக் கூற வேண்டுமென்றால் அவர் கிறிஸ்துவின் பிறப்பிலிருந்துதான் கூற வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய சாயலின்படியும், ரூபத்தின்படியும் அவரது நாம மகிமைக்கென்று படைக்கப்பட்டுள்ளான் என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.

2. பூமியிலே சமாதானம் :

பூமியிலே சமாதானம் நிலவ வேண்டும் என்பது தேவனுடைய திட்டம். தனிப்பட்ட மனிதனுக்கும் சமாதானமில்லை. குடும்பங்களுக்குள் சமாதானமில்லை. உறவுகளுக்குள் சமாதானமில்லை. ஆளுகை செய்பவர்களுக்கு சமாதானமில்லை. தேசங்களுக்கு சமாதானமில்லை. உலகில் சமாதானம் வர வேண்டுமானால் ஒரேவழி மக்கள் தேவ சாயலை பெற வேண்டும். தேவ சாயலாக படைக்கப்பட்ட மனிதன் இன்று பாவ சாயலையும், மற்றும் பிசாசின் சாயலையும் அணிந்து கொண்டிருப்பதால், அதற்கேற்ற கிரியைகளை வெளிப்படுத்துகிறான். அதனால் பூமியிலே சமாதானம் கெட்டுப்போனதுதான் மிச்சம். எனவே, உலகில் சமாதானம் நிலவ ஒவ்வொரு மனிதனுக்கும் தேவசாயல் மிக அவசியம். இழந்துபோன தேவசாயலை மீண்டும் மனிதனுக்கு கொடுக்கவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

3. மனுஷர்மேல் பிரியம்: 

நாம் வாழும் இக்காலம் கடைசிக்காலம். “கடைசி காலங்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக” (2தீமோ: 3:1). கடைசிகாலங்களில் வாழும் மனிதனின் மனமானது கொடிய மனமாக மாறிவிடும் என்று வேதம் கூறுகிறது. மனிதாபிமானம் என்பது அற்றுப்போகும் காலத்தில் வாழ்கிறோம். சக மனிதனை மனிதன் நேசிப்பதில்லை. “உன்னை நீ நேசிப்பதைப்போல பிறரையும் நேசி” என்றார் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. ஒருவரிடத்தில் ஒருவர் பிரியமாக நேசமாக இருக்க வேண்டிய மனிதனோ இன்று கடின இருதயத்தோடும், கடின முகத்தோடும், கடின சொற்களோடும் உறவுகள் முறியும்படி வாழ்ந்து வருகிறான். “ஜனத்திற்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்…” (மத்: 24:7) என்று இயேசு சொன்னார். இந்நிலை மாறிட, மனிதர்கள்மேல் பிரியமுண்டாக்க ஆண்டவர் இயேசு இவ்வுலகிற்கு வந்தார்.

தேவசாயல் உருவாக …


முதலாவதாக, இருதயத்தை தேவனுக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்:
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவசாயல் உருவானால் மட்டுமே தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷரில் ஒருவருக்கொருவர் பிரியமும் உண்டாகும்.

தேவசாயல் தனி ஒரு மனிதனுக்குள் வராதவரை மாற்றங்கள் ஒருபோதும் வருவதில்லை. எனவே தேவசாயல் மனிதனுக்குள் உருவாக, “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக” (நீதி: 23:26) என்று தேவனாகிய கர்த்தர் கேட்கிறார்.

இருதயத்தில் ஏற்படும் மாற்றமே உண்மையான மனமாற்றம். அங்கிருந்துதான் மாற்றங்கள் துவங்க வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான மாற்றம் நிலைபெறும்.

 “இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான்; இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்” (மத்: 1:23).

ஒவ்வொரு தனி மனிதனும் தன் இருதயத்தில் கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவை மனதார தன் சொந்த தெய்வமாக முழுமையாக ஏற்றுக் கொண்டு, “தேவன் என்னோடிருக்கிறார்” என்று விசுவாச அறிக்கையிட வேண்டும். அப்பொழுது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனில் தேவசாயலை தந்து மறுரூபமாக்குகிறார். தேவசாயலை மனிதன் தரித்துக்கொள்ளும்போது அவன் கடவுளுக்கு மகிமையான சாட்சியாகவும், சமாதான தூதுவனாகவும், ஏற்றத்தாழ்வின்றி அனைவரையும் நேசிக்கவும், பிரியமுள்ளவனாகவும் மாறுகிறான். உலகில் சமாதானம் மலரும்.

இரண்டாவதாக, கர்த்தருடைய வழிகளை நோக்கும்படி கண்களை ஒப்புக் கொடுக்க வேண்டும்:

இருதயத்தில் மாற்றம் வந்தவுடன் தானாகவே கண்களிலும் மாற்றங்கள் வர ஆரம்பிக்கும். தேவனைப் பற்றிய, உலகை பற்றிய, பிறரைப் பற்றிய கண்ணோட்டம் மாற ஆரம்பிக்கும். உலகின் வழியில் பிறரை காண மாட்டோம். உலகப்போக்கில் பேச மாட்டோம். உலகப்போக்கில் வாழ மாட்டோம். முற்றிலும் ஒரு மாறுபட்ட ஜீவியம் நம்மில் காணப்படும். அது தேவசாயலால் வந்த மாற்றமாய் காணப்படும்.

“கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” (நீதி: 1:7) என வேதம் கூறுகிறது. ஞானம் என்பது அறிவைக் குறிப்பதல்ல. வாழ்வின் பாதையைக் காட்டுவது. கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிப்பதைக் காட்டுகிறது.

மனிதன் தன் சுய அறிவில் வாழும்போதுதான் பல பிரச்சினைகள் வருகிறது. தனி மனிதனுக்கும், குடும்பங்களுக்குள்ளும், தேசத்தின் ஆளுகையிலும் குழப்பங்களும், சமாதானமின்மையும் ஏற்படுகிறது. கடவுளுக்கு பயந்து கடவுளின் கட்டளைப்படியும், அவரது சித்தப்படியும் வாழ முற்படும்போதும், நடைமுறைப்படுத்தும்போதும் தனிப்பட்ட இதயத்திலும், குடும்பத்திலும், தேசத்திலும் சமாதானம் கடந்து வரும்.

1. உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை
2. பூமியிலே சமாதானம்
3. மனுஷர்மேல் பிரியம்

இம்மூன்றும் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தேசங்களிலும், முழு உலகிலும் சமாதானம், பிரியம், மகிமை  உண்டாக கர்த்தருக்கு நம்மை அர்ப்பணிப்போம். தேவசாயலாக மாறுவோம். தேவ ஆசீர்வாதங்கள் அனைவர் மேலும் பனியைப் போல் பொழிவதாக!

நேசரின் தோட்டம் ஏஜி சபையின் சார்பாக, நமது இணையதள வாசகர் அனைவருக்கும் எனது அன்பான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக! ஆமென்! அல்லேலூயா!