நவம்பர் 24, 2015

காரியம் மாறுதலாயிருந்தது



காரியம் மாறுதலாய் முடிந்தது
Image result for book of esther

தி.கோ.வசனம்: எஸ்: 9:1 – “… யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்கு காரியம் மாறுதலாய் முடிந்தது”

சிலசமயங்களில் நம் வாழ்வில் இது ஏன் இப்படி நடக்கிறது? ஏன் இதை தேவன் அனுமதித்தார் என அநேகவேளை களில் நமக்கு விளங்குவதில்லை. ஆனால், ஏதோ ஓரு நோக்கத்திற்காக தேவன் நமக்கு அதை அனுமதித்திருக்கிறார் என்பது மட்டும் நிச்சயம்.

கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையில் எதுவும் யதார்த்தமாய் நடப்பதில்லை. எதிர்காலத்தில் வரும் இக்கட்டுகளுக்கு, பிரச்சினைகளுக்கு தீர்வாக, முடிவை தருவதாகவும், நன்மையில் முடிக்கப்பட உதவியாகவும் இருக்கும்படியாகவே அனுதின வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சம்பவங்களும் தேவனால் தீர்மானிக்கப்பட்டவைகளாக நடந்தேறுகிறது.

நிகழ்கால வெற்றி மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அஸ்திபாரமாக அவர் முன்னமே பல காரியங்களை நம் வாழ்வில் அடித்தளமாக பல நபர்களை அனுப்பியும், பல சம்பவங்களை நடப்பித்தும் இருக்கிறார் என்பதை நம் அறிவினால் அறிய முடிவதில்லை. நம் கண்களுக்கு சிலசமயம் தெரிவதும் இல்லை.

தற்சமயம் நமக்கு கிடைத்த வெற்றி மட்டுமே நம் கண்களுக்கு தெரிகிறது. ஆனால், தேவனாகிய கர்த்தர் அந்த வெற்றியை நமக்கு தருவதற்கும் பெறுவதற்கும் முன்னமே பல சம்பவங்களை, பல காரியங்களை, பல நபர்களை நம் வாழ்வில் நுழைத்து, நமக்கெதிரான சத்துருக்களின் சகல தந்திரங்கள், சூழ்ச்சிகளை முறியடிக்க அனுமதித்துள்ளார் என்பதை நாம் அறிய வேண்டும். ஆனால், அதை நம்மால் அறியமுடியாதபடி ஏதோ ஒன்று தடுக்கிறது. அத்தடைகளை நீக்கி, நம் கண்கள் வசனத்தின் இரகசியத்தை அறிய கண்கள் திறக்கப்பட ஜெபிப்போம். ஜெபத்துடன் வசனத்திற்குள் நுழைந்து தியானிப்போம்.

அகாஸ்வேரு ராஜாவின் நாட்களில் யூதருக்கு விரோதமாக வந்த அழிவின் சட்டம் மாறுதலாய் முடிந்தது என எஸ்தர்: 9:1 ல் வாசிக்கிறோம். இக்காரியம் மாறுதலாய் முடிவதற்கு தேவன் கடந்தகாலத்தில் என்னவெல்லாம் செய்து முடித்திருக்கிறார் என ஒரு ஆய்வு செய்வோம்.

1. முதல் மாறுதல்:

 வஸ்தியின் ஸ்தானத்திற்கு எஸ்தரை கொண்டு வந்தது - (எஸ்தர்: 2:16; 2:7)

Image result for esther: 9:1

தேவனுடைய திட்டம் நிறைவேறுவதற்கு இராஜாத்தியாகிய வஸ்தி அகன்று, எஸ்தர் அவ்விடத்திற்கு வரவேண்டியது அவசியமானது. இது மனிதனுடைய பார்வைக்கு யதார்த்தமாய் நடப்பதுபோல தோன்றலாம். ஆனால், இச்சம்பவம் யதார்த்தமாய் நடந்ததல்ல. தேவஜனங்களை காக்கும்படி முன்பே ஏற்படுத்தப்பட்ட தேவனுடைய திட்டம்.

*அகாஸ்வேரு அரசாளுகிற 7 ஆம் வருஷம் 10 ஆம் மாதம் அரண்மனைக்குள் எஸ்தர் நுழைகிறாள்.

*அகாஸ்வேரு அரசாளுகிற 12 ஆம் வருஷம் 1 ஆம் மாதம் அரண்மனைக்குள் ஆமான் நுழைகிறான்.

*எஸ்தர் அரமனைக்குள் வந்து 5 ஆண்டுகளுக்கு பின்புதான், ஆமான் அரமனைக்குள் வருகிறான்.  

           எதிர்காலத்தில் தம் ஜனத்திற்கு வரும் அழிவை முன்னறிகிற தேவனாகிய கர்த்தர், அதை தடுக்கும்படி வரலாற்றில் தலையிடுகிறார் என்பதை நாம் அறிய வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கர்த்தர் ஒருவரே அறிவார். ஆனால், சாத்தானால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிய இயலாது.

ஆமானால் அழிவு வரும் என்பதை முன்னறிந்த தேவன், அதற்கு முன்னமே எஸ்தரை அரண்மனைக்குள் ராஜாத்தியாக மாற்றி உட்கார வைத்து விட்டார்.

எஸ்தர்: 2:17 – “ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தரின்மேல் அன்பு வைத்தான்; சகல கன்னிகைகளைப் பார்க்கிலும் அவளுக்கு அவன் சமூகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது” அது இறுதிவரை கிடைத்தது. தேவனால் கிடைத்த இந்த கிருபையை எஸ்தர் தன் வாழ்நாளில் இறுதிவரை தக்கவைத்துக் கொண்டாள்.

2. இரண்டாம் மாறுதல்: 

மொர்தெகாயின் உயர்வுக்கு விதை ஊன்றியது: (எஸ்தர்: 2:21-23)

Image result for esther: 9:1

அகாஸ்வேரு ராஜாவுக்கு விரோதமாய் செயல்பட்டவர்களை மொர்தெகாய் பிடித்துக் கொடுத்தான். ராஜாவின் விரோதிகள் தூக்கிலிடப்பட்டனர். இச்சம்பவம் ராஜாவின் நாளாகமம் புத்தகத்தில் குறித்து வைக்கப்பட்டது. இதற்கு இன்னும் பிரதியுபகாரம் செய்யப்படவில்லை. காத்திருப்பில் வைக்கப்பட தேவன் உதவி செய்தார். தேவனுடைய காத்திருப்பில் பிரதியுபகாரம் ஏற்றவேளைக்காக கிடப்பில் போடப்பட்டது.

நாம் செய்த நன்மைக்கு பதில் கிடைக்கவில்லையே என வருத்தப்பட வேண்டாம். பிரதிபலன் எதிர்பார்த்தும் எந்த நன்மையும் செய்யவும் வேண்டாம். ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் உடனே எவ்விதமான விளைவும், நன்மையும் கிடைக்காவிடினும், நாம் செய்த நன்மையினால் பிறருக்கு ஆசீர்வாதமுண்டானால் நாம் மெய்யாகவே பாக்கியசாலிகளாயிருப்போம். நம்முடைய நீதியையும், நன்மையையும் மறுந்து விடுவதற்கு தேவன் மனிதனல்லவே. சில பிரதியுபகார நன்மைகள் காலம் தாழ்த்தி வருவது நமக்கு பெருத்த ஆசீர்வாத நன்மையையே கொண்டு வரும்.

3. மூன்றாம் மாறுதல்:
மொர்தெகாயை ஆமான் கனம் பண்ணும்படி காரியம் மாறுலாயிருந்தது: (எஸ்தர்: 6:10)
Image result for esther: 6

ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூர்ணமாய் இருக்கும் என வேதம் கூறுகிறது (யோபு: 8:7). அது தேவ பிள்ளைகளுக்கு மட்டுமே. சாத்தானுக்கும் சத்துருவுக்கும் – ஆரம்பம் அமர்க்களமாய் இருக்கும் முடிவு மட்டும் அவன் எதிர்பார்த்திராத வகையில் அமைந்திருக்கும்.

மொர்தெகாயை தூக்கு மரத்திலே உயர்த்த நினைத்தவனுக்கு, பட்டணமெங்கும் தாரை ஊதுவித்த தேவன் நம் தேவனல்லவா? (எஸ்தர்: 6:11)
தூக்கு மரத்தை ஆயத்தம் செய்துவிட்டு சென்றவன் – சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக் கொண்டு வீட்டுக்குப் போகும்படி செய்தார் தேவன். (எஸ்தர்: 6:12)

4. நான்காம் மாறுதல்: 

மொர்தெகாய்க்கு செய்த தூக்கு மரம் ஆமானுக்கே ஆனது: (எஸ்தர்: 5:14)

சாத்தான் எக்காலத்திலும் தேவ ஜனங்களை கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரலாற்றில் வர மாட்டான் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். (யோவான்: 8:44)
Image result for esther: 9:1

யாத்: 1:22 – யூதர்களை அழிக்க “பார்வோன்: பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டு விடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோட வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்”. சாத்தானால் ஏவப்பட்ட அம்பாகிய பார்வோன் தேவஜனங்களை நைல் நதியாகிய நல்ல தண்ணீரில் கொல்லப் பார்த்தான். தேவனோ, பார்வோனையும், அவன் படைகளையும் சிவந்த சமுத்திரமாகிய உப்புத்தண்ணீரிலே கொன்று போட்டார்.

பார்வோனும் ஆமானும் சாத்தானால் ஏவப்பட்ட அம்புகள் மட்டுமே. இப்படித்தான் நடக்கும் என்பது சாத்தானுக்கும் தெரியாது. அவனது அம்புகளாகிய பார்வோனுக்கும் ஆமானுக்கும் தெரியாது. இப்படித்தான் முடிவு இருக்கும் என்று ஒருவரும் அறிய முடியாதபடி தேவனாகிய கர்த்தர் அவைகளை இரகசியமாக வைத்துள்ளார்.

மொர்தெகாயை அழிக்க 50 முழ உயர தூக்கு மரத்தை செய்வித்தான் ஆமான். அந்தோ பரிதாபம்! அதிலே அவனே சாகும்படி தேவன் காரியத்தை மாறுதலாக செய்தார். (எஸ்தர்: 7:9,10).

5. ஐந்தாம் மாறுதல்: 

யூதர்கள் தங்கள் சத்துருக்களை மேற்கொள்ளும்படி காரியம் மாறுதலாயிருந்தது: (எஸ்தர்: 9:1)

காரியம் ஜெயமாக மாற – நம்மேல் வருகிற உபத்திரவங்களுக்காக தேவனிடத்தில் துக்கத்தின் கண்ணீரை சிந்தி கதறியழுது உபவாசித்து ஜெபிப்போமானால் – தேவனாகிய கர்த்தர் காரியங்களை மாறுதலாக மாற்றுவார். காரியம் மாறும் என்று நாம் சும்மாயிருந்து விடக்கூடாது. காரியம் மாறுதலாகும்படிக்கு நாம் தேவசமூகத்தில் உபவாசிக்க வேண்டும். அப்பொழுது சத்துருக்கள் வெட்கப்படும்படி, நாம் அவர்களை மேற்கொள்ளும்படி தேவன் அற்புதமான கிரியைகளை செய்வார்.
Image result for esther: 6

சாத்தான் என்னதான் தேவ ஜனங்களை அழிக்க, ஆசீர்வாதங்களைக் கெடுக்க பல திட்டங்கள் போடலாம். ஆனால், நம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரோ... தம் ஜனத்தைக் காக்கும்படிக்கும், எதிர்காலங்களை அறிந்திருக்கிற தேவன், தம் ஜனத்திற்கு எதிர்காலத்தில் இப்படியெல்லாம் நேரிடும் என்பதை முன்னறிகிற கர்த்தர்,  தீமைகள் நம் வாழ்வில்  வருமுன்னே... அதற்கான முன் ஆயத்த காரியங்களை செய்து முடித்திருப்பார். அது நம் கண்களுக்கும், சத்துருவின் கண்களுக்கும் மறைக்கப்பட்டிருக்கும். அப்படி மறைக்கப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் நம் வாழ்வில் செயலாற்ற - நாம் உபவாசித்து தேவ சமூகத்தில் கண்ணீரோடு எஸ்தரைப்போல் மன்றாடும்போது சத்துருவை மேற்கொள்ளும் அதிகாரத்தையும், ஆசீர்வாதத்தையும் நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பவர். ஆமென்! அல்லேலூயா!