ஆகஸ்ட் 31, 2013

பண்டிகையும் கிறிஸ்தவமும் - 2


பண்டிகையின் நோக்கம்: 

பழைய ஏற்பாட்டுக் காலங்களில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பிதாவாகிய தேவன் பஸ்கா என்னும் பண்டிகையை தந்தார். இதை அவர்கள் தலைமுறை தலைமுறைதோறும் கொண்டாடி ஆசரித்து வந்தனர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் பஸ்காவை ஆசரித்தார். (மாற்கு: 14:12, லூக்கா: 22:1,8@ 2:41,42, 22:15 மத்தேயு: 26:17,  யோவான்: 2:13, 12:1).

பிதாவாகிய தேவன், "...நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக" (யாத்திராகமம்: 13:10) என கூறினார். இதனால், இவர்கள் பஸ்கா பண்டிகையை வருஷந்தோறும் கொண்டாடி வந்தனர்.

"பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று கேட்டால், நீ அவனை நோக்கி: கர்த்தர் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்..." "கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக் குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றார்" (யாத்திராகமம்: 13:14-16)

எனவே, தேவன் கொண்டாடச் சொன்ன ஒவ்வொரு பண்டிகையிலும் தேவனுடைய வல்லமையும், தம்முடைய தேவ ஜனங்களுடைய மீட்பும், அதை அவர்கள் நினைத்து நன்றி செலுத்துதலும், கொண்டாட்டமும் இருக்கும். பஸ்கா பண்டிகை மட்டும் அல்ல, புரிம் பண்டிகையும் தேவன் அவர்களுக்கு கொடுத்த மீட்பை வெளிப்படுத்துகிறது. (எஸ்தர்: 9:21,22).

ஆகவே, பண்டிகையின் நோக்கம்:

தேவன் தம்முடைய ஜனங்களுக்கு கொடுத்ததான மீட்பு, ஆசீர்வாதம் ஆகியவற்றை நினைத்து, தேவனுக்கு நன்றி செலுத்தி, அதை நினைவு கூர்ந்து ஆராதிப்பதாகும். அதுமட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளுக்கும், வருங்கால சந்ததிகளுக்கும் தேவனுடைய மீட்பையும், அவரது வல்லமையும் வெளிப்பட, அதை அவர்களும் அறிந்து தேவனை நோக்கி ஜெபிக்க, துதிக்க ஏதுவாகும்.