ஜனவரி 19, 2018

ஞானத்தின் ஆவியால் நிரப்பப்படுவோம்

Image result for Deut: 34:9

ஞானத்தின் ஆவியால் நிரப்பப்படுவோம்


திறவுகோல் வசனம்: உபாகமம்: 34:9 – “மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்…”

ஞானம் – தேவனிடத்திலிருந்து மனிதனுக்கு கிடைப்பது                   அறிவு – உலகத்திலிருந்தும், மனிதனிடத்திலிருந்தும் கற்றுக் கொள்வது

தேவனிடத்திலிருந்து வருகின்ற ஞானம் நம்மை உயர்ந்த ஸ்தானத்தில், உயர்ந்த இடத்தில் வைக்கும்.

ஞானம் தேவனிடத்தில் உள்ளது. அந்த தேவனோ ஆலயத்தில் இருக்கிறார். எனவே, நீதிமான்கள் ஞானத்தைப் பெறுவதற்கு ஆலயத்திற்கும், ஆலயத்தில் நடைபெறும் ஆராதனைக்கும் வருவார்கள். ஆராதனைக்கு வந்தவர்கள் தேவன் தங்கும் ஆலயமாக தங்களை மாற்றிக் கொள்வார்கள். அவரது ஆலயமாக மாறினவர்கள் ஞானத்தை உடையவர்களாய் இருப்பார்கள். அவர்களே ஆகாய மண்டலங்களிலே ஜொலிக்கும் பிரகாசிக்கிற நட்சத்திரங்களைப்போல சுடர்விடுகிற ஞானவான்களாக இருப்பார்கள். ஆமென்! அல்லேலூயா!

மனிதன் நம்மை உயர்த்தினால், அவனது உயரத்திற்கு மட்டுமே உயர்த்திட முடியும். ஆனால், தேவன் நம்மை உயர்த்தினால் அவரது உயரத்திற்கே (உன்னதத்திற்கே) உயர்த்த அவரால் ஆகும். வானம் அவருக்கு சிங்காசனம்; பூமி அவருக்குப் பாதப்படியல்லவா?

ஞானம் எப்படிப்பட்டதாயிருக்கிறது?

யோபு: 28:12 – 23 – “ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது? அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை. ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது. ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது. பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது. எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாயத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.”

ஞானம் எங்கே இருக்கிறது?

நீதிமொழிகள்: 1:2,3 – ஞானம் வேதத்தில் உள்ளது                        நீதிமொழிகள்: 2:6 – ஞானம் கர்த்தரிடத்தில் உள்ளது                       சங்கீதம்: 111:10 – கர்த்தருக்குப் பயந்தவர்களிடத்தில் உள்ளது

யாருக்கு தேவன் “ஞானம்” தருகிறார்?

சங்கீதம்: 51:6 – உள்ளத்தில் உண்மையாயிருப்பவர்களுக்கு – தேவன் ஞானத்தைத் தருகிறார்

வேதம் சொல்லுகிறது: நீதிமொழிகள்: 8:10 – “வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப் பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.”

ஞானத்தை நாம் அங்கீகரிக்க வேண்டுமாம். அதாவது, அதைப் பெறுவதற்கு ஆர்வப்பட வேண்டும். முயற்சியெடுக்க வேண்டும். ஏனென்றால், இக்கடைசி நாட்களில் மனிதர்கள் ஞானத்தை விட வெள்ளியையும் பொன்னையும்தான் அதிகம் விரும்புகிறார்கள். வருடத்திற்கு ஐந்து, அல்லது பத்து பவுன் நகை சேமிக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு இலக்கு வைத்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் பெந்தேகொஸ்தே விசுவாசிகள் என்றால் ஆவிக்குரியவர்கள், நகை அணிய மாட்டார்கள். பூ, பொட்டு வைக்காமல் கர்த்தருக்காக ஒரு பிரதிஷ்டையோடு, அர்ப்பணிப்போடு இருப்பவர்கள் என்கிற காலம் போய் பல மாமாங்கம் ஆகிவிட்டது. அப்படிப்பட்ட சபைகளில் கூட்டம் குறைந்துபோனதுதான் மிச்சம். அப்படிப்பேசுகிற ஊழியர்களை சக ஊழியரும் சரி, சபை விசுவாசிகளும் சரி, ஏன்? அவர் சார்ந்துள்ள ஸ்தாபனமும் சரி புறக்கணித்துத் தள்ளி பல காலம் ஆகிவிட்டது. எனவே, இன்றைய காலகட்டத்தில் உள்ள போதக பிதாக்கள் புத்திசாலிகள். அதைக்குறித்த பேச்சு காற்று வாக்கில் கூட வராதபடி பார்த்துக் கொள்கிறார்கள்.

இன்றைக்கு மனிதன் உலக அறிவைப் பெற – பல இலட்சங்களை பள்ளி கல்லூரிகளிலும், பல கலைகளை (பாடல், இசை, நடனம், நடிப்பு – சின்னத்திரைக்கு) கற்றுக் கொள்ள பல ஆயிரங்களையும் தயங்காமல் செலவு பண்ணுகிறார்கள். உலகில் சமுதாய அந்தஸ்தை காட்டிக் கொள்ள, வெள்ளியும், பொன்னையும் சேமிக்க பல ஆயிரங்களிலிருந்து பல இலட்சங்கள் வரை செலவிடுகிறார்கள்.

ஆனால், வருத்தமளிக்கும் உண்மை என்னவென்றால் … தேவனிடத்திலிருந்து “ஞானம்” பெற எவ்வித முயற்சியும் எடுப்பதில்லை. நேரத்தை செலவு பண்ணுவதில்லை. இவ்வுலகில் வாழ மேற்கண்டவைகள் உங்களுக்குத் தேவைதான் என்றாலும், அதைவிட “ஞானத்தை அங்கீகரியுங்கள்" என வேதம் கூறுகிறதையும் சற்று செவி கொடுத்து கவனியுங்கள்.

தேவன் தரும் ஞானத்தை மட்டும் ஆழமாக நீங்கள் அறிந்து கொள்வீர்களானால் … வெள்ளியையும் பொன்னையையும்விட அதிகமாய் ஞானத்தை நேசிப்பீர்கள். என்னோடு வாருங்கள். ஞானத்தின் மகத்தவத்தைப்பற்றி ஆழ்ந்து தியானிப்போம் வாருங்கள்.

1.   ஞானத்தினால் நிரப்பட்ட இருதயம்

யாத்திராகமம்: 35:35 – “சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.”

அ) அறியாமை இருளை அகற்றிய ஞானம்:

மோசேயின் கீழ் எகிப்தை விட்டுப் புறப்பட்டு வந்த இஸ்ரவேல் ஜனங்கள் அத்தனைபேரும் எகிப்தில் 430 ஆண்டுகள் பார்வோனுக்கு அடிமைகளாக நைல்நதியோரம் செங்கல் அறுத்துக் கொண்டு இருந்தவர்களே. இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் – வைக்கோல், மண், நைல்நதி தண்ணீர், செங்கல்சூளை, செங்கல் மட்டுமே. அதைத்தவிர, வேறு எதுவும் அவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால், பார்வோன் அவர்களுக்கு எதையும் கற்றுக் கொடுக்கவில்லை.

யாத்திராகமம்: 14:3 – “அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக் குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.” இப்படி பார்வோன் சொல்லக்காரணம்: 430 வருசம் எகிப்தில் இருந்து எதையும் கற்காதவர்கள், பிரிந்து சென்று எதை சாதிக்கப்போகிறார்கள்?

 புவியியல் அமைப்பு தெரியாது; அறிவியல் அறிவு கிடையாது, அரசியல், சமுதாய அமைப்புமுறை பற்றிய ஞானமில்லை. இராணுவ கட்டமைப்போ, யுத்தகலையோ, யுத்த வியூகமோ, ராஜதந்திரமோ எதுவுமே தெரியாது. வேளாண் விவசாய சாகுபடிமுறைகள் ஒன்றும் தெரியாது. கல்வி, சாஸ்திர ஞானமில்லை. சொந்த நாடும் வீடும் இல்லை. இவ்வளவு பலவீனமான ஜனங்கள் எதை சாதிக்க முடியும்? வனாந்தரத்திற்கு போனாலும் சரி, தேசத்திற்குள் கடந்து சென்றாலும் சரி… எவ்வித முன்னேற்றமுமில்லை. இந்த கருத்து பார்வோனுக்கு இருந்ததினால்தான், “தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது” என்று ஏகடியம் பேசுகிறான்.

அவன் பேசினால் என்ன? நாம் ஆராதிக்கிற தேவன் ஞானம் நிறைந்தவர். யோபு: 9:4 – “அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்”; ரோமர்: 16:27 – “தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவன்”; யூதா: 1:25 – “தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.” 

நம்மை நடத்துகிற தேவமனிதர்கள் ஞானமுள்ளவர்கள். சங்கீதம்: 119:98-100 – “நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு, என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்கள் எல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.

1கொரிந்தியர்: 2:11-13 – “மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.”

 அப்போஸ்தலர்: 7:22 – “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.”

நாம் அறிந்து கொள்ள வேண்டியது இதுதான்: நாம் ஆராதிக்கும் தேவன் ஞானமுள்ளவர்; அவரது ஊழியர்கள், அவரது ஜனங்கள் ஞானமுள்ளவர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் ஒன்றுமறியாதவர்களாயிருக்கலாம். ஆனால், அவர்களை ஆளுகிற தேவன் ஒன்றும் அறியாதவர் இல்லை. மகா ஞானமுள்ளவர். அவர் தமது ஜனத்தை வழிநடத்தும்படி அனுப்பப்படுகிற அவரது பணியாளர்கள் ஞானமுள்ளவர்கள்.

பார்வோன் எதை ஏளனம் செய்தானோ … அதை மோசேயைக் கொண்டு தேவன் சரிசெய்தார். சரியான கட்டமைப்பு அதாவது, எகிப்தில் உள்ள சமுதாய, அரசியல், கல்விமுறை, நாகரீக பண்பாடுகளை விட சிறந்த கட்டமைப்பு மோசேயின் மூலமாகவும், யோசுவா மூலமாகவும் தேவனாகிய கர்த்தர் ஏற்படுத்தினார். அறிந்த ஒருவரைக் கொண்டு (மோசே) அறியாத ஜனங்களுக்கு (இஸ்ரவேலருக்கு) அறியப்பண்ணுகிறவர் நமதாண்டவர்.

430 ஆண்டுகள் பார்வோனுக்கு கீழ் இருந்தும் ஒன்றும் கற்றிருக்கவில்லை. 40 ஆண்டுகளில் மோசேயின் கீழ் இருந்தபோது அனைத்தையும் அறிந்தவர்களாயிருந்தனர். இதுதான் தேவநடத்துதல். இன்றைக்கும் எத்தனையோ தேவமனிதர்கள் இந்திய கிராமங்களில் ஊழியம் செய்து, மக்களுடைய அனைத்துவகையான மூடப்பழக்கவழக்கங்களையும், அறியாமைகளையும் அகற்றி, நல்ல கல்வி நிலையங்களையும், நல்ல நாகரீக பண்பாடுகளையும், நல்லொழுக்கங்களையும், தேவபக்தி நிறைந்த தேவபயத்தையும் ஊட்டி ஞானமுள்ள நீதிமான்களாக உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் அதை செய்து கொண்டும் இருக்கிறார்களே!. தேவனுக்கே மகிமையுண்டாவதாக!.

ஆ) அறியாததை அறியச் செய்யும் ஞானம்:

உபாகமம்: 34:9 – “மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்…” என்று வேதத்தில் வாசிக்கிறோம். அதேபோல …

யாத்திராகமம்: 35:35 – “சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் ...” என்றும் வாசிக்கிறோம்.

இன்றைய நாட்களில் கல்விமுறைகள் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது.ஒவ்வொரு துறைக்கும், ஒவ்வொரு கலைக்கும் பலதரப்பட்ட கல்வி பிரிவுகள் இருக்கிறது. கல்வி பாடப்பிரிவுகளுக்கு அளவேயில்லை. ஒவ்வொரு துறையிலும் பல்வேறு எண்ணிலடங்கா பாடப்பிரிவுகள் இருக்கிறது. கற்றுக்கொள்ள கல்லூரிகளும், பணியாற்ற தொழிற்கூடங்களும் ஏராளம்!. ஏராளம்!

ஆனால், மோசேயின் நாட்களில் அப்படியல்ல. ஆசரிப்புக்கூடாரம் செய்வதற்கு விசேஷித்த ஞானமும், யூகித்து செய்யும் அறிவும், விசித்திர விநோத வேலைகளைச் செய்ய வேண்டிய விவேகமும் தேவை. இதற்கெல்லாம் இஸ்ரவேலருக்குப் பரிட்சியம் எதுவும் இல்லை. இவர்களுக்கோ … மண்ணை வெட்டி செங்கல் அறுக்க மட்டும்தான் தெரியும். இவர்களுக்கு இப்படிப்பட்ட ஞானமும் அறிவும் எங்கிருந்து? யாரால்? எப்படி? கிடைத்திருக்கும்?

இப்படிப்பட்ட வேலைகளை செய்வதற்கு யார் இவர்களுக்கு பயிற்சி கொடுத்திருப்பார்கள்? இதைக் கற்றுக்கொள்ளவே பல ஆண்டுகள் பிடிக்கும். அதற்கு முதலில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஓ… கடவுளே! என்னதான் நடந்தது? எப்படி இது சாத்தியமாயிற்று?!

தேவன் ஒரு காரியம் செய்தார். மலையில் மோசேக்கு ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியைக் காண்பித்தார். அவன் இஸ்ரவேலர் மீது கைகளை வைத்தான். அவன் கண்ட மாதிரியின்படி செய்ய, தேவன் அதினதின் வேலைக்கு அவனவனுக்குரிய அபிஷேகத்தை அவனவன் மேல் ஞானத்தின் ஆவியாக பொழிந்தருளி, இருதயங்களை ஞானத்தினால் நிரப்பினார். மோசே கண்டதை, இவர்களும் கண்டார்கள். அவர்கள் கண்டதை செய்வதற்குரிய ஞானத்தையும், கைகளையும், விரல்களையும் தேவனாகிய கர்த்தர் பயன்படுத்த ஆரம்பித்தார். ஆசரிப்புக்கூடாரப்பணிகள் செவ்வையாக நடந்து முடிந்தன. ஆமென்! அல்லேலூயா!

சங்கீதம்: 107:43 – “எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள்கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.”

மண்ணிலும் மண்வெட்டியிலும் புழங்கிக் கொண்டிருந்த மக்களை தேவனாகிய கர்த்தர் எப்படிப்பட்ட ஞானமுள்ளவர்களாக்கினார் என பார்த்தீர்களா?! முரட்டாட்டமும் வணங்காக்கழுத்துள்ளவர்களுக்கே என் தேவன் எப்படி பாடம் நடத்தியிருக்கிறார் பாருங்கள்.! 

யாக்கோபு: 1:5 – “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

இ) நுணுக்கங்களை கற்றுத் தரும் ஞானம்:

பிரசங்கி: 10:10 – “…ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம்.”                                                                                           
பிரசங்கி: 9:16 – “….பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம்” 
பிரசங்கி: 9:18 – “யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்

யாத்திராகமம்: 35:35 – ன் விளக்கம்:

    I.     சித்திரவேலையையும் சிற்பவேலையையும்,
   II.     இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும்
   III.     விசித்திர நெசவு வேலை

சித்திரவேலை வேறு; சிற்ப வேலை வேறு என்பதை நாம் அறிவோம். சித்திர வேலைக்கு “தூரிகை” வேண்டும்; சிற்ப வேலைக்கு “உளியும், சுத்தியலும்” வேண்டும். தூரிகையை மென்மையாக கையாள வேண்டும். உளி, சுத்தியலை சிற்சில இடங்களில் கடினமாகவும், சிற்சில இடங்களில் மென்மையாகவும் கையாள வேண்டும்.

அடுத்து மெல்லிய பஞ்சு நூலை தையல் வேலைக்குப் பயன்படுத்த தெரிய வேண்டும். பஞ்சை மெல்லியதாக திரிக்க தெரிய வேண்டும் முதலில். பிறகு, இளநீலம், இரத்தாம்பர நிறம், சிவப்பு நிறம் என வர்ணம் மாறாமல் சாயம் நனைக்க வேண்டும். தேவன் சொல்லியபடி அதை விசித்திரமாக தைக்க வேண்டும்.

கொடுக்கிற நூலைக் கொண்டு விசித்திர நெசுவு செய்ய வேண்டும். நூலை முதலில் பாவாக்க வேண்டும். அதை ஊடை நூலாக்க ராட்டையில் சுற்ற வேண்டும். அதை நெசவுத் தறியில் இணைத்து தேவன் சொன்னபடி டிசைன் கொண்டுவரப்பட வேண்டும். டிசைன் கொண்டு வருவதற்கு நெசவுத்தறியில் அதற்கேற்ற வடிவமைப்பு கொண்டு வரவேண்டும். இக்காலத்தில் எளிதான காரியம்தான். ஆனால், மோசேயின் நாட்களில் …?!!
ஆக மொத்தத்தில் வனாந்தரத்தில் மோசேயின் காலத்தில் நடந்தவையெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் ஆச்சர்யமாகவும், அதிசயங்களாகவும், நினைத்துப் பார்த்திராத அதிஅற்புதங்களாகவும் இருக்கிறது. ஆமென்! அல்லேலூயா!

மண்ணிலும் மண்வெட்டியிலும் கடினமாக வேலைபார்த்த இஸ்ரவேல் மக்கள், இப்போது மென்மையான வேலைகளை செய்ய பழக்குவிக்கப்பட்டதைக் காணும்போது தேவனுடைய நடத்துல் எவ்வளவு ஆச்சர்யம் மிகுந்தது என அறிய முடிகிறது.

இதோடு முடிந்துவிடவில்லை. உடன்படிக்கை பெட்டி, கிருபாசனம், மார்ப்பதக்கம், ஏழு பொன் குத்துவிளக்குகள், சமூகத்தப்பத்து மேஜை, வெண்கல தொட்டி, பலிபீடம், ஆசாரியனின் ஆடைகள், அபிஷேக எண்ணெய், திரைச்சீலை, பலகைகள், தண்டுகள், வளையங்கள் மற்றும் 12 விதமான விலையேறப்பெற்ற கற்களை முத்திரை வெட்டாக வெட்ட … போன்றவை எல்லாம் விசித்திர விநோதமாக செய்ய நல்ல அனுபவம், பரிட்சயம், ஞானம் வேண்டும். ஆச்சர்யம்தான்! ஒன்றுமே தெரியாத ஜனத்தைக் கொண்டு செயற்கரிய செயல்களை செய்ய வைத்திருக்கிறாரே! இதுதான் நுணுக்கங்களைக் கற்றுத் தரும் தேவனுடைய ஞானம் என்பது. இவையெல்லாம் மேற்பார்வையிடத்தான் சகல சாஸ்திரமும் தெரிந்த வல்லவனாகிய மோசேயிடம் இப்பொறுப்பை ஒப்படைத்திருந்தார் நம் தேவன்.

முரட்டாட்டம் செய்யும் ஜனங்களை முத்திரை வெட்டாக வெட்டும் பொறுமை மிக்க வேலையில் அமர்த்தின தேவனை நாம் என்னவென்று சொல்வது?! வணங்காக் கழுத்துள்ள ஜனங்களை தம் கூடாரத்தின் வேலைகளைச் செய்யும்படி இஸ்ரவேலரை கீழ்ப்படியச் செய்த தேவனின் வல்லமையை என்னவென்று புகழ்வது?! நம் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. முரட்டாட்டடமும், வணங்காகழுத்துள்ளவர்களாக சபைகளிலும், குடும்பங்களிலும், தொழிற்கூடங்களிலும் இருக்கின்றார்களா?! கவலை வேண்டாம். அவர்களை தேவன் ஏற்றவேளையில் சிற்சில நுணுக்கமான காரியங்களைச் செய்வதற்கென்றே வைத்திருக்கிறார். அப்படிப்பட்டவர்களை மட்டுமல்ல… கீழ்படிந்திருக்கிற உங்களையும் என்னையும் பயன்படுத்த அவர் வல்லவராயிருக்கிறார்.

2.   ஞானத்தைக் கேட்கும் ஜெபம்

நம்முடைய தனிப்பட்ட வேண்டுதல்களில் ஜெபங்களில் ஞானத்தை விரும்பிக் கேட்கும்விதமாக ஜெபம் ஏறெடுக்கப்பட வேண்டும். யாக்கோபு: 1:5,6 – “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்”. நாம் அனைத்தையும் முற்றும் அறிந்தவர்கள் அல்ல. நாம் குறைவுள்ளவர்கள். எதையும் செய்திடும் அல்லது எதையும் சாதித்திட நமக்குத் தேவை ஞானமே. அது நம் ஆராதிக்கும் தேவனிடத்தில் உள்ளது. அதைப் பெற நாம் வாஞ்சிக்க வேண்டும். அதை விரும்பி ஜெபத்தில் கேட்க வேண்டும்.

அ) நல்ல நிர்வாகத்திற்கு ஞானம் கேட்ட சாலமோன்:

1இராஜாக்கள்: 3:11,12 – “ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை”.

நல்ல நிர்வாகம் செய்ய ஞானம் தேவை. எவ்வளவோ பேர்களிடத்தில் பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. அதை அவர்கள் சிறப்பாக நிர்வகிக்க இயலாமல் போகக் காரணமென்ன? அதில் தேவனுடைய ஞானம் இருப்பதில்லை. உலகம் கற்றுக்கொடுத்த ஏதோ கொஞ்சம் அறிவை வைத்து அநேகர் இன்று நாட்டையோ, வீட்டையோ, தொழிலையோ நிர்வாகம் செய்கின்றனர். ஒருசில சமயம் சரியாக இருப்பினும், அநேக சமயங்களில் நிர்வாகம் சரியில்லாமல் அநேகரால் விமர்சனங்களுக்கும், கேலிக்கும், சாடுதலுக்கும் உள்ளாவற்கு காரணம் … தேவஞானமின்மையே.

ஆனால், சாலமோன் இவ்விஷயத்தில் மிகத்தெளிவுள்ளவனாயிருப்பதைக் காண முடிகிறது. ஏன் இவ்வாறு கூறுகிறேனென்றால் … தகப்பனை இழந்த நிலையில், சாலமோன் துக்கத்தோடு நித்திரைக்கு செல்கிறான். துக்க நித்திரையோ அல்லது அயர்ந்த நித்திரையோ அவன் செய்திருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட தூக்க மயக்கத்தில்கூட சொப்பனத்தில் தேவன் தோன்றிக் கேட்டபொழுது, ஜனங்களை நடத்துவதற்கு ஞானம் கேட்டானே! தூக்கக்கலக்கத்தில் அநேக வேளைகளில் நாம் என்ன செய்கிறோம் என தெரிவதில்லை. பேந்த பேந்த முழிப்போம். ஒரு தெளிவுக்கு வருவதற்கு சில மணிநேரங்கள் பிடிக்கும். சாலமோனைப் பாருங்கள். எவ்வளவு நெருக்கங்களின் மத்தியிலும், இழப்பின் நடுவினிலும், களைப்பின் வேளையிலும், தூக்கக்கலக்கத்திலும் எவ்வளவு தெளிவாய் ஞானம் வேண்டும் எனக் கேட்கிறான்?!!

அதுமட்டுமல்ல … நான் ஒரு இராஜகுமாரன். தாவீதின் குமாரன். எனவே, தனக்கு எல்லாம் தெரியும் என்கிற எந்தவொரு மேட்’டிமையும் இல்லாமல் தாழ்மையோடு தன்னிடத்தில் இல்லாத தேவஞானத்தை கேட்கிறதைக் காண்கிறோமல்லவா! ஏதோ பொறுப்பைக் கொடுத்தார்கள். என்னத்தையோ செய்வோம் என்று நிர்விசாரமாக இருக்கவில்லை. அதில் கருத்தாய் கவனம் செலுத்துவதை காண முடிகிறதல்லவா?! அதனால்தான் 40 ஆண்டுகாலம் யுத்தமின்றி, இரத்தமின்றி சிறப்பான பொற்கால ஆட்சி அவனால் செய்ய முடிந்தது.

இன்றைக்கு … இந்நாட்களில் …

குடும்பத்தில்: தேவனிடத்தில் ஞானம் கேளாமல் இருப்பதினால், ஆவிக்குரிய நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டிருப்தைக் காண்கிறோமே … குடும்ப பலிபீடம் இடிக்கப்பட்டிருப்பதை அநேக குடும்பங்களில் காணமுடிகிறதல்லவா?! அநேக குடும்பங்கள் சாத்தானால் பற்பலவிதங்களில் சிதறடிக்கப்பட்டிருக்கிறதல்லவா? எவ்வளவு வேதனை? எவ்வளவு துக்கம்? குடும்பத்தலைவர்களே! தலைவிகளே! குடும்ப நிர்வாகத்திற்கான தேவஞானத்தை ஜெபத்தில் அனுதினமும் கேட்போமா?!

தொழில், வியாபாரம், வேலை ஸ்தலங்களில்: தேவனிடத்தில் ஞானம் கேளாமல் போனதினிமித்தம், எவ்வளவு நிர்வாக சீர்கேடுகள்? எவ்வளவு பொருளாதார இழப்புகள்? எவ்வளவு நிம்மதியிழப்புகள்? மனஉளைச்சலுக்கு ஆளாகி, அது குடும்பம் வரை தொடர்ந்து அனைவருடைய சமாதானத்தையும் கெடுத்துப்போட்டது?! சிலர் தற்கொலைவரை சென்று திரும்பி வந்திருக்கிறார்கள்!! சிலர் பாவம் மரித்தும் போயிருக்கிறார்களே!?! எவ்வளவு தாங்கொணா வேதனை?

எனவே, வாழ்வதற்கு, நிர்வாகம் பண்ணுவதற்கு அறிவு மட்டும் போதுமானதல்ல … தேவஞானமும் தேவையென்பதை இப்போது அறிகிறோமல்லவா?! அது நாடானாலும், வீடானாலும், தொழில் வியாபாரமானாலும், சபை ஊழியமானாலும் தேவஞானமே முக்கிய அங்கம் வகிக்கிறது. அதை பெற நாம் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்போமா?!

ஆ) சிறந்த ஞானம் தந்த தேவன்:

1இராஜாக்கள்: 4:30 – “சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

கிழக்கத்திப்புத்திரர்: இஸ்ரேலை மையமாகக் கொண்டு உலக வரைபடத்தை பாப்போமானால் … இஸ்ரேலுக்கு கிழக்கே – ஈரான், ஈராக், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இந்நாடுகளில் வாழும் மக்களே கிழக்கத்திப் புத்திரர்கள் என நாம் சொல்லலாம்.

மத்தேயு: 2:1,2 – “ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்”. இயேசுவை காணச் சென்ற சாஸ்திரிகள் இந்தியாவிலிருந்து சென்றிருக்கலாம் என அநேகர் கூறுவதற்கான காரணம் இதுதான். இந்தியாவில்தான் பல நூற்றாண்டுகளாக வான சாஸ்திரத்தை மையமாக வைத்து ஆய்வு செய்து நாள் நட்சத்திரங்களை கணித்து ராசி பலன்களை கூறுகிறவர்களாயிருக்கிறார்கள். இஸரேலுக்கு கிழக்கே உள்ள நாடுகளில் இந்தியாவில் உள்ள சாஸ்திரிகள்தான் இந்த அறிவை உடையவர்களாயிருந்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.

எகிப்தியர்: இஸ்ரேலுக்கு கீழ்ப்புறமாக இருக்கும் நாடு எகிப்து. இவர்கள் பிரமீடுகளை உலகிற்கு கொடுத்தவர்கள். அதைக் கட்டுவதற்கு இஸ்ரேல் மக்கள் பார்வோன் நாட்களில் அடிமைகளாக இருந்து செங்கல் அறுத்து கட்டிடங்களையும், பிரமீடுகளையும் இவ்வுலகிற்கு கொடுத்தார்கள். பிரமீடுகளை கட்டுவதற்குரிய ஞானத்தை இஸ்ரவேல் ஜனங்களாகிய யூதர்களுக்கு தேவன் ஞானத்தை வழங்கினார். கட்டினது இஸ்ரவேலர்கள்; பேர் வாங்குவது எகிப்தியர்கள். என்னவொரு கொடுமை. ஆனாலும் தேவன் நல்லவர்; வல்லமைமிக்கவர். சாலமோன் நாட்களில் அதை ஈடுகட்டினார்.  1இராஜாக்கள்: 4:30 – “சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.

ஆம்! பிரியமானவர்களே! கிழத்திப்புத்திரர்களின் ஞானத்தை விடவும், எகிப்தியரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானத்தை தருபவர் நம் தேவனாகிய கர்த்தாதி கர்த்தர் இயேசு. அல்லேலூயா! சொந்த ஞானத்தை உடைய சாஸ்திரிகளை விடவும், மற்றவர்களை ஞானத்தை பயன்படுத்தி தங்களுக்கு பேர் உண்டாகப் பண்ணிக் கொள்ளும் எகிப்தியரைப் பார்க்கிலும் சிறந்த ஞானத்தை தருபவர்தான் நமதாண்டவர் இயேசுகிறிஸ்து. ஆமென்! அல்லேலூயா!.

அநேக வேளைகளில் தேவபிள்ளைகளின் ஞானத்தையும், திறமைகளையும், உழைப்பையும் அதற்குரிய பலன்களையும் இருட்டடிப்பு செய்துவிடுகிற உலகம் இது. உங்களுக்கு இதுபோன்று நடந்துள்ளதா? கவலை வேண்டாம். நம் தேவன் நீதியைச் சரிக்கட்டுகிற தேவன். நிச்சயம் அதை சரி செய்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் … நம் ஜெபங்களில் தேவனிடத்தில் உள்ள ஞானத்தை வேண்டும் என்று கேட்பதுதான்.

இ) ஞானத்தின் கிரியைகள்:

நீதிமொழிகள்: 9:1 – “ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

ஞானத்திற்கு ஏழு தூண்கள் உண்டு.

ஞானம் ஒருவனுக்கு தேவனால் அருளப்பட்டால் … அவன் வாழ்வில் அல்லது அவன் வீட்டில் ஏழு ஆசீர்வாதங்கள் நிச்சயமாக இருக்கும் என்று வேதம் கூறுகிறது. ஞானம் ஒருவனுக்கு தேவனால் அருளப்பட்டால் … ஞானமானது அவன் வாழ்வில் தனது கிரியைகளை நடப்பித்துக் கொண்டு தான் இருக்கும். அவை என்னவென்று பார்ப்போம்.

1இராஜாக்கள்: 10:4,5 – “சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும், அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடையபானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடையஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,”

1இராஜாக்கள்: 10:23,24 – “பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.”

1.   சாலமோனின் அரமனை
2.   சாலமோனின் பந்தியின் போஜன பதார்த்தங்கள்
3.   சாலமோனின் ஊழியக்காரரின் வீடுகள், உத்தியோகஸ்தரின் வரிசைகள், வஸ்திரங்கள் (சீருடை), பானபாத்திரக்காரர்
4.   நடை மண்டபம்
5.   ஐசுவரியம்
6.   ஞானம்
7.   சாலமோனின் முகதரிசனம்

சாலமோனுக்கு தேவன் தந்த ஞானம் – ஞானத்தின் கிரியைகள் இவைகளே. இந்த ஏழு கிரியைகளையும் ஞானமானது மேலும் மேலும் மெருகூட்டும்படியாக அதின்மேல் சித்திரந்தீர்க்கும் என்று வேதம் சொல்கிறதைப் பாருங்கள். நீதிமொழிகள்: 9:1 – “ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து,

ஞானமுள்ளவனின் வீட்டில், குடும்பத்தில், வேலை ஸ்தலங்களில், தொழில் வியாபாரங்களில், சபைகளில், நிர்வாகங்களில் இவைகள் ஒன்றும் குறைந்திராமல் காணப்படும். இவைகள் குறைந்திருந்தால் … வேதம் சொல்லுகிறது: யாக்கோபு: 1:5 – “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.” நாம் குறைவுபடாமல் இருக்க, ஜெபத்திலே தேவனிடத்தில் ஞானத்தைக் கேட்போமாக!

3.   ஆளுவதற்கேற்ற ஞானம்:

1நாளாகமம்: 22:12 – “கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகியகர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.
மனிதன் தன்னை ஆளுமையுள்ளவனாக மாற்றிக்கொள்ள விரும்புகிறான் . அதற்காகத் தன்னை பயிற்றுவித்துக்கொள்ள முயற்சி செய்கிறான். ஆயகலைகள் 64 யும் கற்றுக்கொள்ள வாஞ்சிக்கிறான். ஆளும் திறனும், ஆளுமைத்திறனையும் அடைய போராடிப் பிரயாசப்படுகிறான். சிலர் அதை அடைகின்றனர். சிலர் எவ்வளவு கற்றாலும், அனுபவமடைந்தாலும், அதைப்பற்றிய அறிவு இருந்தாலும் ஆளுமைத் திறனின்றி காணப்படுகிறார்கள். காரணம் விளங்காமல் தவிக்கிறார்கள். அடைய முயற்சித்தும் பலனற்றுப்போகிறார்கள்.

ஆதாமிலிருந்து இந்நாள் வரை அநேகர் ஆளும் திறனையும், ஆளுமைத்திறனையும் இழந்து தவிக்கிறார்கள். ஆளும் திறனும், ஆளுமைத்திறனும் இல்லாவிட்டால் என்ன நடக்கும்? அவமானமும், அடிமைத்தனமும், சீர்கேடுகளும், ஒழுங்கின்மையும், வெறுமையும், இழப்புகளும் அப்படிப்பட்டவர்களுடைய வாழ்வில் தவிர்க்க இயலாததாயிருக்கும்.

·          ஆளும் திறனும், ஆளுமைத்திறனும் இல்லாத ஆதாம் பாவத்தில் விழுந்தான்.
·          ஆளும் திறனும், ஆளுமைத்திறனும் இல்லாத லோத்து குடும்பத்தை இழந்தான்
·          ஆளும் திறனும், ஆளுமைத்திறனும் இல்லாத வஸ்தி அந்தஸ்தை இழந்தாள்
·          ஆளும் திறனும், ஆளுமைத்திறனும் இல்லாத ரெகோபெயாம் அரசாட்சியை இழந்தான்

இப்படி எத்தனையோ பேர் ஆளும் திறனும், ஆளுமைத்திறனும் இல்லாதபடியினால் இழந்தவைகள் ஏராளம்! ஏராளம்! நாம் அவர்களில் ஒருவராகாதபடிக்கு ஜாக்கிரதையாயிருப்போமாக!

அ) உணர்வுள்ள ஞானம்:

அநேகருக்கும் ஞானம் இருக்கும். ஆனால், ஞானத்தில் உணர்வு இருக்காது. அப்படிப்பட்ட ஞானத்தினால் அவர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்காது. உதாரணமாக… 2இராஜாக்கள்: 5:1 – “சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.

2இராஜாக்கள்: 5:10-13 – “அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப் போனான். அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம் பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும் போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்”.

நாகமான் – ஆளும் திறனும், ஆளுமைத்திறனும் ஞானமும் உடையவன்தான்; ஆனால், தேவமனுஷனின் உபதேசத்தை உணர முடியவில்லையே? ஏற்க இயலவில்லையே! அதை அவனது ஊழியர்கள் உணர்த்துவித்தபோதல்லவா உணர்வடைகிறான்??!! ஞானம் இருந்தென்ன? உணர்வற்ற ஞானம் அவனுக்கு சுகம் பெறமல் தடுத்திருக்கிறதே! அதை அவனது ஊழியர்கள் உணர்த்துவித்தபோதல்லவா சுகம் உண்டானது!!

ஆ) பிறரின் உணர்வுகளை அறியும் ஞானம்:

1சாமுவேல்: 1:12-16 – “அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன் என்றாள்”.

ஞானம் இருந்தால் மட்டும் போதாது. பிறரின் உணர்வுகளை மனதை புரிந்து கொள்ளத்தக்க உணர்வுள்ள ஞானம் இருத்தல் அவசியம். இல்லவிடில், தவறான புரிந்துகொள்ளுதலும், பிறரின் மனதைக் காயப்படுத்துதலும், பிரிவுகளும் பிரிவினைகளும் ஏற்படும். அதன் விளைவு படுமோசமானதாககூட இருக்கலாம். கேடுவிளைவிப்பதாகவும் மாறலாம். சில நல்லவர்களைக்கூட கெட்டவர்களாகவும், சில கெட்டவர்களை நல்லவர்களாகவும் கூட நியாயந்தீர்த்துவிடும் அளவிற்கு நம்மை கொண்டு சென்றுவிடும். அதைப் பகுத்தறிய பிறரின் உணர்வுகளை புரிந்துகொள்ள அறிகிற ஞானம் நமக்குத் தேவை.

இ) வசனங்களை கைக்கொள்ள வேண்டும்:

ஆளும் திறனையும், ஆளுமைத் திறனையும் நம் வாழ்வில் சுதந்தரிக்க … கர்த்தருடைய வசனங்களை கைக்கொள்ள வேண்டும். யோசுவா: 1:7,8 – “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்”.

நீதிமொழிகள்: 1:2-6 – “இவைகளால்(வேத வசனங்களால்) ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்”.

நம் வாழ்வில் ஆளும் திறனையும், ஆளுமைத்திறனையும் பெற வேண்டுமானால் … இவ்விதமாக, உணர்வை அருளிச் செய்யும் ஞானத்தையும், கர்த்தருடைய வசனங்களையும் கைக்கொள்ள வேண்டும். அப்போது நாம் இவைகளைப் பெறுவோம்.ஆமென்! அல்லேலூயா!

நாம் ஆராதிக்கும் தேவனாகிய இயேசு கிறிஸ்து, இப்படிப்பட்ட அனந்த ஞானமுள்ளவராக அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார் என்று வேதம் சொல்கிறது. ஏசாயா: 11:2 – “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.”  

லூக்கா: 2:52 – “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்”

இதுவரை நாம் தியானித்ததைப்போல, இன்றைக்கு ஞானத்தின் ஆவியினால் நிரப்பப்பட ஜெபிப்போமாக! ஞானம் பெற வாஞ்சிப்போமாக! ஞானத்தில் அதிகமதிகமாய் விருத்தியடையச் செய்வாராக! ஆமென்! அல்லேலூயா!

தேவன் தாமே உங்கள் யாவரையும் ஞானத்தால் நிரப்பி ஆசீர்வதிப்பாராக!
God Bless You!