“இயேசுவின் சாயலைத் தரிப்போம்” (அ) “தேவசாயல்”
திறவுகோல்வசனம்: சங்கீதம்: 17:15 – “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால்
திருப்தியாவேன்”
விழிப்பில் இருவகை: 1. தூக்கத்திலிருந்து விழித்தல் 2. மரண
நித்திரையிலிருந்து விழித்தல்
எப்படி விழித்தாலும் ஒவ்வொரு
நாளும் அவரது சாயலோட நாம் விழிக்க வேண்டும். முதல் விழிப்பில் அவரது சாயலை
தரித்துக் கொள்ள வாஞ்சித்து விழிக்க வேண்டும். இரண்டாவது விழிப்பில் நாம் அவரது
சாயலை தரித்தவர்களாய் விழிக்க வேண்டும்.
இன்றைய உலகில் வாலிபர்கள்
கிரிக்கெட் வீரர்களைப்போல, நடிகர்களைப்போல சிகையலங்காரம் செய்து கொள்கின்றனர்.
நடை, உடை, பாவனைகளில் அவர்களது சாயலை தங்களது சரீரத்தில் கொண்டுவர
முயற்சிக்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைப்போல பேசவும், செய்தும்
காட்டுகிறார்கள். தங்கள் செய்கைகளில் பெற்றோர்களின் சுபாவங்களை
வெளிப்படுத்துகிறார்கள்.
நாமோ கர்த்தராயிருக்கிற
இயேசு கிறிஸ்துவின் சாயலை தரித்தவர்களாய், அவரது நற்கிரியைகளையும்,
நற்பண்புகளையும், ஆவியின் கனிகளையும் வெளிப்படுத்துகிறவர்களாய் இருப்போம்.
தேவசாயல் எவ்வளவு
முக்கியமானது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமோ இல்லையோ. சாத்தான் அதை நன்கு
அறிந்தவனாயிருக்கிறான். கடவுளின் உன்னதப்படைப்பாகிய மனிதன் அவரது சாயலை
உடையவனாயிருப்பது சாத்தானுக்கு கடுமையான கோபமும் வெறுப்புணர்வும் கொண்டு வருகிறது.
காரணம் … சாத்தான் தேவமகிமையை, தேவபிரசன்னத்தை, தேவசாயலை இழந்தவனாய் இருக்கிறான்.
தன்னைப்போல மனிதனும் இவைகளை இழந்தவனாக காணப்பட வேண்டும் என்பதே அவனது விருப்பம்.
நம்மை வெறுக்கவும் அழிக்கவும் காரணமும் அதுதான். நம்மை அவன் காணும்போதெல்லாம்
தேவசாயலை காண்கிறான். ஆகவே, அச்சாயலை நம்மிலிருந்து அழித்து அவர்களில் ஒருவனாக
நம்மை மாற்ற விரும்புகிறான்.
நாம் ஏன் இயேசுவின் சாயலை
தரிக்க வேண்டும்? இப்பொழுது இருக்கிற சாயலில் என்ன குறைபாடு? என்பதைப் பற்றி நாம்
விரிவாக தியானிப்போம் வாருங்கள்.
வேதம் சொல்லும் சாயல்கள்:
மனிதனை தேவன்
படைக்கும்போது அவனை தன் சாயலாகவே அதாவது தேவசாயலாகவே படைத்தார். ரூபமும் அதாவது சரீர
அமைப்பும் தேவனுடைய ரூபமாகவே படைத்தார். தேவன் படைத்த சாயலை, அடையாளத்தை சாத்தான் ஒரு
பக்கம், மனிதன் மறுபக்கமாக சேர்ந்து அடையாளத்தையும், சாயலையும்
மாற்றப்பார்க்கிறார்கள். அல்லது மாற்றி விடுகிறார்கள். தேவனும் வேதமும் நமக்கு
கொடுக்கும் சாயல் ஒன்றே ஒன்று மட்டும்தான். அது தேவசாயல். வேதத்தில் உள்ள மற்ற
சாயல்கள் யார் கொடுத்தது? வேதம் சொல்லும் சாயல்கள் யாரால் எப்படி வந்தது?
1.
தேவசாயல்:
ஆதியாகமம்: 1:26,27 – “பின்பு தேவன்:
நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக…” ; “தேவன் தம்முடைய
சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்…” என்னே தேவனின்
அன்பு?! அனைத்து சிருஷ்டிகளையும் அவர் எண்ணப்படி
அல்லது அவர் மனதில் இருந்ததின்படி சிருஷ்டித்தார். ஆனால், மனிதனையோ அவரது சித்தப்படி
– அவரது சாயலாகவும், அவரது ரூபமாகவும் உண்டாக்கினார். அவரது சிருஷ்டிப்பிலே உயர்ந்தது
எது என்று சொன்னால் … மனிதனே!
2.
மனித சாயல்:
அ) ஆதியாகமம்: 2:21-23 – “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன்
நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச்
சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக
உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என்
எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி
என்னப்படுவாள் என்றான்”.
1கொரிந்தியர்: 11:7 – “புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால்,
தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள்
புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்”
ஆ) ஆதியாகமம்:
5:3 – “ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன்
சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்”.
3.
விக்கிரக சாயல்:
உபாகமம்: 4:23 – “நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின
உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று
விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும்
உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்”.
2பேதுரு: 2:19,20 – “… எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன்
அடிமைப்பட்டிருக்கிறானே.
கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின்
அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு
ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்”.
விக்கிரகத்துக்கு ஒருவன்
அடிமைப்பட்டால், அவன் விக்கிரகசாயலை தரித்தவனாகிறான்.
4.
மூலவியாதியின் சாயல்:
1சாமுவேல்: 6:4 –
“…பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த
ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்”
தேசத்தில் கர்த்தருடைய மகிமையை பாகலுக்கு ஈடாக கீழ்ப்படுத்த நினைப்பவர்களுக்கு
வரும் சாயல். மூலவியாதியின் சாயல் என்பது – வாதையின் வலியையும் வலிமையையும்
காண்பிக்கிறதாய் இருக்கிறது.
ரோமர்: 1:23 – “அழிவில்லாத
தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய
இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்”
5.
மாட்டின் சாயல்:
சங்கீதம்: 106:19,20 – “அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி,
வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்” ; “தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின்
சாயலாக மாற்றினார்கள்”. கோமாதா என்றும், காமதேனு என்று மாற்றி கோமியத்தை நிவாரணி
என குடித்து தங்களை மாட்டின் சாயலாக மாற்றுகிறார்கள்.
வேதம் சொல்லும் ஐந்து
சாயல்களில் முதல் சாயலாகிய தேவசாயலைத் தவிர்த்து, மீதமுள்ள நான்கு சாயல்களும்
பாவத்தினால் வந்த சாயல்களாகும். பாவத்தின்
சாயல்கள்: மனித சாயல், விக்கிரக சாயல், மூலவியாதியின் சாயல், மாட்டின் சாயல்
ஆகியவை. இந்நான்கும் சேர்ந்த சாயல்தான் “பாவ
மாம்ச சாயல்” என வேதம் சொல்கிறது.
v மனிதனை தேவன் படைக்கும்போது பாவ மாம்ச சாயலாக
படைக்கவில்லை. அவனைத் தேவசாயலாகவே படைத்தார். தேவசாயலாக இருந்த மனிதனை பாவ மாம்ச
சாயலாக மாற்றியவன் பிசாசு. பிசாசினால் வந்த பாவ மாம்ச சாயலை மீண்டும் தேவசாயலாக
மாற்ற தேவன் சித்தங்கொண்டார்.
ரோமர்: 8:3 – “…மாம்சத்தினாலே
பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப்
பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப்
போக்கும் பலியாகவும் அனுப்பி,”
பாவ மாம்சத்தின் சாயலாக மாற வேண்டிய அவசியம் யாரால் ஏற்பட்டது? பிதாவினாலா?
மனிதனாலா? பதில்: “மனிதனே”
தேவசாயலை இழந்த,
மனித சாயல் எப்படிப்பட்டது?
அ) வெறுமையானது ஆ) அடிமைத்தனமானது
– தேவசாயலை இழந்த மனிதனின் நிலை இப்படித்தான் இருக்கும். வெறுமையான மனிதன் ஒழுங்கற்றவனாவான்.
ஒழுங்கற்ற செயலுக்கு அதிபதி சாத்தான். ஆகவே, ஒழுங்கற்ற நிலை மனிதனை சாத்தானுக்கு அடிமையாக்கும்.
இப்படி பாவத்திற்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் மனிதனை மீட்கவே, இயேசு, “தம்மைத்தாமே வெறுமையாக்கி,
அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர்: 2:7) என்று வேதம் கூறுகிறது.
பாவ மாம்ச சாயலை
நீக்குவது எப்படி?
2கொரிந்தியர்: 3:18 – “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக்
கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே
மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்”
“கண்ணாடி” என்பது பரிசுத்த
வேதாகமத்தைக் குறிக்கிறது. கர்த்தருடைய மகிமையின் சாயலை வேதத்தின் வழியே அதாவது வேத
வசனத்தின் வழியே கண்டு, தேவன் விரும்புகிற சாயலாக மாறி மறுரூபப்பட வேண்டும் என வேதம்
கூறுகிறது.
மாறாக, “ஒருவன் திருவசனத்தைக்
கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே
தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே
பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல்
இன்னதென்பதை மறந்துவிடுவான்” (யாக்கோபு: 1:23,24). தேவசாயலையும் அவன் இழக்க
நேரிடும் என்று வேதம் கூறுகிறது.
எனவே, பாவ மாம்ச சாயலை
நீக்க, முதலில் வேதவசனத்தின் மூலம் மறுரூபப்பட வேண்டும்.
இரண்டாவதாக, ரோமர்: 8:10
– “மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும்,
ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்”.
கிறிஸ்து இயேசுவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நமது பாவ
மாம்ச சரீரம் மரித்து, நீதியின் அவயவயங்களாய் மாறுகிறது.
ரோமர்: 6:13 – “நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு
ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து,
உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்”.
எபேசியர்: 5:30 – “நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும்
அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்”
தேவசாயல் நமக்குள்
எப்படி பெலன் செய்கிறது?
அ) 2கொரிந்தியர்:
4:4 – “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி …”.
சுவிஷேசத்தில் தேவசாயலை கர்த்தர்
வைத்திருக்கிறார்.
இயேசுகிறிஸ்துவைப் பற்றிய மகிமையான சுவிஷேசத்தை யார் ஒருவர் கேட்டு
விசுவாசிக்கிறாரோ … அவர் அந்த மகிமையான சுவிஷேத்தின் ஒளியால் தேவசாயலைப் பெறுகிறார்.
ஆகவேதான், சாத்தான் எந்த ஒரு மனிதனும் இரட்சிக்கப்படக்கூடாதபடிக்கு, ஜனங்களின் மனதை
குருடாக்கி வைத்துள்ளான் என்று வேதம் கூறுகிறது.
2கொரிந்தியர்: 4:4 – “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி
அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்
அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்”.
ஆ) எபேசியர்: 4:24 – “மெய்யான
நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய
மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்”.
1. மெய்யான நீதி 2. பரிசுத்தம் – இவ்விரண்டும் தேவசாயலுக்குள்
மறைந்துள்ளது. நம்முடைய நீதிகள் அழுக்கான கந்தை என்று வேதம் சொல்கிறது. ஏசாயா:
64:6 – “… நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம்
அழுக்கான கந்தைபோல இருக்கிறது …”. தேவனுடைய
நீதியே நிலைத்திருக்கும் நீதி.
ரோமர்: 1:17 – “விசுவாசத்தினாலே
நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி
விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது”
ரோமர்: 3:22 – “… இயேசுகிறிஸ்துவைப்பற்றும்
விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும்
அது பலிக்கும் … ”
1பேதுரு: 1:16 – “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்
…” தேவசாயலானது நமக்கு தேவனுடைய நீதியையும், தேவன் விரும்பும் பரிசுத்தத்தையும் தருகிறது.
இ) சங்கீதம்:
68:13 – “நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும்
இருப்பீர்கள்”.
இந்த வசனத்தை சகோதரிகளுக்கு ஒப்பிட்டுப் பேசாத பிரசங்கிமார்களே கிடையாது
எனலாம். ஆனால், இன்று சகோதரிகளைவிட, சகோதரர்கள் தான் வீட்டிலும், உணவு விடுதிகளிலும்
பெரும்பாலும் அடுப்பினடியில் கிடக்கிறார்கள். கிறிஸ்துவுக்குள் ஆணென்றுமில்லை, பெண்ணென்றுமில்லை.
எனவே, அடுப்பினடியில் கிடக்கிற விசுவாசமார்க்கத்தார் யாராயிருந்தாலும்
சரி. அவர்கள் வெள்ளியினால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய
அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பார்கள் என்று வேதம் சொல்கிறது.
வெள்ளி – வேதவசனத்தையும், பசும்பொன் – ஞானம் மற்றும் விசுவாசத்தையும்
காட்டுகிறது.
நீதிமொழிகள்: 10:20 – “நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி …”.
தேவசாயலுடைய
மனிதனின் நாவு சுத்த சுவிஷேசத்தை, வசனத்தை இன்பமாய் வசனிப்பான்.
பசும்பொன்னுக்கு ஒப்பான ஞானத்தை உடையவனாக இருப்பான் (நீதிமொழிகள்:
8:10).
இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்?
தேவசாயல் நமக்கு கொடுக்கிற பெலன், அடையாளம், தெய்வீக சுபாவம் இதில் அடங்கியுள்ளதையும்,
அது நமக்குள் பெலன் செய்கிறது என்பதனையும் அறிந்துகொள்ள நம்மால் முடிகிறது.
நாம் ஏன் தேவசாயலாக
மாற வேண்டும்?
தேவசாயலாக மாறா விட்டால் … உயிர்த்தெழுதலின் சாயல் நமக்கு அறவே கிடையாது
என்பதை நாம் அறிவோமாக. தேவசாயல் இல்லாவிடின் பாவ மாம்ச சாயல்தானே மீதம் இருக்கும்.
பாவ மாம்ச சாயல் எவ்விதம் நம்மை இயேசுவின் இரண்டாம் வருகையில் நம்மை உயிர்பெறச்செய்யும்?
தேவசாயலாக மாறி, தேவனோடு இருக்கச் செய்வதுதானே தேவனுடைய சித்தம். அதற்காகத்தானே இயேசு
வந்தார்.
ரோமர்: 6:5 – “ஆதலால்
அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின்
சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்”.
அவரது மரணத்தின் சாயலில் எப்படி இணைக்கப்படுவது?
ஞானஸ்நானத்தின் மூலமாக
அவரது மரணத்தின் சாயலைப் பெறுகிறோம்.
கொலோசெயர்: 1:22,23 – “முன்னே
அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும்
பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன்
நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது
ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு
அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால்
அப்படியாகும்”.
கொலோசெயர்: 2:6,7 – “ஆகையால்,
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள்
வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே
பெருகுவீர்களாக.”
கொலோசெயர்: 2:12 – “ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை
மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும்
இருக்கிறீர்கள்”.
பிசாசு ஒவ்வொருநாளும் நம்மை பாவ மாம்ச சாயலாக மாற்ற விரும்புகிறான். நாமோ
அனுதினமும் தேவசாயலாக மாற விரும்புகிறோம். நாம் தேவசாயலாக மாறிடவும், தேவசாயலில் நிலைத்திருக்கவும்,
நாம் விழிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவரது சாயலால் திருப்தியடையத்தக்கதாக அவரைத் தேட
வேண்டும்.
ஜெபத்திலும், வேதவாசிப்பிலும், உபவாசித்து அவரைத் தேட வேண்டும். நாம் விழிக்கும்போது
“தேவசாயலாக இன்று மாற வேண்டும்” என்கிற சிந்தையோடே விழிப்போம். ஆமென்! அல்லேலூயா!