ஏப்ரல் 10, 2023

Transformation Prayer from Jonah's Prophetic Book - யோனாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து மறுரூப ஜெபம்

 யோனாவின் தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து மறுரூப ஜெபம்


யோனா:3:4-9 - யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு; அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயில் எங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசி பாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். யாருக்குத் தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.

 

இரட்டு - அர்ப்பணிப்பு, தாழ்மை குறிக்கும் / சாம்பல் - மனந்திரும்புதலை குறிக்கும்

 

நினிவேயின் ஜனங்கள் செய்தது:

1. தேவனை விசுவாசித்தார்கள் - மனந்திரும்புதலின் ஆரம்பம்

2. உபவாசம் செய்யும்படி கூறினார்கள் - ஒன்றும் ருசி பார்க்கவில்லை, தண்ணீர் குடிக்கவில்லை, மிருகங்களும் உபவாசம்

3. சத்தம் உயர்த்தி ஆண்டவரை கூப்பிட்டார்கள்

4.  பொல்லாத வழியை விட்டார்கள்

5. கைகளிலுள்ள கொடுமையை விட்டார்கள்

 

தேவனின் உக்கிரகோபம் அவர்கள் மேல் இருந்தது. 40 நாளில்  நியாயத்தீர்ப்பு வரப்போகிறது; தேசம் கவிழ்க்கப்படும் என்று கேட்டவுடன் இரட்டுடுத்தி உபவாசித்து ஆண்டவரை நோக்கி கூப்பிட்டு மனந்திரும்பினார்கள்.

1. மனந்திரும்புதலின் ஆரம்பம் - ஆண்டவரை விசுவாசிப்பது

Ø வாழ்க்கையை மாற்றும் வல்லமையை கேட்போம்!

நினிவேயின் மக்கள் பாவம் செய்து பொல்லாத வழியில் நடந்து கொண்டிருப்பவர்கள். ஆனால் தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டவுடனே தேவனை விசுவாசித்தார்கள் என்று வேதம் சொல்கிறது.  அவர்களுடைய விசுவாசம் தான் அவர்களுடைய மனந்திரும்பதலுக்கான முதல் படி.

தேவனையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசிக்கும் போது, அவரின் சித்தப்படி நமது வாழ்க்கையை மாற்றும் வல்லமையை நாம் பெற்றுக் கொள்வோம்.

மத்தேயு:9:2 - திமிர்வாதக்காரனின் பாவ வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

 

மத்தேயு:9:22 - பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பெலவீன வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன் கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.

 

மாற்கு:10:52 - குருடனின் இருளான வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

 

யோவான்:11:25 - மரித்து/முடிந்து போன வாழ்க்கையை மாற்றிய விசுவாசம்

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

 

யோவான்:3:16 - தேவனின் அன்பு - நாம் அவரை விசுவாசித்தால் நித்திய ஜீவனை அடைவோம். அவருடைய குமாரனை விசுவாசிக்கிற நமக்கு நித்திய ஜீவன்/ முடிவில்லா:த வாழ்க்கை உண்டு.                                                                                                                                                                                                                   

யோவான்:8:36 - குமாரனை விசுவாசித்தால் போதும். அவர் நம்மை விடுதலையாக்கினால், நாம் விடுதலையாவோம்.

 

2. உபவாசம் செய்யும்படி கூறினார்கள்:

நினிவே மக்கள் தங்கள் மேலிருக்கும் தேவனின் கோபாக்கினை நீங்கும்படி, தேவன்

அவர்கள் மேல் மனஸ்தாபப்பட்டு விடுவிக்கும்படி, உபவாசம் செய்யும்படி கூறினார்கள். பெரியோர் முதல் சிறியோர் வரை இரட்டுடுத்தி கொண்டார்கள். ராஜாவும் இரட்டுடுத்தினான். மிருகங்களும் இரட்டுடுத்தினது. ஒன்றும் சாப்பிடாமல் தண்ணீர் குடியாமல் கர்த்தருடைய சமூகத்தில் அர்ப்பணித்தார்கள்.

Ø தேவனின் கோபாக்கினை நீங்கும்படி கேட்போம்!

நாகூம்:1:6 - “அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும்.

- தேவனுடைய கோபத்துக்கு முன் ஒருவராலேயும் நிற்கமுடியாது. நினிவேயை சர்வசங்காரம் செய்ய நினைத்தார் தேவன். (நாகூம்:1:9) சோதோம் கொமோராவை போல, நோவா நாட்களில் வந்த அழிவை போல ஒரு அழிவு நினிவே பட்டணத்துக்கு

வரும் என்று யோனாவை கொண்டு பேசினார். அவ்வளவு தவறுகளை, பாவங்களை செய்திருக்கிறார்கள்.

நாகூம்:2:13 - “இதோ நான் உனக்கு விரோதமாய் வந்து….”

கர்த்தர் நமக்கு விரோதமாய் வந்தால், அது மிகவும் மோசமான நிலை! சவுல் ராஜாவுக்கு கர்த்தரால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி; (1சாமு:16:14) நோவா நாட்களில் வந்த அழிவு; சோதோமின் அழிவு; கோராகின் புத்திரர் அழிவு. அவர் நம் பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் ஒருவராலும் நிற்க முடியாது. ஆகவே, அவருடைய கோபாக்கினை நம்மை விட்டு நீங்கும்படி ஜெபிப்போம்.

 

- நினிவேயின் ராஜா தேவ கோபாக்கினை நீங்கும்படி தனது ராஜமேன்மை, கிரீடம், ராஜ உடை எல்லாவற்றையும் உதறி தள்ளிவிட்டு இரட்டுடுத்தி உபவாசித்தான்.

 

- நாகூம்:2 - தேவனது கோபாக்கினையின் போது, நமது நிலை

1. சிறையிருப்பு (நாகூம்: 2:7)

2. வெறுமை (நாகூம்:2:10)                      

3. தள்ளாடுதல் (நாகூம்:2:10)

4. வேதனை (நாகூம்:2:10)

5. பெலவீனம் - சிங்கங்களின் வாசஸ்தலம் (நாகூம்:2:11 - அடையாள சின்னம்)

இந்த நிலை மாற ஜெபிப்போம்!

 

3. சத்தம் உயர்த்தி ஆண்டவரை கூப்பிட்டார்கள்:

தாங்கள் செய்த பாவங்களினிமித்தம், மீறுதலினிமித்தம் தேவனுக்கு ஏற்பட்ட  கோபத்தை விட்டு தங்கள் மேல் மனஸ்தாபப்படும்படி தங்களது சத்தத்தை உயர்த்தி ஆண்டவரை கூப்பிட்டார்கள். எத்தனை நாள் இப்படி உபவாசத்தோடு உரத்த சத்தமாய் கூப்பிட்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தேவன் மனமிரங்கும் வரை தங்கள் சத்தத்தை உயர்த்தி ஆண்டவர் சமூகத்தில் ஜெபித்தார்கள்.

Ø நம் விண்ணப்பம் நிறைவேற தேவனை சத்தம் உயர்த்தி கூப்பிடுவோம்!

எஸ்தர்:4:3 - ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.

- தேசத்தின் இரட்சிப்புக்காக எஸ்தரும், மொர்தேகாயும், மக்களும் இரட்டுடுத்தி உபவாசம் பண்ணி, தேவனை நோக்கி அழுகையோடும் புலம்பலோடும் துக்கத்தோடு வேண்டினார்கள்.

எஸ்தர்:9:30 - “யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான,

- அலறுதலோடு ஆசரித்தார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. மவுனமாயிருக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்று எஸ்தர் தெரிந்து கொண்டாள். தனக்கு கிடைத்த ராஜமேன்மை எல்லாவற்றையும் விட்டுவிட்டு இரட்டுடுத்தி தேவ சமூகத்திலே தன்னை தாழ்த்தி ஜெபித்தாள். அவளையும் அவள் ஜனத்தாரையும் எதிர்த்த ஆமான் இல்லாமற்போனான்.

4. பொல்லாத வழியை விட்டார்கள்:

நினிவே நகர மக்கள் கர்த்தருக்கு பிரியமில்லாத பல காரியங்களை செய்து வந்தார்கள். நாகூம்:3:1-4 - அது இரத்தபழிகளின் நகரம்; கொடுமை நிறைந்தது. பிணங்களின் மேல் இடறிவிழத்தக்க அவ்வளவுபேரை கொலை செய்திருக்கிறார்கள்.

வேசித்தனங்கள், சூனியம் போன்ற பல பாவ காரியங்கள் மக்களிடையே இருந்தது.

பலத்த சேனை, படைப்பலம் மிகுந்த நினிவே பட்டணம் இப்போது அழிக்கப்பட போகிறது என்று கேள்விப்பட்டதும், தங்கள் பொல்லாத வழியை விட்டு திரும்பும்படி ஒப்புக்கொடுத்தனர். மிகுந்த பலமுள்ளது நினிவே பட்டணம். எண்ணிறைந்த சேனையால் பெலனாக இருந்தது. ஆனால் சிறையிருப்பிலே கொண்டு போகப்பட்டு சங்கிலிகளால் கட்டப்பட்டது.

Ø பொல்லாத வழியை விட்டு விலகும்படி ஜெபிப்போம்!

சங்:119:101 - “உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.

- நமது கால்கள் பொல்லாத வழிகளை விட்டு விலகி நடக்கும்படி ஜெபிப்போம்.

 

எசேக்கியேல்:38:11 - “உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து,

மத்:15:19 - “எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச் சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்

- நமது இருதயத்தின் யோசனைகள் மற்றும் நினைவுகள் பரிசுத்தமானவைகளாய் இருக்க, பொல்லாத நினைவுகள் எழும்பாமலிருக்க ஜெபிப்போம்.

 

ஆபகூக்:2:9 - “தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ!

- பொல்லாத ஆதாயத்தை தேடி செல்வதை விட்டு விலகும்படி ஜெபிப்போம். அப்படி செல்வதினால் வரும் லாபத்தின் மேல் தான் கவனமிருக்குமே தவிர, ஆண்டவர் மேல் பற்றுதல் இருக்காது. ஆத்துமாவுக்கு விரோதமாய் நாம் பாவம் செய்கிறவர்களாயிருப்போம் என்று வசனம் சொல்கிறது. (ஆபகூக்:2:10)

 

எபிரேயர்:3:12 - “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.

- ஆண்டவரை விட்டு விலக செய்யும் பொல்லாத இருதயம் நம்மில் இராதபடிக்கு ஜெபிப்போம்.

 

5. கைகளிலுள்ள கொடுமையை விட்டார்கள்:

Ø கைகளின் கிரியை பரிசுத்தமாயிருக்க ஜெபிப்போம்!

எரேமியா:18:11 - இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருவப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி,

 

உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

- நமது வழிகளையும் கிரியைகளையும் சீர்ப்படுத்தும்படி ஜெபிப்போம்.

 

மீகா:3:4 - “அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார்.

- பொல்லாத கிரியையை மன்னித்து நமது வேண்டுதலுக்கு தேவன் மறுஉத்தரவு கொடுக்கும்படி ஜெபிப்போம்.

 

1இரா:16:7 - “ பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும்

- நம் கைகளின் செய்கையினால் கர்த்தருக்கு கோபமுண்டாக்கின காரியங்களை மன்னிக்கும்படி ஜெபிப்போம்.

 

யோபு:31:7 - “என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,

- இந்நாள் வரை நமது நடைகள், இருதயம், சிந்தனைகள், கண்கள், கைகள் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியத்தை செய்திருக்குமானால் மன்னிப்பு கேட்டு, திரும்பவும் அதை செய்யாதபடி ஜெபிப்போம்.

 

பாவங்களை அறிக்கை செய்வோம். தெரிந்த பாவங்கள், அந்தரங்க பாவங்கள், மறைமுகமான பாவங்கள், மீறுதல்கள், பொல்லாத காரியங்கள் எதுவாக இருந்தாலும் அறிக்கை செய்து விட்டு விடுவோம். மறுரூபமடைவோம்!

 

2நாளா:7:14 - “என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.