ஏப்ரல் 14, 2023

Satisfaction in the Drought - வறட்சியில் திருப்தி

Satisfaction in the Drought - வறட்சியில் திருப்தி 


ஏசாயா:58:11 - "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்."

ஒவ்வொரு விசுவாசியின் வாழ்க்கையிலும் வறட்சியை அனுபவிக்கும் ஒரு காலம் வரும். தனிமையின் காலம்; போராட்டங்களை சந்திக்கும் காலம்; தோல்வியை சந்திக்கும் காலம்; இப்படிப்பட்ட பல காலங்கள்... சில நேரங்களில், நம்முடைய பொருளாதாரம், வியாபாரம் (அ) தொழில், உறவுகள், குடும்ப வாழ்க்கை, ஆவிக்குரிய வாழ்க்கை போன்ற காரியங்களில் வறட்சி காணப்படலாம்.

வறட்சி - வெறுமை, பஞ்சம், தாகம், செழிப்பை காண முடியாத இடம்

நாம் வறட்சியான சூழ்நிலையை சந்திக்கும்போது நமது மனநிலை மாறலாம். ஆண்டவரை விட்டு பின்வாங்க தூண்டப்படலாம். நமது வாயின் அறிக்கைகள் மாறலாம். வறட்சியின் மத்தியில் தேவன் எங்கே என்று முறையிடுவோமே தவிர இந்த வறட்சி எதனால் வந்தது என்பதை அறிய முயற்சி செய்ய தவறி விடுகிறோம். நம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வறட்சியான நிலை, வெறுமை எல்லாவற்றிற்கும் காரணம் 'நாம் மட்டுமே'! எங்கேயோ நாம் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியத்தை செய்திருக்கலாம். ஆனால் நாம் அதை உணருவதில்லை. இருந்தாலும் நம் தேவன் நம்மை கைவிடுவதில்லை. அவர் நம்மை நித்தமும் நடத்தி மகா வறட்சியான காலங்களில் நம்மை திருப்தியடைய செய்யவே விரும்புகிறார்.

There is a time and a season for everything. So if the drought had a time and a season, then know that Abundance/Satisfaction got a time and a season too!

ஏன் வறட்சி?


1. ஆண்டவருக்கு கீழ்ப்படியாததினால் வரும் வறட்சி - 2இரா:6:24-30


- சமாரியாவை முற்றுக்கையிட்ட சீரியா தேசத்து படை
- கொடிய பஞ்சம், விலைஉயர்வு
- தன் குழந்தையையே சாப்பிட நினைக்கும் ஒரு தாய்

இப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையை இஸ்ரவேல் ஜனங்கள் சந்தித்தனர். இதற்கு காரணம் அவர்களது கீழ்ப்படியாமை.

1இரா:11:31-35 - இஸ்ரவேல் தேசம் 2 பிரிவாக சாலொமோனின் நாட்களிலே பிரிக்கப்பட்டது.

வடக்கு இராஜ்யம் - சமாரியா
தெற்கு இராஜ்யம் - இஸ்ரவேல்

பிரிக்கப்பட்ட இராஜ்யத்தை கைப்பற்றுவது எளிது. ஆகவே அசீரியர்கள், பாபிலோனியர்கள் போன்ற சில நாடுகள் பிரிக்கப்பட்ட இராஜ்யத்தை கைப்பற்ற முயற்சி செய்தது. சீரியா தேசத்தின் ராஜா பெனாதாத் சமாரியாவை முற்றுகையிட முயற்சி செய்தான். (1இரா:20) அப்போத ஆகாப் இராஜா அந்நிய தெய்வங்களை சேவித்தான். ஆனால் பாகால் அல்ல; கர்த்தரே தெய்வம் என்பதை அறிந்தான். அந்த சூழ்நிலையில் சீரியர்கள் படை சூழ்ந்தது. ஆண்டவர் சீரியர்களை ஒப்புக்கொடுத்தார். ஆனால் ஆகாப் இராஜா ஆண்டவருக்கு மீண்டும் கீழ்ப்படியாமல், பெனாதாத் ராஜாவை தன் சகோதரன் என்று சொல்லி அவனோடே உடன்படிக்கை செய்து அவனை கொல்லாமல் உயிரோடே வைத்தான்.

1இரா:20:42 - அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஆண்டவர் பெனாதாத் அழிக்கப்பட வேண்டும் என்று எண்ணினார். ஆனால் இது இஸ்ரேல் இராணுவத்தின் கையால் நடக்க வேண்டும் என்றும் அவர் எண்ணினார். ஆனால் ஆகாப் ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்தார்.

மீண்டும் சீரியப்படை இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக வந்தது. ஆனால் எலிசா அவர்களை உபசரித்து அனுப்பிவிட்டார்.(2இரா:6:8,22,23)

மீண்டும் சீரியப்படை பெரிய திட்டத்துடன் வந்தது. நகரத்தைச் சுற்றி வளைத்து, அனைத்து வணிகம் மற்றும் வர்த்தகம் நகரத்திற்குள் நுழைவதைத் தடுக்கவும், இறுதியில் மக்களைப் பட்டினியால் சரணடையச் செய்யவும் தனது திட்டத்தை செயல்படுத்தினான், அது வெற்றிகரமாக இருந்தது. (2 இரா:6:24,25)

மிக பெரிய வறட்சி இஸ்ரவேல் தேசத்தில் ஏற்பட்டது. ஆகவே சாப்பிட ஏதுமில்லாததினால் தங்கள் பிள்ளைகளையே சாப்பிட துணிந்த மோசமான நிலை ஏற்பட்டது. இதை குறித்து தேவன் அவர்களுக்கு முன்னரே எச்சரித்துள்ளார். (உபா:28:52,53) தேவன் தந்த கட்டளைகளை பின்பற்றாமல், கீழ்ப்படியாமல் இருந்தால் சாபங்கள் வரும். சகலமும் குறைவுப்படும். வறட்சியே காணப்படும்.

ஆகாப் இராஜாவின் கீழ்ப்படியாமையும் இஸ்ரவேல் ஜனங்களின் கீழ்ப்படியாமையும்(விக்கிரக ஆராதனை) தேசத்திலே வறட்சியை கொண்டு வந்தது.

2. ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணிக்க வைக்கும் வறட்சி - 1 சாமு:1:2


- அன்னாளுக்கு குழந்தையில்லாததினால் அவளது வாழ்க்கை வறட்சியாக காணப்பட்டது. தன்னை வேதனைப்படுத்துகிற பெனின்னாளின் வார்த்தைகள்; எவ்வளவு தான் தன் கணவன் தன் மீது அன்பாக இருந்தாலும், தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற வருத்தம் அவளுக்கு இருந்தது. ஆண்டவர் அவள் கர்ப்பத்தை அடைத்து வைத்ததற்கு ஒரு நோக்கம் இருந்தது. ஆனால், வறட்சியின் சூழலில் இருக்கும்போது நமக்கு அந்த நோக்கம் தெரிவதில்லை.

1 சாமு:1:7 - "அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்."

அன்னாளுடைய வாழ்க்கையில் மனமடிவின் வார்த்தைகள், வெறுமை, தனிமை, வறட்சி இருந்தது. ஆனால் அதன் மத்தியிலும், அன்னாள் தேவ சமுகத்தில் தன்னை ஒப்புக்கொடுத்து மனங்கசந்து அழுது ஜெபித்தாள். (1சாமு:1:9-11) தனக்கு பிள்ளை தந்தால் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்பேன் என்று அர்ப்பணித்து ஜெபித்தாள். அவளுடைய ஜெபம் கேட்கப்பட்டது. பிள்ளை பிறந்தது. பொருத்தனையை நிறைவேற்றினாள். அன்னாளின் அர்ப்பணிப்புக்கு ஒரு வறட்சியை தேவன் அனுமதித்தார்.

லூக்:5: 3- 11 - பேதுருவும் அவன் சகோதரனும் இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படவில்லை. அவர்களுடைய வலை வெறுமையாக இருந்தது. வறட்சி காணப்பட்டது. காரணம் அங்கே அர்ப்பணிப்பு தேவையாயிருந்தது. வறட்சியின் சூழலிலே இயேசு அவர்களை சந்திக்கிறார். தான் பிரசங்கம் பண்ணும்படி படகை தந்த பேதுருவின் வறட்சி நிறைந்த வாழ்விலே திருப்தியை காண செய்யும்படி, ஆழத்திலே வலையை போட சொல்கிறார். அற்புதம் நடந்தது. பேதுருவும் அவன் சகோதரனும் ஆண்டவருக்கு பின்செல்லும்படி தங்களை அர்ப்பணித்தனர். 

3. விசுவாசத்தின் அளவை சோதிக்கும்படி வரும் வறட்சி - எபி:11:11,12

 ஆபிரகாமும் சாராளும் வயது சென்றவர்களாக இருந்த போதிலும், தேவன் தந்த வாக்கின் மேல் விசுவாசமாக இருந்ததினாலே, அவர்களுக்கு இருந்த வறட்சியை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஏற்ற வேளையிலே தேவன் நிச்சயமாக ஒரு குழந்தையை தருவார் என்ற விசுவாசத்துடன் இருந்தனர்.(ஆதி:21:1,2)

தேவன் ஆபிரகாமுக்கு வாக்கு தந்தது போல, நாம் தரிசிக்கிற அனைத்தையும் நமக்கு தருகிறார். (1கொரி:2:9)

யோபு:1:21,22 - யோபுவின் விசுவாசத்தையும் உத்தமத்தையும் சோதிக்கும்படி அவன் வாழ்க்கையில் வறட்சி காணப்பட்டது. ஆஸ்தியை இழந்தான். பிள்ளைகளை இழந்தான். வியாதியினால் வேதனைப்பட்டான்.மனைவியின் தூஷணத்தினால் மனமுடைந்தான். எல்லாவற்றின் மத்தியிலும் யோபு தன் உத்தமத்தை விடவில்லை. உறுதியாக இருந்தான். இரட்டிப்பான ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டான். (யோபு:42:10)

வறட்சியான சூழ்நிலையிலும் நம் தேவையறிந்து நம்மை அதிசயமாக நடத்தி, நம்மை பெலப்படுத்தி திருப்தியாக்குகிறவர் நம் தேவன்.


 வறட்சியில் திருப்தியை தருகிற தேவன்:

1. கீழ்ப்படிந்து நடக்கும்போது (லேவி:25:18,19)

- தேசத்திலே சுகமாய் குடியிருக்க செய்வார்

2. உத்தமமாய் நடக்கும்போது (சங்:37:18,19)

- பஞ்ச காலத்திலே திருப்தியடைய செய்வார்

3. ஆலயத்தில் வாசமாயிருக்கும்போது (சங்:65:4)

- ஆலயத்தின் நன்மையால் திருப்தியடைய செய்வார்

4. கர்த்தருடைய நாமத்தை துதிக்கும்போது (யோவேல்:2:26)

- சம்பூரண ஆசீர்வாதம் அளிப்பார். வெட்கப்பட்டு போவதில்லை

5. கர்த்தருக்கு பயப்படும்போது (நீதி:19:23)

- திருப்தியடைந்து நிலைத்திருக்க செய்வார்.

நாம் இந்த 5 காரியங்களில் சரியாக இருக்கும்போது, கர்த்தர் நம் வாழ்வில் நாம் சந்திக்கிற வநட்சியான சூழ்நிலையிலே நம்மை நேர்த்தியாக நடத்தி, திருப்தியாக்கி நம்மை பெலப்படுத்துவார். நம் வறண்டு போன வாழ்க்கை நீர்ப்பாய்ச்சல் உள்ள தோட்டத்தை போலவும் வற்றாத நீரூற்று போலவும் செழிப்பாக மாறும். (ஏசா:58:11)

சங்:107:35 - "அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்டநிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,"

ஏசா:35:1 - "வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்."

தற்காலிக வறட்சியான சூழ்நிலை உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க அனுமதிக்கு கூடாது. வறட்சியான சூழ்நிலை வரும்; போகும். ஆனால், அது நிரந்தரமல்ல.

கர்த்தருடைய வார்த்தையை கேட்டு அவருக்கு அர்ப்பணித்து விசுவாசத்துடன் காத்திருக்கும்போது வறட்சி நீங்கி, சம்பூரண ஆசீர்வாதம் வரும். அப்போது வறண்ட நிலம் போல இருக்கும் நாம் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்போம்.

இந்த வறட்சியான சூழ்நிலையை, கசப்பான சூழ்நிலையாக இல்லாமல் மகிழ்ச்சியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். கசப்பான அனுபவம் தேவனை பற்றி தவறாக நினைக்க தூண்டும். விசுவாச வார்த்தையை பேசுங்கள். இனி வரப்போகும் அற்புதங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு உங்களை ஆயத்தப்படுத்துங்கள். நீங்கள் விசுவாச வார்த்தையை பேச ஆரம்பிக்கும் போது, வறட்சி நீங்கி போகும். கர்த்தர் செய்த நன்மைகளுக்காக அவரை துதியுங்கள். அவருடைய நாமத்தை உயர்த்துங்கள். அவரை அதிகமாக நேசியுங்கள். அவருடைய மகிமையை பிரஸ்தாபப்படுத்துங்கள்.