தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள்
திறவுகோல்வசனம்: அப்: 13:34 – “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன்”ஏசா: 55:3 – “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்”
பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணக்காலம். கிரியைகளினால் நீதிமானாகினார்கள். புதிய ஏற்பாட்டில் கிரியைகளினாலல்ல; விசுவாசத்தினால் நீதிமானாகிறார்கள்.
தாவீது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாழ்ந்தாலும் அவன் புதிய ஏற்பாட்டுக்கு முன்னடையாளமானவன்
எப்படி?
ஏசா: 55:3 – “… தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” என்று வேதம் சொல்கிறது. நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியது.
எனவே, நியாயப்பிரமாணம் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறினபடியால், நிறைவேறி முடிந்தபடியால் அது நித்திய உடன்படிக்கை அல்ல. நித்திய உடன்படிக்கை என்பது குறுகிய காலத்தை உடையதல்ல. அது இம்மைக்கும் மறுமைக்குமானவைகள்.
ஏசாயா தீர்க்கன் சொல்லும்போது “நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” என்கிறார். “ஏற்படுத்துவேன்” என்ற சொல் “இப்போதல்ல… இனிமேல்” என்கிற எதிர்காலத்தைக் குறிக்கிறது. எனவே, இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தை.
எப்போது ஏற்படுத்துவார்?
புதிய உடன்படிக்கையில்.
எப்போது புது உடன்படிக்கை ஏற்படுத்தப்படும்?
மேசியா இயேசு கிறிஸ்து மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தது முதல் புது உடன்படிக்கையின் காலம் துவங்குகிறது.
எபி: 10:16 – “அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்”.
அதாவது, பழைய ஏற்பாட்டுப் பிரமாணத்தை நிறைவேற்றி முடித்து, புதிய ஏற்பாட்டுப் பிரமாணத்தை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்கிறார்.
பழைய ஏற்பாட்டுப் பிரமாணம்:
கண்ணுக்குகண்; பல்லுக்குப்பல் – கல்லான இருதயம் – தேவையின் அடிப்படையில் ஆவியானவர் அருளப்பட்டார்.
புதிய ஏற்பாட்டுப் பிரமாணம்:
கிருபையின் பிரமாணம் (இரக்கத்தின் பிரமாணம்) – சதையான இருதயம் – நிரந்தரமான, நிலைவரமான ஆவியானவராக அருளப்பட்டார்.
எனவே, இதைக்குறித்து எசேக்கியேல் தீர்க்கன் முன்குறித்து சொன்னதாவது:
எசேக்: 36:26,27 – “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்.”
எபே: 4:23,24 – “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” என வேதம் கூறுகிறபடியினால்… புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் – புதிதான ஆவியுள்ளவர்களாக மாறி, மெய்யான தேவநீதியிலும், பரிசுத்தத்திலும் வாஞ்சையுள்ளவர்களாக தங்களை மறுரூபப்படுத்திக் கொண்ட புது சிருஷ்டியாக, புதிதான மனுஷனாக மாற்றிக் கொள்ளுகிறார்கள்.
இந்த புதிதான ஆவி, புதிய மனுஷனாக மாறியவர்களை தேவனுடைய திவ்விய சுபாவங்களுக்கு ஏதுவாக நடத்திச் செல்கிறார். ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும் தேவனுடைய திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு (2பேது: 1:4), பரிசுத்தாவியானவர் நமக்கு ஆவியின் கனிகளைத் (கலா: 5:22,23) தரவும், தேவனுடைய திவ்விய சுபாவத்தில் நடத்தவும் (1பேது: 1:5-7) நமக்கு போதிக்கிறார். அதில் நிலைத்திருக்க கிருபைகள் தேவை.
நல்ல நல்ல குணங்கள் மனிதனிடம் காணப்படலாம். ஆனால், கிருபைகள் இல்லாவிடில், மனுஷன் வேஷமாகவே திரிவான் (சங்: 39:6). தனது சுயநலத்திற்காக தன்னை நல்ல குணமுள்ள மனிதனாக, மற்றும் குணசாலியாக காண்பிப்பான். அவன் எதிர்பார்த்த தேவை பூர்த்தியானதும், அவனது மற்றொரு முகத்தை, குணத்தை காண்பிப்பான். ஒருவனது கிருபையற்ற குணநலன்கள் வெளியாக நாட்கள் செல்லும்.
தேவனற்ற, இரட்சிப்பற்ற ஒருவனுக்கு – புதிய ஆவி, புதிய மனுஷன் என்கிற ஆவிக்குரிய அனுபவம் அவனிடத்தில் இராது.
உறுதியளிக்கப்பட்ட கிருபைகள் இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளைக்கு எப்போதும் உண்டு. அது அவனை ஆவிக்குரிய வாழ்வில் திசைமாறிப் பயணப்பட்டு விடாமல் பாதுகாப்பதற்காக தேவனாகிய கர்த்தர் நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துகிறார். (ஏசா: 54:10).
ஒருவேளை திசைமாறினாலும்… புது உடன்படிக்கையாகிய நித்திய உடன்படிக்கையினிமித்தம் மீண்டும் மீண்டும் தன்னிடமாய் அவர் இழுத்துக் கொள்வார். இதைத்தான், “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள்” என்று வேதம் குறிப்பிடுகிறது.
ஆவியின் கனிகளோ, திவ்விய சுபாவங்களோ இரா விட்டால் … நியாயப்பிரமாண காலத்தைப்போல கல்லான இருதயங்கொண்டவர்களைப்போலக் காணப்படுவோம். நாம் அதற்காக அழைக்கப்படவில்லை. நாம் அப்படி இருப்போமானால் இருதயக்கடினம் கொண்டவர்கள் என வேதம் கூறுகிறது. (மத்: 19:8 / மாற்: 10:5 / 3:5).
சதையான இருதயம் கொண்ட புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஆவியின் கனிகள் உடையவராய், திவ்விய சுபாவங்கள் நிறைந்தவராய் காணப்பட வேண்டியது அவசியம். இவை இன்று அநேகரிடத்தில் இல்லாததினால்தான் கர்த்தருடைய நாமம் அப்படிப்பட்டவர்களால் பரிசுத்த குலைச்சாலாகிறது. சாட்சியில்லாமல் போகிறது.
தாவீது பழைய ஏற்பாட்டைச் சேர்ந்தவனாயிருந்தாலும், புதிய ஏற்பாட்டுக்கு எதனால்? எப்படி முன்னடையாளமானவனாய் இருக்க முடியும்? காரணம் என்ன?
தாவீது பழைய ஏற்பாட்டைச் சேர்ந்தவனாயிருந்தாலும் … அவனது தனிப்பட்ட வாழ்வில், கர்த்தருக்கு முன்பாக புதிய ஏற்பாட்டு விசுவாசிக்கு காணப்பட வேண்டிய திவ்விய சுபாவங்களும், கனி நிறைந்த வாழ்வும் அவனிடத்தில் காணப்பட்டது. நியாயப் பிரமாணத்தின்படி அவனது இருதயமானது, கடினத்தன்மை கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் மாறாக இரக்கம் நிறைந்ததாக காணப்பட்டது.
சங்: 40:8 – “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்”
சங்: 51:16, – “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.” – இது பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம்.
சங்: 51:17 – “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” – இது புதிய ஏற்பாட்டு கிருபையின் பிரமாணம்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு மனிதனுடைய பாவத்தை நிவர்த்தி செய்ய பலிகள் போதுமானவைகளாக இருந்தது. அதை ஒருவன் நிறைவேற்றி விட்டால் போதும் என கருதினார்கள். ஆனால், அது பூரணமில்லை என கண்டறிந்தவன் தாவீது மட்டுமே. அதற்கு கிருபைகள் வேண்டும். பலி செலுத்தி நிவர்த்தி செய்து விட்டால் மனதில் அதற்குப் பின்பு பூரண சமாதானம் ஏற்ப்பட வேண்டுமே. ஆனால், அதற்கான மார்க்கமில்லையே. மனது வாதிக்கிறதே. அப்படியானால்… பலிகளில் ஏதோ குறைபாடுகள் இருக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது. அதற்கு என்ன வழி?
புதிய ஏற்பாட்டில் மனிதனுடைய பாவங்களை நிவர்த்தி செய்ய இயேசு கிறிஸ்துவின் கிருபாதாராபலியே போதுமானது (1யோவா: 1:9 / 2:2 / 4:10).
கிருபை நம்மில் என்ன செய்கிறது?
பாவ உணர்வடைந்து, அதை அறிக்கையிட இயேசு கிறிஸ்துவினிடம் நம்மை உந்தித் தள்ளுகிறது. மனதார அறிக்கையிட்டு ஜெபிக்க ஏவுகிறது. பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ள தூண்டி விடுகிறது. பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றவர்கள், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டப்பின், இப்போது சுத்த மனசாட்சி உள்ளவர்களாய் மாறிவிடுகிறார்கள். குற்ற மனசாட்சி இப்பொழுது அவர்களை வாதிப்பதில்லை. பலிகளால் பூரணப்படாத ஒன்றை இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் பூரணப்படுத்துகிறது.
தாவீதின் வாழ்வை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் … அவனிடத்தில் காணப்படுகிற ஒவ்வொரு சுபாவமும், நடவடிக்கைகளும், புதிய ஏற்பாட்டு விசுவாச ஜீவியமே அதிகம் காணப்படுகிறதை அறியலாம். தாவீதின் வாழ்வை தியானித்தால் அவனது கனிநிறைந்த வாழ்வை, திவ்விய சுபாவங் கொண்ட குணம் நமக்கு வெளிப்படும். இதனாலேயே தாவீதை நாம் “புதிய ஏற்பாட்டு விசுவாச ஜீவியத்திற்கு முன்னடையாளமானவன்” என்கிறோம்.
தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள் – கனிகளும், திவ்விய சுபாவங்களுமே. அதை நாம் ஏன் தியானிக்க வேண்டும்? பழைய ஏற்பாட்டு யூதர்களுக்கு அடையாளமே – அவர்களுடைய கடின இருதயம்தான். நியாயப்பிரமாணத்தை கைக்கொண்ட அவர்கள் இரக்கத்தை விட்டு விட்டார்கள் என்று நமதாண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களை கடிந்து கொண்டாரே! (மத்: 9:13 / 12:7 / 23:23)
நியாயப்பிரமாண காலத்தில் வாழ்ந்த தாவீது – நியாயப்பிரமானத்தின்படி கடினமாக வாழாமல் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவானைப்போல வாழ்ந்தது எவ்வளவு ஆச்சர்யம்!
தாவீது திவ்விய சுபாவமுள்ளவனாய் வாழ வாழ தேவனாகிய கர்த்தர் அவனை எவ்வளவாய் மகிமைப்படுத்துகிறார் என்பதை கீழ்க்கண்ட காரியங்களை வாசித்துப் பாருங்கள். ஆச்சர்யப்படுவீர்கள். தாவீது கர்த்தரை மகிமைப்படுத்துகிறபடி வாழ்ந்தான். அவனை கர்த்தர் மகிமைப்படுத்துகிறதை கீழே வாசிக்கலாம்.
1. என் தாசனாகிய தாவீது (2சாமு: 3:18)
2. தாவீதின் நகரம் (2சாமு: 5:7)
3. தாவீதின் வீடு (2சாமு: 7:26)
4. தாவீது இஸ்ரவேலின் விளக்கு (2சாமு: 21:17)
5. தாவீதின் சிங்காசனம் (1ராஜா: 2:45)
6. தாவீதின் ஸ்தானம் (1ராஜா: 3:7)
7. தாவீதின் சத்துருக்களை கீழ்ப்படுத்துகிறவர் (1ராஜா: 5:3)
8. தாவீதின் சந்ததி (1ராஜா: 11:39)
9. தாவீதின் வம்சம் (1ராஜா: 12:20)
10. தாவீதின் இருதயம் (1ராஜா: 15:3)
11. தாவீதின் பட்டணம் (2ராஜா: 15:38)
12. என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் (2ராஜா: 19:34)
13. தாவீவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் (2ராஜா: 20:5)
14. தாவீதின் வழி (2ராஜா: 22:2)
15. தாவீதின் நாட்கள் (1நாளா: 7:2)
16. தாவீதின் கீர்த்தி (1நாளா: 14:17)
17. தாவீதின் கோபுரம் (உன்.பாட்: 4:4)
18. தாவீதின் கூடாரம் (ஏசா: 16:5)
19. தாவீதின் குமாரனே (மத்: 9:27)
20. தாவீதின் ராஜ்யம் (மாற்: 11:10)
21. தாவீதின் ஊர் (லூக்: 2:5)
22. தாவீதின் வாக்கு (அப்: 1:16)
23. தாவீதின் சங்கீதம் (எபி: 4:7)
24. தாவீதின் திறவுகோல் உடையவர் (வெளி: 3:7)
25. தாவீதின் வேரூமானவர் (வெளி: 5:5)
26. இருதயத்திற்கேற்ற மேய்ப்பன் (1சாமு:13:14)
மேற்கண்ட காரியங்கள் வேதத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் திரும்பத்திரும்ப குறிப்பிடப்படுகிறதை நாம் காணும்போது, தேவன் அவன் மேல் எவ்வளவு பிரியமாயிருந்தார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அந்தஸ்தை தேவன் கொடுத்திருப்பதை வாசிக்கிறோம்.
மோசே - கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்;
ஆபிரகாம் - கர்த்தருடைய சிநேகிதன்;
யோசுவா - ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு நீங்காத வாலிபன்;
யோபு - என் தாசன்;
தானியேல் - பிரியமானவன் என மகிமைப்படுத்துகிறதை பார்க்கிறோம்.
ஆனால், தாவீதுக்கு மட்டுமே 26 அந்தஸ்தை கொடுக்கிறதைக் காண்கிறோம்.
சங்: 103:21 – “கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.” அவருக்குப் பிரியமானதை நாம் செய்தால், தாவீதை இவ்விதமாய் மகிமைப்படுத்தின கர்த்தர் நம்மையும் மகிமைப்படுத்த வல்லவராயிருக்கிறார்.
ஒவ்வொரு ஜீவராசியும் அதனதன் மரபு வழிப்படிதான் அதனதனுடைய சுபாவப்படி வாழ்ந்து வருகிறது. மனிதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படியிருக்க… தாவீது தன்னை அழைத்து தெரிந்தெடுத்த தேவனுக்கு ஏற்றபடி வாழ்ந்தது எப்படி? எப்படி அவனால் மட்டும் முடிந்தது? அவனுக்கு கிடைத்த கிருபைகள் இன்று நமக்கும் கிடைத்தால் நாமும் கர்த்தருக்கு சாட்சியாக வாழலாம் அல்லவா?
அப்: 13:34 – “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன்” என்று வாக்குப் பண்ணியுள்ள தேவன் வாக்கு மாறாதவர். அந்த கிருபைகளை பெற்றுக் கொள்ள, தாவீதிடம் இருந்த திவ்விய சுபாவங்களைக் குறித்து நாம் தியானித்து பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம் வாருங்கள்.
சங்: 143:10 – “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.” தாவீதை நடத்திச் சென்ற நல்ல ஆவியானவர், இப்போதே நம் ஒவ்வொருவரையும் செம்மையான சத்தியத்திற்குள் வழி நடத்திச் செல்வாராக! ஆமென்!
தாவீதின் வாழ்வில் திவ்விய சுபாவங்கள்
தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கருளின நிச்சயமான கிருபைகள் – “திவ்விய சுபாவங்களே”
1. தாவீது – அபிஷேகம் பெற்றவன்
1சாமு: 16:13 – “அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்”
தாவீதின் ஆரம்ப அறிமுகமே அபிஷேகம்தான். ஆடுகள் மேய்த்தவனைக் கர்த்தர் அழைத்து அபிஷேகிக்கிறார். தாவீதுக்கு எடுத்த எடுப்பிலேயே பெந்தேகொஸ்தே அனுபவம்தான். அபிஷேகம் சகல நுகங்களையும் முறிக்கும்; அபிஷேகம் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தும். ஆமென்! அல்லேலூயா!.
ஆடுகள் மேய்த்த ஒருவனை தேவன் அழைத்து அபிஷேகிக்கிறார் என்றால் … தேவனுடைய பார்வையில் அவன் எவ்வளவு தகுதியுள்ளவனாக இருந்திருக்க வேண்டும்?!
ஒரு நாட்டை ஆள ஒரு அபிஷேகம் தேவை. ஒரு சபையை நடத்திச் செல்ல ஒரு அபிஷேகம் தேவை. ஒரு குடும்பத்தை நடத்திச் செல்ல ஒரு அபிஷேகம் தேவை.
அபிஷேகம் பெறாத தலைவனால் மோசமான நிர்வாகத்தையே ஜனங்களுக்கு கொடுக்க முடியும். அபிஷேகம் பெறாத சபை தலைவரால் சரியான சத்தியத்தை தேவஜனத்திற்கு கொடுக்க இயலாது. அபிஷேகம் பெறாத குடும்ப தலைவரால் குடும்பத்தை ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக கொண்டு செல்ல இயலாது.
தாவீதை தேவன் தெரிந்தெடுத்து அழைத்த அழைப்பிலேயே முதன் முதலாக அபிஷேகத்தை ஊற்றியே துவக்குகிறதைக் காண்கிறோம். அபிஷேகத்தை போதிக்காத தலைவர்கள், அபிஷேகத்தின் வல்லமையை அறியாதவர்கள். அறியாமை இருளுக்குள் இருந்து கொண்டு, அபிஷேகத்தை ஏளனம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் உலக ஞானிகளைப்போல, கல்விமான்கள் போல பகுத்தறிவினால் பரிசுத்தாவியானவரை மதிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பகுத்தறிவினால் அவரை அறியவோ, பெறவோ இயலாது. விசுவாசத்தினால்தான் அவரை அறிய இயலும். பெற முடியும்.
தாவீது இஸ்ரவேலை ஆள்வதற்காகத்தான் இராஜ அபிஷேகம் பெற்றார்; நீங்கள் சொல்கிறபடி அந்த அபிஷேகத்தைப் பெறவில்லை என சொல்லும் பகுத்தறிவாளர்களே! கொஞ்சம் செவிகொடுத்துச் சேருங்கள். அபிஷேகம் என்றாலே அது பரிசுத்தாவியானவரிடமிருந்து பெறப்படுவதுதான். உலகில் தேவசித்தம் செய்யப்படுவதற்கு, தேவன் தேவ ஜனத்தைக் கொண்டு ஆளுகை செய்வதற்கும், குறிப்பிட்ட பரிசுத்தவான்களை குறிப்பிட்ட நோக்கத்திற்காக அபிஷேகிக்கிறார். விசுவாசிக்க மனதாயிருந்தால் விசுவாசியுங்கள். (ஏசா: 28:10-12)
தாவீது சமஸ்த இஸ்ரவேலை சமாதானமாக நாற்பது ஆண்டு காலம் வழி நடத்திச் செல்ல முடிந்தது என்றால் … அதற்கு அவன் பெற்றுக் கொண்ட அபிஷேகமே முதல் காரணம். ஜீவனுள்ள நாளெல்லாம் உன் வாழ்வில் சாமாதானத்தைக் காண வேண்டுமானால் … இன்றே … இப்பொழுதே … அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் தொழிலில் உள்ள கட்டுகள், நுகங்கள் உங்கள் முன்னேற்றத்தை தடை செய்கிறதா? அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டு நுகங்களை முறித்திடுங்கள். அழையுங்கள் உங்கள் ஆவிக்குரிய போதகரை. கட்டுகள் உடைக்கப்பட தொழிற் கூடங்களில், உங்கள் தனி அலுவலகத்தில் ஒருநாள் உபவாசத்தோடு அபிஷேகக் கூட்டத்தை நடத்தும்படி பணியுங்கள். அப்போது அபிஷேகம் இறங்கும் நுகங்கள் முறியும். மேன்மையையும், வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.
திவ்விய சுபாவங்களில் ஒன்று அபிஷேகம் பெற்றவனாயிருப்பது.
2. தாவீது – சாட்சியுள்ளவன்:
1சாமு: 16:18 – “… கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார்” – தாவீதைப் பற்றி சவுலின் வேலைக்காரனுடைய சாட்சி.
மத்: 5:15 – “விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.”
லூக்: 8:16 – “ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்”
மத்: 5:14 – “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.”
1தீமோ: 5:25 – “சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்;”
தாவீதை அபிஷேகித்த தேவன் அவனை மரக்காலால் மூடி வைப்பாரோ?!
அப்: 1:8 – “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”
அபிஷேகம் நம்மை சாட்சியாக நிறுத்தும். அந்த சாட்சி அநேகருக்கு வெளிப்படும். எப்படி?
1. வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் (மத்: 5:15)
2. உள்ளே பிரவேசிக்கிறவர்களுக்கு வெளிச்சம் (லூக்: 8:16)
3. உலகத்துக்கே வெளிச்சம் (மத்: 5:14)
4. மலையின் மேல் இருக்கிற பட்டணம் (மத்: 5:14)
5. நற்கிரியைகள் வெளியரங்கமாயிருக்கும் (1தீமோ: 5:25)
தாவீது உடன் தேவனாகிய கர்த்தர் கூட இருக்கிறார் என்பது வேலைக்காரனுக்கு எப்படி தெரியும்?
1சாமு: 16:18 – “அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.”
கண்ணால் கண்டிருக்கிறேன் என சாட்சியிடுகிறான். என்னத்தைக் கண்டான்?
1. வாசிப்பதில் தேறினவன்
2. பராக்கிரமசாலி
3. யுத்த வீரன்
4. காரிய சமர்த்தன்
5. சவுந்தரியமுள்ளவன்
6. கர்த்தரை தன்னகத்தே கொண்டவன்
இந்த ஆறு விஷயங்களை தாவீதிடம் இருக்க கண்டிருக்கிறான். தாவீதை தேவன் ஆறுவித தாலந்தினால் நிரப்பியிருப்பதை கண்டிருக்கிறான். அது அவனில் செயல்பட்டவிதத்தையும் அனுபவப்பூர்வமாக கண்டிருக்கிறான். எனவே, சாட்சி கொடுக்கிறான்.
அபிஷேகம் வந்தால் கூடவே வரங்களும், தாலந்துகளும், கனிகளும், திவ்விய சுபாவங்களும் கொடுக்கப்படுகிறதை தாவீதின் வாழ்விலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
நமக்குள் அபிஷேகம் இருந்தால்,,,
உலகில் யாரோ நம்மை கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தக்க சமயத்தில் அதின் மகிமையை அவர்கள் மூலமாக வெளிப்படச் செய்வார்.
திவ்விய சுபாவங்களில் ஒன்று சாட்சி வாழ்வைக் காத்துக் கொள்வது.
3. தாவீது – தன் தாலந்துகளை பயன்படுத்துபவன்:
1சாமு: 16:23 – “… தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; …”
தாவீது எப்போதும் தன்னிடமுள்ள தாலந்துகளை சமயம் வாய்க்கும்போதெல்லாம், தாமதியாமலும், தயங்கி நிற்காமலும், தாலந்துகளை உபயோகப்படுத்துகிறவனாயிருந்தான்.
தாவீது மட்டும் தன்னிடமுள்ள தாலந்துகளை செயல்படுத்தாமலிருந்திருந்தால், சவுலின் வேலைக்காரனுக்கு தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. சவுலிடம் தாவீதை அறிமுகப்படுத்த எவ்வித முகாந்திரமும் வேலைக்காரனுக்கு இல்லாதிருந்திருக்கும்.
தாலந்துகள், வரங்கள் நம்மிடம் இருப்பதை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். அறிந்தபின் அதை உபயோகப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது, ஆதாயத்தை எதிர்பாராமல், தயங்கி நின்று விடாமல் செயல்படுத்த வேண்டும். நம்மிடம் இருப்பது என்னவென்று அறியாத உலகம் நமக்கு வாய்ப்புகளை மட்டும் எப்படி கொடுக்க முன் வரும்?
உலக மனிதர்கள், தங்களிடம் உள்ள தாலந்துகளை ஆதாயத்திற்கு ஏற்றவாறு குறைத்தோ, அதிகரித்தோ செயல்படுத்துவார்கள். “காசுக்கேற்ற எள்ளுருண்டை; கையிலே காசு, வாயிலே தோசை” – என்கிற பழமொழிக்கேற்ப தாலந்துகளை ஆதாயத்திற்கேற்றவாறு செயல்படுத்துவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ… எதைச் செய்தாலும் கிறிஸ்துவின் நாம மகிமைக்கென்று முழுமனதோடு, உண்மையாக செய்ய வேண்டும். ஏற்ற சமயத்தில் நமது உண்மைக்கு ஏற்ற நன்மைகளை பரிசுத்த ஆவியானவர் நமக்கு தருவார்.
மத்: 25:18 – “ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.” – இருக்கிற தாலந்தை புதைக்கிறவர்களாயிராமல்… அதை கர்த்தருக்கென்று பயன்படுத்த வேண்டும்.
மத்: 25:26 – தாலந்துகளை புதைக்கிறவனை – “பொல்லாதவன், சோம்பலுள்ளவன்” என்று நமது ஆண்டவர் இயேசு கடிந்து கொள்கிறார்.
திவ்விய சுபாவங்களில் ஒன்று தாலந்துகளை பயன்படுத்துதல்.
4. தாவீது – பொறுப்புள்ளவன்:
1சாமு: 17:15 – “தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.”
1சாமு: 17:28 – “அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.”
1சாமு: 17:20 – “தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; …”
தாவீது கடமையில் சிறந்தவன்; கடமை தவறாதவன். சவுல் வீட்டில் வேலையில்லை. சவுல் பெலிஸ்தியரிடம் யுத்தத்திற்குப் போய் விட்டான். உடனே தன் தகப்பன் ஆடுகளை மேய்க்க பெத்லகேம் வந்துவிட்டான். விடுமுறை கிடைத்து விட்டதே என்று ஓய்வெடுக்க போய்விடாமல், சோம்பலாக இருந்து விடாமல் ஆடு மேய்க்க போய் விட்டான்.
தாவீதுடைய அண்ணன்மார்களுக்கு எப்படி இராஜாவின் இராணுவத்தில் வேலை பார்த்தார்களோ, அதேபோல, தாவீதும் இராஜாவின் அரமணையில் வேலை பார்த்தான். அரமணையில் வேலை பார்த்த தாவீதுக்கு அகங்காரம் இல்லை. எதனால் அறிகிறோம்? அரமணையில் வேலையில்லை. பழையபடி ஆடு மேய்க்க புறப்பட்டு விட்டான். அரமணையில் இராஜாவுக்கே வேலை பார்ப்பவன் நான்; ஆடு மேய்ப்பதாவது?! என்ற மேட்டிமையோ… அகந்தையோ அவனுக்கில்லை என அறிகிறோம்.
அரமணையில் தாவீது தன் வேலையில் வெற்றியைக் காண்பித்தான். ஆம்! அவன் சுரமண்டலத்தை எடுத்து வாசித்தால் பொல்லாப்புச் செய்கிற ஆவி சவுலை விட்டு நீங்கினது. சவுல் ஆறுதல் அடைந்தான்.
ஆனால், தாவீதின் அண்ணன்மார்களோ… தாங்கள் வேலை பார்த்த இராணுவத்தில் பல நாட்கள் இருந்தும் இராஜாவுக்கு ஒரு வெற்றியும் பெற்றுத்தரவில்லை. வெறுமனே இராணுவத்தில் தண்டச்சம்பளம் வாங்கிக் கொண்டு, நாங்கள் இராணுவத்தினர் என மிடுக்காக சொல்லிக் கொண்டு கையாலாகாதவர்களாய் பல நாட்கள் தோல்வியாளர்களாய் தங்களை விளங்கிப்பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதை அவர்கள் உணராதிருந்தார்கள்.
ஆனால், அபிஷேகம் பெற்றவனோ, பொறுப்புள்ளவனோ வந்த ஒரு நொடியில் சூழ்நிலைகள் அனைத்தையும் கிரகித்து உணர்ந்து கொண்டான். அதுதான் அபிஷேகத்தினுடைய நடத்துதல்.
மத்: 21:28-31 – “ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள்.”
அக்கறை, கரிசனை, பொறுப்பு இல்லாதவன் – தன் சொந்த சரீரத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும், தன்னைச் சார்ந்த அனைவருக்கும் எவ்வித பிரயோஜனமற்றவனாய் இருப்பான். இப்படிப்பட்டவனால் அநேகருக்கு துன்பமும், வேதனையும், அவமான நிந்தையும் தவிர வோறொன்றும் மிஞ்சாது. இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவதே சிறந்தது.
பொறுப்புள்ளவன் – அனைத்திலும் பொறுப்புள்ளவனாயிருப்பான். கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருப்பான். செய்யும் வேலையில், குடும்பத்தில், சபையில், பிறரிடத்தில் உண்மையும் பொறுப்பையும் வெளிப்படுத்துவார்கள்.
திவ்விய சுபாவங்களில் ஒன்று – பொறுப்புள்ளவனாக இருப்பது.
5. தாவீது – பக்தி வைராக்கியமுள்ளவன்:
1சாமு: 17:26 – “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்”
தேவனுடைய சேனைகள், கோலியாத் அளவிற்கு பலசாலிகளாயிராமல் இருக்கலாம்; உயரத்தில் குறைந்தவர்களாயிருக்கலாம்; மனபலம் குறைந்தவர்களாயிருக்கலாம். யுத்தத்திற்கு வந்தாகி விட்டது. யுத்தத்திற்கு அழைக்கலாமே தவிர – கர்த்தருடைய சேனைகளை நிந்திப்பதற்கு எவ்வித முகாந்தரமும் கோலியாத்திற்கு இல்லை. பலசாலியைக் கண்டால் சற்று பயமாகத்தான் இருக்கும். அது மனித பலவீனம். நமது பலவீனத்திலே கர்த்தருடைய பலம் விளங்குமே. அதை கோலியாத் போன்ற விருத்தசேதனமற்றவர்கள் அறிய மாட்டார்களே!
தாவீது, ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளின்மேல் பக்தி வைராக்கியமுள்ளவனாயிருந்தான். நம் தேவனும் அப்படிப்பட்டவரே! அப்: 9:5 – “அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.” – தேவஜனத்தின் துன்பம் – தன்னுடைய துன்பம் என கர்த்தராகிய இயேசு சவுலிடம் கூறினார். தேவன் நம்மேல் வைராக்கியம் உள்ளவராயிருக்கிறார்.
தொடரும் ...