ஆகஸ்ட் 23, 2017

கர்த்தரோடு ஒரு நெருக்கமான உறவு

Image result for Lk: 10:40

கர்த்தரோடு ஒரு நெருக்கமான உறவு

(செய்தியாளர்: பாஸ்டர்.பிலிப் வார்ட் – ஆஸ்திரேலியா)

லூக்கா: 10:40-42 – மார்த்தாள் எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலைசெய்து கொண்டே இருக்கும் சுறுசுறுப்புள்ள ஒரு பெண். உலக வேலையில் அதிக நாட்டம் கொண்டவள். அவளால் ஒரு கணப்பொழுதாகிலும் சும்மாயிருக்க இயலாது. எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பவள். இப்படிப்பட்டவர்களைக் காணும்போது அனைத்து தரப்பு மக்களும் இவர்களை விரும்புவார்கள்.

ஆனால், ஒரு தேவனுடைய பிள்ளையோ மற்றும் ஒரு போதகரோ எப்போதும் பிஸியாக (BUSY) இருக்கக்கூடாது. தேவனோடு உறவாட வேண்டும். அவரோடு உறவாட நேரம் ஒதுக்க வேண்டும். நம் வாழ்வில் எப்போதும் தேவனே நமக்கு முக்கியம். எப்பொழுது பார்த்தாலும் வேலை வேலை, ஊழியம் ஊழியம் என்றிருக்கக்கூடாது. கர்த்தரோடு உறவாடுதல் இவைகளைப் பார்க்கிலும் அதி முக்கியமானது என்பதனை நாம் உணர வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.

மாற்கு: 3:13,14 – “பின்பு, அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்து கொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம் பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,”

தேவன் 12 பேரைத் தமக்கென தெரிந்து கொண்டு, தம்மோடு இருக்க வேண்டும் என விரும்பினார். தேவனிடத்தில் வருவோர் பெரும்பாலும் “கொடும், தாரும்” என்பவர்களே அதிகம். ஆனால், தேவன் விரும்புவதோ, தம்மிடம் வருவோர் அனைவரும் தம்மோடு இருக்க வேண்டும் என்பதைத்தான்.

தேவனுடைய உள்ளத்தை துக்கப்படுத்துவது எது? சந்தோஷப்படுத்துவது எது? என்பதை யார் ஒருவர்? எப்படி அறிய முடியும்? தேவனோடு நேரத்தை செலவிடும் ஒருவரால் மட்டுமே அறிய முடியும்.

கர்த்தருடைய இதயதுடிப்பை அறிவது எப்படி?

கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, நேரத்தை செலவிட்டால் மட்டுமே அவரது இதய துடிப்பை அறிந்துகொள்ள இயலும்.

அ) வேதத்தை கருத்தாய் வாசித்து தியானிக்கும்போது
ஆ) கருத்தாய் ஜெபிக்கும்போது
இ) உபவாசித்து, மன்றாடி, அவருடைய முகத்தை தேடும்போது

ஒரு போதகர் அல்லது ஒரு விசுவாசி யாராயிருப்பினும், தேவனுடைய முகத்தைத் தேடும்பொழுது, தேடித் தன்னைத் தாழ்த்தி ஜெபிக்கும்போது,  அப்படிப்பட்டவர்களுக்கு அவர் வல்லமையாய் வெளிப்படுவார். 

அப்படிப்பட்டவர்களின் ஊழியத்தில், வாழ்வில், அவர்களது கிரியைகளில் தேவனுடைய வல்லமை வெளியரங்கமாய் வெளிப்படச் செய்வார். அதை அனைவரின் கண்களும் காணும்படிச் செய்வார்.

தேவனோடு நேரத்தைச் செலவழித்தால் …

பழைய ஏற்பாட்டில், சாலமோனின் தேவாலயத்தில் மற்றும் அரமணைகளில் பொக்கிஷ அறைகள் என்று இருந்தது. அதுபோல பரலோக தேவனுடைய பொக்கிஷ அறைகளில், பொக்கிஷங்கள், வரங்கள், கனிகள் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் தேவனோடு நேரத்தைச் செலவழித்தால், அவர் உங்களை அந்த அறைகளுக்குள்ளே அழைத்துச் செல்வார்.

சங்கீதம்: 63:1 – “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்…”

“அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்” – என்கிற வார்த்தை எதைக் குறிக்கிறது? “தேவனே முக்கியம்; தேவன்தான் முக்கியம்; ஒவ்வொருநாளும்” – என்பதையே வலியுறுத்துகிறது. “என் வாழ்வில் தேவனுக்குத்தான் முதலிடம்” என்பதையல்லவா நமக்கு வேதம் வலியுறுத்துகிறது.

தென்கொரிய தேசத்தில் சீயோல் பட்டணத்தில் ஊழியம் செய்து வருகிற பாஸ்டர்.பால் யாங்கிச் சோ என்ற போதகர், 8 லட்சம் விசுவாசிகளைக் கொண்ட சபைக்கு தலைமைப் போதகராயிருந்த போதும், அவர் தம்மை பிசியாகக் காட்டிக் கொள்ளாமல், தேவனோடு நேரம் செலவழிக்க தன்னை அனுதினமும் அர்ப்பணித்திருக்கிறாரே!

நமதாண்டவர் இயேசுவைச் சுற்றிலும் எப்பொழுதும் ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டுதானே இருந்தார்கள். ஆகிலும், அவர் ஜனங்களை விட்டு விலகி பிதாவோடு தனித்திருக்க தம்மை தனிப்படுத்திக் கொண்டாரே!

பிதாவோடு உறவாட இயேசுவும், தேவனோடு உறவாட பால் யாங்கிச் சோவும் நெருக்கங்கள் நடுவே, வேலைபளுவின் மத்தியில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டார்களே!

இன்றைக்கு அநேகம்பேர் தேவனுக்கு நேரம் செலவழிப்பதில் குறைவுபட்டிருக்கக் காரணம் என்ன? மார்த்தாளைப்போல உலகவேலைகளில் மனதைச் செலுத்தி, தங்களை எப்பொழுதும் பிஸியாகவும், பரபரப்பாகவும் வைத்துக் கொள்வதினால்தானே. இதனால்தானே ஆண்டவர் இயேசு மார்த்தாளை கடிந்து கொண்டார்? வாழ்வில் எது முக்கியம்? எது முக்கியமற்றது என்பதை நாம் இனங் காண வேண்டாமா? அவைகளை கண்டறிந்து களைய வேண்டுமல்லவா?

எபேசியர்: 1:17 – “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென…”

அவரோடுகூட நேரத்தை நாம் செலவிட நமக்கு “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவி” நமக்குத் தேவையென உணர்ந்து ஜெபத்தில் அவைகளை நாம் கேட்போமாக.

நமது முதலிடம் தேவனுக்கா? ஜனத்திற்கா?
இயேசுகிறிஸ்துவின் சிந்தை நமக்கு வேண்டும். இயேசுகிறிஸ்து, பிதாவோடு நேரத்தை தனியாக செலவிட்டார். நாமும் அதுபோல தேவனோடு நேரத்தை செலவிட வேண்டும். மனதை அலைபாய விடக்கூடாது. நித்திரை வரும்போலத் தெரிந்தால், நடந்து கொண்டு, கைகளை அசைத்து, உயர்த்தி, தட்டி ஜெபிக்கலாம். உறவாடலாம்.
யோவான்: 5:19 – “… பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்”.

அவர் செய்வதை இயேசு காண்கிறார். எப்படி? இயேசு கிறிஸ்து, பிதாவோடு நேரத்தை செலவிட்டதினால் காண்கிறார்.

யோவான்: 5:20 – “பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்”.

அன்பாயிருந்து நேசிக்கிறார் – அதனால் காண்பிக்கிறார். இயேசுவுக்கு மட்டுமல்ல. உங்களையும் நேசிக்கிறார். இதைவிட பெரிய காரியங்களை காண்பிக்கவும், பெரிதான கிரியைகளை உங்களைக் கொண்டு செய்யவும் அவர் விரும்புகிறார். அதற்கு நீங்கள் தேவனோடு நெருக்கமான ஒரு உறவில் இருக்க வேண்டும்.

பிலிப்பியர்: 3:10 – “இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,”

நான் அவரை அறியட்டும்; அவரோடு நெருக்கமாயிருந்து அவரை அறிய வேண்டும் என்று தனது விருப்பத்தை அப்.பவுல் வெளிப்படுத்துகிறார்.
வெளிப்படுத்தல்: 3:20 – “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்”

“சத்தம் கேட்டு கதவைத் திற” – எதற்கு? அவரோடு நேரத்தை செலவிட, ஐக்கியப்பட…

உன்னதப்பாட்டு: 1:2 – “அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக; உமது நேசம் திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமானது”
உன்னதப்பாட்டு புஸ்தகமானது – சபைக்கும் இயேசுகிறிஸ்துவுக்கும் உள்ள நெருக்கமான உறவைக் குறித்துக் கூறுகிறது.

உன்னதப்பாட்டு: 1:4 – “என்னை இழுத்துக்கொள்ளும்…” – இது இன்னொரு மட்டத்திற்கு நம்மை இட்டுச் செல்கிறது. இன்னொரு நிலைக்கு நாம் கடந்து செல்ல வேண்டும் என்பதைக் காட்டுகிறது. உறவுநிலையில் இன்னொரு நிலை – இழுத்துக் கொள்ளுதல்.

உலகம் மாமிசம் பிசாசு நம்மை இழுக்கப் பார்க்கும் நிலையில்… என் தேவனே, நீர் என்னை இழுத்துக் கொள்ளும். உம் பின்னால் நாங்கள் ஓடி வருவோம். என்னை இழுத்துக்கொள்ளும் முழுஉரிமை உமக்கு மட்டுமே உண்டு – என சொல்வோமாக. எனவே, தேவனோடுள்ள உறவு மிக முக்கியம்.

“பிஸியாக அல்ல; இயேசுவின் மேல் பசியாக இரு”

சங்கீதம்: 42:1,2 – “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?”

மான் தாகம் தணிக்க நீரோடைக்கு வரும். தாகம் தணிக்க வந்தால், சிங்கத்தினிடம் இரையாக நேரிடும். ஏனென்றால், இரையைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீரோடை அருகில் பதிவிருந்தால் போதும்; இரை தானாக தேடி வரும். உயிரா? தண்ணீரா? என்ற கேள்வி வரும்போது… மான் தன் உயிரைவிட, தண்ணீரின் தாகம்தான் அதற்கு பெரிதாக இருக்கும். அதேசமயம், தான் சிங்கத்தினிடம் இரையாகவிடக்கூடாது என்பதில் கவனமாயிருக்கும். எப்படி?

தாகம் தணிக்க நீரோடைக்கு வரும்போது மானின் வாசனையை அறிந்து சிங்கம் வந்துவிடும். அதனிடமிருந்து மான் தப்புவதற்கு, கழுத்தளவு தண்ணீரில் இறங்கி, தாகம் தணித்துக் கொண்டு, சிங்கம் அறிந்து வரும்முன், கரையேறி தப்பிச் சென்றுவிடும். சிங்கத்தினிடமிருந்து தப்ப, மான் நீரினால் மூழ்க வேண்டியது அவசியம்.

அதுபோல, நமது மாம்சம் மறைய பரிசுத்தாவியானவர் நமக்குத் தேவை. அவரது அபிஷேகம் தேவை. நிறைவு தேவை. ஆவியானவருக்குள் நிறைவை பெறபெற நமது மாம்ச குணங்கள் மறைந்துபோகும். ஆவியானவரின் நெருக்கமான உறவு நமக்குத் தேவை.

உன்னதப்பாட்டு: 1:4 – “…. திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்…”

திராட்சப்பழங்களை சேகரித்து ஆலையிலே கொண்டு வந்து, அதை மிதித்து, கசக்கிப்பிழிந்து, தோலையும், காம்பையும், விதைகளையும், சதைகளையும் நீக்கி, சாறு பிழிந்து இரசம் எடுப்பதைப்போல… நம்மை, தேவனாகிய கர்த்தர் ஆலையின் தொட்டியில் வைத்து கசக்கிபிழிந்து, தேவையற்ற மாம்ச குணங்களை நீக்கி, பரிசுத்தமான இரசமாக தமக்கு மாற்றிக் கொள்கிறார்.

நமது முக்கியத்துவம் எது? ஊழியமா? மக்களா? தேவனா?

நமது முக்கியத்துவம் – ஊழியமுமல்ல; மக்களும் அல்ல; தேவனே நமது முக்கியம். இதற்கு உதாரணமாக மோசேயின் வாழ்வை எடுத்துக் கொள்வோம்.

யாத்திராகமம்: 19:12,24 – மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து ஒரு வேலி போடுகிறார். மலையைத் தொட்டால் மரணம். ஏன்? இஸ்ரவேலர் வணங்காக்கழுத்துள்ள ஜனம் என்பதால்.

தேவன் நான்கு முறை அழைக்கிறார்

1.   நீ மட்டும் வா – மோசேயை மட்டும் அழைக்கிறார் – யாத்திராகமம்: 19:20
2.   70+4 – 74 பேரை கூட்டி வா – யாத்திராகமம்: 24:1,9
3.   யோசுவாவை அழைத்து வா – யாத்திராகமம்: 33:11
4.   ஆரோனை அழைத்து வா – யாத்திராகமம்: 24:1

மலையைத் தொட்டால் மரணம். இப்படியிருக்க, எப்படி அதைத்தாண்டி வந்தார்கள்? வேலியை தாண்ட எது அவர்களை தகுதிப்படுத்தியது?
1.   யாத்திராகமம்: 24:4 – பலிபீடம் அவர்களை காத்தது. தகுதி தந்தது. பலிபீடம் – இரத்தம் பரிகாரமாக இருந்தது. இரத்தமில்லாமல் அணுக முடியாது. எனவே, பலபீடத்தை முதலாவது கட்டு. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நெருங்கச் செய்யும்.

2.   யோசுவா, நாதாப், அபியு, மூப்பர்கள் வாஞ்சித்தனர். அடிவாரத்தோடு நெருக்கம் முடிந்துபோனது. ஆனால் மலைக்குச் சென்றவன் மோசே மட்டுமே. மோசே எல்லாரையும் தாண்டிச் செல்கிறான் (யாத்: 24:2). அப்படியானால் எது அவனை கொண்டு போனது? அவனுடைய சாந்த குணமும், மனத்தாழ்மையுமே.

ஆரோன்: யாத்திராகமம்: 19:24 – “… நீயும் ஆரோனும் கூடி ஏறி வாருங்கள்” என்றார். ஆனால், மோசேயோடு ஆரோன் போகவில்லை. அவன் மலைக்கு கீழே மக்களோடு தங்கி விட்டான். வாலிபன் யோசுவா மலையில் தங்கினான். வயோதிக மோசே மலையில் ஏறினான். நடுத்தர வயதுள்ள ஆரோன் கீழேயே தங்கி விட்டான்.

யோசுவா – தேவனோடு தங்கி, வார்த்தைகளைப் பெற்று, மக்களிடம் கொண்டு போனான். தேவன் அவனோடு இருந்தார்.

ஆரோன் – மக்களோடு தங்கி, வார்த்தைகளை வாங்கி மக்களிடம் கொண்டு போனான். தேவன் அவனோடு இல்லை. (யாத்: 24:14)
விளைவு?

பொன் கன்றுகுட்டி வந்தது. தேவன் சொன்னதையல்ல; மக்கள் சொல்வதை கேட்டவன் ஆரோன். ஜனங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பவன் ஆவிக்குரிய தலைவனல்ல. கர்த்தர் சொல்லக் கேட்டு நடப்பவனே தேவ ஊழியன். ஜனங்கள் சொல்வதைக் கேட்டதினால்தான் கன்றுக்குட்டி வந்தது. தொடர்ந்து கன்றுக்குட்டியின் ஆவி வந்தது.

புதிய ஏற்பாட்டில் ஒரு உதாரணம்:

யோவான்: 6:60 – சீஷர்களில் அநேகர், “கடினமான உபதேசம்; யார் இதைக் கேட்பார்கள் என்று சொல்லி விலகி போனார்கள். ஆனால், 12 சீஷர்கள் மட்டும் எங்கே போவது? நித்திய ஜீவவார்த்தைகள் உம்மிடம் உண்டே என்று சொல்லி நிலைத்திருந்தார்கள்.

இயேசுவோடு எவ்விடமும் சென்றவர்கள் மூன்று பேர் – பேதுரு, யாக்கோபு, யோவான். பழைய ஏற்பாட்டில் சொன்னால் – யோசுவா. இவர்கள் இயேசுவுக்கு நெருக்கமாய் இருந்தனர். எது இவர்களை தகுதிபடுத்தியது? நெருக்கமான உறவுதான் காரணம்.

நெருக்கமாய் இருப்பவன் காட்டிக் கொடுக்க மாட்டான். உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான் என்று இயேசு சொன்னபோது … யாரும் சரியான மறுஉத்தரவு தரவில்லை. யார் மறுஉத்தரவு சரியாக கொடுத்தான்? அவரை நெருங்கி இருந்த யோவான்தானே! “யார் அவன்?” என்றானே! ஏனென்றால், இயேசுவின் இதயத்துடிப்பை உணர்ந்தவன், கேட்டவன். மார்பிலே சாய்ந்து இருந்தவன்.

இயேசுகிறிஸ்துவின் இதய துடிப்பை நாம் கேட்கிறோமா? நம்மைப்பற்றிய இயேசுவின் இதயத்துடிப்பு என்ன?

நெருக்கமான உறவின் வலிமை

“உறவு இல்லையென்றால் பிள்ளைபேறு இல்லை”
“கணவன் மனைவி உறவு இல்லையென்றால் பிள்ளைபேறு இல்லை”
தேவனும் போதகரும் நெருங்கிய உறவு பேணப்பட வேண்டும்; தேவனும் விசுவாசியும் நெருங்கிய உறவில் வலுப்பட வேண்டும். தூரத்திலிருந்து ஆராதிக்காதே; நெருங்கி வா. மலையின் மேல் போக தாமதிக்காதே. தேவன் நம்மை பயன்படுத்த விரும்புகிறார். எனவே, அவரோடு நெருக்கமான உறவு ஏற்படுத்திக்கொள். ஆத்துமாக்களின் எண்ணிக்கை சபையில் பெருகும். பெருக்கமடைய தேவனோடு ஒரு நெருக்கமான உறவு தேவை என்பதை மறந்து விடாதே. ஆசீர்வாத பெருக்கம் உனக்கு உண்டாயிருக்க தேவனோடு உறவாடு. ஆமென்! அல்லேலூயா!.

செய்தியாளர்: பாஸ்டர்.பிலிப் வார்ட் - ஆஸ்திரேலியா (22.08.2017 சேலம் ஊழியர் கருத்தரங்கில்)