குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக…
திறவுகோல்வசனம்: ரோமர்:
8:29 “தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன்
எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய
சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;”
உலகில் உள்ள மனுக்குலம் அனைத்தையும் பற்றிய நமது பிதாவாகிய தேவனுடைய
ஒரே நோக்கம் இதுதான். அனைவரையும் தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக
மாற்றுவதுதான். ஏன்? எதற்காக? “…அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு,”
(எபேசியர்: 1:11).
நமக்கொரு சாயல் இருந்தது; அதை இழந்து விட்டோம். நமக்கொரு மகிமை
இருந்தது; நாம் அதை இழந்து விட்டோம். ஆதியில் நமக்கிருந்த அந்த சாயல் நமக்கு மகிமையையும்,
புகழ்ச்சியையும் தன்னில் கொண்டிருந்தது. அது நம்மை தேவனோடு தினமும் உறவாட வைத்தது.
ஒரு குறைவும் இன்றி நிறைவைத் தந்தது. கவலையோ, பயமோ, திகிலோ, வியாதியோ, மரணமோ இன்றி
மகிழ்ச்சியான வாழ்வை கொடுத்து வந்தது. அது ஏதேனின் அனுபவமாயிருந்தது. ஆனால், அது நம்மில்
இன்று காணப்படவில்லை. அதை மீண்டும் பெற வேண்’டும். அதைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
அதற்கு நாம் குமாரனுடைய சாயலை பெற்றாக வேண்டும் என்று வேதம் கூறுகிறது.
அதைக்குறித்து நாம் சற்று விரிவாக தியானிப்போம்…
இப்பொழுது
இருக்கும் நமது சாயல் எப்படிப்பட்டது?
ரோமர்: 8:1-8 வரை வாசிக்கும்போது இரண்டுவித சாயல் இருப்பதை உணரமுடிகிறது.
1. பாவ மனித
சாயல் – இது மனிதன் பாவம் செய்த பிறகு அடைந்த சாயல்
2. பிசாசின்
மாம்சசிந்தை மரண சாயல் – மனிதனின் சிந்தையும் மாம்ச சிந்தையும் இணைவதினால் வரும் சாயல்
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் இவ்விரண்டு சாயலில்தான் இருக்கிறார்கள்
என்பதை தேவஜனமாகிய நாம் முதலில் அறிய வேண்டும். மேற்கண்ட இரண்டு சாயலையும் உடையவர்களின்
முடிவு ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறதென்று நாம் அறிவோம். இதிலிருந்து அப்படிப்பட்டவர்களை
மீட்டு குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்ற வேண்டியது நமது கடமை.
பாவமனித சாயல், மாம்சசிந்தை மரண சாயல் – இவையிரண்டும் நமக்கு
தருவது மரணம். மீள முடியாத இரண்டாம் மரணம். இதிலிருந்து ஒவ்வொரு மனிதனும் விடுபட வேண்டும்.
அதற்கு அவர்கள் அனைவரும் குமாரனுடைய சாயலைப் பெறுதல் மிக அவசியமானது.
ஆதியாகமம்: 5:1,3 – “ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த
நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
ஆதாம் நூற்றுமுப்பது வயதானபோது, தன் சாயலாகத்
தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்”
தேவன், ஆதாமை தேவசாயலாக உண்டாக்கினார். ஆதாம், தன் சாயலாகத்
தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான் என்பதை கவனமாக வாசிக்க வேண்டும். ஆதாம் – தேவசாயல். ஆதாம் பெற்றதோ – பாவமனித சாயல் என்பதை நாம் கவனிக்க தவறிவிடக்கூடாது.
தொடர்ந்து பிறப்பதெல்லாம் பாவமனித சாயல்தான். அதை மாற்றவே, பிதா தன் ஒரேபேறான குமாரனாகிய
இயேசுகிறிஸ்துவை அனுப்பினார். ஆதாம் பெற்ற பாவ மனித சாயலையும், பிசாசு தந்த மாம்ச சிந்தை
மரண சாயலையும் நீக்கி மனுக்குலத்தை குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக வேண்டும் என்பதே பிதாவின்
சித்தமாயிருக்கிறது.
தேவ
சாயல்
ஆதியாகமம்: 1:26,27 – “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக;” “தேவன்
தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்,
அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்;”
தேவசாயல்
எப்படிப்பட்டது? ஆவியின் கனிகள் நிறைந்ததுதான் தேவசாயல்.
ஆதியில் மனிதனுடைய சாயல் தேவசாயலாக இருந்தது. அதை அவன் எப்பொழுது
இழந்தான்? தேவனுக்கு கீழ்படியாமல் போனதினிமித்தம் மனிதனுக்கு பாவம் வந்தது. பாவம் வந்ததினால்
தன்னிடமிருந்த தேவ சாயலை மனிதன் இழந்துபோனான். இப்பொழுது மனிதனிடம் மீதமிருப்பது பாவம்
மட்டும்தான். தேவசாயல் அவனை விட்டு நீங்கிவிட்டபடியால் பாவமும் மனிதனும் சேர்ந்ததினால்
மனிதன் பாவ மனித சாயலை அடைந்து விட்டான். இதற்குப் பின்பு, உலகில் பிறந்ததெல்லாம் பாவத்தின்
சாயலை தரித்துக் கொண்டுதான் பிறந்தன. பிறக்கின்றன.
எனவே, தேவசாயலை இழந்த மனிதன் ஏதேனை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.
தேவசாயல் மனிதன் இப்பொழுது பாவசாயல் மனிதனாகிவிட்டபடியினால் மீண்டும் ஏதேனில் நுழைய
முடியாது. காரணம், ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்ட மனித சாயலில் இரண்டுவித கலப்படங்கள்
சேர்ந்து விட்டது. 1. பாவமனித சாயல் 2. பிசாசின் மாம்ச சிந்தை மரணசாயல் கலந்து விட்டது.
இந்த இரண்டு கலப்படங்களையும் மனிதனை விட்டு நீங்கும் வரை ஏதேனுக்குள்ளோ, ஏதேனின் ஆசீர்வாதங்களையோ
பெற இயலாது.
ஏதேனின்
ஆசீர்வாதங்கள் என்னென்ன?
இது மிகவும் முக்கியமானது. இதை நாம் இந்த இடத்தில் ஆய்வு செய்தே
ஆக வேண்டும். இல்லாவிட்டால் மனிதன் குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற விருப்பப்பட மாட்டான்.
1. ஏதேனில்
தேவன் தினந்தோறும் சாயங்கால வேளையில் மனிதனிடம் உறவாட வருவார்.
2. ஒவ்வொன்றையும்
தேவனே மனிதனுக்கு கற்றுக்கொடுப்பார்.
3. ஏதேனினல்
அனைத்து ஜீவராசிகளும், விலங்கினங்களும் இருந்தாலும் மாம்சமோ, இரத்தமோ புசியாது. புல்
தாவரங்களே உணவானது.
4. கொன்று
உண்ண வேண்டும் என்கிற கொலைவெறி எவற்றுக்கும் கிடையாது. எவ்வகை ஜீவராசிக்கும் மரணம்
என்பது கிடையாது. எனவே, நீடித்த ஆயுள் அல்லது முடிவில்லாத ஆயுள் நியமிக்கப்பட்டிருந்தது.
5. வியாதி,
பகை, பொறாமை, வெறி கிடையாது. திருப்தியான மனநிறைவு அனைத்திற்கும் இருந்தது. எனவே, எவருக்கும்
எதற்கும், எவைகளுக்கும் எதைக் கண்டும் பயமோ, திகிலோ கிடையாது. முழுமையான சந்தோசம் சமாதானம்
இருந்தது.
6. ஜீவவிருட்சம்
இருந்தது. அதை புசிப்போருக்கு மரணமே கிடையாது.
இவையெல்லாம் எப்பொழுது மனிதன் இழந்தான்? பாவத்தில் விழுந்தபோது;
கீழ்படியாமையின்கீழ் போனபோது; சாத்தானுக்கு செவி சாய்த்தபோது; பாவத்திற்கு இருவரும்
ஒருமனப்பட்டபோது … ஏதேனின் ஆசீர்வாதங்களை மனிதன் முழுமையாக இழந்து போனான். அதை திரும்பப் பெற மனிதனால் இயலுமா? இயலாதுதான்.
மனிதனால் கூடாதுதான்; தேவனால் கூடும்.
ஆம் பிரியமானவர்களே! தேவனால் எல்லாம் கூடும். அதைப் பெற்றுத்தரவே
குமாரனாகிய இயேசுகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.
கிறிஸ்துவின்
சாயல்
கொலோசெயர்: 1:15 – “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும்
முந்தின பேறுமானவர்”
தேவனுடைய
தற்சுரூபமும் – என்பதின் பொருள் என்ன?
திரித்துவத்தில்
மூன்று அமைப்பு உண்டு என்பதை நாம் அறிவோம். மூன்று அமைப்பும் சரிசமம் என்பதையும் அறிவோம்.
இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. பிதாவின் மனிமை எப்படியோ… அப்படியே குமாரனின் மகிமையும்
இருக்கும். குமாரனுடைய மகிமை எப்படியோ அப்படியே ஆவியானவரின் மகிமையும் இருக்கும். பிலிப்பியர்:
2:6 – “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக
எண்ணாமல்,” என வேதம் கூறுவதை வாசிக்கிறோம். திரித்துவத்தில் மூன்று அமைப்பும் சரிசமம்
என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.
அதுபோல
மகிமையிலும், வல்லமையிலும், தற்சுரூபத்திலும் சரிசமமே. இதில் யாதொரு மாற்றமுமில்லை.
ஏற்றத்தாழ்வு இல்லை. யார் பெரியவர், உயர்ந்தவர் என்ற பாகுபாடில்லை. திரித்துவத்தில்
கர்த்தராகிய இயேசு, தன்னில்தானே மகிமை உடையவர்; தன்னில் தானே வல்லமை உடையவர்; தேவனுடைய
தற்சுரூபமானவர்.
பிதா,
குமாரன், பரிசுத்தாவி – ஒரே சாயல், ஒரே ரூபம், = சமமானவர்கள்.
ஏன் குமாரனுடைய சாயலுக்கு
ஒப்பாக நாம் மாற வேண்டும்?
ஏனென்றால்…
1.
குமாரனாகிய
இயேசுகிறிஸ்து நமது பாவங்களுக்காக சாபங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து அடக்கம்
பண்ணப்பட்டு மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து மரணத்தை ஜெயித்தவர்.
2.
மனிதன்
சாத்தானிடம் தொலைத்த அல்லது வஞ்சிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு இழந்துபோன தேவ சாயலை, இழந்துபோன
ஆயுசுநாட்களை, இழந்துபோன தேவனோடுள்ள உறவை, இழந்துபோன நித்தியத்தை மீண்டும் பெற குமாரனுடைய
சாயல் நமக்கு தேவை.
3.
குமாரனுடைய
சாயலுக்கு நாம் மாறும்போது பிசாசு நம்மை அணுக முடியாது.
இழந்ததை மீண்டும் பெற குமாரனுடைய
சாயல் நமக்கு தேவை.
சாத்தான் ஏன் மனுக்குலத்தை வெறுக்கிறான் என அறிவீர்களா?
1.
ஒரு
கூட்டமக்கள் கிறிஸ்துவின் சாயலை உடையவர்களாயிருக்கிறார்கள். எனவே, சாத்தான் வெறுக்கிறான்.
2.
ஒரு
கூட்டமக்கள் தேவசாயலை இழந்திருப்பினும் தேவனுடைய ரூபமாக இருக்கிறார்கள். எனவே, சாத்தான்
அவர்களை வெறுக்கிறான்.
நம்மை என்ன சாயலாக மாற்ற
வேண்டும் என சாத்தான் நினைக்கிறான் தெரியுமா?
1.
பாவமனித
சாயல்
2.
பிசாசின்
சிந்தை மரண சாயல்
இதிலிருந்து
தப்பித்துக்கொள்ள … நாம் கிறிஸ்துவின் சாயலாக மாற வேண்டும்.
கிறிஸ்துவின் சாயலாக மாற நாம் முதலில் செய்ய வேண்டியது என்ன?
1. ஞானஸ்நானம் பெற வேண்டும்:
மனிதன் இரட்சிக்கப்படாமல்
இருக்கும்போது – பிசாசின் மரண சாயலிலும் பாவமனித சாயலிலும் இருக்கிறான். அப்படிப்பட்ட
மனிதன் இயேசுகிறிஸ்துவை தன் சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டு, பிதா, குமாரன், பரிசுத்தாவியின்
நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்று இயேசுகிறிஸ்துவின் மரணத்தோடு இணைந்து இயேசுகிறிஸ்துவின்
மரணசாயலைப் பெற வேண்டும். ஞானஸ்நானத்தில் இயேசுவோடுகூட இணைக்கப்பட வேண்டும்.
ரோமர்: 6:5 – “ஆதலால் அவருடைய
மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்”.
ரோமர்: 6:3 – “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக
ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” ரோமர்: 6:4 – “… அவருடைய மரணத்திற்குள்ளாக்கும்
ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்” 1கொரிந்தியர்: 15:49 – “மேலும்,
மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம்”.
2. திருவிருந்து – நற்கருணையில் பங்குபெற வேண்டும்:
யோவான்: 6:53,54 – “அதற்கு
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப்
பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன்
உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்” ஞானஸ்நானம் பெற்றவர்கள் மாதம் தவறாமல்
திருவிருந்தில் பங்கு பெற்று அவரது மரணத்தை நினைவுகூர வேண்டும். அப்பொழுது நமது ஆவி
ஆத்துமா சரீரத்தில் குமாரனுடைய சாயலைப் பெறுவோம்.
3. ஆராதனையில் பங்குபெற வேண்டும்:
2கொரிந்தியர்: 3:17,18
– “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவியானவர் எங்கயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும்
திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற
கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” ஆவியானவர்
ஆவிக்குரிய சபைகளில் அசைவாடிக்கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட சபைகளிலே ஆராதனையில்
பங்குகொள்ளும்போது பல ஆவிக்குரிய காரியங்களை கற்றறிவது மட்டுமல்லாமல், அபிஷேகத்தையும்
பெற்று ஆவிக்குரிய வாழ்வில் நாளுக்குநாள் வளர்ச்சியடைந்து குமாரனுடைய சாயலைப் பெற இயலும்.
கர்த்தரை ஆராதிக்கும்போதும், துதிக்கும்போதும், பாடும்போதும், அபிஷேகத்தில் நிறையும்போதும்
கர்த்தரை முகமுகமாய் கண்டு, கண்ணாடியில் முகமுகமாய் காண்பதுபோன்ற உணர்வுடன் செய்யும்போது
குமாரனுடைய சாயலை பெறலாம். ஆராதனையில் கவனச்சிதறல் இன்றி ஆராதிக்க வேண்டும். விட்டுவிட்டு
ஆராதனைக்கு போகிற பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். தவறாது ஆராதனைக்கு கடந்து செல்லும்போது
குமாரனுடைய சாயலை பெறலாம். நாம் ஆராதிக்கும்போது குமாரனுடைய சாயலைப் பெற்று மகிமையின்மேல்
மகிமையடைந்து குமாரனுடைய சாயலைப்பெற்று மறுரூபமடைவோம் என்று வேதம் கூறுகிறது.
4. வேதபாட வகுப்பில் பங்குபெற வேண்டும்:
கொலோசெயர்: 3:10 – “தன்னைச்
சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத்
தரித்துக்கொண்டிருக்கிறீர்களே” நம்மை சிருஷ்டித்தவருடைய பூரண அறிவடைய தனிப்பட்ட வாழ்வில் வேதத்தை வாசித்து
தியானிக்க வேண்டும். அதோடு மட்டும் திருப்தியடைந்து விடக்கூடாது. சபையில் நடக்கும்
வேதபாட வகுப்பில் பங்குபெற்று தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய் பூரண
அறிவடையும்படி வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது குமாரனுடைய சாயலைப் பெறுவோம்.
குமாரனின் சாயல் - இழந்துபோன ஏதேனின் ஆசீர்வாதங்களை தருகிறது.
எப்படி?
1.
ஆயிரவருட அரசாட்சியை தருகிறது:
ஆதியாகமம்:
2:17 – “ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை
புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்”.
ஆதியாகமம்:
5:5 – “ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்”
என்று வேதம் சொல்கிறது. புசிக்கும் நாளில்
ஏன் ஆதாம் சாகவில்லை? ஏனென்றால்…
2பேதுரு:
3:8 – “பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள்
ஆயிரம் வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு
காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்”.
உலகில்
அதிகபட்சமாக உயிரோடிருந்த ஒருவர் மெத்தூசலா மட்டுமே. ஆதியாகமம்: 5:27 – “மெத்தூசலாவுடைய
நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான்” பாவத்தினிமித்தம் மனுஷனுடைய
ஆயுசுநாட்கள் எல்லாம் குறைந்துகொண்டே வந்து விட்டதை ஆதியாகமம்: 5 ஆம் அதிகாரத்தில்
முழுவதும் வாசிக்கிறோம். சங்கீதம்: 90:10 – “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின்
மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது
சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்து போகிறோம்.” என்று மோசே கூறுகிறதைப்
பார்க்கிறோம்.
எனவே,
உலகில் வாழும் எவரும் 1000 வருடங்கள் வாழ்ந்ததில்லை.
காரணம்? பாவமனித சாயலும், பிசாசின் மாம்சசிந்தை மரணசாயலுமே நம் வாழ்விற்கு முடிவைக்
கொண்டு வந்துவிட்டது. ஆதாமும் அவனது சந்ததியும் இழந்துபோனதை, இரண்டாம் ஆதாமாகிய கர்த்தராகிய
இயேசுகிறிஸ்து என்னும் பிதாவின் ஒரேபேறான குமாரனுடைய சாயல் நமக்கு மீட்டுக் கொடுத்து
விட்டது. எப்படி? எப்படியென்றால்…
வெளிப்படுத்தல்:
20:4 – “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்;
நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய
சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும்,
மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும்
அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம்
வருஷம் அரசாண்டார்கள்”.
வெளிப்படுத்தல்:
20:6 – “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்;
இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும்
முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம்
வருஷம் அரசாளுவார்கள்”.
ஏதேனில்
இழந்த ஆயுசின் நாட்களையும் ஆயிரவருஷத்தையும் நாம் கிறிஸ்துவுடனேகூட அரசாளப்போகிறோம்!
அல்லேலூயா!
அதற்கு
குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக நாம் மாற வேண்டும்.
அந்த ஆயிர வருஷம் நாம் அவரோடே ஆளுகை செய்யும்போது, சாத்தானும்
அவனை சார்ந்தவர்களின் கதி என்ன?
சாத்தானின் கதி:
வெளிப்படுத்தல்:
20:2 – “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன்
பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும்
அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்”
சாத்தானை சார்ந்தவர்களின்
கதி:
வெளிப்படுத்தல்:
20:5 – “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை”
பரிசுத்தவான்களின் நிலை:
வெளிப்படுத்தல்:
20:6 – ““முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்;
இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;
இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம்
வருஷம் அரசாளுவார்கள்”.
2.
ஜீவ விருட்சம் தருகிறது:
வெளிப்படுத்தல்: 22:2 – “நகரத்து வீதியின் மத்தியிலும்,
நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது
மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு
ஏதுவானவைகள்”
பாவம்
செய்த மனிதன் மீண்டும் ஜீவவிருட்சத்தின் கனியை எந்த பாவசாயல் மனிதனும் புசித்துவிடாதபடி,
சுடரொளி பட்டயத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்த ஜீவவிருட்சத்தின் கனிகளை, குமாரனுடைய
சாயலைப் பெற்றவர்களுக்கு மீண்டும் பரத்தில் தரப்படுகிறது. ஆமென் அல்லேலூயா!
3.
ஏதேனில் வந்த ஆக்கினை –
இனி இல்லை:
வெளிப்படுத்தல்:
21:3,4 – “மேலும், பரலோகத்தில் உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே
தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய
ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை,
வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது”.
ஏசாயா:
65:25 – “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத்
தின்னும்; புழுதிசர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்கு
செய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்”.
இப்படிப்பட்ட
மகிமையான காரியங்களை குமாரனின் சாயல் நமக்கு தருகிறது. குமாரனுடைய சாயலின்றி நாம் ஆட்டுக்குட்டியானவரின்
கலியாண விருந்தில் பங்குபெற முடியாது. தப்பித்தவறி பங்குபெற நேர்ந்தால், இரட்சிப்பின்
வஸ்திரம் அதாங்க குமாரனின் சாயலின்றி காணப்படும் எவரும் அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த
பாதாளத்திற்கு அனுப்பப்படுவார்கள் என வேதம் தெளிவாக கூறுகிறதை வாசிக்கலாம் (மத்தேயு:
22:9-13).
எனவே,
இக்கடைசி நாட்களில் ஆவிக்குரிய வாழ்வில் ஏனோதானோவென்றிராமல் குமாரனுடைய சாயலுக்கொப்பாக
மாற கருத்தாய் வசனங்களை கைக்கொண்டு வளருவோம். கர்த்தர் தாமே தமது குமாரனுடைய சாயலுக்கு
ஒப்பாக நம்மை மாற்றுவாராக!ஆமென்!