பிப்ரவரி 18, 2017

உங்களில் பிதாவின் அன்பில்லை

Image result for 1john:2:15

உங்களில் பிதாவின் அன்பில்லை

திறவுகோல் வசனம்: 1யோவான்: 2:15 – “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை”

உலகத்தில் இருப்பவனுக்குள் பிதாவின் அன்பு வர வேண்டும்; இருக்க வேண்டும்; ஆனால், பிதாவின் அன்பில்  உள்ளவனுக்குள் உலகம் வந்துவிடக் கூடாது.

“பிதா” என்ற சொல் “மேலான நிலை” மற்றும் “உயர்ந்த நிலை”ப்பாட்டைக் குறிக்கிறதாயிருக்கிறது. மனிதன் அறிந்திராத, எதிர்பார்ப்புக்கும் மேலான அன்பும் பண்பும் உடையவர்தான் பிதா என்கிற பிதாவாகிய தேவன். அவரது அன்பில் பழுதில்லை; மாயமில்லை; வேறுபாடில்லை; குறைவில்லை; அப்படிப்பட்டவர்தான் பிதாவாகிய தேவன். 

அப்படிப்பட்டவருடைய பிள்ளைகளான நமக்குள் பிதாவின் அன்பு இருக்க வேண்டும் என நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாஞ்சை. பிதாவின் அன்பில் நாம் திளைத்தால் மட்டும் போதாது; அந்த அன்பில் நிலைபெற வேண்டும்.

எனவே, பிதாவின் அன்பு நமக்குள் இருக்க வேண்டும் என வேதம் வலியுறுத்துகிறதைப் பார்க்கிறோம். பிதாவின் அன்பு நமக்குள் இருக்க வேண்டுமானால், அந்த பிதாவின் அன்பு எப்படிப்பட்டது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். பிதாவின் அன்பை அறியாமல் பிதாவின் அன்பில் நிலைத்திருப்பது எப்படி?

பிதாவின் அன்பு எப்படிப்பட்டது?


1.   வெறுமையாக அனுப்பாதவர்:

முற்பிதாக்களில் கடைசி பிதாவாகிய யாக்கோபு பிதாவின் அன்பு எப்படிப்பட்டது என்பதை விவரிப்பதை கவனியுங்கள்: ஆதியாகமம்: 31:42 – “என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னார்”.

இந்த உலகம் நம்மை வெறுமையாக அனுப்பி விடவே பார்க்கும். ஆனால், பிதா நம்மை ஒருபோதும் வெறுமையாய் அனுப்பி விட மாட்டார். வெறுங்கையாய், வெறும் மடியோடு வந்த ரூத்தை போவாஸ், வெறும் மடியோடு அனுப்பிவிடவில்லை. போர்வையை விரி என்று சொல்லி கோதுமையை மடி நிறைய அளந்து போட்டு அனுப்பினான் (ரூத்: 3:15). தேவனாகிய கர்த்தர் தம்மிடம் வருகிற தம்முடையவர்களை ஒருபோதும் வெறுமையாய், வெறுங்கையாய் அனுப்பவே மாட்டார்.

அதுமட்டுமல்ல, நமக்கு தர வேண்டியதை, முறையாக வர வேண்டியதை, பெற வேண்டியதைக்கூட, தரவும், பெறவும் கூடாதபடிக்கு மறுத்து விட பார்க்கும். நமக்குரியதை பலவேளைகளில் போராடித்தான் பெற வேண்டியதாயிருக்கிறது. இவ்வுலகம் இப்படித்தான் தேவஜனத்திற்கு எதிராக இருக்கிறது. இருந்தாலும், நாம் ஆராதிக்கும் தேவனாகிய கிறிஸ்து நமக்காக இரத்தம் சிந்தி ஜீவனைக்கொடுத்து நம்மை மீட்டெடுத்தவர், நமக்குரியதையும், வேண்டியதையும் நமக்கு நிச்சயம் தருவார். ஆபிரகாமின் ஆசீர்வாதங்களையும் இயேசுகிறிஸ்து மூலமாய் நமக்கு தந்தருளியிருக்கிறார்.

2.   பட்டயத்துக்கு தப்புவிப்பவர்:

யாத்திராகமம்: 18:4 – “என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் …” எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த ஜனங்களை விடுவிக்க மோசே கடந்து போனபோது, பார்வோனின் கரம் அவன்மேல் மேற்கொள்ளாதபடிக்கு, பிதாவாகிய தேவன் மோசேயை பார்வோனின் பட்டயத்துக்கு தப்புவித்தார் என்று வாசிக்கிறோம்.

3.   நெருக்கப்படுகிற காலங்களில் வெளிப்படுகிறவர்:

1சாமுவேல்: 2:27 – “… உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,”
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் பார்வோனின் கொடுமையை தாங்கக்கூடாமல் தவித்தபோது பிதாவாகிய தேவன் தம்மை அவர்களுக்கு வெளிப்பட்டார். மனம் இரங்கினார். மோசேயை அனுப்பி வைத்தார்.

4.   தேடினால் தென்படுகிறவர்:

1நாளாகமம்: 28:9 – “என் குமாரனாகிய சாலமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா அருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்”.

5.   ஞானம் தருகிறவர்:

தானியேல்: 5:11 – “உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது … “.

6.   பேசவும், ஜெபிக்கவும் உதவுபவர்:

மத்தேயு: 10:20 – “பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்”

ரோமர்: 8:26 – “அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்”.

நாம், பேச அறியாதிருக்கும்போதும், நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபோதும், பிதாவின் ஆவியானவரை அனுப்பி நம்மை பேசவும், ஜெபிக்கவும் வைக்கிறார். உதவி செய்கிறார். நமது பெலவீனங்களில் பெலன் தருகிறார்.

7.   அதைரியத்தை போக்குபவர்:

மத்தேயு: 10:28-31 – “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்”.

8.   நீதிமான்களை பிரகாசிக்கச் செய்கிறவர்:

மத்தேயு: 13:43 – “அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்…” 

9.   ஒருவனாகிலும் கெட்டுப் போவது பிதாவின் சித்தமல்ல:

மத்தேயு: 18:14 – “இவ்விதமாக சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப் போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல”

10.  கடைசிநாளில் நம்மை உயிர்த்தெழுச் செய்வதே பிதாவின் சித்தம்:

யோவான்: 6:39 – “அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்து போகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது”.

11.  குமாரனால் மீட்கப்படும்படி அருளை தருகிறவர்:

யோவான்: 6:65 – “ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் …”

யோவான்: 6:44 – “என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்”.

12.  பிதாவின் கையிலிருந்து பறிக்க முடியாது:

யோவான்: 10:29 – “அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக் கொள்ள ஒருவனாலும் கூடாது”.

13.  அநேக வாசஸ்தலங்களை நமக்காக வைத்திருக்கிறவர்:

யோவான் 14:2 – “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு…”

14.  பரிசுத்த ஆவியானவரை நமக்காக கொடுத்திருக்கிறார்:

அப்போஸ்தலர்: 1:5 – “என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்”.

நாம் மீட்கப்படும்படிக்கு முத்திரையாக பரிசுத்தாவியானவரை பிதாவாகிய தேவன் நமக்கு தந்திருக்கிறார் (எபேசியர்: 4:30).

15.  நாம் நித்தியஜீவனை அடையும்படிக்கு, தம் ஒரேபேறான குமாரனை தந்தருளினார்:
யோவான்: 3:16 – “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”.
1யோவான்: 4:8-10 – “… தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதாலே அன்பு உண்டாயிருக்கிறது”.
பிதாவின் அன்பு பழைய ஏற்பாட்டில் பலவிதங்களில் பல பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், எவ்வகையில் அவை வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும், மேலே கண்ட (யோவான்: 3:16 / 1யோவான்: 4:8-10) இவ்விரு வசனங்களில் வெளிப்படுத்தப்பட்டதைப்போல சிறப்பாக பிதாவின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய வசனங்கள் வேறெதுவுமில்லையென்றே நான் கருதுகிறேன்.
ஆம் பிரியமானவர்களே!
மீண்டும் ஒருமுறைகூட இந்த வசனங்களை பொறுமையோடே வாசித்துப் பாருங்கள்.
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை … தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”
“தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது”
“நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல”,
“அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதாலே அன்பு உண்டாயிருக்கிறது”.
பிதாவாகிய தேவன் ஆதாம் ஏவாளிடம் தாம் வாக்குப்பண்ணினபடியே, தமது ஒரே பேறான குமாரனை இவ்வுலகிற்கு பலியாக ஒப்புக் கொடுத்தார்.
நம்மில் எத்தனைபேர் இவ்விதமாய் ஒப்புக் கொடுக்க முன்வர முடியும்?
நான் நான் என்று சொல்லிக்கொள்ள முடியும். ஆனால், அந்த சூழ்நிலை வரும்போதுதான் நமது மனவலிமை எப்படிப்பட்டதென்று நமக்கே தெரிய வரும்.
அப்படிப்பட்ட சூழ்நிலை ஆபிரகாமுக்கு வந்தபோது, தனது நேசகுமாரனை பலிகொடுக்க எவ்விதமான மனவலிமை பெற்றவனாய் இருந்தான் என அவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பிதாவின் அன்பு எப்படிப்பட்டதென்று பாருங்கள்.
ரோமர்: 5:7,8 – “நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்”.
இப்படிப்பட்ட பிதாவின் அன்பிற்கு பாத்திரவான்களாகிய நீங்கள், பிதாவின் அன்பை விட்டு உலகத்தில் அன்பு கூறுவது தகுமோ என்பதை நீங்களே நிதானித்துப் பாருங்கள். உலகில் உள்ள அன்பு அனைத்தும் மாறிப்போகும்; மறைந்தும் போகும். ஆனால், பிதாவின் அன்பு ஒருநாளும் மாறிப்போகாது.
ரோமர்: 8:32 – “தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக் கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பது எப்படி?
உலகில் உள்ள அன்பு எப்படிப்பட்டதென்று நீங்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருப்பீர்கள். உலகில் காட்டப்படும் அன்பு மாயமானது, நிலையற்றது, பாரபட்சமுள்ளது என்பதை அறிவீர்கள்.
உலகில் கிடைத்திராத அன்பு என் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு தர விரும்புகிறார். தேவனுடைய அன்பை நீங்கள் அறிந்திராத முன்பே என் தேவன் உங்களுக்காக யாவையும் செய்து முடித்தவராய், இப்போது இருகரம் நீட்டி உங்களை அன்போடு அழைக்கிறார். அழைப்பை ஏற்பீர்களா?
அன்பு காணா உலகத்தில் அன்பைத்தேடி அலைகின்றீர்களா? மெய்யான அன்பு காட்ட ஒருவர் உண்டு. அந்த அன்பின் தேவன் தமது ஒரேபேறான தமது நேச குமாரனையே நமக்காக பலியாக தந்து, நம்மை மீட்கும்படி, அன்போடு உங்களை அழைக்கிறார்.
அன்பை அறிந்த நீங்கள் தேவனது மெய்யான அன்பை விட்டு விலகி விடாதிருங்கள். உலகம் காட்டும் மாயையான அன்பில் விழுந்து விடாதிருங்கள். 
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

பிப்ரவரி 16, 2017

மனுஷர் வசனமா? தேவவசனமா?

Image result for 2Thess:2:13

“மனுஷர் வசனமாகவா? தேவவசனமாகவா?”

திறவுகோல்வசனம்: 1தெசலோனிக்கேயர்: 2:13 – “ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக் கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது”

முதலாவது, தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டீர்கள்

இரண்டாவதாக, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாக ஏற்றுக் கொண்டீர்கள்

மூன்றாவதாக, மெய்யாகவே அது தேவவசனந்தான் என்று விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது

தேவவசனத்தை சபையில் உள்ள தேவஜனங்கள், தேவஊழியர்கள் மூலமாய் கேள்விப்படுகிறார்கள். வசன விளக்கங்களை, தேவசெய்தியாக கேட்கிறார்கள். கர்த்தருடைய வசனங்களை தேவார்த்தையாக பிரசங்கமாக தேவஊழியர்கள் மூலம் கேட்கிறார்கள்.

அந்த பிரசங்கமானது தேவஜனங்களுக்கு தேவ செய்தியாக வழங்கப்படும்போது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும் ஏற்றுக் கொண்டதினால் தேவஊழியர்கள் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

பேசுகிறது ஒரு மனிதன் என்றாலும், அவர் ஒரு தேவ அழைப்பை பெற்ற முழுநேர ஊழியர் என்பதினால், அவர்மேல் உள்ள கர்த்தருடைய அபிஷேகத்தைக் கண்டதினால், அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தேவ வார்த்தைகளாக விசுவாசத்தோடு ஏற்றுக் கொண்டதினால், அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் உங்களுக்குள்ளே பெலன் செய்கிறதை நீங்கள் அனுபவப்பூர்வமாக உணர்கின்றீர்கள். வெளியரங்கமான அற்புதங்கள் நடக்கும்போது அவை அடையாளமாக மாறுகின்றன.

2கொரிந்தியர்: 4:5 – “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்”.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறும்போது, “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்…” என்கிறார். அதாவது, ஒரு தேவஊழியர் தன் சுயபிரஸ்தாபத்தையோ, பேர் பிரஸ்தாபத்தையோ சுய தம்பட்டம் செய்யாமல் … “… இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்” என்கிறார்.

2தீமோத்தேயு: 3:10,11 – ல் சொல்லும்போது, “நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும், … துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்…” என்று தீமோத்தேயுவுக்கு எழுதுகிறார்.

ஒரு ஊழியர் தன் வாழ்வில் ஏழு காரியங்களை வெளிப்படுத்தி வாழ்ந்திட வேண்டும். வாழ்வில் எதிர்வரும் வெவ்வேறான சூழ்நிலைகளில், சாதக மற்றும் பாதகமான சூழலில், நம்மைப் பின்பற்றுபவர்களுக்கும், நம்மை காண்கிறவர்களுக்கும் முன்பாக எப்போதும் இவ்வேழு காரியங்களை சுபாவங்களை வெளிப்படுத்தி தங்களை தேவஊழியர் என ரூபிக்க தவறிவிடக்கூடாது.

தேவஊழியரின் வாழ்வில் எதிர்வரும் அனுபவங்களே நற்சாட்சியின் செய்தியாக மாறுகிறது. அதுவே தேவனுக்கு மகிமையும், தேவஜனங்களுக்கு சாட்சியாகவும், வாசிக்கப்படும் நிரூபங்களாகவும் மாறுகிறது.


பவுலிடம் காணப்பட்ட ஏழு சுபாவங்கள்:


1.   பவுலின் போதகம்
   2.   அந்த போதகத்தின்படியான நடக்கை
   3.   திசை மாறா நோக்கம்
   4.   விசுவாசம்
   5.   கிறிஸ்துவின் மேலும், வெறுப்பவர் மேலும் மாறாத அன்பு
   6.   உபத்திரவத்திலும், நம்பிக்கையிலும் பொறுமை
   7.   கிறிஸ்துவுக்காக படும் துன்பங்கள் பாடுகள்

எச்சூழலிலும் இந்த ஏழு காரியங்களை இழந்துவிடக் கூடாது. எல்லா சூழ்நிலைகளிலும் இதை வெளிப்படுத்தி தங்களை தேவமனுஷர் என்றும், தேவஊழியர் என்றும் நிருபிக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களே மெய்யான தேவமனிதராவார். அப்படிப்பட்டவர்களே மெய்யான ஊழியர். பிரசங்கிக்க தகுதியுடையவர்.

பவுலின் இந்த ஏழு சுபாவங்கள் பலபேரை கவர்ந்திழுத்தது இரட்சிப்பிற்குள் மட்டுமல்ல… முழுநேர ஊழியத்திற்கும், அதோடுகூட பவுலைப்போலவே அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் மாற்றச் செய்தது. தன் வழிகளில் மாறுபாடின்றி வாழவும், ஊழியம் செய்யவும் தன்னை பழக்கப்படுத்திக் கொண்டவன் அப்.பவுல். அதனால் பலபேர் மீட்கப்படவும், பலபேர் கட்டியெழுப்பப்படவும், பல பட்டணங்கள், பல தேசங்கள் மீட்படையவும் மறுரூபமாகவும் முடிந்தது.

ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்வு மாறினால் பலபேர் மாறுவார்கள்; பல பட்டணங்கள் மறுரூபமாகும். பல சபைகள் கட்டப்படும். அதற்கு அப்.பவுலைப் போன்றதொரு அர்ப்பணிப்பும், மேலே கண்ட ஏழு சுபாவங்களும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது, ஜனங்கள் நாம் பேசும்போது, அதை மனுஷர் வார்த்தையாக அல்ல; தேவவார்த்தையாக தேவவசனமாக ஏற்றுக் கொள்வார்கள். அப்பொழுது அந்த வசனங்களை அவர்கள் விசுவாசிக்க ஆரம்பிப்பார்கள். அப்பொழுது நாம் சொன்ன அந்த தேவவசனம் அவர்களுக்குள்ளே பெலனாய் விளங்கும்; அற்புதங்கள் நடக்கும். நம்மை தேவமனுஷனாக பார்ப்பார்கள்.

ஊழியர்களின் வாழ்வை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. 20, 25 வருடங்களுக்கு முன்பு உள்ள கிறிஸ்தவ உலகம் வேறு; இன்றைக்கு உள்ள கிறிஸ்தவ உலகம் வேறு என்பதை ஊழியர்கள் உணரவேண்டிய தருணம் வந்து விட்டதென்று நினைக்கிறேன். எப்படிப்பட்ட ஊழியனையும் ஏற்றுக் கொள்ளும் காலம் இதுவல்ல. சரியற்ற ஊழியரை புறக்கணிக்க தவறுவதில்லை. நற்செய்திகளைவிட துர்ச்செய்திகள் வெகுவேகமாக பரவக்கூடிய தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்தில் வந்திருக்கிறோம்.

எனவே, நமது போதகம் மேம்பட்டதாயும், வேதாகம விளக்கங்கள் தரமுள்ளவையாகவும், ஆத்துமாவை ஊன்றக் கட்டுகிறதாயும், உயிர்ப்பிக்கிறதாயும், அனல்மூட்டி எரிய விடுகிறதாயும், ஆழமான சத்தியங்களை வெளிக்கொணருகிறதாயும் காணப்பட வேண்டும். அதற்கு ஜெபஜீவியம் குறைவின்றி, பழுதின்றியும், வேதத்தின் தியானம் கிரமமாகவும், ஆவியானவரின் வழிநடத்துதலை வெளிப்பாடுகளை பெற தகுதியையும் பரிசுத்தத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். போதக சமர்த்தனாக விளங்க வேண்டும்.

போதக சாமார்த்தியத்தோடு பிரசங்கித்தால் மட்டும் போதாது. பிரசங்கித்திற்கேதுவான மற்றும் பிரசங்கித்ததின்படியான நடக்கை நம்மிடம் காணப்பட வேண்டும். பிரசங்கம் எவரும் செய்திட இயலும். ஆனால், பிரசங்கித்தின்படி நடப்பது மிக கடினமான காரியம். நடப்பதின்படியே பிரசங்கிப்பதே நலம். அதுவே அனைவராலும் வரவேற்கப்படக்கூடியது. பின்பற்றக்கூடியது. நம்பகமானது.

நமது அழைப்பும் அபிஷேகமும் இலக்கை நோக்கி ஒரே நோக்கத்தோடு செல்ல வேண்டும். நம்மை எதற்காக அழைத்தாரோ, அதை அடையும்படி அபிஷேக வல்லமையை தேவன் கொடுத்துள்ளார். அந்த அபிஷேகத்தோடு நோக்கம் தவறாமல், குறிக்கோளை நோக்கி ஆசையாய் பின் தொடர வேண்டும்.

திசை மாறா நோக்கம் செயல்படுத்த கர்த்தர் மேல் நாம் கொண்ட விசுவாசம் மாறாததாயிருக்க வேண்டும். இருந்தாலும் இல்லாவிட்டாலும், விடுவித்தாலும் விடுவிக்காமற்போனாலும், கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும், நேசித்தாலும் நேசிக்கா விட்டாலும், இன்பமானாலும், துன்பமானாலும், வாழ்வானாலும் சாவானாலும், பஞ்சமோ பசியோ, எதுவானாலும் நாம் கிறிஸ்துவின்மேல் வைத்த விசுவாச உறுதியில் நிலைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட பாதைகளில் மனம் தளராது விசுவாச ஓட்டத்தில் சீராக பயணித்து ஜெயம் பெறும்பொழுது, அதை கண்டவர்கள் பலபேர் விசுவாசித்து பின் தொடருவார்கள்.

தேவன்மேல் நாம் வைத்திருக்கும் அன்பு மட்டும் போதும் என தேவன் சொல்லவில்லை. உன்னை நீ நேசிப்பதுபோல பிறனையும் நேசி என்றார் நமது ஆண்டவர் இயேசு. நேசிப்பவரையே நேசிப்பது அன்பல்ல; உன்னை வெறுப்பவர்களையும் நேசிப்பதுதான் உண்மையான தேவ அன்பு. அந்த அன்பை நம் ஊழியங்களில் வெளிக்காட்டும்போதுதான் ஆவியானவரின் வல்லமை பரிபூரணமாக நம்மிடம் கிரியை செய்ய ஆரம்பிக்கும். 

காட்டிக் கொடுப்பவர், வஞ்சிப்பவர், ஏமாற்றுபவர், வீழ்த்தத் துடிப்பவர், நன்மைக்கு தீமை செய்பவர், காரணமின்றி பகைப்பவர், வேண்டுமென்றே இழிவுபடுத்துபவர், பலவீனங்களை தாக்குபவர், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர், வளர விடாதவர், ஆசீர்வாதங்களை தடுப்பவர், துரோகம் இழைப்பவர், பதிலுக்கு பதில் செய்பவர், பழி வாங்குபவர், கோள் சொல்பவர் என இப்படிப்பட்டவர்களை நேசித்துப் பாருங்களேன். தேவ அன்பு உங்கள் உள்ளங்களில் பரிபூணமாக வாசம் செய்யும். அதன் பலன் மிகுதி.

இப்படிச் செய்வதினால் இவ்வுலகம் உங்களை பரிகாசம் பண்ணும். பண்ணட்டுமே! கிறிஸ்துவையும் அப்படித்தானே இவ்வுலகம் பரிகாசம் பண்ணியது. பாராளும் பரமனுக்கே பரிகாசமானால், உங்களுக்கும் எனக்கும் என்ன செய்யாது இந்த உலகம். எதை வேண்டுமானாலும் செய்யட்டும். கிறிஸ்துவை நேசிக்கும் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட அன்பை வெளிப்படுத்த தயங்க மாட்டார்கள். ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். ஆவிக்குரிய வாழ்வில் பழகினவர்களுக்கு இது சாத்தியமே. இப்படிப்பட்ட அன்பே தேவன் விரும்பும் தெய்வீக அன்பாகும்.

தேவஊழியனின் பண்புகளில் சிறந்தது பொறுமை. இது உள்ளவர்களின் வாழ்வில் வெற்றிகள் அவர் வசமாகும். தோல்வியின் அஸ்திபாரமே பொறுமையின்மைதான். கொக்கிற்கு உள்ள பொறுமை, வெற்றிக்கு வழி. 

உபத்திரவத்தில் பொறுமையாயிருப்பது பல நன்மைகளை கொண்டு வரும். நாம் எதின்மேல் நம்பிக்கை கொண்டிருக்கிறோமோ, அதை அடையும் வரை பொறுமை தேவை. கோழிமுட்டை குஞ்சுபொரிக்க வேண்டுமானால் 21 நாட்கள் பொறுமையோடு காத்திருக்க வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு. 15 நாளில் வெளிப்பட முயற்சிக்குமானால் அது கருவழிந்த பிண்டமாகி விடும். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. அந்தக் காலம் வரை காத்திருப்பதற்குப் பெயர்தான் பொறுமை என்பது. அது தேவஊழியனுக்கு மிக அவசியம். பதறாத காரியம் சிதறாது. தேவசித்தம் நிறைவேறும்வரை காத்திருப்பதற்குப் பெயர்தான் பொறுமை என்பது.

கிறிஸ்துவினிமித்தம் வரும் பாடுகள் துன்பங்களுக்கு பரலோகில் பலன் உண்டு என்பதை நாம் அறிவோம் (மத்தேயு: 5:10-12).

2தீமோத்தேயு: 1:8 – “ஆகையால், நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி”

2தீமோத்தேயு: 2:3 – “நீயும் இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி”

2தீமோத்தேயு: 4:5 – “நீயோ, எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, குவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று”

எபிரெயர்: 13:3 – “கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக் கொள்ளுங்கள்”.

மேற்கண்ட வசனங்களிலெல்லாம் கிறிஸ்துவுக்காக தீங்கநுபவிக்கும்படி அப்.பவுல் ஆலோசனை கூறுகிறதை வாசிக்கிறோம். இது  எப்படிப்பட்ட தீங்கநுபவித்தல் தெரியுமா?

ஒன்று, கிறிஸ்துவுக்காக நாமே விரும்பி தீங்கநுபவித்தல். அதற்கு பலன் மேன்மையான உயிர்த்தெழுதல் என்று வேதம்சொல்கிறது (எபிரெயர்:11:35).

மற்றொன்று, நாம் விரும்பாமலே நமக்கு தீங்கநுபவிக்கும்படி கொடுக்கப்படுவது; எதிர்பாராதது; தேவசித்தம். யோபுவுக்கு வந்த பாடுகள் போல.

விரும்பி ஏற்கும் தீங்குகளுக்கும் சரி, விரும்பாமல் எதிர்பாராமல் தேவனால் கொடுக்கப்பட்டு வரும் தீங்கானாலும் சரி அது நமக்கு பலனைக் கொண்டு வரும்.

தேவஊழியன் பாடுகளை நன்றாய் சகிக்க முன் வர வேண்டும். பாடுகளிலிருந்து வெளிவர பிரயாசமெடுக்க விரும்பாமல், பாடுகளை தாங்கிக்கொள்ள பெலன் பெறும்படி ஜெபிக்கலாம். தேவமனுஷனுக்கு வரும் பாடுகள் அனைத்தும் பிறர்க்கு ஆசீர்வாதத்தை கொண்டு வரவே தேவன் அனுமதிக்கிறார்.

சரி விஷயத்திற்கு வருவோம்….

ஒரு தேவஊழியன் மனிதன்தான். ஒரு தேவமனுஷனைக் கொண்டுதான் தேவன் தம் ஜனத்தை வழிநடத்தி வருகிறார். சபையாகட்டும், தேவபிள்ளையாகட்டும் யாராயிருந்தாலும் யாரோ ஒரு தேவமனுஷனைக் கொண்டுதான் வழிநடத்துகிறார்; பேசுகிறார். அவர் மூலமாய் கொடுக்கப்படும் தேவசனத்தை மனுஷர் வசனமாய் ஏற்றுக் கொள்ளாமல் தேவவசனமாய் ஒரு விசுவாசி ஏற்றுக் கொள்வாரானால், அப்படி ஏற்றுக் கொண்டவருக்கு அந்த வசனமே தேவபெலனைக் கொடுக்கும். காரியங்களை வாய்க்கப்பண்ணும். சாதாரணமாய் கருதினால் ஒரு பலனும் இராது. தேவவசனமாய் கருதினால் கருதிய காரியம் வாய்க்கும்.

எனவே, ஒவ்வொரு வாரமும் ஆராதனைகளில் கொடுக்கப்படும் தேவவசனங்களை நீங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்? எப்படி அங்கீகரிக்கிறீர்கள்? மனுஷர் வசனமாகவா? தேவவசனமாகவா?நீங்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறீர்களோ? அப்படியே அந்தமாதிரிதான் கிரியை செய்யும்.

கொடுக்கப்படும் தேவவசனம் உங்களில் பெலன் தருவதும் தராததும் உங்கள் வசமே அந்த உரிமை தரப்பட்டுள்ளது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?! ஞாயிறு ஆராதனையில் வெறுமையாய் சென்று பெலனை பெற்று திரும்பப் போகிறீர்களா?! அல்லது வெறுமையாய் சென்று வெறுங்கையாய் திரும்பப் போகிறீர்களா?!

“நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன்நடையைக் காத்துக் கொள்” என்று பிரசங்கி எதற்கு சொன்னார்? என்பதை உணர்ந்தால் பெலனை பெறலாம் (பிரசங்கி: 5:1). 

தேவஜனம் கூடுகிற எவ்வகை கூடுகையானாலும் சரி…. அதில் கொடுக்கப்படுகிற தேவசெய்தியை மனுசர் வசனமாக கருதாமல் தேவவசனமாக ஏற்றுக் கொள்கிற இருதயத்தை பெற்றிருப்போமானால் பாக்கியசாலிகள்தான்.

சபைகளில் கொடுக்கப்படும் தேவவசனத்தை அற்பமாய் எண்ணாமல், ஏனோதானோவென்று கேட்காமல், தெரிந்த சத்தியம் தானே என உதாசீணம் பண்ணாமல் கருத்தாய் கேட்டு விசுவாசித்தால், முன்பே அவ்வசனத்தை கேட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் உங்கள் வாழ்வில் அவ்வசனம் கிரியை செய்ய பெலனுள்ளதாய் அது மாறும். அதற்கு நீங்கள் இடங் கொடுப்பீர்களா?

“ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக் கொண்டபோது அதை மனுஷர் வசனமாக ஏற்றுக் கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக் கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது”

ஆம்! பிரியமானவர்களே!

உங்களுக்குள் நீங்கள் விசுவாசிக்கிற வசனம் தேவவசனமாக பெலன் செய்ய நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம். கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

கிச்சிலிப்பழம்



கிச்சிலிப்பழம் 

(ஆப்பிள் பழம் - APPLE)

திறவுகோல்வசனம்: உன்னதப்பாட்டு: 2:3,5 – “காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் எப்படியிருக்கிறதோ, அப்பிடியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது” “திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப் பழங்களால் என்னை ஆற்றுங்கள்…”

காட்டு மரங்களுக்குள் சிறந்தது கிச்சிலி மரம். அது தரும் கனியில் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளது. மா, பலா, வாழை ஆகியவை முக்கனிகள் என அழைக்கப்பட்டாலும், எல்லா சூழலிலும், எல்லாராலும் புசிக்கத் தகுந்தவை அல்ல. பிள்ளை பேறுபெற்றவர்கள் மாம்பழம் சாப்பிட்டால் பிறந்த குழந்தைக்கு சீதளம், மாந்தம் ஏற்படும். பலா பழம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். சர்க்கரை உள்ளவர்கள் வாழைபழம் சாப்பிட முடியாது.

இருப்பினும், பெரும்பாலும் அனைத்து சூழலுக்கும் ஏற்ற கனி கிச்சிலிப்பழம்தான் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்படிப்பட்ட பெலவீனர்களுக்கும், படுத்த படுக்கையில் உள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒரே பழம் கிச்சிலிப் பழம் மட்டுந்தான். பக்கவிளைவற்றது. அனைத்து சத்துக்களும் தன்னகத்தே ஒருங்கே பெற்றது இப்பழம் மட்டுமே. சத்து நிறைந்தது; சாறு நிறைந்தது; சாரம் உள்ளது; அனைவராலும் விரும்பப்படத்தக்கது.

“கிச்சிலிப்பழத்தால் என்னை ஆற்றுங்கள்” என்று சூலமித்தி கூறுகிறதை வாசிக்கிறோம். நோய்வாய்ப்பட்டவர்கள், பெலவீனமடைந்தவர்கள், மனமடிவானவர்கள், சோர்வுற்றவர்கள் இதை பருகினால் உடனே பலமடைந்து ஆற்றப்படுவர்; பெலன் பெற்று தேற்றப்படுவர்; மனதிற்கு பெலன் தந்து ஆறுதல்படுவர். இப்படிப்பட்ட நல்ல சத்தான கனியை புசிக்கும் எவரும் அதற்குரிய பெலனை தங்களில் பெறுவார்கள். அதுபோல, கிச்சிலிப்பழம் என்றழைக்கப்படுகிற ஆப்பிள் பழத்தின் கனி மட்டுமல்ல, ஆப்பிள் என்ற சொல்லில் உள்ள எழுத்தின் பொருளும் நமக்கு நம் குடும்பத்திற்கு பெலன் தரவல்லவை. அதைப்பற்றி பார்ப்போம்.

கிச்சிலிப்பழம் – ஆப்பிள் பழம் – APPLE


A P P L E


A – Atmosphere – To Creat a Spritual atmosphere in the family – ஆவிக்குரிய சூழலை குடும்பத்தில் உருவாக்குதல்

P – Partner – Loving your Life Partner Deeply – வாழ்க்கை துணைவரை ஆழமாக நேசித்தல்

P – Prayer – To give importance to prayer in your family – குடும்பத்தில் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்

L – Learn the Bible / Read the Bible – வேதத்தைக் கற்றுக் கொள்ளுதல் / வேதத்தை வாசித்தல்

E – Evangelism Work – சுவிசேஷப்பணி செய்தல்

A – Atmosphere – To Creat a Spritual atmosphere in the family – ஆவிக்குரிய சூழலை குடும்பத்தில் உருவாக்குதல்


அ) ஆவிக்குரிய அலங்காரம்:

ஒவ்வொரு வீடும் தேவாலயம்போல் மாற வேண்டும். வீட்டை காணும்போது அல்லது உள்ளே பிரவேசிக்கும்போது அதன் தோற்றம் அமைப்பு ஆவிக்குரிய உன்னத உணர்வை பிறருக்கு கொண்டு வருகிறதாய் காணப்பட வேண்டும்.

எண்ணாகமம்: 24:5,6 – “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தன மரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது”.

ஒவ்வொரு அறைகளிலும் அந்தந்த அறைகளுக்குரிய பொருத்தமான வேதவசனங்கள் எழுதி ஒட்டப்படுதல் மனநிறைவை, தேவ பிரசன்னத்தை உணரும்படி செய்திடும்.

நாம் வசிக்கும் ஒவ்வொரு அறைகளிலும் தேவ பிரசன்னத்தை கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும். உபாகமம்: 6:4-9 – வேத வசனங்கள் வீட்டுச்சுவர்களில் அலங்கரிக்க வேண்டும். சபையின் தரிசனங்கள், இலக்குகள், ஆராதனை நேரங்கள், ஜெப நேரங்களின் கால அட்டவணை போன்றவைகள் எழுதி கண்களில் படும்படி ஒட்டப்பட வேண்டும்.

ஆ) பரிசுத்தமாக்குதல்:

உபாகமம்: 23:14 – “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக் கொடுக்கவும், உன் பாளையத்திற்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளையம் சுத்தமாயிருக்கக்கடவது”.
வீட்டில் உள்ள வாலிபபிள்ளைகள் கண்டகண்ட நடிகர், நடிகையர் படங்கள் மற்றும் தேவையற்ற இயற்கை காட்சிகள், வாகன படங்கள், மாம்ச மலைகளின் உடல் தோற்ற படங்கள் ஆகியவற்றை சுவற்றில் ஒட்டி வீட்டை அசுசிபடுத்துவார்கள். இலவச காலண்டர்கள் மூலமாக வரும் விக்கிரகபடங்கள் இவைகளை அப்புறப்படுத்தி வீட்டை பரிசுத்தமாக்கி தூய்மைப்படுத்த வேண்டும். நமக்கே தெரியாமல் நம் வீட்டில் விக்கிரக சிலைகள், படங்கள், ஜெபமாலைகள், சிலுவைகள் என புகுந்து விடும். அவைகளை அப்புறப்படுத்தி பரிசுத்தமாக்க வேண்டும்.

செல்போன் ரிங்டோனில் ஒருசில தேவபிள்ளைகள் சினிமா பாடல்களை வைத்திருப்பார்கள். அது அகற்றப்பட வேண்டும். வாகனங்களில் தேவையற்ற அடையாளங்கள், அடையாளக் குறியீடுகள் அலங்காரம் என்ற பெயர்களில் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் பரிசுத்த பிரயாணத்திற்கும், அவரது சமூகம் நமக்கு முன் சென்று பாதைகளை செவ்வையாக்குவதற்கும் உபயோகமாயிருக்கும். நம் வாகனங்களில் வசனங்களும், கைப்பிரதிகளும், புதிய ஏற்பாடுகளும், வேதாகமமும் இருப்பது ஆசீர்வாதத்தை கொண்டு வரும்.

இ) அணுகுமுறை:

நம் வசிப்பிடங்களில் நாம் வாழும்போது, நம்மைச் சுற்றியிருப்போருடன் நல்ல கிறிஸ்துவ பண்புகளையும், அறநெறிகளையும் நாம் வெளிப்படுத்த வேண்டும். நம்முடைய சொற்கள், அணுகுமுறை நற்பண்புகள் நிறைந்தவையாகவும், இனிமையானதாகவும் காணப்படுதல் மிக அவசியம். நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கர்த்தருடைய பிள்ளைகள் என்கிற உணர்வு நம் இருதயங்களில் எப்போதும் இருக்க வேண்டும். அந்த உணர்வு நம்மை எச்சூழலிலும் நம்மை ஜீவனுள்ள சாட்சியாக நிலைநிறுத்தும். நம்மிடம் அணுகுபவர்கள் நம்மிடம் தேவபிரசன்னத்தை காண வேண்டும்.

2பேதுரு: 1:4-8 – உள்ள வசனங்களின் படி “திவ்விய சுபாவமும்”, ரோமர்: 15:14 – ன் படி “நற்குணங்களும்”, கலாத்தியர்: 5:22 – ன் படி “ஆவியின் கனிகளும்” நிறைந்தவர்களாய் காணப்படுவோமானால் ஆவிக்குரிய சூழலை எந்த நிலையிலும், எவ்விடங்களிலும் நம்மால் கொண்டு வரவும், ஏற்படுத்தவும் முடியும் என்பதில் ஐயமில்லை.

P – Partner – Loving your Life Partner Deeply – வாழ்க்கை துணைவரை ஆழமாக நேசித்தல்


அ) ஏற்ற துணை:

ஆதியாகமம்: 2:18 – “பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்”. ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படிப்பட்ட திருமணம் நடந்திருந்தாலும் சரி… தேவன் அவர்களுக்கு ஏற்றத் துணையைத்தான் உண்டாக்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அப்படியிருக்க, ஏன் ஒருசில கணவன் மனைவிக்குள் பிரிவினைகள்? கருத்து வேறுபாடுகள்? 

ஏனென்றால், வைத்து வாழ வழி தெரிவதில்லை. தேவன் கொடுத்த துணை என்னவோ ஏற்ற துணைதான். அதை வைத்து வழிநடத்தவோ, கையாளவோ தெரிவதில்லை. அதனால்தான் கருத்து வேறுபாடுகளும், பிரிவினைகளும். எதையும் சரியாக கையாளுகிற முறையை அறிந்திருந்தால் சீறும் சிங்கத்தைக்கூட அடக்கியாளலாம். பாயும் பாம்பைக்கூட பெட்டியில் அடக்கலாம். கையாளும் விதத்தைக் கர்த்தரிடம் சாலமோன் கேட்டதைப்போல (1இராஜாக்கள்: 3:5-14) ஜெபத்தில் தேவனிடம் கேட்டால், “… கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்” தேவனாகிய கர்த்தர் கையாளும் திறனை உங்களுக்குக் கற்றுத்தருவார்.(சங்கீதம்: 144:1).

ஆ) கிச்சிலிப் பழங்களால் ஆற்றுங்கள்:

தேவன் தந்த துணைவரை நேசியுங்கள். ஆழமாக நேசியுங்கள். யோபுவின் மனைவியைப்போல, ஆசீர்வாதம் இருக்கும் வரை மட்டும் நேசிப்பது, குறைவு ஏற்பட்டதும் ‘ஜீவனை விடு’ என்பது போன்ற நிலை வேண்டவே வேண்டாம். கிச்சிலிப்பழம் எப்படிப்பட்ட பெலவீனனையும் பெலப்படுத்தக்கூடிய சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதுபோல, நாமும் நம் துணைவருக்கு/துணைவிக்கு எந்த நிலையிலும், எச்சூழலிலும் ஆற்றித்தேற்றிட, ஆறுதல்  மற்றும் ஆதரவு தந்திடும் வகையில் காணப்பட வேண்டும். உங்களிடம் நல்ல இருதயம் உண்டு நல்ல மனமும் உண்டு. அதற்குள் நல்ல குணங்களும், திவ்விய சுபாவங்களும் உண்டு. அதை அவ்வப்போது உங்கள் துணையிடம் வெளிப்படுத்துங்கள்.

இ) அக்கரைக்குப் போங்கள்:

மத்தேயு: 8:18 – “பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதைக் இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்” மக்கள் நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள அக்கரைக்குப் போனார்.

யோவான்: 14:12,13 – யோவான்ஸ்நானகன் தலை சிரச்சேதம் பண்ணப்பட்ட சங்கதியை இயேசு அறிந்தவுடன், அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்று அக்கரைக்கு அழைத்துச் சென்றார்.

வாழ்க்கைத் துணைவரை/துணைவியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இப்படியிருக்க வேண்டும். 

வியாபாரச்சூழலில் நெருக்கம், உறவினர்களின் போராட்டம், ஊழியத்தில் சுணக்கம், சத்துருக்களினால் ஏற்படும் மனமடிவு போன்ற சூழ்நிலைகளில் மனஅழுத்தம், மனப்போராட்டம் ஏற்பட்டு மனம் அலசடிப்படும் வேளைகளில் துணையை அக்கரைக்கு அதாவது, சபைக்கோ, ஜெபத்திற்கோ, ஊழியத்திற்கோ அல்லது அருகாமையிலுள்ள சுற்றுலா இடங்களுக்கோ அழைத்துச் சென்று வர வேண்டும். அப்போது அவர்களின் மனஇறுக்கம் தளரும். மனக்குழப்பம் நீங்கி நிம்மதியும், மனத் தெளிவும், புத்துணர்வும் அடைவார்கள்.

வாழ்வின் சூழலுக்கேற்ப அவ்வப்போது “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்” என குடும்பத்தோடு சென்று வாருங்கள்.

ஈ) அதைரியப்படுத்தாதிருங்கள்:

எஸ்தர்: 6:13 – “ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷீக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷீம் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள்”

சிநேகிதர்கள், உறவினர்கள், அறிமுகமற்றவர்கள் யாராயிருந்தாலும் அதைரியப்படும்படி பேசலாம். ஆனால், துணைவரோ/துணைவியோ அப்படி பேசலாகாது. அப்படிப்பேசினால் ஏற்ற துணை அல்ல, வினை. ஏற்கனவே நொந்துபோய்தான் துணைவரோ/துணைவியோ மனம் விட்டு, நம்பி, உங்களிடம் பேசுகிறார். அதற்கு ஆறுதலாகவோ, அல்லது மாற்றுக் கருத்து அதாவது தீர்வு உண்டாக, சமாதானம் உண்டாக வழி சொல்ல வேண்டியதை விடுத்து, அதைரியப்படும்படி பேசுவது அழகல்ல. அது அனைத்து சுவைகளை தன்னகத்தே கொண்டுள்ள ஆப்பிளின் சுவையல்ல. திவ்விய சுபாவமல்ல. ஆழமான அன்புடையவர்களின் பண்பு இதுவல்ல. நம்பி வாழும் நம் துணைவரே/துணைவியே நம்மை அதைரியப்படுத்தினால் நம்மை வேறு யார்தான் ஆற்றித் தேற்ற முடியும்?! 

எனவே, உங்கள் துணைவர்/துணைவியை ஆழமாய் நேசியுங்கள். ஆழமான அன்பில் அழிவில்லை. ஆழமான அன்பு ஆசீர்வாதத்தையும் குடும்பத்தில் சமாதானத்தையும் கொண்டு வரும்.

P – Prayer – To give importance to prayer in your family – குடும்பத்தில் ஜெபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல்


ஆதாமின் காலங்களில் மனிதன் கடவுளோடு தொடர்பு கொள்ள பலிபீடங்கள் கட்டி, பலி செலுத்தி, பலியின் மூலம் தொடர்பு கொண்டான். பின்பு, மோசேயின் நாட்களில் ஆசரிப்புக்கூடாரத்தில் உடன்படிக்கை பெட்டியின் மூலம் தொடர்பு கொண்டனர். சாலமோனின் நாட்களில் தேவாலயத்தில் ஜெபம் பண்ணுவதின் மூலம் தொடர்பு கொண்டனர். மொத்தத்தில் ஜெபமே தேவனுக்கும் மனிதனுக்கும் ஒரு தொடர்பு நிலையை ஏற்படுத்தியது. 

ஜெபமில்லாவிட்டால் தேவனுக்கும் மனிதனுக்கும்  தொடர்பும் உறவும் இல்லாமல் போய்விடும். அப்படி தொடர்போ உறவோ அற்ற நிலையில் காணப்படும் ஒருமனிதனுடைய வாழ்வில் பிசாசின் கிரியைகள் அதிமதிகமாய் காணப்படும். அப்படிப்பட்டவர்களால் நிம்மதியாய் வாழ இயலாது. கண்ணீர், துக்கம், கவலை, நித்தமும் போராட்டம் என தொடர்ந்தேர்ச்சியாய் சாத்தானால் வாட்டி வதைக்கப்படுவார்கள். அவைகளிலிருந்து தப்ப ஒரே வழி – ஜெபம் மட்டுமே.

அநேகருக்கு ஜெபம் தெரியும்; ஆனால் ஜெபிக்கத் தெரியாது. ஜெபம் அறிவார்கள்; ஆனால், ஜெபம் பண்ண அறியார்கள். இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்களுடைய ஜெபம் என்கிற பலிபீடம் இடிந்துபோய் பாழாய்க் கிடக்கிறது. அதை புதுப்பிக்கத் தெரியவில்லை. எடுத்துக்கட்டவும் ஆளில்லை.

குடும்ப ஜெபம்:

அனைத்து குடும்பங்களிலும் குடும்ப பலிபீடத்தை பிசாசு உடைக்க விரும்புகிறான். குடும்ப ஜெபம் மிகவும் பலவீனப்பட்ட நிலையில்தான் அநேக குடும்பங்களில் காணப்படுகிறது. அதேபோல தனி ஜெபமும் குறைந்தே காணப்படுகிறது. இந்நாட்களில் சபையாக கூடி ஜெபிப்பதிலும் குறைவிருக்கிறது. ஞாயிற்றுகிழமை ஆராதனைக்கு வருகிறதைபோல ஜனங்கள் ஜெபத்திற்கும் சபைகளை நோக்கி வரும் காலம் உண்டாக விழிப்போடு ஜெபிப்போம்.

குடும்ப ஜெபம் குறைவுபட்டால் குடும்பத்தில் குறைவு வரும். அந்த குறைவு ஒன்றோடு நின்று விடாது. ஒவ்வொன்றிலும் குறைவுகள் தொடர ஆரம்பிக்கும். வாழ்க்கை படகு மூழ்குவதற்குள் குடும்ப ஜெபம் செப்பனிடப்பட வேண்டும்.

குடும்ப ஜெபம் எப்படியெல்லாம் செப்பனிடலாம்?

காலையில் எழுந்ததும் குடும்பமாக ஜெபிக்கலாம். இரவில் தூங்கச் செல்லுமுன் குடும்பமாக கூடி ஜெபிக்கலாம்.

காலையில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது ஜெபித்து அனுப்பலாம்

சமைக்கத் தொடங்கும்முன் ஜெபித்து சமையலை ஆரம்பிக்கலாம்

சாப்பிடும் முன் ஜெபித்து சாப்பிட வைக்கலாம்

வீட்டில் எந்த வேலை செய்ய ஆரம்பித்தாலும், ஜெபித்த பின்னரே ஆரம்பிக்கலாம்

பிரயாணம் செய்யும் முன் ஜெபித்து தொடங்கலாம்

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கியவுடன் உபயோகப்படுத்தாமல், பிரதிஷ்டை செய்து ஜெபித்த பின் பயன்படுத்தலாம்

பிள்ளைகள் படிக்கும் முன் ஜெபித்து பின்பு படிக்கவோ, எழுதவோ செய்யலாம்

விடுமுறை நாட்களில் குடும்பமாக ஒரு நாள் உபவாசித்து ஜெபிக்கலாம்

சரீரத்தில் பெலவீனப்படும் நேரங்களில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஜெபிக்க வைக்கலாம்

மாதத்தில் ஒருமுறையாவது குடும்ப ஜெபத்திற்கு ஸ்தலசபை போதகரை அழைத்து வழிநடத்தச் சொல்லலாம்

விசேஷ தினங்களில் பிறந்தநாள், திருமண நாள், நினைவுநாள் வீடுகளில் ஜெபக்கூட்டங்கள் நடத்தலாம்

L – Learn the Bible / Read the Bible – வேதத்தைக் கற்றுக் கொள்ளுதல் / வேதத்தை வாசித்தல்


வேதத்தை வாசித்தால் மட்டும் போதாது. அதை கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். வேதத்தை வாசிப்பது என்பது வேறு; கற்றுக் கொள்வது என்பது வேறு. வாசித்தால் மட்டும் போதாது கற்றுக் கொள்ள வேண்டும். வேதாகம பின்னணியம், வேதத்தின் அட்டவணை, ஒவ்வொரு வசனத்தின் ஆழமும் விளக்கமும் அறிதல், ஆராய்தல், தியானித்தல், வசனத்தை மனனம் செய்தல், நடைமுறைப்படுத்துதல், விசுவாசித்தல், வசனத்தைக் கொண்டு சொல்லிச் சொல்லி ஜெபித்தல் என நாம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் ஏராளம் ஏராளம் உண்டு.

நாம் நம் வேதத்தைக் கற்றுக் கொண்டது சமுத்திர ஜலத்தில் ஒரு துளியளவுதான். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது…   ஏராளம்! ஏராளம்! அப்பப்பா… அதை நினைத்தால் உள்ளம் உவகை கொள்ளும்! வேதத்தின் மகத்துவங்களை அறிய நம் மனம் விரும்ப வேண்டும். வேத வசனத்தின்படி வாழ நம்மை அர்ப்பணிக்க வேண்டும். வேதத்தை வாசிக்கவும் கற்றுக் கொள்ளவும் நாம் நேரத்தையும், காலத்தையும், சமயத்தையும் சற்று ஒதுக்கித்தான் தீர வேண்டும்.

சபையில் நடக்கின்ற வேதபாட வகுப்பில் தவறாமல் சென்று பயின்று வர வேண்டும். வேதத்தை வாசிக்க வாசிக்க நம்மில் மாபெரும் மாற்றங்கள் உருவாகும். மறுரூபமடைவோம். நற்குணசாலிகளாக திகழ்வோம் (அப்போஸ்தலர்: 17:11).

E – Evangelism Work – சுவிசேஷப்பணி செய்தல்


ஆக்கில்லா பிரிஸ்கில்லா குடும்பமாக தேவனுடைய ராஜ்யத்தை குறித்து திட்டமாய் விவரித்து ஊழியம் செய்தான் (அப்போஸ்தலர்: 18:26). தங்களின் உலகப்பிரகாரமான கூடாரத் தொழில் செய்துகொண்டே ஊழித்தை செய்து வந்வர்கள் இவர்கள் (அப்போஸ்தலர்: 18:3). காரியம் இப்படியாயிருக்க, இவர்களைப்போல நாமும் ஏன் பகுதிநேர ஊழியமோ, பவுலைப்போல முழுநேர ஊழியமோ செய்திட முன்வரக்கூடாது?!

2தீமோத்தேயு: 4:2 – “சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு…”

1கொரிந்தியர்: 9:16 – “சுவிசேஷத்தை நான் பிரசங்கித்து வந்தும், மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை. அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ”.

இவ்வசனங்கள் அனைத்தும் நமக்குத் தெரியாததல்ல… அறியாததல்ல. பலமுறை காதால் கேட்டதுதான். என்ன …. உணர்வுதான் சற்று மந்தம். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இவ்வசனங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க உணர்வடைந்தால் போதும் எழுப்புதல் வெகு சீக்கிரத்தில் அனைவரிலும் பற்றியெரியும்.

சுவிசேஷப்பணி எங்கிருந்து ஆரம்பிப்பது?

வேறு எங்கு? நம் வீட்டிலிருந்துதான்.

ஏனென்றால்….

தேவனுடைய நியாயத்தீர்ப்பு முதலில் தேவனுடைய வீட்டிலிருந்துதான் முதலில் தொடங்குமாம் 1பேதுரு: 4:17 – “நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?”

முதலில் நம்வீட்டில் ஆரம்பிக்க வேண்டும். நம் வீட்டில் இன்னும் யார் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் என கண்டறிந்து இரட்சிப்பிற்குள் வழிநடத்தப்பட கவனத்தில் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, நம் சுற்றத்தார் யாரெல்லாம் இன்னும் சந்திக்கப்பட வில்லை என கண்டறிந்து, சுவிசேஷம் சொல்ல வேண்டும்.

மூன்றாவதாக, நம் சுற்றுப்புறத்தார் இயேசுவை அறியாதோர் அறிந்திட சுவிசேஷம் அறிவிக்கப்பட வேண்டும்.

நான்காவதாக, நமது ஏரியாவில், நமது தெருவில், நமது கிராமத்தில் சந்திக்கப்படாதோர் சந்திக்கப்பட பிரயாசமெடுக்க வேண்டும்.

ஐந்தாவதாக, நமது பட்டணத்தில், அடுத்தடுத்துள்ள பட்டணங்கள் மற்றும் கிராமங்கள் சந்திக்கப்பட கடந்து செல்ல வேண்டும்.

மிக முக்கியமாக, வாரந்தோறும் ஞாயிறு ஆராதனைக்கு செல்லும்போது, வெறுங்கையாய் போகாமல், வாராவாரம் ஒரு புதிய ஆத்துமாவோடு ஆராதனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அதற்கொரு உறுதியான தீர்மானம் எடுங்கள். நம்மை மீட்ட இயேசுவுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய சேவை இது.

 கிச்சிலிப்பழம் என்று சொல்லப்படுகிற ஆப்பிள் பழத்தில் அத்தனை பழங்களிலும் உள்ள சத்துக்களும் நிறைவாகவும் முழுமையாகவும் இதில் காணப்படுவதால் இது சத்தான சுவைமிக்க பழமாகக் காணப்படுவதுபோல், மேலே கண்ட சொற்களின் சுவைகளை நம் வாழ்வில் காண்பிப்போமானால் நம் ஆவிக்குரிய வாழ்வும், பூமிக்குரிய வாழ்வும் ஆசீர்வதிக்கப்பட்ட சாட்சி நிறைந்த வாழ்வு வாழ இயலும். அப்படிப்பட்ட குடும்பம் தேவனால் வழிநடத்தப்பட்டு என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் பெறுவர்.

கர்த்தர் தாமே உங்களனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

பிப்ரவரி 15, 2017

“முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”

Image result for கிரீடம்
“முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”

திறவுகோல் வசனம்: உன்னதப்பாட்டு: 3:11 – “சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”.

தமிழக கிராமப்புறங்களில் ஒருவித பழக்கவழக்கம் மக்களிடையே உண்டு. அதென்னவெனில், பெண்பிள்ளையில்லாத வீடுகளில் ஆண்பிள்ளைக்கு தலையில் சடை பின்னி, பூ வைத்து, தாவணி போட்டு அழகு பார்ப்பார்கள். ஆண்பிள்ளையில்லாத வீடுகளில் பெண்பிள்ளைக்கு ஆண்பிள்ளைக்குரிய ஆடைகளை அணிவித்து வாடா போடா என்று அழைத்து இல்லாத குறையை போக்கிக் கொள்வது வழக்கம்.

அதுபோல, சாலமோனின் தாயாருக்கு ஒருவித பழக்கம் இருந்திருக்கிறதுபோல… அதென்னவெனில், சாலமோனின் சிறுவயதிலேயே தன் மகனுக்கு இராஜ கிரீடம் சூட்டி சூட்டி மகிழ்வாள். எதிர்காலத்தில் தன் மகன் நாடாள வேண்டும் என்ற கனவுகளோடு அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின ராஜ முடி தாங்கிய அக் கிரீடமானது பின்னாட்களில் எப்படி சாலமோனுக்குக் கிடைத்தது என்பதைக் குறித்து இப்பகுதியில் நாம் தியானிப்போமாக.

பெற்றோர்களின் கனவுகள் எல்லாம் பிள்ளைகளின் வாழ்வில் நிறைவேற வேண்டும் என்பது அனைத்து பெற்றோர்களின் விருப்பமாயிருந்தாலும், அது நிறைவேற வேண்டுமானால் அதற்கு அந்த பிள்ளைகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். அதற்கு தேவ கிருபையும், தேவச் செயலும் நேரிட வேண்டும். பிள்ளைகளைக் குறித்ததான கனவுகள் எப்போதும் பெற்றோர்களுக்கு மிக உயர்வானதாகவே காணப்படும். தங்களைப் பார்க்கிலும், தாங்கள் அடைய முடியாத உச்சத்தை, தன் பிள்ளைகள் அடைய வேண்டும் என்பதே ஒவ்வொரு தாய் தந்தையின் விருப்பமாயிருக்கும். அதற்காகவே தங்கள் வாழ்நாளெல்லாம் போராடி பிரயாசப்படுவார்கள். இதை ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்திட வேண்டியது மிக அவசியம்.

நீதிமொழிகள்: 27:24 – “செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?” என்று வேதம் கேட்கிறது.

செல்வம் நிலையாது; கிரீடம் நிலைநிற்குமோ? இரண்டுமே நிலையானதல்ல. இவையிரண்டும் அவரவர் வாழ்வில் நிலைநிற்க தேவதயவு, தேவ கிருபை தேவை. செல்வமும் நிலையான கீர்த்தியும் நிலைநிற்க நாம் என்ன செய்ய வேண்டும்? அதற்கு சாலமோனின் தாயார் சூட்டின முடியோடிருக்கிற அவரை பார்க்க வேண்டும்.  

சாலமோனுக்கு கிரீடம் வருவதற்கு முன்பு இந்த கிரீடம் வேறு இரண்டு பேருக்கு கிடைத்தது. மூன்றாவதாகத்தான் சாலமோனுக்கு கிடைத்தது.

1.   சவுலின் கிரீடம்:

1சாமுவேல்: 8:20 – “சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்த வேண்டும் என்றார்கள்”.

இஸ்ரவேலுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று ஜனங்கள் வற்புறுத்திக் கேட்டபடியினால், ஜனங்களின் விருப்பத்திற்கேற்ப கிடைத்த கிரீடம்தான் சவுலுக்கு கிடைத்த கிரீடம்.

1சாமுவேல்: 8:7 – “அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்”.

ஜெபத்தினாலோ, விசுவாசத்தினாலோ, தேவசித்தத்தினாலோ இஸ்ரவேலுக்கு ராஜா ஏற்படுத்தப்படவில்லை. தேவனுடைய ஆளுகை வேண்டாம் என்று உதறி, புறஜாதியாரைப்போல மனித ஆளுகை – ராஜா வேண்டும் என கேட்டதினால் சவுலுக்கு கிரீடம் கிடைத்தது.

இஸ்ரவேலரின் பிரச்சினையை சற்று உற்றுக் கவனித்துப் பார்த்தால் ஒரு விஷயம் நமக்குப் புலப்படும். வனாந்திரத்தில் கன்றுக்குட்டியை வழிபட்டு விக்கிரகாராதனைக்குள் சென்றார்கள். இங்கு புறஜாதியாரைப்போல ஒரு ராஜாவைக் கேட்டு மனித வழிபாட்டிற்குள் கடந்து செல்கிறார்கள்.

இவ்விரண்டு இடங்களிலும் தேவ ஆளுகையை விட்டு விலகி விக்கிரக ஆராதனைக்குள் நுழைவதை நாம் காண முடியும்.

கிரீடம் – “ஆளுகை”  “அதிகாரம்”  “கீர்த்தி” யைக் காட்டும். கிரீடம் மற்றும் ராஜமுடி தேவனால் கொடுக்கப்படுகிறது. நாம் ஆராதிக்கும் தேவன் இராஜாக்களைத் தள்ளி இராஜாக்களை ஏற்படுத்துகிறவர். அப்படி ராஜ அதிகாரம் பெற்றவர்கள் ராஜாதி ராஜாவாகிய கர்த்தருக்கு கீழ்படிந்து இராஜாங்கத்தில் தேவசித்தம் செய்ய வேண்டும். அப்படி செய்ய மறுத்திட்டபோது கிரீடம் இடம் மாறுகிறது. கிரீடம் நிலையற்றதாகிறது.

2.   தாவீதின் கிரீடம்:

1சாமுவேல்: 13:14 – “இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள் மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ள வில்லையே என்று சொன்னான்”.

சவுலின் கிரீடம் தாவீதுக்கு செல்ல காரணம் – சவுலின் கீழ்படியாமை மட்டும் காரணமல்ல

தாவீது – கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவன். எப்படி? தாவீது துதிப்பவன், ஜெபிப்பவன், ஆராதிப்பவன், புகழ்ந்து பாடுவன். இவைகள்தான் கர்த்தரின் இருதயத்தைத் தாவீது கவர்ந்து கொண்டதின் இரகசியம்.

துதிப்பவனுக்கே கிரீடம்
ஜெபிப்பவனுக்கே கிரீடம்
ஆராதிப்பவனுக்கே கிரீடம்
கர்த்தரைப் பாடுகிறவனுக்கே கிரீடம்

தாவீதுக்கு – மக்களால் மனிதனால் கிரீடம் வரவில்லை. சவுலினால் வரவில்லை. ஆவிக்குரிய தகுதியினால் வந்தது. முதலில் ஆவிக்குரிய தகுதி; பின்பு, கிரீடம்.

சாமுவேல் – இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ண வந்த போது – அவனுக்கு முன்பாக வந்தவர்களின் தோற்றத்தை, முகத்தைக் கண்டு மதிப்பிட்டான். (1சாமுவேல்: 16:6).

சவுலின் வேலைக்காரன் தாவீதின் திறமையைக் கண்டான் (1சாமுவேல்: 16:18)

கர்த்தரோ, தாவீதின் இருதயத்தைக் கண்டார் (1சாமுவேல்: 16:7); சங்கீதம்: 45:1 – “என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக்குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி”. ஆம்! தேவனாகிய கர்த்தர் தாவீதிடம் இப்படிப்பட்ட இருதயத்தைக் கண்டார்.

கிரீடம் – தோற்றத்திற்கும், உருவ அமைப்பிற்கும், திறமைக்கும் அல்ல; நல்ல இருதயத்திற்கே கிரீடம்.

சவுலுக்கு அடுத்து கிரீடம் சவுலின் குமாரனாகிய யோனத்தானுக்கு போக வேண்டிய கிரீடம் – தாவீதுக்கு கிடைத்தது.

ஏன் யோனத்தானுக்கு கிரீடம் கிடைக்கவில்லை?

ராஜாவுக்கு அடுத்து அவரது குமாரனுக்கு கிடைக்க வேண்டியதுதானே முறை?!

“… கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?”

எப்படி இந்த முறை அல்லது வரிசை மாறியது?!!  

யோனத்தான் வேண்டுமானால் தாவீதுக்கு நல்ல நண்பனாக, நல்ல மச்சினனாக இருந்திருக்கலாம். நட்பின் இலக்கணம், நட்பிற்கு ஒரு உதாரணம், உயிர் காப்பான் தோழனாக இருந்திருக்கலாம். அவைகளெல்லாம் நல்ல சுபாவங்கள் தானே தவிர தேவனுடைய இருதயத்தை கவர்ந்து கொள்ளாது.

வேதம் சொல்வதென்ன? உபாகமம்: 6:5,6 – “நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக. இன்று நான் உனக்கு கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது”.
மனிதனோடு உறவாடுவதைவிட மேலானது தேவனோடு உறவாடுவது ஆகும். யோனத்தான் இதில் குறைவு காணப்பட்டான்.

தேவனாகிய கர்த்தருக்குத் தேவையெல்லாம் – தன்னிடத்தில் அன்பு கூறுகிறவன்; தன்னை மகிமைப்படுத்துகிறவன்; தன்னைத் துதிக்கிறவன்; தன்னைப் பாடுகிறவன்; தன்னை ஆராதிப்பவன்; தன்னிடம் ஜெபிப்பவன் மட்டுமே. இதை அறிந்தவர் கிரீடமும் ராஜமுடியும் கீர்த்தியும் அடைவர்; அறியாதவர் அனைத்தையும் இழந்தவராவார்.

இருதயத்திற்கேற்றவனைக் கர்த்தர் தேடும்போது – யோனத்தான் கர்த்தருக்கு முன்பாக தகுதியற்றவனாய் காணப்பட்டான். மனுஷனுக்கு முன்பாக நட்பில் தகுதியானவனாகக் காணப்பட்டவன், கர்த்தருக்கு முன் தகுதியிழந்தவனாக காணப்பட்டான். வெறும் மனித உறவுகள், மனுஷீக சம்பாஷனைகள், மனித நட்புகள் அனைத்தும் கர்த்தருக்கு முன்பாக ஒன்றுமேயில்லை.

3.   சாலமோனின் கிரீடம்:

தாவீதுக்கு அடுத்து அப்சலோமும், அப்சலோமுக்கு பின்பு அதோனியாவும் தாவீதின் கிரீடத்துக்கு ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவரும் அதை அடையமுடியவில்லை. சவுலிடமிருந்த கிரீடம் தாவீதிடம் வந்தது; தாவீதிடம் இருந்த கிரீடம் சாலமோனுக்கு கிடைத்தது எப்படி?

தாவீதின் குமாரன் என்பதினால் மாத்திரம் சாலமோனுக்கு கிரீடம் கிடைக்கவில்லை. கிரீடத்தை அவன் யாரிடமிருந்தும் தட்டிப் பறிக்கவுமில்லை. கிரீடம் அவனுக்கு வந்தடையத்தக்க தகுதியை அவன் பெற்றிருந்தான். அவ்வளவே.

அப்சலோமும், அதோனியாவும் ஆசைப்பட்டனர். ஆனால், அதற்குரிய ஆவிக்குரிய தகுதிகளை தங்களிடம் வளர்த்துக் கொள்ளவோ, தேவனாகிய கர்த்தரின் இருதயத்தை கவர்ந்து கொள்கிற நற்குணங்களோ அவர்களிடத்தில் இல்லாதிருந்தது. தாவீது ராஜாவுக்கு குமாரனாக பிறந்திருந்தால் மட்டும் போதும் என அவர்கள் கருதியிருந்தனர். இராஜகுமாரர்கள் என்கிற தகுதி ஒன்று போதும் என மனக்கணக்கிட்டிருந்தனர்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருப்பதே போதும் இரட்சிப்படைவதற்கு என கருதுவது மிக ஆபத்தானது. ஒவ்வொரு ஆத்துமாவும் தனிப்பட்ட விதத்தில் தேவனுடைய இரட்சிப்பையும், பாவ மன்னிப்பையும் பெற்று மீட்பு பெற வேண்டியது அவசியம்.

சாலமோன் தாவீதுக்கு குமாரனாகப் பிறந்திருந்தும் அதை மட்டும் மேன்மையாக எண்ணி இறுமாந்திடாமல், தேவனோடு தனிப்பட்ட முறையில் உறவாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் ஜெபிக்கக்கூடியவன். கருத்தோடு ஜெபிப்பவன். இராஜாவானதினால் மட்டும் ஜெபிப்பவனல்ல. அப்பொழுது மட்டும் திடீரென ஜெபம் வந்துவிடாது. ஜெபிக்கக்கூடிய ஒருவனால்தான் எவ்விடத்திலும், எந்நிலையிலும் ஜெபிப்பவனாக இருக்க முடியும். அதுவும் தூக்கத்தில் கூட மிகத் தெளிவாகவும், கருத்தாகவும் ஜெபிக்கும் ஜெப ஆவி உடையவனாய் இருக்கிறான். தாவீதின் பிள்ளைகளில் சாலமோன் மட்டுமே நன்கு ஜெபிக்கக்கூடியவனாய் இருந்திருப்பதை வேதத்தில் காண்கிறோம் (1இராஜாக்கள்: 3:5-14).

சவுலுக்கு நிலைத்திராத கிரீடம்
யோனத்தானுக்கு கிடைக்காத கிரீடம்
அப்சலோமுக்கு வாய்க்காத கிரீடம்
அதோனியாவுக்கு அடையமுடியாத கிரீடம்
தாவீதுக்கும், அவனது குமாரனாகிய சாலமோனுக்கும் கிரீடம் வாய்த்தது.

காரணம்?

தாவீது – துதிப்பவன்; ஆராதிப்பவன்; பாடுபவன்; ஜெபிப்பவன்

சாலமோன் – கருத்தாய் ஜெபிப்பவன்

உன்னதப்பாட்டு: 3:11 – “சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”.

இதன் பொருள் என்ன?

சாலமோனை – இரட்சகர் இயேசுவுக்கு ஒப்பிடுகிறேன்

கலியாண நாள் – நாம் இரட்சிக்கப்பட்ட நாள்; அவரோடு உடன்படிக்கை செய்த நாள்

மனமகிழ்ச்சியின் நாள் – ஞாயிறு ஆராதனை; வாரந்தோறும் ஆராதனையில் மனமகிழ்ச்சியோடு ஆராதித்தல்

சீயோன் குமாரத்திகளே – சபையோரே! கர்த்தரால் மீட்கப்பட்டவர்களே!

இப்பொழுது வசனத்தை இப்படி வாசித்துப் பாருங்களேன்…

“கர்த்தரால் மீட்கப்பட்டவர்களே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய (தேவனை) இயேசுவை இரட்சிக்கப்பட்ட நாளிலும், ஞாயிறு ஆராதனையிலும் கிரீடம் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்”

சங்கீதம்: 34:5 – “அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை”

கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து நம்மை பாவத்திலிருந்தும், சாபங்களிலிருந்தும், வியாதிகளிலிருந்தும், மரணக்கட்டிலிருந்தும், நரகாக்கினையிலிருந்தும் மீட்டெடுக்க, தம் ஜீவனையே நமக்காக பலியாகக் கொடுத்தார். அதற்கு இவ்வுலகம் கொடுத்த பரிசு – தலையில் முள்கிரீடம்.

நம்மை மீட்க தலையில் முள்கிரீடம் சூட்டப்பட்டு ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள். மீட்படைவீர்கள்.

நம் வாழ்வு நிலைபெற, வாழ்வு வளம் பெற, செல்வம் நிலைத்திருக்க ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நினைத்துப் பார்த்திராத மேன்மை பெற ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நிலையற்ற வாழ்வில் நிம்மதி பெற ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நிலையற்ற வாழ்வில் நிரந்தரமான ஆசீவாதம் பெற ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நம் தலையில் கிரீடம் சூட்டி மகிழ, அவர் தம் தலையில் முள்கிரீடம் சூட்டிக் கொண்ட ராஜமுடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்

நம் வாழ்வில் அனைத்தும் ஈடேற, நிலைபெற – துதியுங்கள், ஜெபியுங்கள், பாடுங்கள், ஆராதியுங்கள்

கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்!