தரிசனத்தை தவற விட்டவர்கள்
வேட்டைக்காரன் ஒருவன் சிறந்த இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்தார். சிறுவயது முதல் மான் வேட்டையாடுவதற்காக பயிற்சிகள் பல கொடுத்தான். வேட்டை நாய் வளர்ந்தது. வாலிபமாகியது. சிறுசிறு வேட்டைகளில் பயிற்சி எடுத்து, பின்பு, மான் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக வேட்டையில் வெற்றி கண்டு எஜமானனை சந்தோஷப்படுத்தியது.
ஒரு நாள் வேட்டைக்கு செல்லும்போது இந்த நாய் முதலாவது மானைத் துரத்தியது. மான் வேகமாக ஓடியது. வேட்டை நாயும் வேகமாக பின் தொடர்ந்து ஓடியது. திடீரென்று கரடி ஒன்று மானுக்கும், வேட்டை நாய்க்கும் இடையில் குறுக்கே ஓடியது.
நாய் தன்னுடைய ஓட்டத்தையும், திசையையும் மாற்றிக் கொண்டது. மானை வேட்டையாடுவதை விட்டுவிட்டு கரடியைத் துரத்த ஆரம்பித்தது. கரடியை நெருங்கும் வேளையில் ஒரு முயல் குறுக்கிட்டது. வேட்டைநாய் தன் ஓட்டத்தை மாற்றிக் கொண்டு முயலைத் துரத்தியது. முயலும் வேகமாய் ஓடி மாயமாய் மறைந்து விட்டது.
வேட்டைநாய் தன் ஓட்டத்தின் குறுக்கே வந்த ஒரு எலியைத் துரத்தியது. எலி தன் வளைக்குள் போய்ப் பதுங்கிக் கொண்டது. வேட்டைநாய் எலியின் வளையைச் சுற்றிசுற்றி வந்து வானத்தைப் பார்த்து குலைத்தது. எலி வளையை மோப்பம் பிடித்துப் பார்த்தது. ஒன்றும் சிக்கவில்லை.
கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பார்களே! அதுபோல வேட்டை நாய் நாடகமாடியது. நடித்தது. வேட்டையில் வெற்றி கிட்டவில்லை. ஆனால் குரைப்பதில் குறைவில்லை.
நாயின் எஜமான் ஏமாற்றமடைந்தான். பெரிய நோக்கத்தோடு இந்த நாயை வளர்த்தேன். அதுவோ கீழ்த்தரமான காரியங்களுக்காக தன் பாதையை மாற்றிக் கொள்கிறதே என்று அங்கலாய்த்தான்.
வாழ்க்கையின் குறுக்கீடுகள் நமது தரிசனத்தை தவிடு பொடியாக்கி விடக்கூடாது. மேலான தரிசனத்தோடு அழைக்கப்பட்ட பலர் கீழான காரியங்களுக்காக தங்கள் வெளிப்படுத்தல்களை மண்ணுக்குள் புதைத்து விடக்கூடாது.
அப்போஸ்தலன் பவுலுக்கு கிடைத்த வெளிப்படுத்தல்கள், தரிசனங்கள் இன்று நம் எல்லோருக்கும் கிடைப்பதாக. பிலிப்பியர்: 3:14 - ல் தன்னுடைய அழைப்பு உன்னதமானது, மேலானது என்கிறார். எனவே, மேலான காரியங்களுக்காய் வாழ்ந்தார். ஊழியம் செய்தார். பவுல் மூலம் எருசலேம் முதல் இல்லிரிக்கம் (இத்தாலி) தேசம் வரைக்கும் எழுப்புதல் அக்கினி பற்றியெரிந்தது.
எழுப்புதலுக்கு தடையாயிருப்பவர்கள் வெளிப்படுத்தல் மற்றும் தரிசனம் இல்லாதவர்கள்தான். வெளிப்படுத்தல் இல்லாத ஊழியம் வனாந்திர வாழ்க்கை போலதான். தாவீது சீயோன் கோட்டையை பிடிக்கப் போனபோது குருடரும், சப்பாணிகளும் தடுத்தார்கள்(2சாமுவேல்: 5:6). ஆவிக்குரிய கண்கள் இல்லாதவர்கள் குருடர்கள்தான். தேவ ஆவியின் வெளிப்படுத்தல் தரிசனம் இல்லாதவர்கள் குருடர்கள்தான். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில்தானே விழுவார்கள் (1சாமுவேல்: 3:2).
எழுப்புதலைப் பற்றிய தரிசனம், வெளிப்படுத்தல் பெறாதவர் ஆவிக்குரிய சபைகளின் சப்பாணிகள்தான். ஆவிக்குரிய சப்பாணிகளும் எழுப்புதலுக்கு தடைக்கற்கள்தான்.
தேவ ஊழியத்தை செய்ய நேரம் இல்லாதபடி வேறு அலுவல்களில் நேரத்தை செலவிடுகிறவர்கள் ஊழியம் செய்ய முடியாத சப்பாணிகள்தானே.
ஆனாலும், தாவீது தேவனுக்குப் பிரியமானவனாய் இருந்தபடியால் சீயோன் கோட்டையைப் பிடித்தான். நாமும் இந்திய தேசமாகிய விக்கிரக கோட்டையைப் பிடிப்போம். தரிசனத்தை தவறவிடாமல், குறிக்கோளோடு செயல்பட்டு இந்தியாவில் எழுப்புதல் அக்கினி பற்றியெரிய தீவிரமாய் செயல்படுவோம்.
நமது வாழ்வில் எந்த அளவுக்கு அர்ப்பணிப்பு, ஒப்புக் கொடுத்தல், பிரதிஷ்டை உள்ளதோ, அந்த அளவுக்குத்தான் நமக்கு தரிசனம், வெளிப்பாடு கிடைக்கும். எந்த அளவுக்கு தரிசனமும் வெளிப்பாடும் கிடைக்குமோ அந்த அளவுக்குத்தான் விசுவாசம் இருக்கும். எந்த அளவில் நாம் விசுவாசிக்கிறோமோ அந்த அளவில்தான் நமது வாழ்வில் தேவனின் கிரியைகளும் அற்புதங்களும் நடக்கும்.
"தன்னை முற்றிலுமாய் தேவனுக்கு அர்ப்பணிக்கும் ஒருவனைக் கொண்டு தேவன் எந்த அளவில் கிரியை செய்வார் என்று அளவிட்டுக் கூற முடியாது" என்கிறார் தேவ மனிதர் வில்லிபிரே.
அழைத்த தேவனின் நோக்கத்தை தவற விடாமல் கர்த்தருக்கென்று செய்த பிரதிஷ்டையை அர்ப்பணிப்பை இன்றைய பொழுதுபோக்கு அம்சங்கள், முகநூல், டுவிட்டர், வலைதளங்கள் ஆக்கிரமித்து திசை திருப்பி விடாதபடிக்கு விழித்திருந்து நம்மை காத்துக் கொள்வோம்.
நாமும் நமது ஊழியங்களைப்பற்றிய மேலான தரிசனங்களை, குறிக்கோள்களை, வெளிப்படுத்தல்களை பெற்றுக் கொள்வோமாக. அதற்காகவே வாழ்வோமாக! எழுப்புதலின் வாய்க்காலாக தேவன் உங்களை மாற்றுவாராக! ஆமென்!. அல்லேலூயா!
--- Selected ---