கடவுள் ஒரு திரித்துவ தேவன்
(திரித்துவம் - என்றால் - மூன்றிலொருவர்)
பழைய
ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த பக்தர்களுக்கு தேவன் தாம் ஒருவர் என்பதை
வெளிப்படுத்தினார். ஏனென்றால், அன்றைய சூழலில் மக்கள் பல தெய்வ
வழிபாடுகளையும், இயற்கைகளையும் வணங்கி வந்தனர். பழைய ஏற்பாட்ட கால கானானிய
மக்கள் - “பாம்பை” தெய்வமாக வணங்கி வந்தனர். இன்னொரு கூட்டம் மக்கள்
“பாகால்” என்று சொல்லக்கூடிய விக்ரக தெய்வத்தை ( மழைக்காக, பிள்ளை
பேறுக்காக) வணங்கி வந்தனர். இதுவும் கானானிய தெய்வம்தான்.
எபிரேயர்கள் ஒரே தேவனை அறிந்திருந்தனர். “யாவே”, “அடோனாய்”,
“ஏலோஹீம்” என்ற எபிரேய சொற்கள் ஒன்றுக்கு மேற்பட்டதை குறிக்கிறது.
பழைய
ஏற்பாட்டை நன்கு அறிந்திருந்த அப்போஸ்தலனாகிய பவுல், தான் எழுதிய
நிரூபத்தின் இறுதியில்திரியேக தேவனின் ஆசீர்வாதத்தை கூறுகிறார்.
2கொரிந்தியர்: 13:14 - “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும்,
தேவனுடைய அன்பும், பரிசுத்தாவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட
இருப்பதாக ஆமென்” என எழுதுகிறார்.
இயேசுவின் நெருங்கிய சீஷனாகிய
பேதுரு, திரியேக தேவனாகிய தேவன் தன்னை எவ்வாறு தெரிந்தெடுத்தார் என்று
எழுதுவதை 1பேதுரு: 1:2 - ல் - “பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே,
ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்படிதலுக்கும் இயேசு
கிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் ....” என்று எழுதுகிறார்.
பழைய ஏற்பாட்டில் திரித்துவத்தை குறித்த வசனங்கள்:
பிதா: ஏசாயா: 63:16 - ”...கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்...”
குமாரன் (இயேசு):
நிதிமொழிகள்: 30:4 - “வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றை தமது
கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்?
பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர்
குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
ஏசாயா: 9:6 - “நமக்கு ஒரு பாலகன்
பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர்
தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள
தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.”
பரிசுத்தாவி: ஆதியாகமம்: 1:2 - “...ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்”
ஏசாயா:
11:2 - “ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும்
பெலனையையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்கு பயப்படுகிற
பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர் மேல்
தங்கியிருப்பார்”
ஏசாயா: 48:16 - “ நீங்கள் என் சமீபத்தில் வந்து,
நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதி முதற் கொண்டு அந்தரங்கத்தில்
பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ
கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்”
ஏசாயா:
61:1 - “கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்;
சிறுமைபட்டவர்களுக்கு சுவிஷேசத்தை அறிவிக்க கர்த்தர் என்னை அபிஷேகம்
பண்ணினார்....”
ஏசாயா: 63:10 - “அவர்களோ கலகம் பண்ணி, அவருடைய பரிசுத்தாவியை விசனப்படுத்தினார்கள்;...”
ஏசாயா: 6:3 -ல் -
“...சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்...”
- என்று மூன்று முறை துதிப்பதை பார்க்கிறோம். அதின் உட்கருத்து திரியேக
தேவன் அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி ஆகிய மூன்று ஆளத்துவத்திற்கும்
சோ்த்து தேவ தூதர்கள் 3 முறை துதிப்பதை காண முடிகிறது.
ரோமர்: 9:5
- “பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில்
பிறந்தாரே; இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான
தேவன். ஆமென்” - அந்த வசனத்திலிருந்த என்ன தெரிந்து கொள்கிறோம்?
பழைய
ஏற்பாட்டு யூதரும் புறஜாதியாரும் இயேசுவின் நிமித்தம் இணைந்து ஒரே தேவனை
விசுவாசிப்போம் என சாட்சி சொல்ல முடிந்ததை தெரிந்து கொள்ளலாம்.
தேவன்
திரித்துவர் என்றும் , தேவன் மூன்றில் ஒன்றானவர் என்றும், மூன்று ஆள்
தத்துவங்களை உடையவர் என்றும் புரிந்து கொள்ள சில உதாரணங்களை காட்டுகிறேன். (
உடனே கடவுளை இதற்கு இணை வைத்து விட்டாரே! என கூறி விடாதீர்கள்.
வாசிப்பவர்கள் விளங்கிக் கொள்ளவே இவ்வுதாரணம்):
1. முக்கோணத்திற்கு
மூன்று பக்கங்கள் உண்டு. அதில் ஒரு பக்கம் இல்லை என்றாலும் அது முக்கோணம்
என்று அழைக்க மாட்டோம். மூன்று பக்கங்களும் இருந்தால்தான் அது முக்கோணம்.
அதுபோல கடவுளும் முக்கோணத்தைபோல மூன்று ஆளத்துவ அமைப்பாக காணப்படுகிறார்.
2.
தண்ணீர். இது ஒரு திரவ பொருள். இது மூன்று விதமாக இருப்பதை காண
முடியும். 1. திரவ நிலை 2. திட நிலை 3. ஆவி நிலை. தண்ணீர் ஒன்றுதான்.
நிலைகளை பாருங்கள். இது போல கடவுள் மூவரில் ஒருவராக விளங்குகிறார்.
செயல்படுகிறார்.
3. மனிதனின் ஆளத்துவம் : நமக்குள் மூன்று அமைப்பு
இருப்பதை போல ஆளத்துவம் இருப்பதுபோல, கடவுளுக்குள்ளும் மூன்று ஆளத்துவங்கள்
இருக்கின்றன.
கடவுளின் அமைப்பை பற்றி போதுமான அளவிற்கு விளக்கி விட்டேன் என நினைக்கிறேன். கடைசியாக ஒன்று:
திரித்துவத்தை
விளக்குவது சற்று கடினமான காரியமாக இருந்தாலும், விளங்கிக் கொள்வதும்
சற்று கடினமாக இருந்தாலும், முடியாவிட்டாலும் கூட வேத சத்தியம் ஒரு போதும்
தவறானதல்ல என்பதை நாம் அறிந்திட வேண்டும்.
“திரித்துவத்தை
முழுமையாக அறிந்து கொள்ள முற்படும் ஒருவன் - தன் சிந்தையை இழந்து
விடுவான்; ஆகிலும், திரித்துவத்தை மறுதலிக்கும் ஒருவன் தன் ஆத்துமாவை
இழந்து விடுவான்”
2யோவான்: 7 முதல் 10 வசனங்கள் வரை:
“மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கை பண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே
தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்தி
கிறிஸ்துவுமாயிருக்கிறான். உங்கள் செய்கையின் பலனை இழந்து போகாமல், பூரண
பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே
நிலைத்திராமல் மீறி நடக்கிறவனெவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின்
உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். ஒருவன்
உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தை கொண்டு வராமலிருந்தால், அவனை உங்கள்
வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
அவனுக்கு வாழ்த்ததல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிர்யைகளுக்கும்
பங்குள்ளவனாகிறான்”
நாம் ஆராதிக்கும் தேவன் இன்னாரென்பதை (திரித்துவ தேவன்) இப்போது நாம் நன்கு அறிந்து கொண்டோம்.
தேவன் ஒருவரே
தேவன் ஒருவரே - என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை. கடவுள் ஒருவர்தான். ஆனால், அவருக்குள் மூன்று அமைப்பு உள்ளது.
1. பிதா 2. குமாரன் 3. பரிசுத்த ஆவி
மூன்று கடவுளல்ல. ஒருவா்தான். அவருக்குள் மூவர். மூன்றில் ஒருவர்.
என்ன? ஒரே குழப்பமாக இருக்கிறதா?! ஒரு குழப்பமும் படத்தேவையில்லை.
உதாரணமாக, நம்மை எடுத்துக் கொள்வோம். நாம் ஒரு நபர்தான். நமக்குள் மூன்று அமைப்பு உள்ளது.
1.
ஆவி(உயிர்) 2. ஆத்துமா ( மனசு, உள்ளம்) 3. சரீரம் (உடல்) -
இம்மூன்றும் சோ்ந்தது தான் முழு மனிதன். ஒரு மனிதன். நமக்குள் இருக்கும்
ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருந்தாலும், ஒவ்வொரு அமைப்பும்
வெவ்வேறு தோற்ற முடையதாக இருந்தாலும் ஒருங்கே ஒன்றிணைந்துதான் செயல்படும். (
சரி இதைப்பற்றி பின் வரும் நாட்களில் விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்)
நமக்குள்
மூன்று அமைப்பு இருந்தாலும் நாம் மூவரல்ல. ஒருவர்தான். அதுபோலத்தான்
கடவுளுக்குள் மூன்று அமைப்பு இருந்தாலும் கடவுள் மூவரல்ல; ஒருவர்தான்.
இன்னும் சற்று விளக்கமாக பார்ப்போம்:
பரிசுத்த
வேதாகமம் (பைபிள்) 2 பகுதிகளாக உள்ளது. 1. பழைய ஏற்பாடு 2. புதிய
ஏற்பாடு. பழைய ஏற்பாடு - எபிரேய மொழியில் எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு -
கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.
நமது தமிழ் மொழியில் ஒருமை என்றால் - 1. ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை கொண்டவை பன்மை என இலக்கணம் கூறுகிறது. ஆனால், ...
எபிரேய
மொழியில் ஒருமை என்பது - 1,2,3 வரை ஒருமை என்றுதான் கூறுவார்கள்.
மூன்றிற்கு பின் தான் பன்மை. எனவே, பழைய ஏற்பாடு எபிரேய மொழியில்
எழுதப்பட்டுள்ளதால், நாம் அதனுடைய கண்ணோட்டத்தில் சென்று பார்த்தால்தான்
கடவுள் காட்டும் சத்தியத்தை, கடவுளைப்பற்றி தெளிவாக அறிந்து கொள்ள
முடியும். பைபிளின் மூல பாஷை அல்லது மூல மொழி என்பது எபிரேய, கிரேக்க
மொழிகள்தான். ஒரு சத்தியத்தைமுழுமையாக அறிந்து கொள்ள அதன் மூல பாஷையில்
சென்று ஆராய்ந்தால்தான் சகலத்தையும் நாம் சரியாக கண்டறிய முடியும் என்பது
நாம் அறியாததல்ல.
எனவே, கடவுளும் மூவரல்ல; மனிதனும் மூவரல்ல.
கடவுள் ஒருவரே; மனிதன் ஒருவனே.
கடவுளுக்குள் மூன்று அமைப்பு; மனிதனுக்குள் மூன்று அமைப்பு.
கடவுள் மூன்றிலொருவர்; மனிதனும் மூன்றிலொருவன்.
தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது, ஆதியாகமம்: 1:26 - “பின்பு தேவன்:
நமது சாயலாகவும்
நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை
உண்டாக்குவோமாக;...” - என்று சொல்லி மனிதனை தேவன் தமது சாயலாகவும், தமது ரூபத்தின் படியும் சிருஷ்டித்தார்.
இங்கு நாம் ஒன்றை நன்கு கவனிக்க வேண்டும்.
நமது சாயல்... நமது ரூபம்... உண்டக்குவோமாக...
என்று பன்மையில் கூறுவதை கவனிக்க வேண்டும். நமது என்பது கடவுளுக்குள்
இருக்கும் மூன்று அமைப்புகளையும் சோ்த்து கூறுவதை நாம் கவனிக்க தவறக்
கூடாது.
கடவுளுக்குள் உள்ள மூன்று அமைப்புகளும் அதாவது ஆளத்துவம் இணைந்து செயல்படுவதை கவனிக்க வேண்டும். (பிதா, குமாரன், பரிசுத்தாவி)
1. சிருஷ்டிப்பில் மூவரும் இணைந்தே காணப்படுகின்றனர்:
யோபு: 33:4 - “தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வ வல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர் கொடுத்தது.”
ஏசாயா:
44:24 - “உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான
கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான்
ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியை பரப்பினவர்.
2. மூவரும் (பிதா, குமாரன், பரிசுத்தாவி) யெகோவா என அழைக்கப்படுகின்றனர்:
எசேக்கியேல்: 8:1,3 - “ .... கர்த்தராகிய ஆண்டவரின் கரம் என்மேல்
அமர்ந்தது. ... ஆவியானவர் என்னை வானத்துக்கும் பூமிக்கும் நடுவே கொண்டு
போய்....”
யோவான்: 14:23 - ல் இயேசு: “என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தை கைக் கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்.
நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே
வாசம் பண்ணுவோம்.”
1யோவான்: 5:7 -
“பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தாவி என்பவர்களே, இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்”
லூக்கா:
3:21,22 - ல் இயேசுவின் ஞானஸ்நானத்தில் பரிசுத்தாவியானவர் புறா ரூபங்
கொண்டு அவர் மேல் இறங்கினதையும் பிதா பரலோகத்திலிருந்த பேசுவதையும்
காண்கிறோம்.
மத்தேயு: 28:19 - ல் - பிதா குமாரன் பரிசுத்தாவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும்படி இயேசு கட்டளையிட்டார்.
2கொரிந்தியர்: 13:14 - ல் - ஆசீர்வாத ஜெபத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும், தேவனையும், பரிசுத்தாவியையும் காண்கிறோம்.
ஆகிலும்,
மூன்று தேவர்களல்ல. தேவன் ஒருவரே. ஒரே தேவனில் மூன்று ஆளத்துவம்
இருக்கிறது. ஒரே நபரில் எப்படி மூன்று ஆளத்துவம் இருக்க முடியும் என்பதற்கு
பதில் இதுதான்: நமக்குள் ஒரு மனிதனுக்குள் எப்படி ஆவி ஆத்துமா, சரீரம்
இருக்கிறதோ அப்படித்தான் அவரும். ஒரு பிசாசு பிடித்த மனிதனுக்குள் 6000
பிசாசுகள் (லேகியோன்) குடியிருந்ததாக வேததத்திலே நாம் வாசிக்கவில்லையா?