நவம்பர் 08, 2019

வேதத்தில் உள்ள வாலிபர்கள்

இந்த காலத்தில் வாலிபர்கள் தேவனுக்காக செயல்படுவதைக் காட்டிலும் உலகத்தின் அதிபதிக்காக செயல்படுவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். தங்கள் நேரத்தை செல்போனிலும், சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சியிலும் தான் அதிகம் செலவழிக்கிறார்கள். வேத வாசிப்பிலும் ஜெபத்திலும் நேரத்தை செலவழிப்பதை வீண் என கருதுகிறார்கள். சாத்தான் தன்னுடைய வலையில் வாலிபர்களையும் வாலிப பிள்ளைகளையும் சிக்க வைக்க பல முயற்சிகள் எடுத்து வருகிறான். இளைய குமாரனை போல வழி தப்ப செய்து மேலான ஆசீர்வாதங்களை பிடுங்கிக் கொண்டு கீழானவைகளை கொடுத்து பரம தகப்பனின் அன்பை விட்டு விலக்கி விடுகிறான். அதை அறியாத வாலிபர்கள் அவன் தந்திர வலையில் சிக்குண்டு பாடுகளை அநுபவித்த பின்னர் தான் "ஐயோ! நான் பரத்துக்கு விரோதமாக பாவம் செய்தேன். நான் என் தந்தையின் வீட்டில் ஒரு வேலைக்காரனை போலாகிலும் வேலை செய்ய போகிறேன்." என்று இளையகுமாரனை போல மனந்திரும்பி வருகின்றனர். ஆகவே வாலிபர்களே! வாலிப பிள்ளைகளே! மாயையான இந்த உலகத்தின் காரியங்களில் சிக்குண்டு போகாமல், நல் நேசராகிய இயேசு கிறிஸ்துவை பிடித்து கொள்ளுங்கள்.

வேதத்தின் வாயிலாக சில வாலிபர்களை குறித்தும் அவர்களின் ஜீவியத்தை குறித்தும் அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதத்தை குறித்தும் இந்த செய்தியில் பார்ப்போம்.

1. இயேசு கிறிஸ்து


இயேசு இந்த பூமியில் நம் பாவங்களை நீக்க மனிதனாக வந்துதித்தார். அவர் இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களில் திவ்விய சுபாவங்களை வெளிப்படுத்தி பரிசுத்தமாக, தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தார். அவர் வாலிபனாக இருந்த காலங்களில் வெளிப்படுத்தின குணாதிசயங்களை பார்ப்போம்.


  • கீழ்ப்படிதல்


 லூக்கா:2:51- "பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக் கொண்டாள்."

-    இயேசு தான் வாலிபனாக இருந்த நாட்களில் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிதலுள்ள மகனாக இருந்தார்.தன் ஊழியத்திற்கான நேரம் வரும் வரை காத்திருந்து தன் பெற்றோருக்கு பணிவிடை செய்து வந்தார். தான் தேவகுமாரன் என்று அவர் மேன்மைபாராட்டாமல் தாழ்மையுள்ளவராக இருந்து எல்லா காரியங்களிலும் தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்திருந்தார்.

  • வேத அறிவு பெற்றவர்
லூக்கா:2:46 - "மூன்று நாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்."

- தன்னுடைய 12 வது வயதிலேயே போதகர்கள் நடுவில் சந்தேகங்களை தீர்க்கவும் தியானிக்கவும் பேசவும் வேத அறிவு பெற்றவராக விளங்கினார்.


  • கடமையை நிறைவேற்றுதல்


யோவான்:19:25-27 - "இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்."

- தான் மரிக்க வேண்டிய நேரம் வரும்போது தன் தாயை கண்ட இயேசு தனிமையாக இருப்பதை பார்த்து தன் தாயை கடைசி காலத்தில் கவனித்து கொள்ளும்படியாக தன் சீஷனாகிய யோவானை ஏற்படுத்தினார். ஒரு மகனாக தன் பூமிக்குரிய கடமையை நிறைவேற்றினார்.


இயேசு தன் வாலிப நாட்களில் பரிசுத்தமாக தன்னைக் காத்துக்கொண்டு தேவனுக்கு பிரியமாக பெற்றோருக்கு நல்ல மகனாக இருந்ததினால் அவருக்கு தேவன் சில காரியங்களில் வளர்ச்சியை தந்தார்.

லூக்கா:2:52 - " இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்."

1. ஞானம் 

ஞானம் - தேவனிடத்திலிருந்து வருவது

யாக்கோபு:1:5 - "உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்."

யாக்கோபு:3:17 - "பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது."

தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஞானம் குறைவற்றது. சாலொமோனை போல ஞானவான் அவனுக்கு முன்னிருந்ததுமில்லை. அவனுக்கு பின் எழும்பினதுமில்லை. ஏனென்றால் அவன் தேவனிடத்திலிருந்து ஞானத்தை பெற்றுக்கொண்டான். கர்த்தருக்கு பயப்படுகிறவர்களுக்கு ஞானம் கொடுக்கப்படும். (நீதி:1:7) கர்த்தரிடத்தில் சாலொமோன் ஞானத்தை விரும்பி கேட்டான். அவனுக்கு கொடுக்கப்பட்டது. 

நீங்கள் ஞானத்தில் குறைவுள்ளவர்களாக இருந்தால் கர்த்தரிடத்தில் கேளுங்கள். பரத்திலிருந்து வருகிற ஞானத்தை பெற்று கொண்டால் உலகத்தின் காரியங்களை எளிதில் எதிர்கொள்ளலாம். 
-  இயேசு ஞானத்தை பெற்றுக்கொண்டு தேவாலயத்திலுள்ள அறிவுசார் பெரியோர்களான பரிசேயர்களையும் வேத பாரகரையும் எதிர்கொள்ள முடிந்தது. அவர்கள் தங்களது பேச்சு சாதுர்யத்தினால் ஜனங்கள் மத்தியில் இயேசுவை வீழ்த்த வேண்டுமென்று பல முறை முயன்றும் தோற்று போனார்கள். காரணம், இயேசு பரத்திலிருந்து ஜோதிகளின் பிதாவினிடத்தில் ஞானத்தை பெற்று கொண்டு விருத்தியடைந்தார். 

மத்தேயு:22:17-21 - "ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்."

இயேசுவை ரோமர்களிடம் மாட்டிக்கொள்ள வைக்கும்படியாக அவரிடம் வரிகொடுத்தலை பற்றி பரிசேயர்கள் கேட்டனர். அவர்களின் திட்டத்தை அறிந்த இயேசு ஞானத்தை வெளிப்படுத்தினார்.

மத்தேயு:22:23-32 - "உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து: போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம் பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.எங்களுக்குள்ளே சகோதரர் ஏழு பேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன் முதல் ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள்.எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்து போனாள். ஆகையால், உயிர்த்தெழுதலில், அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்களெல்லாரும் அவளை விவாகம் பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள்.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாயிருக்கிறார் என்றார்."

சதுசேயர் இயேசுவை குற்றங்கண்டுபிடிக்கும்படியாக அவரை சோதிக்கும்படிக்கு உயிர்த்தெழுதலை குறித்து அவரை கேள்வி கேட்டனர். பழைய ஏற்பாட்டில் பிதாவினால் நியாயப்பிரமாணம் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆகவே அந்த நியாயப்பிரமாணத்திலிருந்து இயேசுவிடம் இந்த கேள்வியை கேட்டால், அவர் பழைய ஏற்பாட்டு சட்டத்தை மீறி சொன்ன குற்றத்திற்காக  தண்டிக்க முடியும் என்ற நோக்கத்தில் அவரிடம் கேட்டனர். ஆனால் இயேசு அவர்களை தன்னுடைய ஞானத்தினால் வென்றார்.

2. வளர்ச்சி  

வளர்ச்சி என்பது சரீரத்திலும் ஆவிக்குரிய காரியங்களிலும் வளர்வது.

இயேசு தன்னுடைய சரீரத்திலும் ஆவிக்குரிய திவ்விய சுபாவங்களிலும் வரங்களிலும் கனிகளிலும் வளர்ந்தார். 

வளர்ச்சி என்பது அத்தியவாசியமானது. ஒரு செடி வளர்ந்தால் தான் கனி கொடுக்க முடியும். அந்த செடி வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்து வேண்டும். அதே போல் தான் ஒரு மனிதன் வளர்ந்து கனி கொடுக்க தேவையான  ஊட்டச்சத்து - ஜெபமும் வேதவாசிப்பும் மட்டுமே. இவையிரண்டும் இருந்தால் மட்டுமே வளர்ச்சி பூரணமாகும். ஊட்டச்சத்தின் அளவு குறைந்தால் வளர்ச்சியும் குறைவுபடும். கனி கொடுப்பது தடைப்படும். 

1சாமுவேல்:2:26 - "சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான்."

சாமுவேல் தன்னுடைய சிறு பிராயத்திலேயே கர்த்தருடைய சந்நிதியில் வளர்க்கப்பட்டான். கர்த்தருக்கு பிரியமான பிள்ளையாக வளர்ந்ததினால், தீர்க்கதரிசியாக மாறினான்.  தாண் முதல் பெயர்செபா மட்டும் அவன் பெயர் விளங்கினது. தேவ சமூகத்தில் வளர்க்கப்பட்ட பிள்ளை ஒரு குறைவில்லாமல் பூரண வளர்ச்சியடையும்.

தேவ ஊழியக்காரனான ஏலியின் குமாரர்களும் கர்த்தருடைய சந்நிதியில் தான் வளர்க்கப்பட்டார்கள்.ஆனால் அவர்கள் கர்த்தருக்கு பிரியமாக நடந்துகொள்ளாதபடியால் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

எரேமியா:18:4 - "குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்."

ஒரே குயவனின் கையில் தான் இருவரும் வனையப்பட்டார்கள். ஆனால் ஒருவன் கெட்டுப்போன மண்பாண்டம் (ஓப்னி, பினேகாஸ்); இன்னொருவன் விட்டுக்கொடுக்கும் மண்பாண்டம்(சாமுவேல்). கெட்டுப்போன மண்பாண்டம் என்று குயவன் தூக்கி எறியாமல் மீண்டும் தமக்கு ஏற்றபடி வனைய முயன்றும் திரும்ப திரும்ப கெட்டுபோன காரியங்களை செய்ததால், குயவனால் தமக்கேற்றபடி வனைய முடியவில்லை. ஆனால் விட்டுக்கொடுக்கும் மண்பாண்டத்தை தமக்கு ஏற்றபடி அழகாக வனைந்தார்.

"கெட்டுபோன மண்பாண்டமாக இருக்காதே ! விட்டுக்கொடுக்கும் மண்பாண்டமாக இரு! கர்த்தர் உன்னை உருவாக்குவார்."

1சாமுவேல்:16:7 - "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்."

இஸ்ரவேலுக்கு ராஜாவாக அபிஷேகம் பண்ணப்படும்படிக்கு சாமுவேல் ஈசாயின் வீட்டில் இருக்கும்போது ஒவ்வொருவனையும் பார்த்தார். எலியாபை பார்த்த சாமுவேல் அவனின் சரீர வளர்ச்சியை மட்டுமே பார்த்தார். ஆனால் அவன் இருதயம் சுத்தமில்லாமலிருக்கிறதை கவனிக்கவில்லை. கர்த்தரோ ஒரு மனிதனின் சரீர வளர்ச்சியை மட்டுமல்ல ஆவிக்குரிய வளர்ச்சியையும் பார்ப்பார்.

யோசுவா ஆசரிப்பு கூடாரத்தை விட்டு பிரியாமல் ஆண்டவரோடு நெருங்கி வாழ்ந்தான். அவருடைய சமூகத்தில் வளர்ந்தான். பின்னாட்களில் அவன் மோசேக்கு அடுத்த பெரிய பொறுப்பில் இருந்து இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தி கானான் தேசத்தை சுதந்தரித்தான். கர்த்தருடைய சமூகத்தில் அவரால் வளர்க்கப்பட்டவர்கள் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றார்கள்.

3. தேவகிருபை 

கிருபை - தகுதியில்லாத ஒருவனுக்கு கொடுக்கப்படும் பரிசு (அ) விலைமதிப்பற்ற அன்பு

கிருபையானது மனிதனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக பரிசாக கொடுக்கப்பட்டது.  தேவ கிருபை இல்லாவிட்டால் நாம் என்றைக்கோ மரித்திருப்போம்.

தீத்து:2:11 - "ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி"

அவர் நம்மேல் வைத்த கிருபையினால், நாம் மரிக்க வேண்டிய இடத்தில் அவர் நமக்காக பலியானார். விலைமதிப்பில்லாத அவருடைய பரிசுத்த இரத்தத்தை நமக்காக சிந்தினார். அவர் தேவகிருபையில் விருத்தியடைந்ததினால் நமக்கும் அந்த கிருபையை ஈவாக தந்தருளினார்.

இளைய குமாரன் மனந்திரும்பி தன் தகப்பனிடத்தில் வந்த போது அவர் அவன்மேல் கிருபையை காண்பித்தார்.(லூக்கா:15:20 - 24)

1. மனதுருகி கட்டிக்கொண்டு முத்தமிட்டார்
2. உயர்ந்த வஸ்திரத்தை உடுத்துவித்தார்
3. மோதிரத்தையும் பாதரட்சைகளையும் அணிவித்தார்
4. கொழுத்த கன்றை அடிப்பித்து விருந்து வைத்தார்
5. கீத வாத்தியம் முழங்கி சந்தோஷப்படுத்தினார்

தன் தகப்பனுடைய கிருபையை விட்டு விலகின இளைய குமாரனுக்கு கிடைத்தது பன்றியின் உணவு மட்டுமே. கர்த்தருடைய கிருபையை விட்டு விலகும் போது மேலான ஆசீர்வாதங்களை இழக்க நேரிடும். நாம் எப்போதும் அவருடைய கிருபையின் நிழலிலே இருக்கும்போது சாத்தானால் ஒன்றும் செய்ய முடியாது. தன்னுடைய தகுதியை இளைய குமாரன் இழந்துபோனான். ஆனால் அவன் மனந்திரும்பி வந்த போதோ, தகுதியில்லாத அவனுக்கு அளவில்லா அன்பு காட்டப்பட்டது. இதுதான் கிருபை!

இயேசுவானவர் கிருபையில் விருத்தியடைந்து நமக்கும் அந்த கிருபையை தந்துள்ளார். தன்னுடைய சிலுவை மரணத்தினால் நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுத்து, தகுதியில்லாத நம்மேல் அளவில்லா விலையேற பெற்ற அன்பை பொழிந்து, தகுதியுள்ளவனாகவும் தகுதியுள்ளவளாகவும் மாற்றினார். இதற்கு காரணம் அவர் நம்மேல் வைத்த கிருபை!


4. மனுஷர் தயவு  

தயவு - இரக்கம் காட்டுவது, மன்னிப்பது

எபேசியர்:2:27 - "கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக,கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்."

கர்த்தரின் தயவு புறஜாதிகளாக இருந்த நம்மை மீட்டெடுத்து நீதிமானாக்கி ஆபிரகாமின் பிள்ளைகளாக மாற்றி உன்னத பரலோகத்தை பெறும்படி செய்ததது.

மனுஷர் தயவும் நமக்கு தேவை. காரணம் - மனுஷருடைய தயவு அந்தந்த இடத்தில் கிடைக்கும்போது நாம் காத்திருக்க தேவையில்லாமல் நாம் நினைத்த காரியம் எளிதில் முடியும்.கர்த்தருடைய தயவினால் அந்தந்த மனிதர்கள் கண்களில் தயை கிடைத்து நாம் நினைத்த காரியம் நடைபெறும்.

மனுஷர் தயவு என்பது சுற்றுபுறத்தில் சமாதானமாக இருத்தலையும் குறிக்கும். நம்மை சுற்றியுள்ள இடங்களில் நாம் சமாதானத்தோடு இருக்கவேண்டும். நாம் படிக்கும் இடங்களில், வேலை செய்யும் ஸ்தலங்களில் எங்கும் சமாதானம் இருக்க வேண்டும். நம்மை குறித்து நல்ல சாட்சி கொடுக்க வேண்டும். நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் கண்களில் நமக்கு தயை கிடைக்க வேண்டும். எந்தவொரு பிரச்சினையிலும் அகப்பட்டு பெயரை கெடுத்து கொள்ளாமல் சமாதானத்துடன் இருக்க வேண்டும்.

யோசேப்பு போத்திபாரின் வீட்டில் அடிமையாக இருந்த போது அவனுக்கு போத்திபாரின் கண்களில் தயை கிடைத்ததினால் அவன் அடிமைபோல் நடத்தப்படாமல், கனத்திற்குரியவனாக நடத்தப்பட்டான். அவனோடு கர்த்தர் இருக்கிறார் என்றும் அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் என்றும் போத்திபார் அறிந்து கொண்டான். அவன் மேல் தயவு வைத்து அவனை வீட்டு விசாரணைக்காரனாக்கினான்.

ஆதியாகமம்:39:2-4 - "கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான்.கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு:யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான்."

ஆகவே மனுஷர் தயவிலும் அதிகமதிகம் விருத்தியடைய வேண்டும்.

இயேசு வாலிபனாக இருந்த நாட்களில் இந்த எல்லா காரியங்களிலும் விருத்தியடைந்தார். தேவனுக்கு பிரியமாக வாழ்ந்தார்.

வேதாகமத்திலுள்ள இன்னும் சில வாலிபர்களின் குணாதிசயங்கள், அவர்களின் பரிசுத்த ஜீவியத்தின் காரியங்களோடு மீண்டும் உங்களை அடுத்த பதிவில் சந்திக்கிறேன்....

அதுவரை கர்த்தர் உங்களோடு இருப்பாராக!

                                                                                                                          தொடரும்.....

அக்டோபர் 31, 2019

முட்கள் நமக்கு சாதகமா? பாதகமா?பாதிப்பா? பாதுகாப்பா?

உன்னதப்பாட்டு:2:1,2 - "நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்."

இந்த வார்த்தை யாருடையது? 

சாதாரணமாக பார்த்தால் முதல் வசனம் இயேசுவையும் இரண்டாம் வசனம் மணவாட்டியையும் குறிப்பது போல இருக்கும். ஆனால் அது தவறு.

1 வசனம் - மணவாட்டிக்குரியது (சபை)
2 வசனம் - மணவாளனுக்குரியது (இயேசு)

நாம் முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பமாயிருக்கிறோம். அதின் அர்த்தம்: உபத்திரவத்தின் நடுவிலும் அழகாக இருக்கிறோம்.

முட்கள் - எபிரேய வார்த்தை:  Choch / Koa-ach - பயன்படுத்தப்படாத வேர்

இங்கே முட்கள் என்பது மனந்திரும்பாத ஜனங்கள் (அ) பரிசுத்தமாக்கப்படாத ஜனங்களை குறிக்கும்

I. முட்களுடைய தன்மை என்ன? (முள் - உபத்திரவம்)

1.குத்துவது

ஒரு முள் நம்மை குத்திவிட்டால் அலறாமல் குத்தின முள்ளை பயன்படுத்தவும் நமக்கு வேலியாக்கி கொள்ள தெரிய வேண்டும். கடிக்க வரும் சிங்கத்தை நமக்கு பாதுகாப்பு தரும் நாயை போல மாற்றிக்கொள்ள தெரிய வேண்டும். துன்பத்தை இன்பமாகவும் தீமையை நன்மையாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

2.பயமுறுத்துவது

வழியில் கிடக்கும் முள்ளை கண்டு பயப்படாமல் சர்வாயுதவர்க்கமான ஆவியின் பட்டயத்தை எடுத்துக்கொண்டு மேற்கொள்ள வேண்டும். நின்று நிதானித்து வீழ்த்தவேண்டும். நம்மை ஒருவன் பயமுறுத்தினால், அவனை பார்த்து சிரிக்க வேண்டும்.ஏனென்றால் அவனுக்கு நம்மேல் பயம் வந்ததினால் தான் நம்மை பயமுறுத்துவான்.

3.பதம்பார்ப்பது

சில சமயம் நாம் முட்களை உபயோகப்படுத்தும்போது நம்மை அறியாமலேயே நம்மை குத்திவிடும். நம்மையே பதம் பார்த்து விடும்.

4.பாதுகாப்பது

பூ, கனி,இலை - இவற்றின் கீழே இருக்கும் முள் பாதுகாப்பு தருவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. அந்த முள் காற்றில் அசையும்போது கனிகளுக்கு இலைகளுக்கும் சேதத்தை உண்டாக்கும். பாதுகாப்பு கொடுக்கும் முள் பாதைக்கு வந்தால் ஆபத்தாகி விடும்.

II. முட்கள் நமக்கு அனுமதிக்கப்படுகிறதா? 

 ஆம்! தேவனே அதை அனுமதிக்கிறார்.

2கொரிந்தியர்:12:7-9 - "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்று தரம் கர்த்தரிடத்தில்வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்"

"பெருமை வந்தால் மதிகேடு வரும்; மதிகேடு வந்தால் பின்மாற்றம் வரும்; பின்மாற்றம் வந்தால் முடிவில்  நரகம் கிடைக்கும்"

எனவே அதை தடுக்கும்படியாக தேவனே முள்ளை கொடுக்கிறார். தேவனால் அனுமதிக்கப்பட்ட முள் நம்மை கொல்லாது.நமக்குள் இருக்கிற மேட்டிமையை தாழ்மைப்படுத்த தேவன் அந்த முள்ளை வைத்திருக்கிறார். சில முட்களை தேவன் நீக்கமாட்டார். ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதற்கு ஏதுவாக சில முட்கள் தேவனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 

III. முட்கள் தானாகவே வருகிறதா? 

ஆம்! எங்கேயோ போக வேண்டிய முள் நமக்கு வரும்.

காற்றில் வரும் முள்:

1. அடுத்தவர் பிரச்சினை
2. சொந்த பிரச்சினை
3. சபை பிரச்சினை
4. போதகர் பிரச்சினை
5. கட்சி பிரச்சினை
6. மத பிரச்சினை
7. அரசியல் பிரச்சினை
8. சமூக வலைத்தளங்கள்

2சாமுவேல்:1:6 - "அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்."

2சாமுவேல்:20:1,2 - "அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்."

தற்செயலாய் வருகிறவன் நம் உடலுக்கும் உடைமைக்கும் சேதத்தை வருவிப்பான்.  அவன் திட்டத்தோடே வருவான்; ஆனால் அவன் தற்செயலாய் வந்தது போல நடிப்பான். ஆகவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நீதிமொழிகள்:26:17 - "வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்."

1தீமோத்தேயு:6:20 - "ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு."

நம்மிடத்தில் ஒப்புவிக்கபட்டது:


  • இரட்சிப்பு
  • விசுவாசம்
  • பரிசுத்தம்
  • ஆவியின் அபிஷேகம்
இவற்றை இழந்தால் பரலோகத்தில் இடம் இல்லை. ஆகவே மோசம் போகாமல் ஆகாத சம்பாஷணைகளுக்கு விலக வேண்டும்.

"நமக்கு அவசியமில்லாத பாரத்தை நாம் ஏன் சுமக்க வேண்டும்? 
 நமக்கு தெரியாததை நாம் ஏன் தீர்ப்பிட வேண்டும்?"

IV. முட்கள் போகும் வழியில் கிடக்கிறதா? 

பிரயாணங்களில் முட்கள் வரும்.நம் பிரயாணங்களில் பிசாசு மரணத்தை கொண்டு வருவான். நம்மேல் பகையாக இருக்கிறவர்கள், எரிச்சலுள்ளவர்கள் நம் வழியில் வீழ்த்த வருவார்கள். வழியிலே விரியனை போல முட்கள் இருக்கும்.

யாத்திராகமம்:33:14 - "அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

காலையில் எழுந்தவுடன் தேவசமூகம் நம்முடன் வரும்படியாக மோசேயை போல ஜெபம் செய்ய வேண்டும்.

V. முட்களை யாராவது போடுகிறார்களா? 


அகித்தோப்பேல், சீமேயி, ஆமான், யூதாஸ் - இவர்களை போல தீமை செய்வது சந்தோஷம் என்று கருதுபவர்கள் நம் வாழ்வில் முட்களை போட நினைப்பார்கள். ஆனால் தேவன் நம்மை அவர்களெல்லாவித துர்ஆலோசனைகளுக்கும் விலக்கி பாதுகாப்பார்.

"அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்கும் தேவன் நம்மோடு உண்டு."

மணவாட்டி எப்படிப்பட்டவள்?

1. முட்களை சகித்து, சமாளித்து, கையாண்டு, உபயோகித்து, வாழ தெரிந்தவள்.
2. முட்களால் பட்ட பாடுகள், வலிகள், வேதனைகள் இவையெல்லாவற்றையும் சகித்து கொண்டு அழகாய் இருப்பவள்

முட்களால் குத்தப்பட்டு வருகிற வாசனையை தேவன் நுகர்ந்து மகிழ்வார். ஆகவே முட்களை கண்டு பயப்படாமல் தேவ பெலத்தோடே கையாண்டு மலராக மலர்வோம்!!!! 

"முள் இருக்கும் என் வாழ்வில்...
ஆனால் அதில் நான் மலராய் மலர்ந்திருப்பேன்"


                                                               

விசுவாசத்தினால் வரும் உயர்வுகள்

விசுவாசத்தினால் வரும் உயர்வுகள்

திறவுகோல் வசனம்: யோசுவா:1:1-3 
  1. கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:

  2. என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

  3. நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
யோசுவா -  எபிரேய வார்த்தை: யெகோசுவா - கர்த்தர் இரட்சிப்பானவர்
                        கிரேக்க வார்த்தை:  யேசஸ் - இரட்சிப்பு (அ) விடுவிக்கிறவர்

யோசுவா எப்படிப்பட்டவன்?

1. பணிவிடையாளன்
2. உத்தமன்
3. ஞானத்தின் ஆவியை பெற்றவன்
4. ஆசரிப்பு கூடாரத்தைவிட்டு பிரியாதவன்

யோசுவா மூலம் தேவன் செய்த அற்புதங்கள்:

1. எரிகோ கோட்டை இடிந்து விழுந்தது
2. யோர்தான் இரண்டாக விழுந்தது
3. வானத்திலிருந்து கற்கள் விழுந்தது
4. சூரியனும் சந்திரனும் தரித்து நின்றது

1.விசுவாசத்தின் சவால்:

யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட சவால் - வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் ஜனங்களை கானான் நாட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டுமென்பதே.


மோசே தான் வாழ்ந்த நாட்களில் யோசுவாவை தன் அருகே வைத்து ஒவ்வொரு காரியங்களையும் கற்றுக்கொடுத்தான். தான் எங்கு சென்றாலும் யோசுவாவையும் அழைத்து செல்வான். எந்த பிரச்சனையை சந்தித்தாலும் அதை எப்படி தீர்க்க வேண்டும் என்று தேவனிடம் விசாரிக்க 40 நாள் உபவாசமிருந்து ஜெபிக்க சீனாய் மலைக்கு செல்லும் போதேல்லாம் யோசுவாவையும் அழைத்து செல்வான். இப்படி எல்லா காரியங்களிலும் யோசுவா மோசேயுடன் இருந்து கற்றுக்கொண்டான். அவனுக்கு கொடுக்கப்பட்ட சவால் பெரிதாக இருந்தாலும், மோசேயோடே இருந்த தேவன் அவனோடும் இருப்பேன் என்று வாக்குகொடுத்திருந்ததை நம்பி விசுவாசித்து ஏற்றுக்கொண்டான்.

"தேவன் உன்னை கொண்டு என்ன செய்ய போகிறார் என்பதை காண்பது தான் விசுவாசம்"

சவாலை ஏற்று நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்?


1. வனாந்திரத்தை (அவநம்பிக்கை, அவிசுவாசம்) விட்டு வெளியே வர வேண்டும்
2. உன்னை வருத்தும் வழியை விட்டு விலகு
3. தூசியை உதறி விட்டு வா
4. கானானை (இலக்கை) நோக்கி புறப்படு
5. யோர்தானை (தடைகளை) தாண்டி செல்

2.விசுவாசத்தின் நிச்சயத்தை நம்பு:

யோசுவா:1:5 - "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை."

யோசுவா:1:9 - "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

தேவன் யோசுவாவுக்கு கொடுத்த விசுவாசத்தின் நிச்சயம்:

1. ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
2. உன்னோடு இருப்பேன்
3. போகும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன்

தேவனின் வாக்கை நம்பி முன்னேறி சென்றான். அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நம்பி வாழ்ந்தான்.எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவனுடைய வாக்குத்தத்தம் போதுமானது. காலங்கள் மாறினாலும் அவருடைய வார்த்தை ஒருநாளும் மாறாது. யோசுவா கர்த்தருடைய வார்த்தையை நம்பி ஒவ்வொரு காரியங்களையும் மேற்கொண்டு வெற்றி பெற்றான். விசுவாசத்தின் நிச்சயம் பெற்றவனாய் தொடர்ந்து ஓடி கீரிடத்தை பெற்றுக்கொண்டான்.

3.விசுவாசத்தை அப்பியாசப்படுத்தி வாழ்:

யோசுவா:1:3 - "நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்."

மோசே மரித்தபின் யோசுவா கலங்கி நிற்கும் போது கர்த்தர் அவனுக்கு வாக்குத்தத்தங்களை கொடுத்து தொடர்ந்து ஜனங்களை வழிநடத்தி செல்ல ஊக்கப்படுத்தினார். அவன் விசுவாசிக்காவிட்டால் அவனால் எந்த காரியத்திலும் வெற்றி கண்டிருக்க முடியாது. அவன் தேவனை நம்பி அவர் வார்த்தைகளை விசுவாசித்து தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தினான். அவர் கொடுத்த வாக்கை உரிமை பாராட்டிக்கொண்டான். அவன் விசுவாசமே வாக்குத்தத்தத்தை பெற்று தந்தது. ஆம்! அவன் அவர் வார்த்தையை நம்பினான்; தேசத்தை சுதந்தரித்தான்.

1பேதுரு:5:8-10  - "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;"

-  விசுவாசத்துடன் செயல்படும் போது பிசாசு சோதனைகளையும் சோர்வுகளையும் போராட்டங்களையும் கொண்டு வருவான். அவனுக்கு எதிர்த்து நின்று அவனை மேற்கொள்ள வேண்டும்.

எபேசியர்:6:10 - "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்."

கர்த்தர் தாமே உங்களை பலப்படுத்தி விசுவாசத்தின் நிச்சயத்தை தந்து யோசுவாவை போல வழிநடத்தி வெற்றியை சுதந்தரிக்க செய்வாராக!!!

அக்டோபர் 30, 2019

போதகர். சார்லஸ் - முதலாம் ஆண்டு நினைவு நாள்


போதகர்.சார்லஸ் அவர்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 21 அன்று தன்னுடைய ஓட்டத்தை ஜெயமாக முடித்தார். அவரின் நினைவாக இந்த முதலாம் ஆண்டு நினைவு நாளன்று ஒரு காணொளியும் அவர் எழுதிய புத்தகத்தையும் வெளியிட தேவன் கிருபை செய்தார். "வேதாகம வாய்ப்பாடு" என்ற வேத தியான புத்தகம் ஒன்றை மிகுந்த பிரயாசத்துடன் இரவு பகல் பாராது ஆவியானவரின் உதவியோடு எழுதினார். பல்வேறு காரியங்களை அந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார். வேதத்தை வாசிக்கும் போது இந்த புத்தகத்தின் உதவியோடு படித்தால் நலமாயிருக்கும். வேதத்தில் உள்ள நாட்கள், எண்கள், ஆகமங்களின் விளக்கம், அதின் ஆசிரியர், காலகுறிப்புகள், வரைபடங்கள், தரிசனங்கள், எபிரேய வார்த்தைகள் - அர்த்தங்கள் போன்ற பல்வேறு சுவாரசியமான தகவல்களை கொடுத்துள்ளார். இந்த புத்தகத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அநேகர். வேதாகம ஆராய்ச்சிக்கு உதவும் புத்தகம் இது. இந்த புத்தகம் வேண்டுமென்பவர்கள் மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம். புத்தகத்தை பெறுங்கள். வேதறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து எங்கள் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு:
        8489304617

காணொளி:
      video - https://youtu.be/-2x7-bmp810