செப்டம்பர் 24, 2016

நாவின் அதிகாரம்

Image result for proverbs: 18:21

நாவின் அதிகாரம் – வாழ்வதா? சாவதா?


திறவுகோல்வசனம்: நீதிமொழிகள்: 18:21 – “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்”.

நம்முடைய நாவில் இரண்டுவித அதிகாரங்கள் உள்ளது. 1. மரணம் 2. வாழ்வு – இதை இப்படியும் சொல்லலாம் – “வாழ்வா? சாவா?

மரணத்துக்கேதுவான வார்த்தைகளை உச்சரித்தால் மரணம் வரும். 
வாழ்விற்கான வார்த்தைகளை உச்சரித்தால் வாழ்வு வரும். மனுஷன் எதை விரும்பி பேசுகிறானோ, அது அவனுக்கு நேரிடும் என்று வேதம் கூறுகிறது.

லூக்கா: 6:45 – “… இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்” என்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து கூறினார். இருதயம் முழுவதும் வாழ்விற்கான வளமான, நயமான, செழுமையான, இதமான வார்த்தைகள் நிறைந்திருந்தால், நம் வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகள் அனைத்தும் நம் வாழ்விற்கேதுவாய் வெளிப்படும். இருதயம் முழுவதும் கசப்பான, கடுமையான, வெறுப்பான, பிரிவுக்கேதுவான, சீர்கெட்ட வார்த்தைகளாக நிறைந்திருந்தால், வாயிலிருந்து புறப்படுகிற வார்த்தைகள் வாழ்வை நாசமாக்கத்தக்கதாக மரணத்தின் வார்த்தைகளாக வெளிப்படும். எனவே, நம் இருதயத்திலிருந்து வாயின் வழியாக வெளிப்படும் வார்த்தைகளில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

“விசுவாச வார்த்தைகளைப் பேசி வாழ்வடைய வேண்டிய நம்மை, எப்படியாகிலும் அவிசுவாச வார்த்தைகளை பேச வைத்து வாழவிடாமல் செய்ய நினைப்பது  - பிசாசின் தந்திரங்களில் ஒன்று”
Image result for proverbs: 18:21

நம்முடைய வாயின் வார்த்தைகளை கேட்ச் பண்ண இரண்டு வல்லமைகள் இருக்கிறது. நல்ல வார்த்தைகளை உச்சரித்தால் நற்செய்தியின் தூதன் கேட்ச் பண்ணிக் கொள்வான். மரணத்துக்கேதுவான வார்த்தைகளை உச்சரித்தால் சாத்தானின் தூதர்கள் கேட்ச் பண்ணிக்கொள்வார்கள். நீதிமொழிகள்: 6:2 – “ நீ உன் வாய்மொழிகளில் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்” என்று வேதம் கூறுகிறதை நினைவில் வைப்போம்.

மத்தேயு: 22:15,18 – “அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனை பண்ணி, … இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து, …”. 

சத்துருக்கள் எப்போதும் நம்முடைய பேச்சிலே பல சிக்கலில் மாட்டிவிட ... அறியாதவர்கள் போல போட்டு வாங்கப்பார்ப்பார்கள். நாமோ நமதாண்டவர் இயேசுகிறிஸ்துபோல அப்படிப்பட்டவர்களது வஞ்சகத்திலே அகப்படாதபடிக்கு, அவர்கள் துர்க்குணத்தை கண்டறிந்து விட்டு விலகி செல்ல வேண்டும்.

Image result for proverbs: 18:21

வாயின் வார்த்தையில் சிக்குண்டவர்கள்


1.   யோசுவா – கிபியோனியரிடம் வாயின் உடன்படிக்கையினால் சிக்குண்டான்:

யோசுவா: 9 அதிகாரம் முழுவதும். 9:14,15 – “அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல், … யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; …”.

2.   எப்பிராயீமர் – கீலேயாத் மனுஷரிடம் வாயின் வார்த்தையினால் சிக்குண்டார்கள்:

நியாயாதிபதிகள்: 12:5,6 – “கீலேயாத்தியர் எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படிஉச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள்”.

3.    சிம்சோன் – தெலீலாளிடம் வாயின் வார்த்தையால் சிக்குண்டான்:

நியாயாதிபதிகள்: 16:16,17 – “இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக்கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி, … என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னைவிட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்”.

4.   சவுலைக் கொன்ற அமலேக்கிய வாலிபன் தன் வாயின் வார்த்தையினால் சிக்குண்டான்:

2சாமுவேல்: 1:16 – “தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமாக சாட்சி சொல்லிற்று என்றான்”

5.   இஸ்ரவேலின் ராஜா ஆகாப் – சீரியா தேசத்து ராஜா பெனாதாத்திடம் வாயின் வார்த்தையினால் சிக்குண்டான்:  

 1இராஜாக்கள்: 20:32,33 – “இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம் பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான். அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து, உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்”.
   
நம் வாயின் வார்த்தைகளை நன்றாய்க் கவனித்து நம்மை வாழ்வடையச் செய்யாமலிருக்க துஷ்ட மனுஷரும், துஷ்ட சாத்தானும் மிக கவனமாக நம்மிடம் நெருங்குவார்கள். நாமோ… கர்த்தருடைய கிருபையை சார்ந்திருந்து, கர்த்தருடைய வாக்கைக் கேட்டு, இருதயம் முழுவதும் கர்த்தருடைய வசனங்களாலும், சத்தியத்தினாலும் வைத்து வைத்திருந்தோமானால் ஏற்றவேளையில் நிதானித்து பதிலளிக்கும்போது வாழ்வடைந்திருப்போம்.

நம் கையைக் கொண்டே நம் கண்ணைக் குத்துவது போல – சாத்தானும், துஷ்ட மனிதரும் – நம்முடைய வாயின் வார்த்தைகளைக் கொண்டே நம்மை வீழ்த்தவோ, அல்லது நம்மிடமிருந்து தப்பித்துக் கொள்ளவோ முயற்சிப்பார்கள். நாம் அதற்கு இடங்கொடாதவகையில் இருப்போமாக.

1பேதுரு: 5:8,9 – “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; …”
வகைதேடிச் சுற்றித் திரிகிறவனை அறிந்து வைப்பது தவறல்ல; அப்பொழுது அவனுக்கு நாம் பயப்படவோ, அவன் தந்திரங்களில் விழாதிருக்கவோ நமக்கு உதவி செய்திடுமே!

விழுங்குவதற்கு வகைதேடிச் சுற்றித் திரிகிறவன்

சாத்தானும் அவனது தூதர்களும் ஓரிடத்திலும் நிலையாக தங்கி தாபரிக்காதவர்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்து சுற்றிக் கொண்டே இருப்பவர்கள். ஏனென்றால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வல்லமை அவ்வளவுதான். தள்ளப்பட்ட தூதர்கள்தானே. ஒரு தூதனுக்கு உண்டான வல்லமை மாத்திரமே சாத்தானுக்கு உண்டு. இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமானால்…
சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருடைய பண்புகளை நாம் தியானிப்போமானால் எளிதாக விளங்கிட முடியும்.

சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருடைய பண்புகள்


 யாத்திராகமம்: 3:14 – “இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்பவர். பழைய ஏற்பாட்டில் எல்லாரிலும் ஒரு மேன்மையான தேவனைக் காண்கிறோம். சங்கீதம்: 83:17 – “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்” “யேகோவா” என்பதற்கு “தன்னில் தானே” , “தம்மாலே தானே” இருக்கிறவர் என்று அர்த்தமாம். வேதத்தில் இப்பெயர் ஏறக்குறைய 7000 முறை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

ஏசாயா: 43:10,11 – “… எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை…”

ஏசாயா: 44:8 – “… என்னைத் தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன்”

ஏசாயா: 42:5 – “வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன்”

ஏசாயா: 42:9 – “பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்குமுன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்”

தேவன் சர்வ வல்லவர்:

ஆதியாகமம்: 17:1 – “… கர்த்தர் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, நான் சர்வ வல்லமையுள்ள தேவன்”

எரேமியா: 32:17 – “ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை”.

கொலோசெயர்: 1:16,17 – “…அவருக்குள் எல்லாம் நிலைநிற்கிறது” // “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது”

யோபு: 42:2 – “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்…”

1பேதுரு: 3:22 – “… தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது

நாம் ஆராதிக்கும் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உடையவர். 1தீமோத்தேயு: 6:15,16 – “… அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்ராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய் சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்”.

சர்வ வியாபகர்:

எங்கும் வியாபித்திருக்கிறவர் – ஒரே சமயத்தில் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்று பொருள்.

எரேமியா: 23:24 – “யாவானாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக் கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்”.

சங்கீதம்: 139:7,10 – “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? … அங்கேயும் உமது கை என்னை நடத்தும்; உமது வலது கரம் என்னைப் பிடிக்கும்”

யோனா: 1:3,4 – “அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்” என வாசிக்கிறோம். கர்த்தருடைய பார்வைக்கு யோனா தப்பவில்லை.

யோவான்: 3:13 – “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை”. தேவனாகிய கர்த்தர் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தில் பரலோகத்திலும் இருப்பார்; பூமியிலும் இருப்பார். ஏனெனில் அவர் சர்வ வியாபிகர்.

அப்போஸ்தலர்: 17:27 – “… அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே”

சர்வ ஞானமுள்ளவர் //  சர்வத்தையும் அறிந்தவர்:

சங்கீதம்: 139:4 – “என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்”

1யோவான்: 3:20 – “… தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”

யோவான்: 16:30 – “நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்”.

யோவான்: 21:17 – “ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்…”.
அப்போஸ்தலர்: 15:18 – “உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது”

நாம் ஆராதிக்கும் தேவன் – சர்வ வல்லவர், சர்வ வியாபிகர், சர்வ ஞானமுள்ளவர், சர்வத்தையும் அறிந்தவர்

இப்படியிருக்க…

சாத்தானை எவ்விதத்திலும் நம் சர்வ வல்லமையுள்ளவருக்கு ஒப்பிடத்தக்கவன் அல்ல. சாத்தான் ஒரு தள்ளப்பட்ட தூதன். விழுந்து போன தூதன். தூதனுக்குரிய வல்லமை, தூதனுக்குரிய ஞானம், அறிவுதான் அவனுக்கு உண்டே தவிர … வேறு ஒரு அதிகாரமும் வல்லமையும் அவனுக்கு இல்லை. கொடுக்கப்படவில்லை. சாத்தான் எதையாகிலும் தெரிந்து கொள்ள விரும்பினால் … அந்தந்த ஸ்பாட்டுக்கே அவன் போய்தான் தெரிந்து கொள்ள முடியும். அல்லது அவனது குட்டிச்சாத்தான்களை ஏவி விடுவதனாலே மீடியாக்காரர்களைப்போல செய்தி சேகரித்து கொண்டு வருவதன் மூலமாகத்தான் அவன் அறிந்து கொள்ள இயலும்.

ஆனால், தேவனாகிய கர்த்தரோ… சர்வ வியாபிகர். இருந்த இடத்திலிருந்து அனைத்தையும் அறிவார். யாரும் அவருக்கு எடுத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவரது பார்வைக்கு மறைவானது ஒன்றுமில்லை. சொல் பிறவா முன்னமே அறிவார். இருதயத்தையும், உள்ளந்திரியங்களையும், நினைவுகளின் தோற்றங்களையும் அவர் அறிவார்.

ஆனால், சாத்தானுக்கு இதெல்லாம் சாத்தியமே இல்லை. மனிதனுடைய உள்ளத்திலிருப்பதையோ, நினைவிலிருப்பதையோ, இருதயத்திலிருப்பதையோ ஒருபோதும் சாத்தானால் அறியவோ, உணரவோ ஒருபோதும் முடியாது.

எனவேதான், சாத்தான் – நமது வாயிலிருந்து புறப்படுகிற  வார்த்தைகளை கொண்டு தான் நம்மை வீழ்த்தவோ, குற்றப்படுத்தவோ, கவிழ்க்கவோ, மரணிக்கவோ செய்ய முடியும்.

எனவேதான், நீதிமொழிகள்: 18:21 – “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்” என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

நம் வாயின் சொற்களை கவனமாக பார்த்து குற்றம் கண்டு பிடித்து … சிதறடிக்கப் பார்க்கிறான். நாம் அவனது வலையில் வகையாக சிக்காதபடி – வாயின் வார்த்தைகளில் கவனமாயிருப்போம். நம் வாயிலிருந்து வாழ்வதற்கான வார்த்தைகளல்ல… மரணத்திற்கேதுவான வார்த்தைகளை உச்சரிக்க தூண்டுவான். நாம் வாயின் வார்த்தைகளைக் கொண்டே நம்மை விழுங்க பார்ப்பான்.

கீழ்க்கண்ட வார்த்தைகளை நம் வாழ்வில் எந்த சூழ்நிலையிலும் உச்சரிக்காதிருப்போமாக…



  • என்னால் வாழ முடியவில்லை … என்னால் சகித்துக் கொள்ள முடியாது … என்னால் மறக்க முடியாது…



  • என்னால் எதுவும் செய்ய முடியாது … என்னால் சாதிக்க முடியாது … என்னால் பாவத்தை விட முடியவில்லை …



  • என்னால் சிற்றின்பங்களை விட இயலாது … தற்கொலை செய்து கொண்டால் நலம் …. வாழப் பிடிக்கலை …



  • ஊரை விட்டு ஓடிப் போகிறேன் …  ஊழியத்தை விட்டுவிட போகிறேன் … வெறுப்பாயிருக்கிறது …



  • யாரையும் என்னால் நேசிக்க முடியலை … எல்லார் மேலும் கோபம் வருகிறது …. ஒருவரும் சரியில்லை …



  • எல்லாரும் ஒரே மாதிரிதான் … யாரிடமும் உண்மையில்லை …. சமுதாயத்தின் மேல் வெறுப்பாயிருக்கிறது ….



  • ஒருவருக்கும் அக்கறையில்லை … யாருக்கும் பொறுப்பில்லை … எனக்கு எப்பவுமே இப்படித்தான் நடக்கும் …



  • என் நேரம் அப்படி … நான் தொட்டால் துலங்காது … எனக்கு எல்லாமே எதிராகத்தான் நடக்கிறது …



  • எனக்கு யாரும் உதவிட இல்லை … அத்தனை பேரும் துரோகிகள்தான், வஞ்சகர்கள்தான் … அனைவரும் பொய்யர்கள்தான் …



  • என்னையெல்லாம் ஆண்டவர் நேசிக்க மாட்டார்…. அவர் என்னை கைவிட்டு விட்டார்… அவர் ஆசீர்வதிக்க மாட்டார்….



  • பைபிள் படிக்க நேரமே இல்லை … ஜெபம் பண்ண நேரமே இல்லை … ஊழியம் செய்ய என்னால் முடியாது …



  • கடனே நீங்க மாட்டேங்குது … வியாதி நீங்க மாட்டேங்குது … நமக்கு கொடுப்பினை இல்லை …



  • நான் ஏன் இரட்சிக்கப்பட்டேனோ தெரியலை … ஆலயத்துக்கு போக மனதில்லை … மனசுல நிம்மதி இல்லை…



  • பழையபடி இருந்தால் தேவலை… சில சகவாசத்தை விட முடியாது …  புகைப்பதையோ, குடிப்பதையோ நிறுத்த முடியாது ….



  • இப்படித்தான் இருப்பேன்… செத்தால் சாகிறேன் …


இப்படி பேசுவதுதான் முறுமுறுப்பு என்பது. நமக்கு நாமே சாத்தானின் வலையில் மாட்டிக்கொள்ளும்படியான வார்த்தைகள் இது என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். பிசாசின் வெற்றி இதில்தான் அடங்கியுள்ளது.

ஆம் பிரியமானவர்களே!

“முடியாது”, “இயலாது”, “தீராது”, “நீங்காது”, “துலங்காது”, “இல்லை” - என்கிற இப்படிப்பட்ட அவ நம்பிக்கை வார்த்தைகளை விசுவாச அறிக்கையிட வைத்து அந்த வார்த்தைகளினாலேயே நம்மை வீழ்த்துவதுதான் பிசாசின் தந்திரங்களில் பிரதானமானது.

ஒன்றை நாம் நன்றாக அறிய வேண்டும். நீங்கள் வெளிப்படையாக பேசாதவரை … சாத்தானால் உங்களை ஒன்றும் செய்ய முடியாது. 

இரண்டாவது, நீங்கள் வெளிப்படையாக அவிசுவாச வார்த்தைகள் பேசும்போதுதான் சாத்தானுக்கு உங்கள் இருதயத்தின் எண்ணங்கள் தெரிய வரும். அதுவரை அவனுக்கு உங்கள் நினைவுகள், எண்ணங்கள் எதுவுமே தெரியாது. அதை அறிந்து கொள்கிற அறிவு, ஞானம், வல்லமை அவனக்கில்லை.

நீங்கள் பேசுகிற தவறான, முறுமுறுப்பான, மரணத்துக்கேதுவான வார்த்தைகள் வைத்துதான் நமக்கு விரோதமாக சாத்தான் செயல்பட முடியுமே தவிர, அவனால் சுயமாக நமக்கெதிராய் செயல்பட்டு வீழ்த்திட முடியாது. நமது அவநம்பிக்கையான வார்த்தைகள் நம்மைச்சுற்றிலும் இருக்கிற தேவனுடைய பாதுகாப்பு என்கிற வேலியை அகற்றி விடும். பிறகுதான் பிசாசு நம்மை தொட இயலும். தேவனுடைய பாதுகாப்பை விட்டு வெளியே வருவது எவ்வளவு பெரிய இழப்பை தருகிறது என்பதை உணருங்கள். அதனால்தான், “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கிறது” என்று கர்த்தர் சொல்கிறார்.

நம் தேவனாகிய கர்த்தரோ … நம் வாயில் விசுவாச வார்த்தைகளை பேச ஆவியானவரைக் கொண்டு அனல்மூட்டி நம்மை எழுப்பி விடுகிறார்.

பிலிப்பியர்: 4:13 – “என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்கு பெலனுண்டு”.

சங்கீதம்: 1:3 – “… அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”

சங்கீதம்: 18:29 – “உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து போவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்”

மாற்கு: 9:23 – “இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்”.

நீதிமொழிகள்: 28:25 – “… கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்”

எலியா தீர்க்கனுடைய ஏளனமும் சாத்தானுடைய தலைமறைவும்


 1இராஜாக்கள்: 18:27 – “மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணமாயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்ப வேண்டியதாக்கும் என்றான்”

எலியாவின் சவாலுக்கும், பரியாசத்திற்கும் எதிர்கொள்ளாமல் சாத்தான் தலைமறைவான இரகசியம் என்னவாயிருக்கும்? சாத்தானுடைய பண்புகளை எலியா தீர்க்கன் ஏளனம் பண்ணிக் கொண்டிருக்கிறான். அதை நிரூபிக்கவாவது வந்திருக்கலாமே!? ஏனிந்த தலைமறைவு வாழ்க்கை? சாத்தானுக்கு சர்வவியாபகத் தன்மை இல்லை; சர்வ வல்லமையற்றவன்; எதையும் முன்னமே அறியக்கூடிய திறனற்றவன் என்பதை நிருபிக்கப்பட்ட இடம்தான் கர்மேல் பர்வதம்.

சாத்தானால் சாத்தியமற்ற பண்புகள்


1.   உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்: சாத்தான் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் மட்டும்தான் இருக்க முடியும். அதேசமயத்தில், அதேநேரத்தில் உலகின் பலமுனைகளில் பல இடங்களில் இருக்க முடியாது. ஏனென்றால், சாத்தானுக்கு தேவனைப்போல சர்வவியாபிக தன்மை அவனுக்கு இல்லை. தேவனை யாரும் உண்டாக்கவில்லை. அவர் யாரிடத்திலும் வல்லமை பெறவில்லை. ஆனால், சாத்தானோ … தேவனால் தூதனாக சிருஷ்டிக்கப்பட்டவன்; தேவனிடத்திலிருந்து வல்லைமை பெற்றுக் கொண்டவன். தேவனாகிய கர்த்தர் தந்த அளவிற்குத்தான் அனைத்து உரிமைகளும், பண்புகளும், வல்லமையும் இருக்குமே தவிர… சாத்தானிடத்தில் வேறெதையும் நாம் காண முடியாது. மேலும் மேலும் வல்லமையை சாத்தான் அப்டேட், அப்கிரேடு செய்து கொள்ள முடியாது. தன்னில் தானோ அல்லது பிறரிடமோ அல்லது கர்த்தரிடமோ மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொள்ளவோ, வல்லமையை மேம்படுத்திக் கொள்ள முடியாது. வல்லமை மட்டுமல்ல வேறெந்த பண்புகளையும் மேம்படுத்திக்கொள்ளவோ, வளர்த்துக் கொள்ளவோ முடியாது. இருக்கிற வல்லமையின்படி மனிதனை சோதித்துக் கொள்ள வேண்டியதுதான்.
எலியாவின் ஏளனம் என்ன? “உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள்” என்பதே. காரணம்? பிசாசுகளின் வகைகளில் பலவகை உண்டு. அதில் ஒருவகை செவிட்டுப் பிசாசு, ஊமைப் பிசாசு, திருட்டுப் பிசாசு. இவைகளெல்லாம் ஒரு மனிதனுக்குள் இருந்தால், சத்தங்காட்டாமல் அமைதியாக உள்ள உட்கார்ந்து கொண்டு, செவியை அடைத்துக் கொண்டு, நாவை கட்டி வைத்துக் கொண்டு இருக்கும். காரணம்? உள்ளே இருக்கிற ஆள் யாரெனத் தெரிந்து விட்டால் துரத்தப்பட வேண்டியிருக்குமே என்பதினால் (மத்தேயு: 12:22 // மாற்கு: 9:25).

2.   அவன் தியானத்தில் இருப்பான்: என்ன ஒரு ஏளனம்?!! சாத்தானுக்கு ரோஷம் வரவேண்டாமா?! மனுஷகொலை பாதகனுக்கு வராதுங்க. என்ன பெரிதாக தியானம் செய்து விட போகிறான்? மனுக்குலம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்றா தியானிக்கப் போகிறான்?! இன்னும் எத்தனை மனுஷர்களை அழிக்கலாம்? எந்தெந்த வகைகளில் அழிக்கலாம்? எத்தனை குடும்பங்களை நிர்மூலமாக்கலாம்? மக்களை மூடத்தனத்திலேயே எப்படி நிரந்தரமாக மூழ்கடிக்கலாம்? எத்தனை மனங்களை குருட்டாட்டம் பிடிக்கச் செய்யலாம்? மெய் தெய்வத்தை கண்டவர்களை எப்படி திசைதிருப்புவது? இதுதானே அவனது தியானமாக இருக்க முடியும்? பிசாசு கட்டுகிற தியான பீடங்களில் இதைத்தவிர வேறென்ன இருக்க முடியும்?! பிசாசு செய்கிற யோகாசனங்களில் வேறென்னத்தைக் காண முடியும். நம் தேசத்து மக்களையும், ஆட்சியாளர்களையும் இப்படித்தானே குருட்டாட்டம் பிடிக்கச் செய்திருக்கிறான். அவனது தியானத்தைக் கலைத்து, அவனைது தந்திரங்களை முறியடித்து உண்மை தெய்வத்தை உலகிற்கு காட்ட எலியாவைப்போல  எழும்ப வேண்டிய காலகட்டத்தில் நாம் வந்திருக்கிறோம்.

3.   அலுவலாயிருப்பான்: இடப்பற்றாக்குறையினால் ஒருவனுக்குள்ளேயே லேகியோன் அளவுக்கு குடியிருந்து குடியை கெடுத்துக் கொண்டிருப்பான் என்று எலியா தீர்க்கன் ஏளனம் பண்ணுகிறான் என நினைக்கிறேன். சாத்தானுக்கு இந்தியாவில் இடப்பற்றாக்குறையை ஜெபத்தினால் ஏற்படுத்துவோமாக. உபவாசத்தினால் கடிந்து துரத்துவோமாக. யோவான்: 14:30 – “ … இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை”.  சாத்தானுக்கு அலுவலே இல்லாமல் செய்ய வேண்டிய பொறுப்பு நம்மைச் சார்ந்தது. சபையைச் சார்ந்தது. ஒருமனப்பட்டு, ஒன்று சேர்ந்து, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் சாத்தானை ஓடஓட துரத்துவோமாக.  கொரியாவில் வந்த எழுப்புதலுக்குக் காரணம் … சாத்தானை கொரியாவில் இராதபடி துரத்தப்பட்டதே காரணம். கர்மேலில் அக்கினி இறங்கி எழுப்புதல் ஏற்பட காரணம்… எலியா தீர்க்கன், சாத்தானை ஓடஓட துரத்தி விட்டதே. இந்தியாவில் எழுப்புதல் ஏற்பட சபைகள் அனைத்தும் ஒருமனப்பட்டு, சாத்தானுக்கு எதிராக ஜெபசேனையை உருவாக்கி சாத்தானை ஓடஓட துரத்த வேண்டும். ஜெபக்குழு தலைவர்கள், ஜெப சேனைகள் எழும்ப ஜெபிப்போம். யோவான்: 10:9 – “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்”. சாத்தான் ஒருவனுக்குள் பிரவேசித்தால்… யோவான்: 10:10 – “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான்…”. அவனது தலையாய அலுவலே அதுதான். பிசாசின் அலுவல் என்னஎன்பதை வேதம் முழுக்க அவனது கிரியைகளை வாசிக்கிறோமே! அவனால் மனுக்குலத்திற்கு ஒரு பயனுமில்லை. பயனற்ற கிரியைகள் மட்டுமே அவனில் காணப்படுகிறது. எலியாவிற்கு முன் வந்து நின்று அடிபடுவதைவிட, உலகில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஆத்துமாவை நஷ்டப்படுத்துவது மேல் என்று கருதி ஓடிவிட்டான் போலும்.

4.   பிரயாணமாயிருப்பான்: சிலபேருடைய பிரயாணம் நன்மை தரும். சிலபேருடைய பிரயாணம் தீமை தரும். சாத்தானுடைய பிரயாணம் ஒருபோதும் மனுக்குலத்திற்கோ, தேவபிள்ளைக்கோ நன்மையை கொண்டு வராது என அறிந்திருக்கிறோம். அழைக்கும் பக்தர்களின் குரல் கேட்டு இங்கு வராமல் வேறு எங்கோ பிரயாணம் பண்ணுகிறான் என்று சொன்னால் … இவர்கள் மேல் அக்கறையில்லை என்றாகிறது. அவன் வராவிட்டால் இந்த பக்தர்களின் கதி அதோகதிதான். இந்த பக்தர்களை கைவிட்டுவிட்டான். இனி புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறான். அந்த பிரயாணமும் இப்படிபட்டவர்களுடைய அழிவைபோலதான் இருக்கப்போகிறது. வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கு பிரயாணமாய் போயிருப்பான். காது கேட்க நியாயமில்லை. பிரயாண தூரம் வெகுதூரமாயிருப்பதினால் உரத்த சத்தமாய் கூப்பிடுங்கள் என்று வேறு எலியா ஏளனம் செய்கிறார். யோவான்: 3:13 – “பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை”. தேவனாகிய கர்த்தர் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தில் பரலோகத்திலும் இருப்பார்; பூமியிலும் இருப்பார். ஏனெனில் அவர் சர்வ வியாபிகர்.
ஏசாயா: 66:1 – “கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதப்படி…” என்று. எவ்வளவு பெரிய தேவன்?! ஒருதேவதூதன் இவ்வளவு பெரியவன் அல்ல. மிஞ்சிப்போனால் ஒரு எட்டடி உயரம் இருக்கலாம்.

 5.   தூங்கினாலும் தூங்குவான்: “இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதும் இல்லை; தூங்குவதும் இல்லை” (சங்கீதம்: 121:4). நாம் ஆராதிக்கும் தேவன் நம்மைக் காக்குபடிக்கு தூங்காமலும் உறங்காமலும் இருக்கின்ற அக்கறையுள்ள தேவன். அக்கறையில்லாதவனுக்கு உறக்கமும் வரும்; தூக்கமும் வரும். யார் மேலும் கரிசனையோ, அக்கறையோ இல்லதவன் பொறுப்பற்றவன் என எலியா தீர்க்கன் சொல்ல வருகிறார் என்பதை நாம் அறிவோமாக.
எலியா தீர்க்கன் சொல்வதைக்கூட விடுங்கள். பாவம் … பாகாலின் பிள்ளைகளுடைய உரத்த குரலுக்குக்கூட செவிமடுக்காதது கொடுமையிலும் கொடுமையல்லவா?
1இராஜாக்கள்: 18:28,29 – “அவர்கள் உரத்த சத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள். மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை”.

தங்களின் வழக்கத்தின்படியே …

உலகம் முழுக்க பாகாலின் வழிபாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் இப்படித்தான் இருக்கிறது. தங்கள் சரீரங்களை கீறிக்கொண்டு, சன்னதம் சொல்லி (அருள் வாக்கு // குறி சொல்லுதல்) மனுக்குலத்தை வஞ்சிப்பதுதான் பாகாலின் திட்டம். இதில் விழுந்துபோன மக்கள் தாங்கள் மரிக்கும்வரை மீண்டுவர பலநேரங்களில் முடிவதில்லை. பாகாலின் திட்டத்தில் விழுந்தவர்களின் ஒருமனப்பட்ட ஒருங்கிணைப்பைப் பாருங்கள் – சன்னதம் சொல்கிறவன், நாள் நட்சத்திரம் பார்க்கிறவன், கிளி ஜோசியம் சொல்கிறவன், சகுனம் பார்க்கிறவன், நியுமரலாஜி பார்க்கிறவன், ஜாதகம் பார்க்கிறவன் முடிவிலே எங்கு நடத்தகிறான்? பரிகாரம் என்ற பெயரிலே பாகால் விக்கிரகங்களுக்கேதுவாக வழிநடத்துகிறானல்லவா? முக்கடலும் சங்கமிக்கிற இடம், முக்கூடலும் (மூன்று ஆறுகள்) சங்கமிக்கும் இடங்கள், புண்ணியஸ்தலங்கள், மலைக்கோவில்கள், குறிப்பிட்ட காரியங்களுக்கு குறிப்பிட்ட தெய்வங்களுக்கு குறிப்பிட்ட பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி பாகாலிடம் அல்லவா வழிநடத்துகிறார்கள்.

ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இவ்வளவும் செய்தும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை. மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. கவனிப்பாரும் இல்லை. அப்படியானால், பாகாலின் தீர்க்கதரிசிகள் எப்படி சாயங்கால மட்டும் சன்னதம், அருள் வாக்கு, குறிசொல்லிக் கொண்டு வந்தார்கள். பொய்யின் ஆவிதானே. பாகால் தீர்க்கதரிசிகள் தங்கள் சொந்தத்திலிருந்து குறிசொல்லியிருக்கிறார்கள். அதாவது பொய் சொல்லியிருக்கிறார்கள் என இதன் மூலம் விளங்குகிறதல்லவா?! யோவான்: 8:44 – “… அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்”. நம் தேசத்தில் இருக்கும் பக்தகோடிகள், பக்த சிரோன்மணிகள் ஒவ்வொருவரும் இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அறிந்தபின் ஆண்டவர் இயேசுவிடம் இரட்சிப்பை பெற முன்வரவேண்டும்.

இதுவரை சாத்தானின் சாத்தியமற்ற குணப்பண்புகளை எலியா தீர்க்கனின் பரியாசத்திலிருந்து விவரமாக கண்டறிந்தோம். சாத்தானால் சாத்தியமற்ற விஷயங்கள் சிலசமயங்களில் சாத்தியப்படுவதற்கான காரணம் இதுதான். நமது வாயின் வார்த்தைகளினால் அவிசுவாச வார்த்தைகளை பேசும்போது நம்மில் சாத்தான் கிரியை நடப்பிக்கும்படி திறந்த வாசலை நாமே அவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடுவதினால்தான். எனவே, இவ்விஷயத்தில் சற்று கவனமாயிருந்தால் நம்வாழ்வில் சாத்தானுக்கு இனிமேல் இடமே இராதபடி செய்து வெற்றிமேல் வெற்றி பெற்று, நீடித்த நாட்களாய் நன்மையையும் கிருபையையும் பெற்று வளமாய் வாழ்ந்திருப்போம். ஜீவனுக்கேதுவான வாழ்விற்கேதுவான வார்த்தைகளையே பேசுங்கள். அதற்கான கிருபையை தேவனிடம் ஜெபத்திலே கேட்டுப் பெற்றிடுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!