தேவன் எப்படிப்பட்டவர்?
திறவுகோல் வசனம்: ஏசா: 33:22 – “கர்த்தர் நம்முடைய
நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய
நியாயப் பிரமாணிக்கர், கர்த்தர் நம்முடைய
இராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்”
கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி
நீதி தவறாதவர். பட்சபாதமில்லதவர். கலா: 2:6 – தேவன் மனுஷரிடத்தில்
பட்சபாதமுள்ளவரல்லவே”.
எபி: 6:10 – “… உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்கிறதினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காக காண்பித்த
அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே”
வெளி: 2:3 – “… என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல்
பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்”
1பேதுரு: 1:17 – “அன்றியும்,
பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாக தொழுதுகொண்டு வருகிறபடியால்…”
லூக்கா: 18:2-8 – அநீதியுள்ள நியாயாதிபதியே தன்னை நம்பி வருபவருக்கு நீதி செய்வானென்றால்… தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்படவர்கள் விஷயத்தில் …
நியாயஞ் செய்யாமலிருப்பாரோ?”
அப்: 10:35 – “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து
நீதியை செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்…”
கர்த்தர் நம்முடைய நியாயப் பிரமாணிக்கர்
நியாயப்பிரமாணத்தை கொடுத்தவரும் அவரே; அதை நிறைவேற்றி முடித்தவரும் அவரே; அவர் சகல அதிகாரம் படைத்தவர்.
நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தாரே ஒழிய, அழிக்க வரவில்லை.
யோபு: 33:14 – “தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே”
யோவா: 19:22 – “பிலாத்து பிரதியுத்தரமாக, நான்
எழுதினது எழுதினதே என்றான்”. ஒரு மனிதனே தான் எழுதியதை மாற்ற விரும்பாதபோது, தன் சொல்லில், வாக்கில் உறுதியாயிருக்கும்போது தேவன் மட்டும் மாறுவாரா?
யாக்: 1:17 – “… அவரிடத்தில்
யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை”
மல்கியா: 3:6 – “நான் கர்த்தர்;
நான் மாறாதவர்…”
எபி: 13:8 – “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும்
மாறாதவராயிருக்கிறார்”
இப்படிப்பட்ட நல்ல தேவனை நாம்
விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும்
உன்.பாட்டு: 3:4 – “நான் அவர்களை விட்டு கொஞ்ச தூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னை பெற்றவளின் அறையிலும் கொண்டு வந்து விடுமட்டும்
விடாமல் பற்றிக் கொண்டேன்”
ரூத்: 1:14 – “… ரூத்தோ அவளை
விடாமல் பற்றிக்கொண்டாள்”
•
பாலத்தை தாங்கிக்கொண்டிருப்பது தூண்கள். தூண்களின் பலத்தினால் பாலத்தில் மக்கள் பயமின்றி விடாமல் பயணம் செய்கிறார்கள்.
•
அதுபோல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்னும் தூணாகிய பாலத்தின்மேல் பயமின்றி திகிலின்றி விடாமல் பயணம் செய்வோம். அவர் நம்மை தாங்குகிறார் என்ற நம்பிக்கையோடு தொடருவோம்…
கர்த்தர் நம்முடைய இராஜா
ராஜா சர்வ அதிகாரம் உடையவர். ஐசுவரியம் நிறைந்தவர். ஆளுகை, அதிகாரம் மிகுந்தவர்.
எஸ்தர்: 1:3,4 – அகாஸ்வேரு ராஜா விருந்துக்கு அழைப்பு கொடுக்கிறான்.
“அவன் தன் ராஜ்யத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்து பண்ணினான். அப்பொழுது பெர்சியா, மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும் அவன் சமூகத்தில் வந்திருந்தார்கள். அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச் செய்து கொண்டிருந்தான்”
யாருக்கெல்லாம் அழைப்பு?
இராஜாவின் மனதில் இருப்பவர்களுக்கு மட்டும்.
1. பிரபுக்கள், 2. ஊழியர்கள், 3. மகத்தானவர்கள், 4. அதிபதிகள் ஆகியோர். இவர்களெல்லாம் அகாஸ்வேரு ராஜாவின் இருதயத்தில் இருந்ததினால்தான் சிறப்பான அழைப்பு கொடுக்கப்பட்டது. (நாமும் பரலோக ராஜாவின் இருதயத்தில் இடம் வகிக்கிறவர்களாக இருக்கிறபோது, நம்முடைய ராஜாவாகிய கர்த்தர் நம்மையும் அவரது பரலோக விருந்திற்கு அழைப்பார்) பரலோக ராஜாவின் மனதில் நாம் இடம் பிடித்திருக்கிறோமா?
1. இராஜாவின் மனதில் இருக்க வேண்டும்:
ராஜாவின் மனதில் யார் முதலில் இருப்பார்கள்?
•
தேசத்திற்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்
•
தேச நலனில் அக்கறையுள்ளவர்கள்
•
தேசத்திற்காக தியாகம் செய்பவர்கள்
•
தேசம் எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப்பட பாடுபடுபவர்கள்
மத்: 6:10 – “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுவதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக” – என்ற பரமண்டல ஜெபத்தில் இயேசுகிறிஸ்து சொல்லியபடி தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட தொண்டு செய்பவர்கள், சேவை செய்பவர்கள், ஊழியம் செய்பவர்கள் இயேசுராஜாவின் மனதில் இருப்பார்கள்.
அப்படிப்பட்டவர்கள்மேல் தேவன் பிரியமாயிருப்பார். யாரெல்லாம் ராஜாவின் மனதில் இடம் பிடித்திருந்தனர்? என தொடர்ந்து தியானிப்போம்.
பிரபுக்கள்:
கர்த்தருடைய வேலைகளுக்கு கொடுப்பவர்கள் பிரபுக்கள், (எண்: 7:2,10). ஊழியங்களைத் தாங்குபவர்கள் பிரபுக்கள். எஸ்றா, நெகேமியாவின் நாட்களில் அலங்கங்களை, மதில் சுவர்களை கட்டினவர்கள் பிரபுக்கள்.
ஆதி: 23:6 – “எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே
நீர் மகா பிரபு” என்று ஏத்தின் புத்திரர் கூறுகிறதை வாசிக்கிறோம். காரணம், ஆபிரகாம் கொடுத்து வாழ்பவன். தன்னைச் சுற்றியிருப்போருக்கு தன்னால் இயன்றதை கொடுத்து நன்மதிப்பை பெற்று வாழ்ந்தவன்ஆபிரகாம். தேசத்து ஜனங்கள் முன்பாக ஆபிரகாம் மகா பிரபுவாக கருதப்பட்டான். ஆபிரகாம் சாராளை அடக்கம் பண்ணுவதற்கு ஏத்தியர் நடுவே, எப்பிரோனுக்கு, (ஆதி: 23:16) – “வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான்”. கல்லறையை எவரிடமும் இலவசமாக பெறவில்லை.
பிறருக்கு கொடுப்பவன்தான் பிரபுவாக முடியும். வாங்குபவன் அல்ல. “கேளுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும்; கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கொடுக்கப்படும்.” கேட்க ஒரு காலமுண்டு. கொடுக்க ஒரு காலமுண்டு. இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? கேட்கும் நிலையிலா? கொடுக்கும் நிலையிலா?
கர்த்தர் உங்களை எந்த நிலையில் வைத்திருக்கும்படிக்கு நீங்கள் அவரிடமும், பிறரிடமும் நடந்து கொள்கிறீர்கள்? பிரபுவாக இருக்கிறீர்களா? வறியவராக இருக்கிறீர்களா? வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே நலம்.
கொடுக்கும் நிலைக்கு வருவதே வளர்ச்சி நிலை. அப்படிப்பட்டவர்களே பிரபுவாக (அ) மகா பிரபுவாக இருக்க இயலும்.
ஊழியர்கள்:
ராஜாவுக்கு பணிவிடை செய்பவர்கள் ஊழியர்கள். எசேக்: 44:15,16 – “இஸ்ரவேல் புத்திரரே என்னை விட்டு வழி தப்பிப் போகையில்,
என் பரிசுத்தஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே
எனக்கு ஆராதனை செய்ய,
என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும், இரத்தத்தையும்
எனக்குச் செலுத்த
என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இவர்கள்
என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே
எனக்கு ஆராதனை செய்ய
என் பீடத்தைக் கிட்டி வந்து,
என் காவலைக் காப்பார்கள்”
“என், எனக்கு” – என்று தனக்கு பணிவிடை செய்யும் தம்முடைய ஊழியர்களை உரிமை பாராட்டுகிறார்.
“என்” என்ற பதம்
6 முறை வருகிறது.
“எனக்கு” என்ற பதம்
3 முறை வருகிறது.
மகத்தானவர்கள்:
இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு நீதிமான்களாக்கப்பட்டவர்கள் மகத்தானவர்கள்
ஆதி: 1:16 – “தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்”
தானி: 12:3 – “ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்”
உலகில் மகத்தானது நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் பெற்றிருக்கிற இரட்சிப்பு தான்.
ஏனென்றால், அப்.பவுல் ரோமர்: 10:1 – “சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே என் இருதயத்தின் விருப்பமும், நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது” என்று வலியுறுத்துகிறார்.
அதிபதிகள்:
ராஜாவிற்கு கீழிருந்து அதாவது ராஜாவுக்கடுத்து இரண்டாமிடத்திலிருந்து ஜனங்களை வழி நடத்துபவர்கள் அதிபதிகள். (கவர்னர், தேசாதிபதிகள், சிற்றரசர்கள், குறுநில மன்னர்கள்). மோசே, ஆரோனின் தலைமையின் கீழ் 50 பேருக்கு, 100 பேருக்கு, 500 பேருக்கு, 1000 பேருக்கு ஜனத்தின் அதிபதிகளாக செயலாற்றுதல்.
யாக்கோபுக்கு, யோசேப்பின் சகோதரர்கள் ஆதி: 45:26 – “யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன்
எகிப்து தேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள்” என வேதத்தில் வாசிக்கிறோம்.
யோசேப்பை தேவன் அதிபதியாக்க
மூன்று பாதைகளில் அவனை நடத்தி வந்தார்.
1. பெருமைக்கு பரீட்சை - பலவருண அங்கி பறிப்பு: (ஆதி: 37:23)
சகோதரரைக்காட்டிலும் தான் மேலானவன். தகப்பனால் அதிகம் நேசிக்கப்படுகிறவன் என்ற பெருமை அவன் அணிந்திருந்த பலவருண அங்கி மூலம் வெளிப்பட்டது. மேன்மைக்கு முன்னானது தாழ்மை. பெருமையை நாம் அகற்றா விட்டால் தேவன் அதை பறிக்கும்படி செய்வார்.
சாலமோனுக்கு பிறகு, ரெகோபெயாமிடத்தில் இஸ்ரவேலின் மூப்பர்கள் நாடி வந்து,
ஜனங்களுக்கு சேவை செய்யும் சேவனாக மாற வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். 1ராஜா: 12:7 – “… நீர் இன்று இந்த ஜனங்களுக்கு
சேவகனாகி, அவர்களுக்கு
இணங்கி, அவர்கள்
சொற்படி செய்து, மறுமொழியாக
நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு
ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்”.
ஆனால், ரெகோபெயாமோ
தன்னை தாழ்த்தாமல் மேட்டிமையடைந்து கடின வார்த்தைகளை உச்சரித்ததின் விளைவு தேசம் இரண்டாகப் பிளவுபட்டது.
பெருமையை அகற்றும்போது தாழ்மை தன்னால் வரும். தாழ்மை உயர்வைத் தரும்.
2. பரிசுத்தத்திற்கு பரீட்சை - போத்திபார் வீடு : (ஆதி: 39:7)
அந்தரங்கத்தில் தேவன் பரிசுத்தத்தை விரும்புகிறார். அந்தரங்கத்தைப் பார்க்கிற தேவன் வெளியரங்கமான பலனைத் தருவார். யோசேப்பு வெளியரங்கத்தில் மட்டுமல்ல அந்தரங்கத்திலும் தான் பரிசுத்தமானவன் என்பதை தனது கிரியைகள் மூலம் வெளிப்படுத்தினான்.
3. பொறுமைக்கு பரீட்சை – சிறைச்சாலை: (ஆதி: 40:14)
கர்த்தர் தன்னை விடுவிக்குமளவும் பொறுமையோடே நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டிய யோசேப்பு மனுஷனை நம்பினான்.
“… நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவு வைத்து, என் காரியத்தை பார்வோனுக்கு அறிவித்து இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்க வேண்டும்” என்று கெட்டுக் கொண்டான்.
ஆனால் நடந்தது என்ன? ஆதி: 40:23 – “ஆனாலும், பானபாத்திரக்காரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்து விட்டான்”. மனிதனை நம்பினால் மறந்து போவார்கள். கர்த்தரோ நம்மை ஒருபோதும் மறப்பதில்லை.
இவ்வாறாக, மூன்று பாதைகளை கடந்து ஜெயமெடுப்பவர்கள் அதிபதியாகலாம்.
எத்தனை நாட்கள் விருந்து?
180 நாட்கள். (30 × 6 = 180) ஆறு மாதம் விருந்து. மிகப் பெரிய விருந்துதான். மூன்றுநாள் முகாம் நடத்துவதற்கு பல காரியங்களை ( தங்குமிடம், உணவு ) ஆயத்தம் பண்ண வேண்டியுள்ளது. கலந்து கொள்பவர்கள் ஆயத்தமாக போக வேண்டியுள்ளது?!
ஆறுமாதம் எனும்போது அனைவரும் குடும்பமாகத்தான் பங்குபெற வேண்டியிருக்கும். எவ்வளவு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியிருக்கும்?! 127 நாட்டு அதிபதிகள், 127 நாட்டு பிரபுக்கள், 127 நாட்டு ஊழியர்கள், 127 நாட்டு மகத்தானவர்கள்... நாட்டுக்கு ஒருவர் என்றாலும் 127*4= 508 வருகிறது. இதில் பிரபுக்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ? ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ?! மகத்தானவர்களின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ?! அப்பப்பா... தியானிக்கும்போது மலைப்பாக உள்ளது.
அனைவருக்கும் தினந்தோறும் போரடிக்காமல் இருக்க ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி வேறு… லூக்: 15:25 – மனந்திரும்பி வந்த இளையகுமாரனுக்கு கீத வாத்தியம், நடனக்களிப்பு போலத்தான் …
எதற்காக விருந்து?
1. தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும்
2. தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் – விளங்கப்பண்ண.
எபேசி: 3:10 – “உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது
சபையின் மூலமாய் இப்பொழுது
தெரியவரும் பொருட்டாக, …
எபேசி: 3:8 – “கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியத்தை புறஜாதிகளிடத்தில்
சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக..”
கொலோ: 2:2,3 – “… பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை
அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே… அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது”
ரோம: 11:33 – “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள்! அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!”
2. இராஜாவின் தயவை பெற்றிருக்க வேண்டும்:
ராஜாவின் தயவு – புல்லின்மேல் பெய்யும் பனிக்கு ஒப்பானது. நீதி: 19:12 – “ராஜாவின்
கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும்
பனிபோலிருக்கும்”
கோபம்:
ராஜாவுக்கு கோபம் இருக்கலாம். ஆனால், கோபம் நமக்கு இருப்பது நஷ்டத்தையே கொடுக்கும். கர்த்தர் நம்முடைய ராஜா. அவரது கோபத்திற்கு ஆளான சோதோம் கொமார பட்டணங்கள், தீரு சீதோன் பட்டணங்களின் அழிவை நாம் வேதத்திலே வாசித்திருக்கிறோம். அவைகள் அனைத்தும் தேவ கோபத்தினால் அழிந்துபோய் இன்று சமுத்திரத்தின் அடியில் மூழ்கி கிடப்பதையும் நாம் அறிவோம். கோபம் இழப்பைத்தான் தருகிறது. எனவே, கோபத்தை தவிர்ப்போம்.
ராஜாவின் தயவு எப்படிப்பட்டது?
பனி:
ராஜாவின் தயவு – புல்லின்மேல் பெய்யும் பனிக்கு ஒப்பானது. மழை பெய்தால் சத்தம் தொனிக்கும். எவ்வளவு பனி பெய்தாலும் சத்தம் வராது. அதுபோல ராஜாவின் தயவு மிருதுவாக, கனிவாக இருக்கும்.
2சாமு: 9:1 – “யோனத்தான் நிமித்தம் என்னால் தயவு பெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான்”. தாவீதின் மனதைப் பாருங்கள். அவன் சமஸ்த இஸ்ரவேலின்மேல் ராஜாவாக வாழ்வடைந்திருக்கும்போது தனக்கு உதவினவர்களுக்கும், சிநேகிதர்களுக்கும் உதவும்படி அவன் மனது ஏங்குகிறதைப் பார்க்கிறோம். யோசேப்பும் அப்படித்தான் இருந்தான்.
சீபா: சவுலின் வீட்டு வேலைக்காரன். (2சாமு: 9:2). சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவுக்கு, 15 குமாரரும், இருபது வேலைக்காரரும் இருந்தார்கள் (2சாமு: 9:10).
மேவிபோசேத்: சவுலுக்கு பேரன், யோனத்தானின் குமாரன் மேவிபோசேத் (2சாமு: 9:3). மேவிபோசேத்திற்கு இரண்டு கால்களும் முடமாகியிருந்தன. முடமான மேவிபோசேத்தை பராமரிக்க வேண்டிய சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவோ, அவனை விட்டு விலகிப்போனான்.
சவுலினால், யோனத்தானால், மேவிபோசேத்தால் பலனடைந்த சீபா… ராஜ்யபாரம் கைமாறிய உடனே பராமரிப்பதை விட்டுவிட்டான்.
மேவிபோசேத்தோ – லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலே இருந்தான் (2சாமு: 9:4). அந்நாட்களில் ஆயுததாரியும், வேலைக்காரர்களும் இறுதிவரை உடனிருப்பவர்களாக இருப்பார்கள். மரணமே வந்தாலும் விலகிட மாட்டார்கள். ஆனால், சீபாவோ சுயநலத்தோடு தன் குடும்பத்தைப் பார்த்து போய் விட்டான்.
இப்பொழுது ராஜாவின் தயவு மேவிபோசேத்திற்கு கிடைத்தது.
வரவழைக்கப்பட்டான். “தாவீது அவனை பார்த்து, நீ பயப்படாதே, உன் தகப்பனாகிய
யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்து உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்கு திரும்பக் கொடுப்பேன். நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்” (2சாமு: 9:7).
“உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயை செய்து …”
எதனால் இந்த தயவு?
1சாமு: 14:4,13 – யோனத்தானும் அவனது ஆயுததாரியும் பெலிஸ்தியரின் தாணையத்திற்கு போகும் வழியில் இரண்டு செங்குத்தான் பாறைகள் இருந்தன. பெலிஸ்தியரை வீழ்த்துவதற்கு யோனத்தான் அப்பாறைகளின்மேல், தன்
கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்.; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே ஏறினான் என்று வாசிக்கிறோம்.
கர்த்தருடைய திட்டத்தின்படி அதை நிறைவேற்றுவதற்கு தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறிய யோனத்தானுக்கு… பிறந்த குமாரன் மேவிபோசேத்தோ (2சாமு: 4:4) ஐந்து வயதிலிருந்து தரையில் தவழ்ந்து செல்லும் நிலையில் கால்கள் முடமான மகன். தாவீது மனதுருகி, “நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய்” என்று தயை பாராட்டினான்.
கர்த்தருடைய திட்டத்தை, தேவசித்தத்தை செய்கிறவர்களின் சந்ததி முடமாகிப்போனாலும் வாழ்நாளெல்லாம் வாழ வைப்பவர்தான் நம் கர்த்தராகிய ராஜா. ராஜாதி ராஜா. இயேசு மகா ராஜா.
2சாமு: 9:9-11 – “ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: … நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக் கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பமுண்டாகும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; …
ராஜ குமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத்
என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான்”. இதுதான் ராஜாவின் தயவு என்பது.
சவுலின் வேலைக்காரனாகிய சீபாவின் நடிப்பு, மாய்மாலம் நீண்டநாள் நீடிக்கவில்லை. சீபா மீண்டும் மேவிபோசேத்தை ஒழுங்காக பராமரிக்கும் பணியை செய்ய வேண்டியதாயிற்று. ராஜாவின் தயவு அதை செய்ய வைத்தது.
இழந்துபோனவைகளை மீட்டெடுக்க, திருப்பிக் கொள்ள இப்படிப்பட்ட ராஜாவின் தயவு நமக்கு தேவை. அதற்கு நாம் தேவசித்தத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுகிற அர்ப்பணிப்பு வேண்டும். அப்படிப்பட்டவர்களின் சந்ததியை, தலைமுறையை தேவனாகிய கர்த்தர் கைவிட மாட்டார். என்றென்றும் நம் தேவனாகிய ராஜாவாகிய கர்த்தர் தயை கிடைக்கும். ராஜாவின் தயவு – புல்லின்மேல் பெய்யும் பனிக்கு ஒப்பானது.
3. இராஜா நமக்கு முன் செல்ல வேண்டும்:
மீகா: 2:13 – “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்து போகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்து போவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப்போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்”
நமது அனைத்து பயணங்களிலும், பிரயாசங்களிலும் தேவனாகிய கர்த்தர் முன் செல்லும்படி இருக்க வேண்டும்.
செங்கடல் அனுபவமும் – யோர்தானின் அனுபவமும் – ஒரு ஒப்பீடு:
எகிப்திலிருந்த எபிரேய மக்கள் பார்வோனால் துரத்தப்பட்டு தப்பிக்க செங்கடல் அருகே தள்ளப்பட்டார்கள். ஒருகாலத்தில் தேவ ஜனம்
தள்ளப்பட்ட நிலையில் இருந்தபோது தேவனாகிய கர்த்தர் முன் செல்கிற ராஜாவாயிருந்தார்.
இப்போது யோசுவாவின் தலைமையில் யோர்தானை கடந்து போக
நிறுத்தப்பட்ட நிலைமையில் இருக்கிறார்கள்.
செங்கடலுக்கு
நிர்பந்தமான நிலைமையில் சென்றனர். யோர்தானுக்கோ
விருப்பப்பட்ட நிலையில் வந்து நின்றார்கள்.
நாம் இரட்சிக்கப்பட செங்கடல் செல்ல வேண்டிய நிலை அல்லது யாராலேயோ தள்ளப்பட்ட நிலை… கடன்பட்ட நிலை… வியாதிப்பட்ட நிலை… விரக்தியடைந்த நிலை…
நாம் முழுமையாக இரட்சிக்கப்பட்ட பின் … யோர்தானின் நிலை. நாமே கடந்து செல்ல வேண்டிய நிலை…. பிரச்சினைகளை நாமே முகமுகமாய் சந்தித்து ஜெயமெடுக்கும் நிலை.
இப்பொழுது நாம் எந்த நிலையில் இருக்கிறோம்?
தள்ளிவிடப்பட்ட நிலையா? நிறுத்தப்பட்ட நிலையா?
தள்ளிவிடப்பட்ட நிலையில் – தேவனாகிய கர்த்தர் முன் செல்கிறார்.
நிறுத்தப்பட்ட நிலையில் – தேவனாகிய கர்த்தரால் பயிற்சி கொடுக்கப்பட்டு நடத்தப்படும் தேறின நிலை.
எபி: 11:30 – “விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது” என வாசிக்கிறோம்.
இப்பொழுது தள்ளிவிடப்படவில்லை. எரிகோவிற்கு முன்பாக நிறுத்தப்பட்டார்கள்.
ஏழுநாள் சுற்றி வர வேண்டும். அப்பொழுது எரிகோவிற்கு என்ன நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. விசுவாசம் மட்டுமே. ஏதோ ஒன்று நடக்கப்போகிறது. அது தேவனாகிய கர்த்தரால் மட்டுமே நடக்கும். ஏனெனில், அவர் தடைகளை நீக்குகிறவர்.
1.
ராஜாவின் மனதில் இருக்க வேண்டும்
2.
ராஜாவின் தயவை பெற்றிருக்க வேண்டும்
3.
ராஜா நமக்கு முன் செல்ல வேண்டும்
இம்மூன்று கிருபைகளையும் நாம் பெற்றிருப்போமானால் நம்மை விட பாக்கியசாலி வேறொருவருமில்லை. இச் செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பின் கருத்திடுக. கர்த்தரின் கிருபை உங்களனைவரோடும் இருப்பதாக.