மார்ச் 15, 2021

ஏன் இயேசு நமக்காக மரிக்க வேண்டும்? Why Jesus have to die for us?



சிலுவையை நாம் பார்க்கும்போது, இயேசுவின் அன்பும் தியாகமும் நம் நினைவுக்கு வரும். அப்போது, நம் மனதுக்குள் வரும் கேள்விகள் - ஏன் இயேசு இந்த சிலுவையை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏன் இயேசு மரிக்க வேண்டும்? ஏன் இவ்வளவு காயங்கள் பட வேண்டும்? 

- நம்மில் யாரேனும் நாம் செய்த தவறுகளுக்காக மற்றவர்கள் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வதை பார்த்திருக்கிறோமா? 

ஒரு வாலிபன் தன் விலையுயர்ந்த காரை  வேகமாக ஓட்டிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தான். சற்றும் எதிர்பாராத விதத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி விபத்து நேர்ந்தது. உடனே, அடிபட்டவரை மருத்துவமனைக்கும், அந்த வாலிபனை நீதிமன்றத்திற்கும் அழைத்து சென்றார்கள். அங்கே, நீதிபதி வாலிபனை பார்த்து, "நீ விபத்து ஏற்படுத்தினதற்கு அபராதம் செலுத்துகிறாயா அல்லது 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கிறாயா? " என்று கேட்டார். அந்த வாலிபன் அபராதம் செலுத்துவதற்கு பணம் இல்லையே என்று வருந்தினான். என்ன செய்வதென்று கலங்கி போனான். நீதிபதி எழுந்து வந்து, தன் நீதிபதிக்கான மேலங்கியை கழற்றி விட்டு, தானே அபராதம் செலுத்தினார். காரணம், விபத்தை ஏற்படுத்தின வாலிபன் அவரது ஒரே மகன்.

இங்கே தன் ஒரே மகனுக்காக அவன் செய்த தவறுக்கான தண்டனையை தகப்பனார் ஏற்றுகொள்கிறதை போல, நம் தவறுகளுக்காக நாம் ஏற்க வேண்டிய தண்டனைகளை பரம தகப்பன் தானே ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவர் நம் தகப்பன்; நாம் அவருடைய பிள்ளைகள்! நாம் விபத்தை ஏற்படுத்தினோம். ஆனால் அவர் அதற்கான தொகையை செலுத்தினார். 

இந்த உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த பின், தேவன் நல்லது என்று கண்டார். ஆறு நாளில் படைத்து விட்டு ஏழாம் நாள் கர்த்தர் ஓய்ந்திருந்தார். அப்போது, உலகத்தில் பாவமில்லாமல் இருந்தது. அதற்கு பின், தேவன் மனிதனையும் மனுஷியையும் படைத்தார்.  மனிதன் வஞ்சிக்கப்பட்டு, பாவத்தில் விழுந்து போனான். பாவத்தின் விளைவாக, ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டான். 

பாவம் - கர்த்தருக்கும் மனிதக்குலத்திற்கும் தடைச்சுவராக நின்றது.

1. நம் பாவங்களை நிவிர்த்தி செய்ய மரித்தார்:

எபேசியர்:2:14 - "எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து" 

நம்மேல் குறைகள் இருந்தாலும், தேவன் நம்மை நேசித்ததினால், பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க, பிரிவினையை மாற்றி ஒன்றிணைக்க அவர் நமக்காக மரித்தார். 

பழைய ஏற்பாட்டு காலத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் செய்த பாவத்திற்கு கிரயமாக சில பலிகளை செலுத்தினார்கள்.  பாவ நிவாரண பலியாக காளை, ஆடு, புறா என்று தங்களால் இயன்றதை பலியாக செலுத்தினார்கள். (லேவியராகமம்- 4,5  அதிகாரங்களில் இதை பற்றி வாசிக்கமுடியும்.) ஆனால், அது தற்காலிகமான நிவாரணமாக இருந்தது.  அந்த பலி மிருகத்தின் இரத்தம் நிரந்தரமாக ஒருவருடைய பாவத்தை அழித்து விட முடியாது. 

யோவான்:3:17 - "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்."

ஆகவே, தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார். நம்முடைய பாவத்தை நிவிர்த்தி செய்யும்படி தன்னையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். ஆதாம் இந்த பூமிக்கு தன்னுடைய கீழ்ப்படியாமையினிமித்தம் கொண்டு வந்த பாவத்தை, இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தி இரட்சிப்பை கொடுத்தார்.

1யோவான்:2:2 - "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்."

ரோமர்:5:18 - "ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று."

ஆகவே நம்முடைய பாவங்களை மன்னித்து, அதை நிவிர்த்தி செய்ய இயேசு நமக்காக மரித்தார். நம்மேல் வர வேண்டிய நியாயத்தீர்ப்புகளை அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவரே கிருபாதார பலி! 

2. நம்மை நேசித்ததினால் நமக்காக மரித்தார்:

கலாத்தியர்:2:20 - "என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."

எபேசியர்:5:2 - "கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்."

நம் ஒவ்வொருவரையும் தேவன் நேசித்ததினால் தன்னையே ஒப்புக்கொடுத்தார். அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக, தன் ஜீவனைக் கொடுத்தார்.  அவர் நமக்காக பட்ட ஒவ்வொரு காயங்களும் அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது. 

யோவான்:3:16 - "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

நாம் ஒருவராகிலும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். ஆகவே, நம் மீது இருக்கும் ஆக்கினை தீர்ப்புகளை ஏற்று, நம்மை நீதிமான்களாக்கும்படியாக, தம்முடைய ஒரே குமாரனை நமக்கு தந்து அவரது அன்பை வெளிப்படுத்தினார்.

நமக்காக தன் உயிரையே கொடுக்கக்கூடிய மனிதர்களை நம்மால் பார்க்க முடியாது. நாம் நல்ல நிலையில் இருக்கும்போது, உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன். உங்களுக்கு ஏதாவது தவறாக நடக்க நேர்ந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் என்று சொல்லும் உறவுகள் பல உண்டு. நமக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது, அந்த உறவுகள் இருக்கும் இடமே தெரியாமல் மறைந்து விடும். தொடர்பு எல்லைக்கு வெளியில் போய் விடுவார்கள். 

ஆனால், எந்த சூழ்நிலையிலும் மாறாத ஒரே அன்பு - இயேசுவிடம் மட்டுமே உண்டு. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நமக்காக தன் உயிரையே கொடுத்த ஒரே பரிபூரண அன்பு இயேசுவிடம் உண்டு. தன் உடலில் உள்ள கடைசி துளி இரத்தம் கூட நமக்காக சிந்தினார். அவ்வளவாய் நம்மை நேசித்தார். 

1யோவான்:3:16 - "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்."

ஆகவே, அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த தன் ஜீவனை நமக்காக கொடுத்தார். 

3. நமக்கு எதிராக இருந்த கட்டளைகளை மாற்ற நமக்காக மரித்தார்: 

கொலொசேயர்:2:14,15 - "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்."

நியாயப்பிரமாணங்கள் மோசே மூலமாக தேவனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணத்தை ஒரு மனிதனாலும் முழுமையாக பின்பற்ற கூடாமல் கடினமாக இருந்தது. பாவத்திற்கான ஆக்கினை தீர்ப்புகளும், தண்டனைகளும் கடினமாக இருந்தது. நியாயப்பிரமானம் குறைகளுள்ள மனிதனிடத்தில் குறையில்லாத பரிபூரணத்தை எதிர்பார்த்தது.  நியாயப்பிரமாணம் பாவத்தை சுட்டிகாட்டியது. நாம் செய்த பாவத்தை சுட்டிக்காட்டி நம்மில் குற்ற உணர்ச்சியை தூண்ட செய்வது நியாயப்பிரமாணம். முடிவில், நியாயப்பிரமாணம் தவறு செய்த ஆண் (அ) பெண்ணுக்கு மரணத்தை தரக்கூடியது. 

ஆகவே, அந்த பாவத்தினால் நமக்கு இருக்கும் குற்ற உணர்ச்சிகளையும், மரணத்தீர்ப்புகளையும் மாற்றும்படியாக, இயேசு அந்த கையெழுத்துகளை குலைத்து, சிலுவையிலே வெற்றி சிறந்தார். நம்மேல் இருக்கும் கண்டனங்களையும், குற்றங்களையும், ஆக்கினைத்தீர்ப்புகளையும், நியாயப்பிரமாணத்தின் மூலம் வரவேண்டிய மரணத்தீர்ப்புகளையும் இயேசு தம்மேலே ஏற்றுக்கொண்டு நமக்காக மரித்தார்.

கிறிஸ்துவின் மரணம்:  

நம்முடைய பாவங்களுக்கு முடிவு கொடுத்தது!!!

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்:

கிறிஸ்துவுக்குள் நமக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது!!!