அக்டோபர் 31, 2019

முட்கள் நமக்கு சாதகமா? பாதகமா?பாதிப்பா? பாதுகாப்பா?

உன்னதப்பாட்டு:2:1,2 - "நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள்."

இந்த வார்த்தை யாருடையது? 

சாதாரணமாக பார்த்தால் முதல் வசனம் இயேசுவையும் இரண்டாம் வசனம் மணவாட்டியையும் குறிப்பது போல இருக்கும். ஆனால் அது தவறு.

1 வசனம் - மணவாட்டிக்குரியது (சபை)
2 வசனம் - மணவாளனுக்குரியது (இயேசு)

நாம் முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பமாயிருக்கிறோம். அதின் அர்த்தம்: உபத்திரவத்தின் நடுவிலும் அழகாக இருக்கிறோம்.

முட்கள் - எபிரேய வார்த்தை:  Choch / Koa-ach - பயன்படுத்தப்படாத வேர்

இங்கே முட்கள் என்பது மனந்திரும்பாத ஜனங்கள் (அ) பரிசுத்தமாக்கப்படாத ஜனங்களை குறிக்கும்

I. முட்களுடைய தன்மை என்ன? (முள் - உபத்திரவம்)

1.குத்துவது

ஒரு முள் நம்மை குத்திவிட்டால் அலறாமல் குத்தின முள்ளை பயன்படுத்தவும் நமக்கு வேலியாக்கி கொள்ள தெரிய வேண்டும். கடிக்க வரும் சிங்கத்தை நமக்கு பாதுகாப்பு தரும் நாயை போல மாற்றிக்கொள்ள தெரிய வேண்டும். துன்பத்தை இன்பமாகவும் தீமையை நன்மையாகவும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

2.பயமுறுத்துவது

வழியில் கிடக்கும் முள்ளை கண்டு பயப்படாமல் சர்வாயுதவர்க்கமான ஆவியின் பட்டயத்தை எடுத்துக்கொண்டு மேற்கொள்ள வேண்டும். நின்று நிதானித்து வீழ்த்தவேண்டும். நம்மை ஒருவன் பயமுறுத்தினால், அவனை பார்த்து சிரிக்க வேண்டும்.ஏனென்றால் அவனுக்கு நம்மேல் பயம் வந்ததினால் தான் நம்மை பயமுறுத்துவான்.

3.பதம்பார்ப்பது

சில சமயம் நாம் முட்களை உபயோகப்படுத்தும்போது நம்மை அறியாமலேயே நம்மை குத்திவிடும். நம்மையே பதம் பார்த்து விடும்.

4.பாதுகாப்பது

பூ, கனி,இலை - இவற்றின் கீழே இருக்கும் முள் பாதுகாப்பு தருவதற்காக வைக்கப்பட்டிருக்கிறது. அந்த முள் காற்றில் அசையும்போது கனிகளுக்கு இலைகளுக்கும் சேதத்தை உண்டாக்கும். பாதுகாப்பு கொடுக்கும் முள் பாதைக்கு வந்தால் ஆபத்தாகி விடும்.

II. முட்கள் நமக்கு அனுமதிக்கப்படுகிறதா? 

 ஆம்! தேவனே அதை அனுமதிக்கிறார்.

2கொரிந்தியர்:12:7-9 - "அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்று தரம் கர்த்தரிடத்தில்வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்"

"பெருமை வந்தால் மதிகேடு வரும்; மதிகேடு வந்தால் பின்மாற்றம் வரும்; பின்மாற்றம் வந்தால் முடிவில்  நரகம் கிடைக்கும்"

எனவே அதை தடுக்கும்படியாக தேவனே முள்ளை கொடுக்கிறார். தேவனால் அனுமதிக்கப்பட்ட முள் நம்மை கொல்லாது.நமக்குள் இருக்கிற மேட்டிமையை தாழ்மைப்படுத்த தேவன் அந்த முள்ளை வைத்திருக்கிறார். சில முட்களை தேவன் நீக்கமாட்டார். ஆவிக்குரிய வாழ்வில் வளர்வதற்கு ஏதுவாக சில முட்கள் தேவனால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 

III. முட்கள் தானாகவே வருகிறதா? 

ஆம்! எங்கேயோ போக வேண்டிய முள் நமக்கு வரும்.

காற்றில் வரும் முள்:

1. அடுத்தவர் பிரச்சினை
2. சொந்த பிரச்சினை
3. சபை பிரச்சினை
4. போதகர் பிரச்சினை
5. கட்சி பிரச்சினை
6. மத பிரச்சினை
7. அரசியல் பிரச்சினை
8. சமூக வலைத்தளங்கள்

2சாமுவேல்:1:6 - "அந்த வாலிபன் நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்து கொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்."

2சாமுவேல்:20:1,2 - "அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்."

தற்செயலாய் வருகிறவன் நம் உடலுக்கும் உடைமைக்கும் சேதத்தை வருவிப்பான்.  அவன் திட்டத்தோடே வருவான்; ஆனால் அவன் தற்செயலாய் வந்தது போல நடிப்பான். ஆகவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நீதிமொழிகள்:26:17 - "வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்."

1தீமோத்தேயு:6:20 - "ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு."

நம்மிடத்தில் ஒப்புவிக்கபட்டது:


  • இரட்சிப்பு
  • விசுவாசம்
  • பரிசுத்தம்
  • ஆவியின் அபிஷேகம்
இவற்றை இழந்தால் பரலோகத்தில் இடம் இல்லை. ஆகவே மோசம் போகாமல் ஆகாத சம்பாஷணைகளுக்கு விலக வேண்டும்.

"நமக்கு அவசியமில்லாத பாரத்தை நாம் ஏன் சுமக்க வேண்டும்? 
 நமக்கு தெரியாததை நாம் ஏன் தீர்ப்பிட வேண்டும்?"

IV. முட்கள் போகும் வழியில் கிடக்கிறதா? 

பிரயாணங்களில் முட்கள் வரும்.நம் பிரயாணங்களில் பிசாசு மரணத்தை கொண்டு வருவான். நம்மேல் பகையாக இருக்கிறவர்கள், எரிச்சலுள்ளவர்கள் நம் வழியில் வீழ்த்த வருவார்கள். வழியிலே விரியனை போல முட்கள் இருக்கும்.

யாத்திராகமம்:33:14 - "அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்.

காலையில் எழுந்தவுடன் தேவசமூகம் நம்முடன் வரும்படியாக மோசேயை போல ஜெபம் செய்ய வேண்டும்.

V. முட்களை யாராவது போடுகிறார்களா? 


அகித்தோப்பேல், சீமேயி, ஆமான், யூதாஸ் - இவர்களை போல தீமை செய்வது சந்தோஷம் என்று கருதுபவர்கள் நம் வாழ்வில் முட்களை போட நினைப்பார்கள். ஆனால் தேவன் நம்மை அவர்களெல்லாவித துர்ஆலோசனைகளுக்கும் விலக்கி பாதுகாப்பார்.

"அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்கும் தேவன் நம்மோடு உண்டு."

மணவாட்டி எப்படிப்பட்டவள்?

1. முட்களை சகித்து, சமாளித்து, கையாண்டு, உபயோகித்து, வாழ தெரிந்தவள்.
2. முட்களால் பட்ட பாடுகள், வலிகள், வேதனைகள் இவையெல்லாவற்றையும் சகித்து கொண்டு அழகாய் இருப்பவள்

முட்களால் குத்தப்பட்டு வருகிற வாசனையை தேவன் நுகர்ந்து மகிழ்வார். ஆகவே முட்களை கண்டு பயப்படாமல் தேவ பெலத்தோடே கையாண்டு மலராக மலர்வோம்!!!! 

"முள் இருக்கும் என் வாழ்வில்...
ஆனால் அதில் நான் மலராய் மலர்ந்திருப்பேன்"


                                                               

விசுவாசத்தினால் வரும் உயர்வுகள்

விசுவாசத்தினால் வரும் உயர்வுகள்

திறவுகோல் வசனம்: யோசுவா:1:1-3 
  1. கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:

  2. என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

  3. நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்.
யோசுவா -  எபிரேய வார்த்தை: யெகோசுவா - கர்த்தர் இரட்சிப்பானவர்
                        கிரேக்க வார்த்தை:  யேசஸ் - இரட்சிப்பு (அ) விடுவிக்கிறவர்

யோசுவா எப்படிப்பட்டவன்?

1. பணிவிடையாளன்
2. உத்தமன்
3. ஞானத்தின் ஆவியை பெற்றவன்
4. ஆசரிப்பு கூடாரத்தைவிட்டு பிரியாதவன்

யோசுவா மூலம் தேவன் செய்த அற்புதங்கள்:

1. எரிகோ கோட்டை இடிந்து விழுந்தது
2. யோர்தான் இரண்டாக விழுந்தது
3. வானத்திலிருந்து கற்கள் விழுந்தது
4. சூரியனும் சந்திரனும் தரித்து நின்றது

1.விசுவாசத்தின் சவால்:

யோசுவாவுக்கு கொடுக்கப்பட்ட சவால் - வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் ஜனங்களை கானான் நாட்டுக்குள் அழைத்து செல்ல வேண்டுமென்பதே.


மோசே தான் வாழ்ந்த நாட்களில் யோசுவாவை தன் அருகே வைத்து ஒவ்வொரு காரியங்களையும் கற்றுக்கொடுத்தான். தான் எங்கு சென்றாலும் யோசுவாவையும் அழைத்து செல்வான். எந்த பிரச்சனையை சந்தித்தாலும் அதை எப்படி தீர்க்க வேண்டும் என்று தேவனிடம் விசாரிக்க 40 நாள் உபவாசமிருந்து ஜெபிக்க சீனாய் மலைக்கு செல்லும் போதேல்லாம் யோசுவாவையும் அழைத்து செல்வான். இப்படி எல்லா காரியங்களிலும் யோசுவா மோசேயுடன் இருந்து கற்றுக்கொண்டான். அவனுக்கு கொடுக்கப்பட்ட சவால் பெரிதாக இருந்தாலும், மோசேயோடே இருந்த தேவன் அவனோடும் இருப்பேன் என்று வாக்குகொடுத்திருந்ததை நம்பி விசுவாசித்து ஏற்றுக்கொண்டான்.

"தேவன் உன்னை கொண்டு என்ன செய்ய போகிறார் என்பதை காண்பது தான் விசுவாசம்"

சவாலை ஏற்று நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்?


1. வனாந்திரத்தை (அவநம்பிக்கை, அவிசுவாசம்) விட்டு வெளியே வர வேண்டும்
2. உன்னை வருத்தும் வழியை விட்டு விலகு
3. தூசியை உதறி விட்டு வா
4. கானானை (இலக்கை) நோக்கி புறப்படு
5. யோர்தானை (தடைகளை) தாண்டி செல்

2.விசுவாசத்தின் நிச்சயத்தை நம்பு:

யோசுவா:1:5 - "நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை."

யோசுவா:1:9 - "நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்."

தேவன் யோசுவாவுக்கு கொடுத்த விசுவாசத்தின் நிச்சயம்:

1. ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை
2. உன்னோடு இருப்பேன்
3. போகும் இடமெல்லாம் உன்னோடு இருப்பேன்

தேவனின் வாக்கை நம்பி முன்னேறி சென்றான். அவர் கொடுத்த வாக்குத்தத்தத்தை நம்பி வாழ்ந்தான்.எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவனுடைய வாக்குத்தத்தம் போதுமானது. காலங்கள் மாறினாலும் அவருடைய வார்த்தை ஒருநாளும் மாறாது. யோசுவா கர்த்தருடைய வார்த்தையை நம்பி ஒவ்வொரு காரியங்களையும் மேற்கொண்டு வெற்றி பெற்றான். விசுவாசத்தின் நிச்சயம் பெற்றவனாய் தொடர்ந்து ஓடி கீரிடத்தை பெற்றுக்கொண்டான்.

3.விசுவாசத்தை அப்பியாசப்படுத்தி வாழ்:

யோசுவா:1:3 - "நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன்."

மோசே மரித்தபின் யோசுவா கலங்கி நிற்கும் போது கர்த்தர் அவனுக்கு வாக்குத்தத்தங்களை கொடுத்து தொடர்ந்து ஜனங்களை வழிநடத்தி செல்ல ஊக்கப்படுத்தினார். அவன் விசுவாசிக்காவிட்டால் அவனால் எந்த காரியத்திலும் வெற்றி கண்டிருக்க முடியாது. அவன் தேவனை நம்பி அவர் வார்த்தைகளை விசுவாசித்து தன் வாழ்வில் நடைமுறைப்படுத்தினான். அவர் கொடுத்த வாக்கை உரிமை பாராட்டிக்கொண்டான். அவன் விசுவாசமே வாக்குத்தத்தத்தை பெற்று தந்தது. ஆம்! அவன் அவர் வார்த்தையை நம்பினான்; தேசத்தை சுதந்தரித்தான்.

1பேதுரு:5:8-10  - "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;"

-  விசுவாசத்துடன் செயல்படும் போது பிசாசு சோதனைகளையும் சோர்வுகளையும் போராட்டங்களையும் கொண்டு வருவான். அவனுக்கு எதிர்த்து நின்று அவனை மேற்கொள்ள வேண்டும்.

எபேசியர்:6:10 - "கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்."

கர்த்தர் தாமே உங்களை பலப்படுத்தி விசுவாசத்தின் நிச்சயத்தை தந்து யோசுவாவை போல வழிநடத்தி வெற்றியை சுதந்தரிக்க செய்வாராக!!!

அக்டோபர் 30, 2019

போதகர். சார்லஸ் - முதலாம் ஆண்டு நினைவு நாள்


போதகர்.சார்லஸ் அவர்கள் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 21 அன்று தன்னுடைய ஓட்டத்தை ஜெயமாக முடித்தார். அவரின் நினைவாக இந்த முதலாம் ஆண்டு நினைவு நாளன்று ஒரு காணொளியும் அவர் எழுதிய புத்தகத்தையும் வெளியிட தேவன் கிருபை செய்தார். "வேதாகம வாய்ப்பாடு" என்ற வேத தியான புத்தகம் ஒன்றை மிகுந்த பிரயாசத்துடன் இரவு பகல் பாராது ஆவியானவரின் உதவியோடு எழுதினார். பல்வேறு காரியங்களை அந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார். வேதத்தை வாசிக்கும் போது இந்த புத்தகத்தின் உதவியோடு படித்தால் நலமாயிருக்கும். வேதத்தில் உள்ள நாட்கள், எண்கள், ஆகமங்களின் விளக்கம், அதின் ஆசிரியர், காலகுறிப்புகள், வரைபடங்கள், தரிசனங்கள், எபிரேய வார்த்தைகள் - அர்த்தங்கள் போன்ற பல்வேறு சுவாரசியமான தகவல்களை கொடுத்துள்ளார். இந்த புத்தகத்தின் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அநேகர். வேதாகம ஆராய்ச்சிக்கு உதவும் புத்தகம் இது. இந்த புத்தகம் வேண்டுமென்பவர்கள் மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம். புத்தகத்தை பெறுங்கள். வேதறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள். தொடர்ந்து எங்கள் ஊழியங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு:
        8489304617

காணொளி:
      video - https://youtu.be/-2x7-bmp810