பலுகிப் பெருக பகிர்ந்தளி
பிரசங்கி: 11:1-6 – “உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. மேகங்கள் நிறைந்திருந்தால் மழையை பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். காற்றைக் கவனிக்கிறவன் விதைக்க மாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்க மாட்டான். ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும்விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே”
மேலே உள்ள வசனங்கள்
“சுவிசேஷ பிரபல்யத்தில் தலைமைத்துவ மேலாண்மை”யை நமக்கு கற்றுத் தருகிறதை நாம் காணலாம்.
•
ஆவிக்குரிய தலைவர்கள் - தலைமை வகிக்கும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும்.
•
தலைமை என்பது – எல்லா வேலைகளையும் தானே செய்வது அல்ல
•
எல்லா வேலைகளையும் பிறரைச் செய்ய வைக்கும் திறமையே – தலைமை
“ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு”
1776 ஆம் ஆண்டில்
ஆடம் ஸ்மித் (Adam Smith) என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டார். “எந்த வேலையைச் செய்தாலும், அந்த வேலையில் பல பகுதிகளையும் சரியானபடி பிரித்து, ஒவ்வொரு பகுதியையும், தனித்தனியான ஆட்கள் செய்து முடித்தால், எல்லா வேலைகளையும் ஒரே ஆள் செய்வதைவிடத் திறமையாகவும், அதிக உற்பத்தி கிடைக்கும் வகையிலும் செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.
அதை நிரூபிக்கும் வகையில், அந்தக் காலத்தில், குண்டூசிகள் செய்யும் குடிசைத் தொழில் எப்படி குண்டூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக உருவாகி, பொருளாதார செழிப்பும் வருமானமும் பெருகியது என ஆடம் விளக்கினார்.
குண்டூசிகளை தயார் செய்ய இரும்பு கம்பிச்சுருளை, நீண்ட கயிறுபோல் இழுத்துக் கொண்டு வந்து, ஒரு இரும்பின்மேல் வைத்து பல துண்டுகளாக நறுக்க வேண்டும். பின் அந்தத் துண்டுகளை ஒவ்வொன்றாக கையிலெடுத்து, ஒரு முனையை கூரியதாக்க வேண்டும். மறுமுனையை ஒரு தடிப்பான தலைப்பகுதியாக்க வேண்டும். பின் குண்டூசியை வெண்நிறமாக்கும் வேலையைச் செய்ய வேண்டும்.
இந்த எல்லா உற்பத்தி வேலையையும் ஒரு தனி மனிதன் செய்யும்போது, ஒருநாளைக்கு
ஒன்று அல்லது இரண்டு குண்டூசிகளையே தயார் செய்ய முடியும். ஆனால், இந்த வேலையை பலபகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செய்தால் என்னவாகும் என்பதை ஆடம் ஸ்மித் விளக்குகிறார்.
கம்பிக்கட்டிலிருந்து கம்பியை இழுத்துவர ஒரு மனிதன். நேரானதாக்க ஒரு மனிதன். அதை சிறுதுண்டுகளாக நறுக்க ஒரு மனிதன். அதன் முனையைச் சீவி கூராக்குவதற்கு இன்னொரு மனிதன். அதன் மற்றொரு பகுதியைத் தலையாக மாற்ற இரண்டு மூன்று பேர். குண்டூசிகள் செய்து முடித்தபின், அவற்றை பளபளக்கும் வெள்ளை நிறமாக்கி, பேப்பர்களில் பொதிந்து வியாபாரப் பெட்டிகளாக்க இரண்டு மூன்று பேர். எல்லாவற்றையும் கணக்கிட்டால் மொத்தம் 18 தனித்தனி வேலைகளாக்கப்பட்டன. ஆனால், இதனால் ஏற்பட்ட நன்மை, ஒரு நாளில்
48,000 குண்டூசிகள் தயாரிக்கப்பட்டன.
மேலே விவரிக்கப்பட்ட ஆடம் ஸ்மித்தின் விளக்கங்கள், உலகின் எல்லா நாடுகளாலும் பாராட்டப்பட்டது. வேலைகளை பகிர்ந்தளிப்பதை, “டிவிஷன் ஆஃப் லேபர்” என்று பெயரிடப்பட்டு, எல்லாத் துறைகளிலும் பின்பற்றப்பட்டது. இம்முறையைத்தான் பிரசங்கியும் கூறுகிறான். பிரசங்கி: 11:2 – “ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு…” என்று.
சபையின் போதகர், சபையில் உள்ள பொறுப்புகள் மற்றும் ஊழியபொறுப்புகளை தான் ஒருவரே செய்து கொண்டிராமல், அதற்குரிய உண்மையுள்ளவர்கள் வசத்தில் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்.
- பொறுப்புகளை பங்கிட்டு வேலை வாங்கும் முறையை மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேக்கு கற்றுத்தருவதை நாம் அறியலாம் (யாத்திராகமம்: 18:13-26).
- அதேபோல புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர் நாட்களில் வேலைகளை பகிர்ந்து கொடுப்பதை அப்போஸ்தலர் : 6:1-7 வரை காண்கிறோம்.
“தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்” (2தீமோ: 2:4), என்ற வசனத்தின்படி தேவமனிதர்கள் தேவையற்ற விஷயங்களில் சிக்கிக் கொள்ளாதபடி, “நாங்களோ ஜெபம் பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம்…” (அப்: 6:4) என்று பன்னிரு அப்போஸ்தலர்கள் கூறியதுபோல நடந்து கொள்ள அர்ப்பணிக்க வேண்டும். “அப்பொழுது தேவவசனம் விருத்தியடையும்; சீஷருடைய தொகை பெருகும்…” (அப்: 6:7).
பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டிய அந்த ஏழுபேர் – எட்டுபேர் -யார்? யார்?
அ) ஏழுபேர்:
மத்தேயு: 22:25 – ல் ஏழு சகோதரர்கள் இருக்கிறார்கள். விவாகம் பண்ணி சந்தானம் இல்லாமல் மரித்துப் போனார்கள் என்ற ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம்.
வருட கணக்காக சபையில் வந்து போவார்கள். ஆனால் கர்த்தருக்கென்று ஒரு ஆத்துமாவைக்கூட ஆதாயம் செய்யவோ, அல்லது பராமரிப்புக்குழு நடத்தவோ, சபையில் எவ்வித பொறுப்பும் இன்றி ஆவிக்குரிய பயனற்ற வாழ்வு வாழ்ந்து ஓட்டத்தை முடித்து விடுவார்கள். இவர்கள் தங்களுக்கும் பயனின்றி, போகிற சபைக்கும் பயனற்றவர்களாக இருப்பர். இப்படிப்பட்டவர்களைக் கண்டறிந்து ஊழியப் பொறுப்புகளை பங்கிட்டு கொடுத்து கர்த்தருக்காக பயன்பெறச் செய்ய வேண்டும். பலவருடமாக உட்கார்ந்து உட்கார்ந்து பாய்களை கிழித்தது போதும். இனி தேவனுக்காக செயல்படும் அறுவடையாளர்களாக அப்படிப்பட்டவர்களை மாற்ற வேண்டியது சபைபோதகரின் கடமைகளில் ஒன்றாகும்.
ஆ) எட்டுபேர்:
1பேதுரு: 3:20 – “… பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, … அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம்….” இருந்தார்கள் என வாசிக்கிறோம். ஆம்! பேழை கட்டுவதற்கு அந்த எட்டுபேர் கொண்ட குழு அர்ப்பணிப்போடு செயல்பட்டது. தேவனுடைய கடைசிக்கால அறுவடை திட்டத்தில் ஆர்வத்தோடு, விசுவாசத்தோடு செயல்படக்கூடிய அர்ப்பணிப்பு நிறைந்த எட்டுபேரை கண்டறிந்து ஊழிய பொறுப்புகளை பகிர்ந்து கொடுக்க வேண்டும். துடிப்புள்ள வாலிபர்களை சபையில் தேவன் வைத்திருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். அவர்கள் கர்த்தருக்காய் செயல்பட அர்ப்பணிக்க தூண்டுங்கள்.
மத்தேயு: 20:3,6 – “மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே
சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு:” , “ பதினோராம் மணி வேளையிலும் அவன் போய்,
சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: நீங்கள்
பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான்” என்று வாசிக்கிறோம்.
மூன்று வித மக்கள் இருக்கிறார்கள்:
1. மூன்றாம் மணி வேளையிலும்
சும்மா இருப்பவர்கள்
2. பதினோராம் மணி வேளையிலும்
சும்மா…மா…ஆ இருப்பவர்கள்
3. பகல் முழுவதும்
சும்மாவே… இருப்பவர்கள் – இப்படி ஒரு கூட்ட மக்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை தேவனுக்காக பயன்படச் செய்ய வேண்டியது மிக அவசியம்.
ஒரு சபையில் சும்மா வந்து போகிற ஏழுபேரும் இருப்பார்கள்; அர்ப்பணிப்போடு துடிப்பாக செயல்படுகிற எட்டு பேரும் இருப்பார்கள். சபையின் போதகர்தான் அப்படிப்பட்டவர்களை பரிசுத்த ஆவியானவரின் துணையோடு கண்டறிந்து, அவரவர்களுக்கு ஏற்ற பொறுப்புகளை தேவ நடத்துதலின்படி உண்மையுள்ளவர்கள் வசத்தில் ஊழிய பொறுப்புகளை ஒப்புவிக்க வேண்டும். திறமையுள்ளவர்களிடத்தில் அல்ல; உண்மையுள்ளவர்களிடத்தில் ஒப்புவிக்க வேண்டும்.
தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் – பொறுப்புகளை தங்கள் சொந்த குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுத்து விட்டு, மற்றவர்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடக்கூடாது. சுயநலம் மிக்கவர்களாக இராமல் பொறுப்புகளை ஆவியானவரின் துணை கொண்டு, தகுதியுள்ள நபர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில், தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும். அப்படிப்பட்டவர்கள் மக்களிடமுள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள். சபையின் வளர்ச்சி தடைபட்டுப்போகும்.
விழுந்த இடத்திலேயே கிடக்கும் மரம் (பிர: 11:3)
காட்டில் உள்ள மரங்கள் சிலவேளைகளில் பலத்தகாற்றினால் சாய்ந்து கீழே விழுந்து கிடக்கும். சில மரங்கள் காட்டு விலங்குகளால் சாய்க்கப்பட்டு கிடக்கும். சில மரங்கள் வயதாகி பட்டுப்போய் வேர்கள் இத்துப்போய் பலட்சியமானதால் பிடிமானமின்றி கீழே விழுந்து கிடக்கும். அதுபோல சில விசுவாசிகள் வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகள், அவமான நிந்தைகள், பிசாசின் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டு தங்கள் சொந்த வாழ்விலும், ஆவிக்குரிய வாழ்விலும் விழுந்துபோய் கிடப்பார்கள்.
அப்படிப்பட்டவர்களை எழும்பிப் பிரகாசிக்கச் செய்ய ஆவியானவரின் அபிஷேகத்திற்குள் வழிநடத்தி, கர்த்தருக்காய் செயல்பட ஊக்கப்படுத்த வேண்டியது கர்த்தருடைய தாசர்களின் பொறுப்பாகும். நன்றாக பிரகாசிக்க வேண்டியவர்கள் தொய்ந்து போய் வீழ்ந்த இடத்திலேயே விழுந்து கிடப்பார்கள். செயலற்றிருப்பார்கள். நாம் அவர்களுக்காய் பிரயாசம் எடுத்து முன்னோக்கி பிரயாணத்தை தொடர வழிவகை செய்ய வேண்டும். அப்பொழுது வசனம் விருத்தியடையும்.
தலைமைக்கு வரக்கூடாத வீண் சந்தேகங்கள்:
1. பகிர்ந்து கொடுப்பதினால் தம் ஊழியத்திற்கு ஏதாகிலும் பாதிப்பு வந்துவிடுமோ?
2. பகிர்ந்து கொடுக்கிற ஊழியத்தை பிரித்துக் கொண்டு போய் விடுவார்களோ?
3. தனக்கு இணையாக வந்து விடுவார்களோ?
4. தான் மட்டுமே, தன்னுடையவர்களுக்கு மட்டுமே - என்ற மனநிலையா?
5. தன்னைவிட திறனுள்ளவர்கள் தனக்கு போட்டியாகி விடுவார்களோ?
இப்படிப்பட்ட எண்ணங்கள், மனநிலை கர்த்தருடைய ஊழிய வளர்ச்சிக்கு மாபெரும் தடைகள். இவைகளை விட்டொழியுங்கள். ஊழியம் கர்த்தருடையது. பிரச்சினை என்பது இதுவல்ல. போட்டி என்பது இவர்களல்ல. நம்மிடமிருந்து பல ஊழியர்கள் எழும்ப வேண்டும். நம்மிடமிருந்து உருவாகும் அடுத்த தலைமுறை இன்னும் பலபேரை கர்த்தருக்காய் பயன்படகூடிய தலைவர்களை எழுப்புகிறவர்களாக மாற பரந்த மனப்பான்மையோடு செயல்பட வேண்டும்.
"... பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது" (பிரசங்கி: 11:2). அதற்குள் கர்த்தருக்காய் எத்தனைபேரை உருவாக்கி அனுப்ப வேண்டுமோ... அத்தனை அறுவடையாளர்களை எழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதோடு மட்டும் நம் பணி முடிந்து விடுவதில்லை. அடுத்தகட்ட தலைவர்களை , அறுவடையாளர்களை, வேலையாட்களை கர்த்தருக்கென்று எழுப்பிட... தேவையற்ற எதிரான மன எண்ண ஓட்டங்களை சிறைப்பிடித்து சிலுவையில் அறைய வேண்டும். அப்பொழுது சீஷருடைய தொகை பெருகும். வசனம் விருத்தியடையும். ஆமென்! அல்லேலூயா!