ஜனவரி 14, 2015

தாவீதின் வேண்டுகோள்


சங்கீதம்: 34:4 - 6 - "நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கி விட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்".

தாவீதின் மூன்று வித வேண்டுகோள்:

1. பயத்திற்கு நீங்கலாக வேண்டும்.

2. வெட்கத்திற்கு நீங்கலாக வேண்டும்.

3. இடுக்கண்களுக்கு நீங்கலாக வேண்டும்.

மேற்கண்ட வேண்டுகோள் தாவீதுக்கு மட்டுமல்ல. இன்று நம்மில் ஒவ்வொருவருக்கும் இது தேவை. நாம் வாழ்வில் சுகித்திருக்க, நிம்மதியைக்காண இம்மூன்றிற்கும் நீங்கலாக வேண்டும். இந்த சங்கீதத்தை தாவீது பாடினபோது இருந்த சூழ்நிலை: தாவீது அபிமெலேக்குக்கு முன்பாக வேஷமாறினபோது அவனால் துரத்தி விடப்படுகையில் பாடின சங்கீதம் என வேதம் கூறுகிறது.

தாவீது தன் இளம் வயதிலேயே படக்கூடாத பாடுகளையெல்லாம் படுகிறதை காண்கிறோம். அதிலிருந்து விடுபட தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பத்தோடு  கவி பாடுவதை காணமுடிகிறது. நாம் என்னதான்  தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணினாலும் கர்த்தர் தம் பரிசுத்தவான்களின் வாழ்வில் பாடுகளை அனுமதிக்கவே செய்கிறார். காரணம்...?  பாடுகளின் வழியே நாம் பெலனடையவும், கிருபையை பெறவும், எதிர்வரும் காலங்களில் தேவன் தரும் உயர்வை காத்துக்கொள்ளவுமே அப்படிச் செய்கிறார்.

இருப்பினும், பாடுகள் நம்மை சோர்வுறச் செய்தாலும், பாடுகளின் தாக்கம் சற்று குறைவதற்கு நாம் ஜெபிக்க வேண்டும். தேவன் அனுமதிக்கும் பாடுகள் நமக்கு அழிவைத் தராமல், அது நமக்கு மகிமையை கொண்டு வரக் கூடியவை என்பதை உணரவேண்டும். தாவீது மேற்கண்ட இம்மூன்றிலிருந்தும் எவ்விதம் தன்னை பலப்படுத்தவும், திடப்படுத்தவும் செய்தான் என்பதை தியானிக்கும்போது, நாமும் ஆவிக்குரிய பெலனை பெறுவது அதிக நிச்சயம்.

1. பயத்துக்கு நீங்கலாக வேண்டும்:


ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது விசுவாசம் நிறைந்தவனாகக் காணப்பட்டான். சங்கீதம்: 16:8 - "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலது பாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை" என்று தன் வாலிப வயதில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த தாவீது விசுவாச கீதங்களைப் பாடினான். அப்பொழுது சிங்கத்தைக் கண்டாலும் அவனுக்கு பயமில்லை; கரடியைக் கண்டாலும் பயமில்லை. ஏன்... கோலியாத்தைக் கண்டாலும் பயமில்லை. என்ன ஒரு விசுவாச தைரியம்! (1சாமுவேல்: 17:36).

சிங்கம், கரடி, கோலியாத் - இம்மூன்றுகளிலும் போராடும்போது இருந்த தைரியம்... சவுல் துரத்தும்போது எங்கே போனது?!

 1சாமுவேல்: 27:1 - "பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்து போவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப்போய், தப்பித்துக் கொள்வதைப்பார்க்கிலும் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான்".

1சாமுவேல்: 21:12,13 - "..காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன் போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக் கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான்".

1சாமு: 27:1 மற்றும் 21:12,13 இவ்விரண்டு சமயங்களிலும் தாவீது சவுலுக்கு பயந்து இவ்விதமாக முடிவெடுப்பதைக் காண்கிறோம்.

 பயம் - மாவீரன் தாவீதையே  ஓடிப்போய் கெபிகளில் ஒளியச் செய்கிறது என்றால்...பயம் எவ்வளவு கொடிது என பாருங்கள்.  பயம் மனிதனை எப்படியெல்லாம் மாறச்செய்கிறது பாருங்கள்.

"வீரனுக்கு ஒருநாள்தான் சாவு; கோழைக்கு தினம் தினம் சாவு" - என்பது ஒரு பழமொழி.

மனிதனுடைய வாழ்வில் பயமே பலவிதமான பிரச்சினைகளை கொண்டு வருகிறது. சரீரத்தில் வியாதி, பதட்டமான மனநிலை, தவறான முடிவெடுத்தல், குழப்பம், நம்பிக்கையற்ற மனநிலை போன்றவைகளை கொண்டு வருகிறது. பயம் - கனம் பெற்ற மனிதனைக்கூட தரம் தாழ்ந்து போகச் செய்து விடுகிறதையும், கூடுமானால் தற்கொலைக்கு நேராககூட கொண்டு சென்று விடுகிறதையும் உலக அனுபவங்களிலே அறிய முடிகிறது.

சிங்கம், கரடி, கோலியாத்திற்கே பயப்படாத தாவீது, சவுலுக்கு பயந்தது ஏன்?

சவுல் கர்த்தரால் அபிஷேகம் பெற்ற மனிதராயிருந்தபடியினால்தான். 1சாமுவேல்: 26:9-11 - "... கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற் போகிறவன் யார்? ... கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர் மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர்".

சவுலுக்கு எதிர்த்து நிற்பதனால் தேவ கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதினால் தாவீது கர்த்தருக்கு பயந்து சவுலை விட்டு விலகி விலகி ஓடுகிறதைப் பார்க்கிறோம். தாவீதின் பயம் - நியாயமானது. தீமைக்கு தீமை செய்யாமல், தீமையை விட்டு விலகுவது. விலகி ஓடுவதனால் கோழையல்ல. பாவம் செய்யாதபடிக்கு தன்னைக் காத்துக் கொள்ளவே. தேவனுக்கு விரோதமான பாவம், அபிஷேகம் பெற்றவருக்கு விரோதமான பாவம் தன்னை அணுகாது காத்துக் கொள்ளவே பயந்து ஓடுகிறான்.

எவ்வித பயம் தேவை - தேவையில்லை:

"ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்" (மத்தேயு: 10:28) என்று நமதாண்டவர் இயேசுகிறிஸ்து கூறியதை நினைவுகூர்வோம்.

ஒரு கர்த்தருடைய பிள்ளைக்கு கர்த்தருக்கு பயப்படுகிற பயம் தேவை என்று வேதம் கூறுகிறது. "கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்" (நீதிமொழிகள்: 1:7; யோபு: 28:28). "அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம்: 112:1).

1. "... கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக் கொள்ளும் பொருட்டு, ... தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக் கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்..." (உபாகமம்: 17:19,20).

2. "உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு... தசமபாகத்தை பிரித்து..." (உபாகமம்: 14:22)

3. "...மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மை சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்" (2கொரிந்தியர்: 7:1)

4. "அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல" (1யோவான்: 4:18)

5. "பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும்... அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்" (வெளிப்படுத்தல்: 21:8)


கர்த்தருடைய பிள்ளைக்கு பயம் தேவைதான். ஆனால், தேவையற்ற பயங்கள் நம்வாழ்வை சீர்குலைக்கும். நிலைமையை மேலும் மோசமாக்கும்.

தாவீதின் பயத்திற்கு தேவன் ஏற்ற வேளையில் ஒரு முடிவை உண்டாக்கினார். தாவீதின் வாழ்வில் ஏற்பட்ட எல்லாவித பயங்களுக்கும் தேவன் ஒரு முடிவை கொண்டு வந்தார். இதுபோல உங்களுடைய வாழ்வில் எத்தனையோ பயங்கள் உங்களை துரத்தலாம். நீங்களும் ஓடிஓடி களைத்துப் போயிருக்கலாம். பயப்படாதேயுங்கள். தாவீதின் தேவன் நம்மோடே. தாவீதை அவன் எல்லா பயங்களுக்கும் நீங்கலாக்கிய தேவன் இன்று உங்கள் எல்லாவித பயங்களுக்கும் உங்களை விடுவிக்க போதுமானவர்.

தாவீது தன்னைக் காத்துக் கொள்ள பயத்தினால் அறியாமையினால் சில தவறான முடிவுகளை எடுத்தாலும், பெலிஸ்தரண்டையிலே சென்று வாசம் பண்ண நேரிட்டாலும், இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ண பெலிஸ்தியர்கள் அவனை ஏவினாலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவனைத் தற்காத்து, இழி சொல்லிலிருந்தும், பழிச்சொல்லுக்கு ஆளாகாமலும் காத்துக் கொண்டார். அதேபோல காத்தராகிய தேவன் உங்களையும் காக்க வல்லவர்.

உங்கள் பயம் எப்படிப்பட்டதாயிருந்தாலும், எதுவாயிருந்தாலும் பயப்படாதேயுங்கள்! சங்கீதம்: 16:10 - "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்" என வேதம் கூறுகிறது. பரிசுத்தவான்களை பாதுகாக்கும் தேவன் உங்கள் எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பார்.

"நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்" (சங்கீதம்: 56:3)



2. வெட்கத்திற்கு நீங்கலாக வேண்டும்:


தாவீதின் வாழ்வில் பலமுறை வெட்கமும் அவமானமும் ஏற்பட்டதுண்டு. சத்துருக்களினால் ஏற்படுத்தப்பட்ட வெட்கம், தான் பெற்றெடுத்த பிள்ளைகளினால் வந்த வெட்கம், தன் பாவத்தினால் வந்த வெட்கம், தன் மனைவிகளினால் வந்த வெட்கம், தன்னால் பலன் பெற்றவர்களினால் வந்த வெட்கம் என பல வெட்கங்களை, அவமானங்களை சந்தித்தவன் தாவீது. எனவே, கர்த்தரிடம் வேண்டுதல் செய்யும்போது, இரண்டாவதாக, தான் வெட்கத்திற்கு நீங்கலாக வேண்டும் என வேண்டுதல் செய்கிறான்.

1. சத்துருக்களினால் ஏற்படுத்தப்பட்ட வெட்கம்:

-  தாவீதுக்கு வெட்கத்தையும் அவமானத்தையும் உண்டாக்கும்படியாக அகித்தோப்பேல், அப்சலோமுக்கு தவறான ஆலோசனை வழங்கினான். (2சாமுவேல்: 16:21)

-  "சீமேயி தாவீதை தூஷித்து: இரத்தப் பிரியனே, பேலியாளின் மனுஷனே தொலைந்துபோ, தொலைந்துபோ"  என வெட்கப்படுத்தினான். (2சாமுவேல்: 16:7).

2. தான் பெற்றெடுத்த பிள்ளைகளினால் வந்த வெட்கம்:

-  தாமார், அம்னோன் சம்பவம் (2சாமுவேல்: 13:13)

-  அப்சலோம் தாவீதின் ராஜ்யபாரத்தை கைப்பற்றி தாவீதுக்கு வெட்கத்தை உண்டுபண்ணினான். (2சாமுவேல்: 16:22)

3. தன் பாவத்தினால் வந்த வெட்கம்:

-  பத்சேபாளிடத்தில் செய்த பாவத்தினால் வந்த வெட்கம் (2சாமுவேல்: 12:7)

4. தன் மனைவிகளினால் வந்த வெட்கம்:

-  மீகாள் தாவீதை அவமதித்தாள் (2சாமுவேல்: 6:20-23)

-  தாவீதின் மறுமனையாட்டிகள் அப்சலோமோடே சயனித்து வெட்கத்தை கொண்டு வந்தார்கள் (2சாமுவேல்: 16:22)

5. தன்னால் பலன் பெற்றவர்களினால் வந்த வெட்கம்:

- நாபால் தாவீதை அவமதித்தான் (1சாமுவேல்: 25:10,11)

தாவீது இத்தனை வெட்கமான அவமானகரமான நிந்தைகளை சுமந்து திரிந்தான். ஆயினும், கர்த்தரைச் சார்ந்து ஜெயம் பெற்று தன் வெட்கத்திற்குப்பதிலாக இரண்டத்தணையான ஆசீர்வாத மகிமையை பெற்றுக் கொண்டான். சத்துருக்கள் நம் வாழ்வில் வெட்கங்களை நிந்தைகளை கொண்டு வரலாம். தாங்கிக்கொள்ள முடியாமல் தவறான முடிவெடுத்து தலைகுனிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். தாவீதின் தேவன் நம் தேவன். தாவீதுக்கு அருளிய கிருபைகளை நிச்சயமாக நமக்கும் அவர் தருவார். விசுவாசத்தோடு கர்த்தரின் இரட்சிப்பிற்காய் நீடிய பொறுமையோடு காத்திருங்கள்.

தாவீதைப் போன்று உங்கள் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் வெட்கம், அவமானம், நிந்தை ஏற்பட்டிருக்கலாம். கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், தாவீது தன் தேவனாகிய கர்த்தரிடம் இவ்விதமாய் வேண்டுதல் நமக்காக செய்துள்ளார். "சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காக காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக" (சங்கீதம்: 69:6). தன்னைப்போன்று வெட்கங்களினால், அவமானங்களினால், நிந்தனைகளினால் தலைகவிழ்ந்துபோன நிலையில், மனம் நொந்து போனவர்களுக்காக தாவீது ஜெபிக்கிறான். "என்னிமித்தம்... என்னிமித்தம்" என பரிந்து பேசுவதை காணலாம்.

சங்கீதம்: 119:6 - "நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப் போவதில்லை" என தாவீது கூறுகிறான். நாமும் நம்வாழ்வில் வெட்கம் வராதிருக்க, கர்த்தருடைய வேதத்தை நேசித்து, வேதத்தின் கற்பனைகளை வாசித்து கைக்கொள்வோம். அவரது கற்பனைகளை கண்ணோக்குவோம்.

ரோமர்: 5:5 - "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது".

ரோமர்: 10:11 - "அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது".

நமது நம்பிக்கையும், விசுவாசமும் நமது இரட்சகர் இயேசு கிறிஸ்துவின்மேல் வைப்போமானால் நாம் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை என்று பரிசுத்த வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது. (1பேதுரு: 2:6).

வாழ்வில் ஏற்படும் வெட்கம்,  நிந்தனை, அவமானங்களை கண்டு சோர்ந்து போகாதீர்கள். ஏனெனில், வேதம் சொல்கிறது: "கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்" (1பேதுரு: 4:13,14). "ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்" (1பேதுரு: 4:16).

"நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை" (யோவேல்: 2:26).



3. இடுக்கண்களுக்கு நீங்கலாக வேண்டும்:


தாவீது வாழ்வில் பல இடுக்கண்களைத் தாண்டி வந்துள்ளதை வேதம் நமக்கு விவரிப்பதை காணலாம். இருப்பினும் அவன் அவையனைத்தையும் மேற்கொண்டதின் இரகசியம் என்னவெனில்... எது நேரிடினும், காத்தருடைய கையிலே விழுவேனாக எனக்கூறி தவறோ... தண்டனையோ... அது கர்த்தராலே தனக்கு கிடைக்கட்டும் என கர்த்தருடைய பாதத்திலேயே விழுந்துவிட அர்ப்பணிப்பதுதான் அந்த இரகசியம். "அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்" (1நாளாகமம்: 21:13). மனிதனுடைய இரக்கத்தைவிட தேவனுடைய இரக்கங்கள் பெரியது, உண்மையானது, மாறாதது, நிலைவரமானது என்பதை தாவீது நன்கு அறிந்திருந்தான். அதை சார்ந்திருந்தான்.

தாவீது தனது வாழ்வில் தவறுகளை அறிந்து செய்திருந்தாலும் சரி, அறியாமல் செய்திருந்தாலும் சரி, அத்தவறை அவன் உணரும்போதும் அல்லது அதை யாராவது சுட்டிக் காண்பிக்கும்போதும், கண்டித்து உணர்த்தும்போதும் அதை எதிர்த்துப் பேசாமல், மறுத்து, மறைத்து விடாமல், தன் தவறை மனதார ஒப்புக் கொண்டு, அறிக்கையிட்டு தன்னை தாழ்த்தி, திருத்திக் கொள்ள அர்ப்பணித்து விடுவான். இதுதான் தாவீதின் குணாதிசயம். "தன் பிழைகளை உணருகிறவன் யார்?..." (சங்கீதம்: 19:12).

இன்று ஆவிக்குரியவர்களாகட்டும், பொதுவான மனிதர்களாகட்டும், தன் தவறை ஒப்புக் கொண்டால்... எங்கே தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தினால், அதை மறுக்கவும், மறைக்கவும் முற்படுகிறார்கள். அது எவ்வளவு பெரிய நீதிகேட்டையும், தேவகோபத்தையும், மோசமான பின்விளைவுகளையும் கொண்டு வரும் என அப்படிப்பட்டவர்கள் அறியாமலும், உணராமலும் போகிறதுதான் மிக வேதனையான காரியம்.

செய்த தவறுக்கு கிடைக்கிற தண்டனையைவிட, அதை மறைப்பதற்கு வரும் ஆக்கினை மிக அதிகம். செய்த தவறை மறைப்பதற்கு மேலும் பற்பல பாவங்களை, தவறுகளை, மனித சட்டங்கள் மற்றும் தேவநீதிகளை மீற வேண்டியதாகும். பாவம் இதனால் பெருகுமே தவிர, குறைவதற்கு வழியில்லை. எனவேதான், நம் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்: "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதிமொழிகள்: 28:13). 

இடுக்கணிலிருந்து தப்ப ஒரே வழி - தன் பாவங்களை அறிக்கையிட்டு தேவன் பக்கமாய் மனந்திரும்புவதுதான் ஒரே வழி.

அதைவிட்டுவிட்டு, வேறு குறுக்குவழிகளை தேடுவதும், வேறு மார்க்கங்களை நாடுவதும், அன்னதானம், மற்றும் புண்ணியங்களால் மறைத்து விடலாம் என மனக்கணக்கு போடுவதும்  தேவஆக்கினைக்கு நேராக நம்மை வழிநடத்திவிடும்.  "நமக்கு பாவமில்லையென்போமானால், நம்மைநாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்; சத்தியம் நமக்குள் இராது" (1யோவான்: 1:8) என வேதம் கூறுகிறது. எச்சரிக்கையாயிருங்கள். "கையோடு கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்" (நீதிமொழிகள்: 11:21) என்று வேதம் எச்சரிக்கிறது. விழிப்பாயிருங்கள். தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார். பாவத்தை மறைப்பது தேவனை பரியாசம் பண்ணுவதற்கு ஈடானது.

தாவீது தன் இடுக்கணில் தன்னைத்தனே ஆராய்ந்து, தன் தவறை ஒப்புக் கொண்டு, தாழ்த்தி, தேவனுடைய பாதத்தில் விழுந்து இரக்கம் பெற்றான்.

தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என அவன் எந்த சூழ்நிலையிலும் தன்னை பாதுகாத்துக் கொள்ள  (பத்சேபாள் விஷயத்தை தவிர) எவ்வித மாம்ச முயற்சியும் எடுக்க, அதற்கு பிற்பாடு அவன் முன்வரவில்லை.

நமது இடுக்கண்களில் நாம் என்ன செய்கிறோம்? எப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கிறோம்? அது நமக்கு நன்மையை கொண்டு வருமா? தீமையை கொண்டு வருமா? அது தேவனுக்கு மகிமையை தருமா? சிந்தியுங்கள். எடுக்கின்ற முடிவு... ஆவிக்குரியதாய் இருக்கட்டும். இமேஜ் பாதிக்கப்படும் என அதை மனுஷர் கண்களுக்கு முன்பாக மறைக்க முயலாதீர்கள். மனிதர்களால் வரும் புகழ்ச்சி, கனத்திற்கு ஆசைப்பட்டு, இனி வரப்போகின்ற தேவனுடைய ஈடில்லா மகிமையை இழந்து போகாதீர்கள்.

இடுக்கண் என்பது தவறு செய்தாலும் வரும். தவறே செய்யாமலிருந்தாலும் வரும். இடுக்கண் மூன்றுவிதங்களில் நமக்கு வர வாய்ப்பு உள்ளது. அவை:

 1. இடுக்கண் ஒன்று சத்துருக்களால் வரலாம்.
2. அல்லது தேவனால் அனுமதிக்கப்படலாம்.
3. அல்லது நம் தவறுகளால் வரலாம்.

இடுக்கண் எந்த ரூபத்தில், எதனால்  வந்தாலும் அதிலிருந்து மீள ஒரே வழி: 

தாவீதைப்போல  கர்த்தருடைய பாதத்தில் விழுந்து விட வேண்டியதுதான் நாம் செய்யும் ஒரே வழி. சாலமோன் மற்றும் யோசபாத்தின் ஜெபம்தான்!

"எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள்" (2நாளாகமம்: 20:9;  2நாளாகமம்: 6:28-31).

"இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்" (சங்கீதம்: 34:6).

"இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்" (பிரசங்கி: 7:7) என்று வேதம் கூறுகிறது. சவுல் தாவீதை கொன்றுபோட துரத்துகையில், அவன் கைக்கு தன்னைக் காத்துக்கொள்ள, எதிரிகளின் தேசத்தில் தஞ்சமடைய தாவீது போட்ட வேஷம் - மாவீரன் தாவீதையே பித்தங் கொண்டவனைப்போல மாறச்செய்தது (1சாமுவேல்: 21:12,13), கர்த்தருடைய வசனத்தின்படி, இடுக்கண் எவ்வளவு கொடிதானது பாருங்கள்.

'இடுக்கண் வருங்கால் நகுக' - என திருவள்ளுவர் கூறுவது நம்மை சிறிது நேரம் துன்பத்தின் நடுவே ஆசுவாசப்படுத்திக்கொள்ள மட்டுமே உதவும். அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவாது. ஒருவேளை பித்தங்கொண்டவனைப்போல வேஷம் மாறி, தாவீது நகைத்ததை வள்ளுவன் கூறுகிறானோ? என்னவோ?!

நம் வாழ்வில் இடுக்கண் வர நேரிடும்போது, நம்மை எவ்விதத்திலும் தேவனுடையவர்களாக, தேவபிள்ளைகளாக, தேவ மனுஷராக விளங்கப்பண்ண வேண்டும் என தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். (2கொரிந்தியர்: 6:3-10).

இடுக்கண் வேளையில் தாவீது தன்னை தேவமனுஷனாகவே நமக்கு  ஒரு திருஷ்டாந்தமாக விளங்குகிறான். நாமும் அவ்விதமாக தாவீது, பவுல் போன்றோர்களைப்போல மாறுவோம். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

ஆவிக்குரிய வரங்களை கண்டறிய சில கேள்விகள்


1. திரைமறைவில் வேலை செய்ய சிறிய வேலைகளை கவனித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

2. ஒரு குழுவில் தலைவர்கள் இல்லாவிட்டால் சாதாரணமாக நான் முன்வந்து தலைமைத்துவ வேலையை எடுத்துக் கொள்வேன்.

3. ஒரு குழுவில் தனியே உட்கார்ந்தோ, நின்று கொண்டிருப்பவர்களை அடையாளம் கண்டு அவர்களை அணுகி பேச்சுக் கொடுப்பேன்.

4. ஒரு தேவையை அடையாளம் கண்டு கொண்டால் எவ்வளவு அற்பமான வேலையாயிருந்தாலும், அதை செய்து முடிக்க எனக்கு திறமை உண்டு.

5. ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைய எண்ணங்களையும் மக்களையும் திட்டங்களையும் ஒழுங்குபடுத்த எனக்கு திறமையுண்டு.

6. எனக்கு நல்ல ஆவிக்குரிய நிதானம் உண்டு என ஜனங்கள் அடிக்கடி கூறுவார்கள்.

7. தேவநாம மகிமைக்காக மகத்தான காரியங்களை சாதிப்பதில் நான் மிகவும் நம்பிக்கையுள்ளவன்.

8. சபை விழாக்களில் ஒரு இசைக் கருவியை வாசிக்கவோ, பாடவோ கேட்டுக் கொள்ளப்படுகிறேன்.

9. தேவன் என்னை ஒரு விளங்காத பாஷையில் ஒரு செய்தியை கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்குப் பேச பயன்படுத்தியிருக்கிறார்.

10. என்னுடைய ஜெபங்களினால் தேவன் முடியாதவைகளை முடித்து வைத்திருக்கிறார்.




11. எனக்கு என் கைகளை பயன்படுத்தி ஆக்கப்புர்வமாக பொருட்களை கட்டவும், வடிவமைக்கவும் திறமை உண்டு.

12. பிறருக்கு தேவனுடைய சுகமாக்கும் வரத்தை என்னுடைய ஜெபங்கள் பெற்றுத் தருகிறதை நான் கண்டிருக்கிறேன்.

13. ஆபத்தான பொருளாதார தேவையில் இருப்போருக்கு பணம் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

14. மருத்துவமனைகளிலும், சிறைச்சாலைகளிலும் இருப்போருக்கும் அல்லது முதியோருக்கும் ஊழியஞ்செய்து ஆறுதலாயிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

15. கடினமான பிரச்சினைகளில் நடைமுறை தீர்வுகளைக் கொடுக்கிற உள்ளுணர்வுகளை அடிக்கடி நான் கொண்டுள்ளேன்.

16. சபையிலுள்ள விஷயங்கள் அல்லது பிரச்சனைகளை புரிந்து அவற்றிற்கான பதிலை பிறர் செய்ய இயலாதபோது நான் பதிலை கண்டு இருக்கிறேன்.

17. சோர்ந்து போனவர்களுக்கு ஆலோசனை கொடுத்து ஊழியம் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

18. ஒரு வேதவாக்கிய பகுதியை முழுவதுமாக கற்கவும் பின்பு பிறரோடு அதை பகிர்ந்து கொள்ளவும் நான் திறமை பெற்றிருக்கிறேன்.

19. நான் ஒன்று அல்லது அதிகமான இளம் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பொறுப்பாய் இருக்கிறேன்.

20. ஆவிக்குரிய காரியங்களில் ஒரு அதிகாரியைப்போல மற்ற ஜனங்கள் என்னை மதிக்கிறார்கள்.



21. அந்நிய மொழியை கற்கிற திறமை எனக்கிருக்கிறது.

22. கிறிஸ்துவின் சரீரமாகிய சபை போக வேண்டிய பாதையாக அவர் விரும்புகிறதை தேவன் அடிக்கடி வெளிப்படுத்துகிறார்.

23. விசேஷமாக இயேசுவைப்பற்றிச் சொல்லும் நம்பிக்கையில் கிறிஸ்தவரல்லாதவரோடு நேரத்தை செலவிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

24. செய்தியில் அறிக்கைகளையோ அல்லது தேவையான சூழ்நிலை பற்றிய உரையாடல்களை நான் கேள்விப்படும்போதெல்லாம் நான் ஜெபிக்க பாரமடைகிறேன்.

25. போதகர்கள் அல்லது  மற்ற தலைவர்களுக்கு உதவி செய்ய நான் விரும்புவேன். இதனால் அவர்கள் தங்கள் ஊழியங்களில் இன்றியமையாத முக்கியமானவைகளை வெற்றியோடு செய்து முடிக்க அதிக நேரம் கிடைக்கும்.

26. சபையில் ஒரு முக்கியமான ஊழியத்தை செய்து நிறைவேற்ற பிறரிடம் கேட்பதற்கு தயங்க மாட்டேன்.

27. விருந்தினர் என்னை சந்திக்கும்போது அவர்களுக்கு விருந்தோம்புதலிலும் அவர்கள் வசதியை உணரச் செய்வதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

28. வேலை எவ்வளவு எளியதோ அல்லது சிறியதோ என பொருட்படுத்தாமல் பிறருக்கு சேவை செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

29. நான் மிகவும் ஒழுங்குபடுத்தும் நபராய் இலக்குகளை நிர்ணயித்து திட்டங்களை தீட்டி அவைகளை அடைகிறேன்.

30. நான் குணாதிசயங்களை நன்றாய் நிதானிக்கிறவ(ன்)ள். ஒரு ஆவிக்குரிய போலியை என்னால்அடையாளம் கண்டு கொள்ள முடியும்.



31. மற்ற ஜனங்கள் ஏற்றுக் கொள்ளாத திட்டங்களை நான் அடிக்கடி  நடப்பிக்கிறேன். பொதுவாகவே அவை வெற்றியடைகின்றன.

32. என்னுடைய சபையில் நான் விசேஷித்த பாடல்களைப் பாடவும் ஒரு ஆராதனை நடத்துகிறவராய் இருக்கவும் முடியும் என நம்புகிறேன்.

33. நான் ஆவியில் நிரம்பி ஜெபிக்கும்போதெல்லாம் நேரம் பற்றி மறந்து ஒரு விசேஷித்த அபிஷேகத்தை உணருகிறேன்.

34. மனித வழிகளுக்கு அப்பாற்பட்டவைகளான காரியங்களை நடப்பிக்க தேவன் என்னை பயன்படுத்தி இருக்கிறார்.

35. மரவேலை, தையல், உலோக வேலை, கண்ணாடி வேலை போன்ற காரியங்களை செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

36. சரீரபிரகாரமாகவும், உணர்ச்சிபுர்வமாகவும் நோய்வாய்ப்பட்டவர்களுக்காகவும் ஜெபிப்பதிலும் தேவன் அவர்களை குணமாக்குவதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

37. நான் சந்தோஷமாய் எனது தசமபாகத்திற்கும் அதிகமாக சபைக்கு கொடுக்கிறேன்.

38. புண்பட்டிருக்கிற தனிமையான ஜனங்களுக்காக நான் மனதுருக்கத்தை உணருகிறேன். அவர்களை மகிழ்விக்க அதிகமான நேரத்தை அவர்களோடு செலவிடுவதை விரும்புகிறேன்.

39. அநேக சிக்கலான தேர்ந்தெடுப்புகளிடையேயுள்ள ஒரு முக்கியமான தீர்மானத்தில் வேறொருவரும் என்ன செய்வதென அறியாதபோது தேவன் என்னை சரியானதை தெரிந்து கொள்ள வைத்திருக்கிறார்.

40. தேவனுடைய வார்த்தையைப் பற்றி கடினமான கேள்விகளைக் கற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எளிதான, துரிதமான பதில்களை கண்டு கொள்ள என்னால் முடிகிறது.


41. ஜனங்கள் என்னிடம் தங்கள் பிரச்சினைகளை அடிக்கடி சொல்லுகிறார்கள். நான் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்.

42. ஒரு கடினமான வேதபகுதியிலிருந்து ஒரு வினா எழும்பும்போது அந்தக் காரியத்தை ஆராய்ந்து பார்க்க நான் உந்தப்படுகிறேன்.

43. மற்ற ஜனங்களுடைய தேவைகளை சந்திப்பதற்கு எனது சொந்த அலுவலற்ற நேரத்தைக் கொடுக்க விரும்புகிறேன்.

44. ஒரு புதிய சபையை ஆரம்பிக்க மனதாயிருந்து பரவசமடைகிறேன்.

45. என்னால் எனக்குச் சொந்தமல்லாத கலாச்சாரம், மொழி மற்றும் வாழ்க்கை முறையோடு  பொருந்த  முடியும். என்னுடைய இந்த சீராகும் தன்மையை அந்நிய கலாச்சாரங்களில் ஊழியஞ்செய்ய பயன்படுத்த விரும்புகிறேன்.

46. கிறிஸ்தவ கொள்கைக்காக நான் எப்போதும் பேசுவேன். நான் கூறுவது பிரபலமாயிராவிடினும், பிறர் அதற்காக என்னை விமர்சித்தாலும் பரவாயில்லை.

47. இயேசுவை தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ள ஒரு நபரை அழைப்பதை நான் எளிதாகக் காண்கிறேன்.

48. ஒரு கிறிஸ்தவன் செய்யக்கூடிய அதிமுக்கியமான காரியம் ஜெபம் என நம்புகிறேன்.

49. பிறர் நாடோறும் செய்யும் வேலையிலிருந்தும் விசேஷ திட்டங்கள் செய்து முடிப்பதற்காக அவர்களை விடுவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

50. குறிப்பிட்டதோடு இலக்கினை நிறைவேற்றுவதற்காக ஒரு மக்கள் குழுவை சமாளித்து வழிகாட்ட என்னால் முடியும்.


51. புதியவர்களை சந்திப்பதிலும் அவர்களை அந்த குழுவிலுள்ள பிறருக்கு அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சியடைகிறேன்.

52. காரியங்களை செய்து முடித்து நேரத்தில் கொடுப்பதற்காக நான் மிகவும் சார்ந்திருக்கிறேன். அதற்காக நன்றியோ, புகழ்ச்சியோ எனக்கு அதிக அவசியமில்லை.

53. மற்ற ஜனங்களுக்கு எளிதாக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளை ஒப்படைப்பேன்.

54. மற்ற ஜனங்களால் முடியாத எனப்பட்ட சிக்கலான ஆவிக்குரிய காரியங்களில் சரியான மற்றும் தவறானவற்றிடையே வேறுபடுத்திக் காண என்னால் முடியும்.

55. ஒவ்வொன்றும் மோசமானதாகக் காட்சியளித்தாலும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்காய் தேவனுடைய உண்மையில் நம்பிக்கை வைப்பேன்.

56. நான் பாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். மக்கள் எனக்கு நல்ல குரல் உண்டு எனக் கூறுகின்றனர்.

57. மற்ற விசுவாசிகளோடு ஆராதனை நேரத்தில் பரிசுத்த ஆவியானவரால் மற்ற பாஷைகளில் பேச பயன்படுத்தப்பட்டிருக்கிறேன். நான் பாஷைகளில் கொடுத்த கூற்று வியாக்கியான வரத்தால் தொடரப்பட்டது.

58. தேவன் என் ஜெபத்தை ஆசீர்வதித்திருக்கிறபடியால் இயற்கைக்கு அப்பாற்பட்ட விளைவுகள் நடந்தன. மற்றபடி முடியாத சூழ்நிலைகள் இருந்திருக்கும்.

59. ஜனங்களுடைய தேவைகளைச் சந்திக்கிறதில் அவர்களுக்கு எதையாகிலும் செய்வதில் திருப்தியைக் காண்கிறேன்.

60. நான் ஜனங்களுக்காக ஜெபிக்க முடியும் என்பதினாலேயே அவர்களுடைய வியாதிகளைக் குறித்து தேவன் முறையாக என்னிடம் பேசுகிறார்.

61. மற்றவர்களுடைய தேவைகளில் உதவி செய்ய என்னுடைய வாழ்க்கையின் பொருளாதார தரத்தினை குறைத்து சபைக்கு அதிகமான நேரத்தையும், பணத்தையும் கொடுக்கத் தயங்கமாட்டேன்.

62. சிலவற்றை கைவிட வேண்டியிருந்தாலும்கூட என்னைச் சுற்றிலும் உள்ள தேவையுள்ள மக்களுக்காக எதையாகிலும் செய்ய நான் விரும்புகிறேன்.

63. ஜனங்கள் என்ன செய்வது என தெரியாத போது என் புத்திமதியை அடிக்கடி நாடுகிறார்கள்.

64. ஒரு வினாவுக்குரிய விடையைக் கண்டுபிடிக்க தேவையான தகவலை பல்வேறு மூலங்களிலிருந்து திரட்டவோ அல்லது ஒரு பாடத்தைப் பற்றி அதிகமாக கற்கவோ எனக்குத் திறமை உண்டு.

65. பிறர் தங்களை மேம்படுத்திக் கொள்ள விசேஷமாய் அவர்களுடைய ஆவிக்குரிய வளர்ச்சியில் அவர்களை கண்டனம் செய்யாமல் சவால் விடவேண்டிய அவசியத்தை நான் உணருகிறேன்.

66. நான் வேத வாக்கியங்களை போதிப்பதை பிறர் கவனித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

67. ஜனங்களோடு வேலை செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களுக்கு உதவி செய்ய வாஞ:சித்து, கர்த்தருக்காக அவர்களாலான மட்டும் சிறப்பான நபராக இருக்கிறேன்.

68. இந்த தேசத்தின் அல்லது உலகத்தின் மற்ற பகுதிகளில் ஒரு ஆவிக்குரிய அதிகாரியாக நான் ஏற்றுக் கொள்ளப்படுகிறேன்.

69. அந்நிய மொழியில் எனது சொந்த கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையிலிருந்து வித்தியாசமான ஒரு தேசத்தில் சுவிசேஷத்தை முன் வைக்க விரும்புகிறேன்.

70. வேதாகமத்திலிருந்து தேவனுடைய செய்திகளை பேச வேண்டிய அவசியத்தை உணருகிறேன். இதனால் ஜனங்கள் தேவன் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்வார்கள்.


71. பிறருக்காக நான் ஏறெடுக்கிற என் ஜெபங்களில் பல கர்த்தரால் பதிலளிக்கப்பட்டிருக்கின்றன.

72. பிறருக்கு உதவி செய்து  அவர்கள் வேலை நிறைவடைவதில் மகிழ்ச்சியடைகிறேன். பொது ஜனத்திரள் இதை தெரிந்து கொள்ள அவசியமில்லை.

73. ஜனங்கள் என்னுடைய கருத்தை மதித்து என் பாதையை பின்பற்றுவார்கள்.

74. சபைக்கு புதிதாய் வருகிறவர்களையும், பார்வையாளர்களையும் அறிமுகமாக்கிக் கொள்ள என்னுடைய வீட்டை பயன்படுத்த விரும்புகிறேன்.

75. எந்த மாதிரி தேவையானாலும் ஜனங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அந்த தேவையை சந்திக்கிறதில் திருப்தியின் உணர்ச்சியை உணருகிறேன்.

76. முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடியிலும் மனநிறைவடைகிறேன்.

77. ஆவிக்குரிய சத்தியத்திற்கும் தவறானவற்றிற்கும் இடையே உள்ளதை வேறுபடுத்துவதில் ஜனங்கள் உதவிக்காக என்னிடம் வருகிறார்கள்.

78. என் விசுவாசத்தை ஜெபத்தின் மூலம் நான் அடிக்கடி பழக்குவிக்கிறேன். தேவனும் எனது ஜெபங்களுக்கு பரவசமூட்டும் வழிகளில் பதிலளிக்கிறார்.

79. பாடல் மூலம் ஒரு செய்தியை விடுவிக்க  கர்த்தர் என்னை பாடகர் குழுவில் பயன்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

80. எனக்கு அறிமுகமில்லாத மொழியில் நான் பேசியிருக்கிறேன். அது வியாக்கியானிக்கப்பட்டபோது அதை கேட்டவர்களுக்கு ஒரு ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தது.



81. அவரது இராஜ்ஜிய மகிமைக்காக அற்புதங்களை செய்ய தேவன் என்னை பயன்படுத்துகிறார்.

82. நான் எனது கைகளால் கிருபை பெற்றிருக்கிறேன் என்று ஜனங்கள் கூறுகிறார்கள்.

83. அவர்களுடைய சரீர சுகத்திற்காக ஜெபிக்க ஜனங்கள் அடிக்கடி என்னைத் தேடுவார்கள்.

84. சிலருக்கு நான் பணம் கொடுக்கும்போது  கைமாறு கருதாமல் அடிக்கடி பெயர் தெரியாதவர்களுக்கே கொடுக்கிறேன்.

85. தங்கள் இரசீதுகளுக்கு பணம் செலுத்த முடியாமல் வேலையில்லாத ஜனங்களைப்பற்றி கேள்விப்பட்டால் அவர்களுக்கு உதவ என்னாலான மட்டும் முயல்கிறேன்.

86. வேதாகம உண்மைகளை ஏற்றுக் கொள்ளத்தக்கவாறும் வேதாகமச் சத்தியத்தின் கொள்கைகளை நடைமுறை சூழ்நிலைகளுக்கும் செயல் முறைப்படுத்த தேவன் உதவி செய்கிறார்.

87. கடினமான வேதாகமச் சத்தியங்களையும், கொள்கைகளையும் நான் சொந்தமாகவே தெரிந்து கொள்கிறேன். இதில் மகிழ்ச்சியுமடைகிறேன்.

88. நான் பேச எளிதாக இருக்கிறேனென்று வேறு எவரிடமும் சொல்லாத காரியங்களை ஜனங்கள் என்னிடம் சொல்லுவார்கள்.

89. ஒரு ஜனக்கூட்டத்திற்கு வேதாகமப் பாடங்களை முன்வைக்க என்னுடைய முறையில் திட்டமிட்டு செயல்பட்டு எனது எண்ணத்தில் ஒழுங்குடையவனாயிருக்கிறேன்.

90. கர்த்தரை விட்டு பின்வாங்கியிருக்கிற கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்து அவர்கள் மீண்டும் அவரோடு  ஒரு வளரும் உறவைக் கண்டு கொள்ள உதவுகிறேன்.


91. அநேக சபைகளிலில்லாத இடங்களில் சுவிசேஷத்தை பகிர்ந்து கிறிஸ்தவர்களின் புதிய குழுக்களை அமைப்பதில் பரவசமடைகிறேன்.

92. என்னைவிட வித்தியாசமான ஜனங்களுக்கு ஒரு மனமாற பாராட்டுதலை வைத்திருக்கிறேன். எனக்கு கேடுண்டாக்கும் இனவெறி இல்லை.

93. அன்றாட சூழ்நிலைகளில் வேதாகம வாக்குத்தத்தங்களை செயல்படுத்துவது மிகவும் எளிதாகக் காண்கிறேன்.

94. இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்பை கிறிஸ்தவரல்லாதோர் கண்டு கொள்ள உதவும் ஒரு வலிய வாஞ்சை எனக்கு உண்டு.

95. சபையில் எனக்கு பிடித்தமான ஊழியம் ஜெபம். இதற்காக ஒரு பெரிய நேரத்தை ஒதுக்கி செலவிடுவேன்.

உங்களை மிகச் சரியாக விவரிக்கிற மதிப்பீடுகளை கணித்து, தேர்வு செய்து செயல்படுங்கள். 

-  Selected