அக்டோபர் 30, 2014

சீடனும் - சீஷத்துவமும்


"ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் என்றார். ஆமென்" (மத்தேயு: 28:19,20).

சீஷன் - சீடன் - என்பதின் பொருள்:

"பின்பற்றுபவன்" -  இயேசுவையும், அவரது போதனைகளையும் பின்பற்றுபவன்.

"மாணவன்"  - கர்த்தருடைய கற்பனைகளையும், போதனைகளையும் கற்றுக் கொள்ளும் மனப்பாங்குடையவன்.

இயேசுகிறிஸ்து எப்படி தன் சீஷர் குழுவை தெரிந்தெடுத்து செயல்பட்டார்?:

இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த மொத்த வருடங்கள் மூன்று வருடமும் ஆறு மாதமும் ஆகும்.

  • முதல் வருடம் - சீஷர்களைத் தெரிந்தெடுத்தார்
  • 2 ஆம் வருடம் - ஊழியம் செய்யக் கற்றுக் கொடுத்தார்
  • 3 ஆம் வருடம் - போதனை செய்தார்
  • கடைசி ஆறு மாதம் - தொடர்ந்து செய்ய ஆயத்தமாக்கி ஊக்குவித்தார்.
இன்னொருவிதத்தில் சொல்லவேண்டுமானால்...

"நான் செய்கிறேன் - நீ பார்

நீ செய் - நான் பார்க்கிறேன்

நீயே செய்"

- இம்முறையில் அவர் தமது சீஷருக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி வைத்தார்.

இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்:

ஆண்டவர் இயேசுவுக்கு 12 சீஷர்கள் மட்டுமல்லாது இன்னும் சில சீஷர்கள், சீஷிகள் இருந்தனர்



மாற்கு: 3:14 - 19 - பன்னிரு சீஷர்கள்
லூக்கா: 10:1 - சீஷத்துவபணி செய்தவர்கள் எழுபது பேர்
அப்போஸ்தலர்: 1:14 - 15 - நூற்றிருபது பேர்

இவர்களைக் கொண்டே ஆதிதிருச்சபை நிறுவப்பட்டது. அப்போஸ்தலர்கள் சபை நிறுவுதலில் மட்டுமல்லாது, சீஷர்களை அடுத்த தலைமுறைக்கு சபைகளை ஸ்தாபிக்க, உலகம் முழுவதிற்கும் ஊழியங்களை எடுத்துச் செல்ல, சீஷர்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டினர்.

ஆதிதிருச்சபையில் ஆத்துமாக்களின் எண்ணிக்கை பெருக்கமும், ஆவிக்குரிய தரமும், சபை கட்டப்படுதலும் சிறந்து காணப்பட்டது. அப்போஸ்தலர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட தரிசனத்தை விட்டு விலகாமல் தரிசனம் நிறைவேறும்படி இயேசுவின் கடைசி கட்டளையை நிறைவேற்ற தங்கள் ஜீவனை இரத்த சாட்சியாக ஒப்புக் கொடுத்து நிறைவேற்றவும் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள்.

சீஷத்துவம் என்பது என்ன?:

1. நம் அன்றாட வாழ்வில் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வகையில் சாட்சியாக வாழ வேண்டும். (1தீமோத்தேயு: 4:12;  1பேதுரு: 2:21)

2.  சீஷத்துவத்தில் உருவாக்கப்பட தேவசமூகத்தில் நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். (1கொரிந்தியர்: 9:24,25)

3. தேவனுடைய வீட்டில் நடக்க வேண்டிய வகையை அறிய கற்றுக்கொள்ளுதல். (1தீமோத்தேயு: 3:14,15)

4. அறியப்படாதவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க முற்படுவது (ரோமர்: 10:15)

5. இடைவிடாமல் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருப்பது. (1தெசலோனிக்கேயர்: 5:17)

6. மகிழ்ச்சியோடு ஆராதனை செய்ய அவர் சந்நிதிக்கு தவறாமல் ஆனந்தமாய் வருவது. (சங்கீதம்: 100:2)

7.  இவைகளில் தேறினவன் இயேசுவைப்போல் இருப்பான் (லூக்கா: 6:40;  யாக்கோபு:  1:22)

8. இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தில் நடவாதவன், அகில உலகம் சுற்றிஊழியம் செய்து பிரசங்கித்தாலும் லாபமில்லை (மாற்கு: 8:36)

9. சீஷர்களை, சீஷிகளை உருவாக்குதல் (அப்போஸ்தலர்: 9:36)

10. பிறரிடத்தில் அன்புகூறுதல் (யோவான்: 13:34,35)

"சுபாவம் மாறாமல் இயேசுவுக்கு சீடனாக முடியாது. எனவே, சீஷத்துவம் என்பது சுபாவமாற்றமேயன்றி வேறல்ல"

சீஷனாவது எப்படி?

"... ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்" (லூக்கா: 9:23).   "தன் சிலுவையைச் சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்" (லூக்கா: 14:27).  சுய வெறுப்பு உள்ளவனே சீஷனாக முடியும் - என்பதை இவ்வசனங்கள் மூலம் அறிகிறோம்.

மத்தேயு: 10:37,38 மற்றும் லூக்கா: 14:26 ல் ஏழு காரியங்கள் பட்டியலிடப்பட்டும், அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதை நாம் வாசிக்கலாம்.

அவை:  (லூக்கா: 14:26)  1. தகப்பன்  2. தாய்  3. மனைவி  4. பிள்ளைகள்  5. சகோதரர்  6. சகோதரிகள்  7. ஜீவன் - இந்த உறவுகளை தேவனைவிட அதிகமாய் நேசிக்கக்கூடாது என்பதை குறிக்கிறது. (மத்தேயு: 10:37,38).

'ஜீவனை வெறுப்பது' என்பது சிலுவை சுமப்பதற்கு அடையாளமாயிருக்கிறது.(எஸ்தர்: 4:16 ) எஸ்தரின் வாழ்வில் பார்க்கிறோம். தேவஜனத்தின் மீட்பிற்காக, தேசத்தின் "...சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன்" என்று தீர்மானம் எடுத்து அதை செயல்படுத்தி காட்டினதை வாசிக்கிறோம். இப்படிப்பட்ட ஆவிக்குரிய வைராக்கியமும், தேவ அழைப்பும், அர்ப்பணிப்புமும், சுயவெறுப்புமே நம்மை அவருக்கு சீஷனாகிற தகுதியை நம்மில் ஏற்படுத்துகிறது.

ஜீவனை வெறுப்பது அல்லது சிலுவை சுமப்பது

(மத்தேயு: 16:24 )

மத்தேயு: 10:37,38  &  யாத்திராகமம்: 32:27 - உலக பாசத்தை உதறி தள்ளுவது

ரோமர்: 6:6 - பாவ சரீரத்தை களைந்து போடுவது

கலாத்தியர்: 2:20 - தனக்காக வாழாமல் கிறிஸ்துவுக்காக வாழ்வது 

கலாத்தியர்: 5:24 - மாம்ச இச்சைகளையும், ஆசைகளையும் களைவது

மாற்கு: 15:29,30 - கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தைகள், தூஷணங்களை சகிப்பது

எபிரேயர்: 12:2 - அவமானத்தை எண்ணாதிருப்பது

லூக்கா: 14:33 - தனக்குண்டான எல்லாவற்றையும் வெறுத்து விடுவது

அப்போஸ்தலர்களின் சுவிசேஷம் அறிவித்த முறைகள்

1. லூக்கா: 24:46 - 48 - இயேசு கிறிஸ்துவின் கடைசி கட்டளையை நிறைவேற்ற தங்களை முழுமையாக அதற்கு அர்ப்பணித்திருந்தனர்.

2. மாற்கு: 16:17,18 - சுகமாக அற்புதங்கள் நடக்க விசுவாசிக்கவும் ஜெபிக்கவும் செய்தனர்.

3. அப்போஸ்தலர்: 10:24;  16:31 - மற்றவர்களோடு நல்ல உறவுநிலையை மேம்படுத்தி வந்தனர்.

4. தனிநபருக்கு சுவிசேஷம் அறிவித்தனர். தனித்தாள் ஊழியம்.

5. சமயம் வாய்த்தாலும் வாய்க்கா விட்டாலும் குறிக்கோளை தவற விடாமல் சுவிசேஷம் அறிவிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.





















தொடரும்...

அக்டோபர் 15, 2014

மனமுறிவை மாற்றும் தேவன்


மன உடைவு

நீதிமொழிகள்: 18:14 - "மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?"

நீதிமொழிகள்: 17:22 - "... முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்"

முன்னேற்றத்தை நோக்கி மிக வேகமாக விறுவிறுப்பாக செல்லும்  இன்றைய உலகில் - எந்த அளவு முன்னேற்றம் இருக்கின்றதோ... அதே அளவு மனிதனின் மனமுறிவும், மன உடைவும் அதனால் ஏற்படும் விளைவுகளும் மிக மோசமான பாதிப்புகளை தனிப்பட்ட வாழ்விலும், சமுதாயத்திலும் ஏற்படுவதை காணமுடிகிறது.

மனமுறிவு அல்லது மன உடைவு என்பது அனைத்து வயதிலும் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்படுகின்ற ஒன்று. சிலர் அதை மேற் கொள்கின்றனர். சிலர் அதை மேற்கொள்ள முடியாமல் திகைத்துப்போய் செய்வதறியாது கலங்கிப்போய் அமைதியாக மௌனம் அடைகிறார்கள். வேறுசிலர் நடைபிணமாக கிடக்கிறார்கள். மற்ற சிலர் தாங்கொணா துயரங் கொண்டு தங்களை மாய்த்துக் கொள்கிறார்கள்.


மனம் உடைந்து போனால் தற்கொலை ஒன்றுதான் வழியா? வேறு வழியில்லையா? என்று அந்நேரத்தில் மனிதனால் சிந்திக்க இயலாமற்போகிறது. காரணம்... மாற்று வழிகளைவிட தற்போதைய மனநெருக்கம் மிகப்பெரிதாக மனதில் முதண்மை இடத்தை பிடித்துக்கொண்டு சிந்திக்க விடாமல் தடுத்து விடுகிறது. எல்லாவற்றிற்கும் தீர்வு, வழி தேவனிடம், வேதத்தில் உண்டு என்பதை ஏனோ அந்நேரம் மனம் சிந்திக்க மறுக்கிறது. அல்லது ஏதோ ஒன்று அதை தடுத்து நம் அழிவில் பிரியப்படுகிறது. அது சாத்தானைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? 

ஏனென்றால், மனித வாழ்வில் மனிதனுடைய அழிவைத் தவிர வேறு எதையும் விரும்பாதவன் பிசாசு. "அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலை பாதகனாயிருக்கிறான்" (யோவான்: 8:44) என்று இயேசு சொல்கிறார். 

மனிதன் உலகில் வாழும் நாட்கள் முழுவதும் - "... வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்" (யோபு: 14:1) என யோபு கூறுகிறான். இருக்கலாம் ஆனால் அதற்கு வேதத்தில் தீர்வு உண்டு.


மனமுறிவு - மனஉடைவு - மனநெருக்கம் - ஏற்பட காரணம் என்ன?

1. மனதில் தேவையற்ற அல்லது தகுதியற்ற விருப்பங்களை வளர்த்துக் கொள்வது.

2. தகுதிக்கு மிஞ்சி அல்லது வருமானத்துக்கு அதிகமாக (வீண்செலவு செய்து) கடன்படுவது

3. வேலையிண்மை அல்லது இருந்த வேலை பறிக்கப்பட்ட நிலை அல்லது போதிய வருமானமிண்மை

4. எதை செய்தாலும் வாய்ப்பதில்லை. தொட்டதெல்லாம் தோல்வி அடைவது

5. எதிர்கால வாழ்விற்கு சேமிப்பு செய்யாததினால் நிகழ்கால தேவைகளுக்கு திண்டாடுவது

6. எதிர்பார்த்த வாழ்வு நம் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக அமைவது

7. கெட்ட சகவாசம், தவறான நடத்தை, மதுபானவெறி

8. ஆதரவற்ற தனிமை - கைவிடப்பட்ட நிலைமை

9. மனிதர்களால் வரும் நெருக்கங்கள்: உறவுகள், மேலதிகாரிகள், சத்துருக்கள்

10. வாழ்வில் ஏற்படும் மோசமான அனுபவம், அவமானம், ஈடு செய்ய முடியாத இழப்புகள்


இவைகளிலிருந்து விடுபட வேதம் காட்டும் வழிகள்:

1. சங்கீதம்: 9:9 - "... நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்"

நமக்கு நெருக்கங்கள் வருகின்ற சமயங்களில் மனிதர்களிடம் தஞ்சம் அடையாமல் கர்த்தரிடம் தஞ்சமடைய வேண்டும். 

மனிதனுக்கு நெருக்கம் வருகின்றபோது, அதிலிருந்து தப்ப தவறான பாதையை தெரிந்துதெடுத்து பின்பு மீளமுடியா துன்பத்தில் சிக்கி தவிப்பதை காணலாம். அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊர்த்தலைவர்கள், உறவினர்கள் போன்றவர்களிடம் உதவிகேட்டு, அதனால் பெரிய அளவில் பணம் பொருளை இழந்து மனஉளைச்சலுக்கு ஆளாகி, யாரையும் நம்ப இயலாமல் விரக்தியடைந்து பின்பு அந்த கவலையை மறக்க மதுவை நாடி... துன்பத்தின்மேல் துன்பத்தை அடைந்து வேதனைபடுகிறார்கள்.

 வேதம் சொல்கிறது:சங்கீதம்: 118:8 - "மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்" . சங்கீதம்: 118:9 - "பிரபுக்களை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்".

தாவீதிற்கு வந்த நெருக்கங்களில் அவன் தெரிந்து கொண்டது என்ன? "... கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்" (2சாமுவேல்: 24:14).

எவ்வகை நெருக்கம் நம்மை சூழ்ந்தாலும் பயமோ கவலையோ பட வேண்டாம். தடால் என கர்த்தருடைய பாதத்தில் விழுந்து தஞ்சமடைந்து விடுவோம். அவரே எல்லா நெருக்கத்தினின்றும் நம்மை விடுவிக்க வல்லவர்.

2. சங்கீதம்: 81:7 - "நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய்; நான் உன்னைத் தப்புவிப்பேன்"

நெருக்கம் நம்மை சூழும்போது கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும். அதாவது, முழங்கால்படியிட்டு ஜெபிக்க வேண்டும். அவர் நம்மை தப்புவிப்பார். ஏனென்றால், வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறாதவர்.  சொன்னதை நிச்சயம் செய்திடுவார்.

எரேமியா: 33:3 - "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்"

அவரைநோக்கி கூப்பிடும்போது, ஜெபிக்கும்போது, நமது நெருக்கங்களிலிருந்து விடுபட, நாம் அறிந்திராத புதிய வழிகளை நமக்கு காண்பித்து, தப்புவிப்பார். அதோடுகூட நமக்கு எட்டாத பெரிய காரியங்களையும் சேர்த்து (பதவி உயர்வு) கொடுக்கும் தேவன் நம் கர்த்தர்.

நீங்கள் எதையெல்லாம் இழந்தீர்களோ... அதையெல்லாம் திரும்பப் பெறுவீர்கள். நீங்கள் எதையெல்லாம் பெற இயலாமற்போயிற்றோ... அதையெல்லாம் பெற்றுக் கொள்வீர்கள். அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

3. சங்கீதம்: 142:2 - "அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்"

உங்கள் மனபாரத்தை கர்த்தரிடம் எடுத்து வையுங்கள். "வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்று இயேசு அழைக்கிறார்.

மனதின் பாரத்தை மனிதனிடம் மட்டும் எடுத்து வைத்து விடாதீர்கள். நட்பின் சூழ்நிலை மாறும்போது, உங்களைப்பற்றிய காரியங்கள் உங்களுக்கு எதிராக திரும்பி வரும்படி நேரிடும். அது உங்களுக்கு இன்னொரு புதிய பிரச்சினையை, நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, நமது பாரங்களை எதுவாயிருந்தாலும் சரி... அதை தேவனிடம் மட்டுமே ஜெபத்தில் எடுத்து வைக்க வேண்டும்.

நமது மனபாரங்களை அவர் எடுத்துக் கொண்டு நமக்கு இளைப்பாறுதலை கொடுக்கும் தெய்வம் இயேசுவைத் தவிர வேறு யாருண்டு?

4. சங்கீதம்: 59:16 - "நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்".

நமது நெருக்கங்கள் நம்மை விட்டு அகல... காலையும் மாலையும் தேவ சமூகத்தில் துதித்துப்பாடி, ஜெபிக்கின்ற அனுதின பழக்கம் குடும்பத்தில் இருக்க வேண்டும்.  துதியும், பாடலும், ஜெபமும் எவ்வித நெருக்கத்தையும் மாற்றும் வல்லமை அதற்கு உண்டு. தடைகளை தகர்த்தெறியும் வல்லமை அதில் அடங்கியுள்ளது.

துதித்து துதித்து எரிகோ கோட்டையை தகர்த்தெறிந்த இஸ்ரவேலரை வேதத்தில் காண்கிறோமே!! நம் நெருக்கங்களை அவ்விதமாக தேவனை துதித்து துதித்து தகர்த்தெறிவோம்.

உபாகமம்: 28:7 - "... ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்"

நமக்கு எதிராக சூழ்ச்சி செய்து நம்மை வீழ்த்த நினைக்கிற சத்துருக்களுக்கு பயப்பட வேண்டாம். சத்துருக்களால் வருகின்ற மன நெருக்கம், மனஅழுத்தத்திற்கு ஆளாகவும், குழுப்பிக் கொண்டு, பயந்து பதட்டமடைய வேண்டாம். எதிராளி உங்களை எதுவும் செய்ய கர்த்தர் அனுமதிக்க மாட்டார். விசுவாசத்தோடிருங்கள்.

எதிராளி, பிசாசு, சத்துரு, மேலதிகாரி, துஷ்டர்கள் எவரும் உங்களை அச்சுறுத்தலாம். பயப்படாதீர்கள். அவர்களுடைய அதிகபட்ச ஆயுதமே அது ஒன்றுதான். அதற்குமேல் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாதபடி தேவன் அவர்களுக்கு தடைசெய்வார். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்... கர்த்தரிடத்தில் காரியங்களை ஜெபத்தில் ஒப்புவித்துவிட்டு, கர்த்தருடைய இரட்சிப்பிற்காக காத்திருப்பது மட்டும்தான்.

நாம் செய்யக்கூடாதவை:

சங்கீதம்: 34:1 - "பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே..."
சங்கீதம்: 34:7 - "... தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே"

நாம் செய்ய வேண்டியது:

சங்கீதம்: 59:16 - "நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; "

5. செய்வதெல்லாம் வாய்க்க... தொட்டதெல்லாம் துலங்க...:

சங்கீதம்: 1 : 1-3: - "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்".

மேற்கண்ட வசனத்தின்படி செய்து காரியங்களை வாய்க்கப்பண்ணுங்கள். கர்த்தர் உங்கள் எல்லா மன அழுத்தங்களிலிருந்தும் விடுவித்து காப்பாராக.ஆமென்.

அக்டோபர் 01, 2014

நாம் இடைவிடாமல் செய்ய வேண்டியவை


தேவனுடைய பிள்ளைகளாகிய நம் எல்லோர் மேலும் விழுந்த கடமை இது.  இதை நிறைவேற்றுவது ஊழியர்களின் கடமை. நமது வேலையல்ல என கருதாது நாம் அனைவரும், இவைகள் நம்மில் நிறைவேற பிரயாசப்பட வேண்டும். 

இடைவிடாமல் என்பது வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இவைகளில் தவறாது கடைபிடிக்க கவனமாயிருக்க வேண்டும் என்பதே. தானியேலுக்கு ஜெபிப்பதில் தடை இருந்தது. இருப்பினும், அவன் தன் தேவனுக்கு முன்செய்து வந்த வழக்கத்தின்படியே மூன்றுவேளையும் தவறாது எருசலேமுக்கு நேராக பலகணிகளை திறந்து வைத்து ஜெபிப்பதை வேதத்தில் வாசிக்கிறோம். காலை மாலை இரவு என சமயம் கிடைக்கும்போதெல்லாம் இடைவிடாமல் ஜெபிப்பதும், ஆராதிப்பதும் தானியேலின் வழக்கமாயிருந்ததை அவனது வாழ்வில் காண முடிகிறது.

தாவீது வனத்தில் சவுலுக்கு பயந்து ஓடிய நாட்களிலாகட்டும், அரண்மனை வாழ்வாகட்டும் சதாகாலமும் கர்த்தருடைய வசனத்தின்மேல் தாகமுள்ளவனாய், வசனத்தின்படி நடப்பதில் இருதயத்தை சாய்க்கிறவனுமாய் இருப்பதை காணமுடிகிறது.

அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணுவதிலும், போதிக்கிறதிலும் இடைவிடாமல் தரித்திருப்பதை - அறிக்கையிடுவதை வாசிக்கிறோம்.

அப்போஸ்தலனாகிய பவுல் ஆதிதிருச்சபைமக்களுக்கு கண்ணீரோடே புத்திசொல்கிறதை வேதத்தில் வாசிக்கிறோம். அதேபோன்று நாமும் இடைவிடாமல் பலபாடுகள், போராட்டங்கள் நம்மை வருத்தினாலும் சோர்ந்து போகாமல் இடைவிடாமல் ஆவிக்குரியவைகள் நம்மில் நிறைவேற பிரயாசப்படுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!