மார்ச் 15, 2021

ஏன் இயேசு நமக்காக மரிக்க வேண்டும்? Why Jesus have to die for us?



சிலுவையை நாம் பார்க்கும்போது, இயேசுவின் அன்பும் தியாகமும் நம் நினைவுக்கு வரும். அப்போது, நம் மனதுக்குள் வரும் கேள்விகள் - ஏன் இயேசு இந்த சிலுவையை ஏற்றுக்கொள்ள வேண்டும்? ஏன் இயேசு மரிக்க வேண்டும்? ஏன் இவ்வளவு காயங்கள் பட வேண்டும்? 

- நம்மில் யாரேனும் நாம் செய்த தவறுகளுக்காக மற்றவர்கள் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்வதை பார்த்திருக்கிறோமா? 

ஒரு வாலிபன் தன் விலையுயர்ந்த காரை  வேகமாக ஓட்டிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தான். சற்றும் எதிர்பாராத விதத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி விபத்து நேர்ந்தது. உடனே, அடிபட்டவரை மருத்துவமனைக்கும், அந்த வாலிபனை நீதிமன்றத்திற்கும் அழைத்து சென்றார்கள். அங்கே, நீதிபதி வாலிபனை பார்த்து, "நீ விபத்து ஏற்படுத்தினதற்கு அபராதம் செலுத்துகிறாயா அல்லது 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கிறாயா? " என்று கேட்டார். அந்த வாலிபன் அபராதம் செலுத்துவதற்கு பணம் இல்லையே என்று வருந்தினான். என்ன செய்வதென்று கலங்கி போனான். நீதிபதி எழுந்து வந்து, தன் நீதிபதிக்கான மேலங்கியை கழற்றி விட்டு, தானே அபராதம் செலுத்தினார். காரணம், விபத்தை ஏற்படுத்தின வாலிபன் அவரது ஒரே மகன்.

இங்கே தன் ஒரே மகனுக்காக அவன் செய்த தவறுக்கான தண்டனையை தகப்பனார் ஏற்றுகொள்கிறதை போல, நம் தவறுகளுக்காக நாம் ஏற்க வேண்டிய தண்டனைகளை பரம தகப்பன் தானே ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அவர் நம் தகப்பன்; நாம் அவருடைய பிள்ளைகள்! நாம் விபத்தை ஏற்படுத்தினோம். ஆனால் அவர் அதற்கான தொகையை செலுத்தினார். 

இந்த உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த பின், தேவன் நல்லது என்று கண்டார். ஆறு நாளில் படைத்து விட்டு ஏழாம் நாள் கர்த்தர் ஓய்ந்திருந்தார். அப்போது, உலகத்தில் பாவமில்லாமல் இருந்தது. அதற்கு பின், தேவன் மனிதனையும் மனுஷியையும் படைத்தார்.  மனிதன் வஞ்சிக்கப்பட்டு, பாவத்தில் விழுந்து போனான். பாவத்தின் விளைவாக, ஏதேனை விட்டு வெளியேற்றப்பட்டான். 

பாவம் - கர்த்தருக்கும் மனிதக்குலத்திற்கும் தடைச்சுவராக நின்றது.

1. நம் பாவங்களை நிவிர்த்தி செய்ய மரித்தார்:

எபேசியர்:2:14 - "எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து" 

நம்மேல் குறைகள் இருந்தாலும், தேவன் நம்மை நேசித்ததினால், பாவத்திலிருந்து நம்மை விடுவிக்க, பிரிவினையை மாற்றி ஒன்றிணைக்க அவர் நமக்காக மரித்தார். 

பழைய ஏற்பாட்டு காலத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தாங்கள் செய்த பாவத்திற்கு கிரயமாக சில பலிகளை செலுத்தினார்கள்.  பாவ நிவாரண பலியாக காளை, ஆடு, புறா என்று தங்களால் இயன்றதை பலியாக செலுத்தினார்கள். (லேவியராகமம்- 4,5  அதிகாரங்களில் இதை பற்றி வாசிக்கமுடியும்.) ஆனால், அது தற்காலிகமான நிவாரணமாக இருந்தது.  அந்த பலி மிருகத்தின் இரத்தம் நிரந்தரமாக ஒருவருடைய பாவத்தை அழித்து விட முடியாது. 

யோவான்:3:17 - "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்."

ஆகவே, தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த பூமிக்கு அனுப்பினார். நம்முடைய பாவத்தை நிவிர்த்தி செய்யும்படி தன்னையே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். ஆதாம் இந்த பூமிக்கு தன்னுடைய கீழ்ப்படியாமையினிமித்தம் கொண்டு வந்த பாவத்தை, இயேசு தம்முடைய இரத்தத்தை சிந்தி இரட்சிப்பை கொடுத்தார்.

1யோவான்:2:2 - "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்."

ரோமர்:5:18 - "ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று."

ஆகவே நம்முடைய பாவங்களை மன்னித்து, அதை நிவிர்த்தி செய்ய இயேசு நமக்காக மரித்தார். நம்மேல் வர வேண்டிய நியாயத்தீர்ப்புகளை அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவரே கிருபாதார பலி! 

2. நம்மை நேசித்ததினால் நமக்காக மரித்தார்:

கலாத்தியர்:2:20 - "என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."

எபேசியர்:5:2 - "கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்."

நம் ஒவ்வொருவரையும் தேவன் நேசித்ததினால் தன்னையே ஒப்புக்கொடுத்தார். அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காக, தன் ஜீவனைக் கொடுத்தார்.  அவர் நமக்காக பட்ட ஒவ்வொரு காயங்களும் அவருடைய அன்பை வெளிப்படுத்துகிறது. 

யோவான்:3:16 - "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்."

நாம் ஒருவராகிலும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். ஆகவே, நம் மீது இருக்கும் ஆக்கினை தீர்ப்புகளை ஏற்று, நம்மை நீதிமான்களாக்கும்படியாக, தம்முடைய ஒரே குமாரனை நமக்கு தந்து அவரது அன்பை வெளிப்படுத்தினார்.

நமக்காக தன் உயிரையே கொடுக்கக்கூடிய மனிதர்களை நம்மால் பார்க்க முடியாது. நாம் நல்ல நிலையில் இருக்கும்போது, உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன். உங்களுக்கு ஏதாவது தவறாக நடக்க நேர்ந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் என்று சொல்லும் உறவுகள் பல உண்டு. நமக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும்போது, அந்த உறவுகள் இருக்கும் இடமே தெரியாமல் மறைந்து விடும். தொடர்பு எல்லைக்கு வெளியில் போய் விடுவார்கள். 

ஆனால், எந்த சூழ்நிலையிலும் மாறாத ஒரே அன்பு - இயேசுவிடம் மட்டுமே உண்டு. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். நமக்காக தன் உயிரையே கொடுத்த ஒரே பரிபூரண அன்பு இயேசுவிடம் உண்டு. தன் உடலில் உள்ள கடைசி துளி இரத்தம் கூட நமக்காக சிந்தினார். அவ்வளவாய் நம்மை நேசித்தார். 

1யோவான்:3:16 - "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்."

ஆகவே, அவர் நம்மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த தன் ஜீவனை நமக்காக கொடுத்தார். 

3. நமக்கு எதிராக இருந்த கட்டளைகளை மாற்ற நமக்காக மரித்தார்: 

கொலொசேயர்:2:14,15 - "நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்."

நியாயப்பிரமாணங்கள் மோசே மூலமாக தேவனால் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்டது. நியாயப்பிரமாணத்தை ஒரு மனிதனாலும் முழுமையாக பின்பற்ற கூடாமல் கடினமாக இருந்தது. பாவத்திற்கான ஆக்கினை தீர்ப்புகளும், தண்டனைகளும் கடினமாக இருந்தது. நியாயப்பிரமானம் குறைகளுள்ள மனிதனிடத்தில் குறையில்லாத பரிபூரணத்தை எதிர்பார்த்தது.  நியாயப்பிரமாணம் பாவத்தை சுட்டிகாட்டியது. நாம் செய்த பாவத்தை சுட்டிக்காட்டி நம்மில் குற்ற உணர்ச்சியை தூண்ட செய்வது நியாயப்பிரமாணம். முடிவில், நியாயப்பிரமாணம் தவறு செய்த ஆண் (அ) பெண்ணுக்கு மரணத்தை தரக்கூடியது. 

ஆகவே, அந்த பாவத்தினால் நமக்கு இருக்கும் குற்ற உணர்ச்சிகளையும், மரணத்தீர்ப்புகளையும் மாற்றும்படியாக, இயேசு அந்த கையெழுத்துகளை குலைத்து, சிலுவையிலே வெற்றி சிறந்தார். நம்மேல் இருக்கும் கண்டனங்களையும், குற்றங்களையும், ஆக்கினைத்தீர்ப்புகளையும், நியாயப்பிரமாணத்தின் மூலம் வரவேண்டிய மரணத்தீர்ப்புகளையும் இயேசு தம்மேலே ஏற்றுக்கொண்டு நமக்காக மரித்தார்.

கிறிஸ்துவின் மரணம்:  

நம்முடைய பாவங்களுக்கு முடிவு கொடுத்தது!!!

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்:

கிறிஸ்துவுக்குள் நமக்கு புதிய வாழ்க்கையை கொடுத்தது!!!

மார்ச் 06, 2021

இதோ! Behold!



'இதோ' என்ற வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகிப்போம். ஆனால், அதற்கான பொருள் தெரியுமா?  எங்கள் சபையில் இந்த செய்தியை கடந்த வாரம் கொடுத்தபோது, சபையாரிடம் கேட்ட முதல் கேள்வி - இதோ என்பதற்கு அர்த்தம் என்ன? ஆனால், ஒருவருக்கு கூட அதின் அர்த்தம் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. 

உதாரணத்திற்கு, "இதோ, இங்கே இருக்கிறேன்" - இதில் இதோ என்ற வார்த்தை 'கவனி'  என்று குறிக்கிறது. "கவனியுங்கள், நான் இங்கே இருக்கிறேன்." என்ற அர்த்தத்தில் வருகிறது.

இதோ - கவனத்துடன் பார் (To see with attention) 

                  - கவனத்துடன் கவனி (To observe with care)

வேதாகமத்தில் பல இடங்களில் 'இதோ' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் ஒவ்வொன்றையும் கவனித்து பார்க்க வேண்டும் என்பதற்காக பல சூழ்நிலைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எபிரேய வார்த்தை - Chazah 

கிரேக்க வார்த்தை  - ide

நாம் சில வேளைகளில் கவனித்து பார்க்க வேண்டிய காரியங்களை மறந்து விடுகிறோம்; தவிர்த்து விடுகிறோம். கவனிக்க வேண்டியவைகளை கவனிக்காமல் விட்டுவிடுவதால் நாம் சிலவற்றை இழந்துவிடுகிறோம். ஆகவே, நாம் சில காரியங்களை கவனிக்க வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். 

நாம் கவனிக்க வேண்டிய "இதோ":

1. அழைப்பின் இதோ:

மத்தேயு:10:16, லூக்கா:10:3 - "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.

இயேசு தமக்கென்று 12 சீஷர்களை தெரிந்து கொண்டு, அவர்களை ஊழியம் செய்யும்படிக்கு அனுப்பினார். தாம் பூமியில் இருக்கும் நாட்களிலே அவர்களை உருவாக்க, தனக்கு பின் இரட்சிப்பின் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி அவர்களை ஊழியம் செய்ய அனுப்பினார்.

 "ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல" - நாம் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, பரிசுத்தப்படுத்தப்பட்டு, பழைய பாவ காரியங்கள் நீக்கப்பட்டு, கழுவப்பட்ட ஆடுகளாக இருக்கிறோம். இப்படிப்பட்டவர்களாகிய நாம் உலகத்தாரோடே இருக்கும்போது, தேவன் நம்மை அழைத்த அழைப்பை மறந்து, கவனிக்காமல் செயல்பட்டால் ஓநாய்களால் காயப்படுத்தப்பட நேரிடும்.

இங்கே இயேசு 12 ஆடுகளை தெரிந்தெடுத்தார். ஓநாய்களுக்குள்ளே அனுப்பினார். ஒவ்வொரு ஆடும் மேய்ப்பனின் குரலுக்கு செவிகொடுத்து, அழைத்த அழைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற பிரயாசப்பட்டன. ஆனால், ஒரு ஆடு தான் அழைக்கப்பட் அழைப்பின் நோக்கத்தை மறந்து ஓநாயினால் வஞ்சிக்கப்பட்டு தன் மேய்ப்பனையே ஓநாய்க்கு காட்டி கொடுத்து, தன் உயிரையும் இழந்து விட்டது. ஓநாயினால் வஞ்சிக்கப்பட்ட அந்த ஆடு - யூதாஸ்காரியோத்து.

"நாம் அழைக்கப்பட்ட அழைப்பின் நோக்கத்தை எப்போதும் மறந்து போகாமல் அதை கவனித்து பார்க்க வேண்டும்."

எபேசியர்:4:1 - "ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,"

- நாம் எல்லா சூழ்நிலைகளிலும் தேவன் நம்மை எதற்காக அழைத்திருக்கிறார் என்பதை நினைவுகூர்ந்து செயல்பட வேண்டும். நாம் அந்த அழைப்பின் குரலுக்கு செவிசாய்த்து அந்த அழைப்புக்கு பாத்திரவான்களாய் நடக்க தேவன் விரும்புகிறார். தேவன் நம்மை அழைத்ததற்கு, தெரிந்து கொண்டதற்கு ஒரு நோக்கம் உண்டு. அந்த நோக்கத்தை அறிந்து, அதை நிறைவேற்ற பிரயாசப்படுவோம். 

2. அர்ப்பணிப்பின் இதோ:

ஏசாயா:6:8 - "பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்."

நாம் முதலாவது அழைப்பை கவனிக்க வேண்டும். இரண்டாவதாக, நமது அர்ப்பணிப்பை கவனிக்க வேண்டும்.

வேதத்தில் பலர் தேவனுடைய குரலுக்கு, அழைப்புக்கு செவிகொடுத்து உடனே அர்ப்பணித்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை ஆசீர்வாதமாக மாறியது.

- இங்கே ஏசாயா தீர்க்கதரிசியின் அர்ப்பணிப்பை பார்க்கிறோம். ஆண்டவரின் ஆத்துமபாரம் நிறைந்த சத்தத்தை கேட்ட உடனே ஏசாயாவினால் தன்னை அர்ப்பணிக்காமல் இருக்க முடியவில்லை. என் ஜனத்திற்கு இரட்சிப்பை அறிவிக்க, பாவத்திலிருந்து விடுவிக்க, சத்தியத்தை அறிவிக்க யாரை நான் அனுப்புவது....யார் என் காரியமாக போவான் என்று ஆண்டவர் ஏக்கத்தோடு கேட்கும் சத்தத்தை ஏசாயாவின் காதில் தொனித்தது. அடுத்த நொடியே சற்றும் யோசிக்காமல் உடனே "இதோ, அடியேன் இருக்கிறேன். என்னை அனுப்பும்" என்று தன்னை அர்ப்பணித்தான். 

ஆதியாகமம்:22:1 - "இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்."

- இங்கே ஆபிரகாமின் அர்ப்பணிப்பை குறித்து பார்க்கிறோம். அவனது அர்ப்பணிப்பு, விசுவாசம், பொறுமை - கர்த்தருக்கு பிடித்திருந்தது. தேவன் எப்போது கூப்பிட்டாலும், உடனே தன்னை அர்ப்பணித்தான். எந்த காரியமானாலும் தேவன் சொன்னால் உடனே தன்னை அர்ப்பணிக்கும் பக்குவம் ஆபிரகாமுக்கு இருந்தது. 

ஆதியாகமம்:46:2 - "அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான்."

ஆபிரகாமின் அர்ப்பணிப்பு அவனது குமாரன் ஈசாக்குக்கும், அவனது பேரன் யாக்கோபுக்கும் இருந்தது. முற்பிதாக்களின் அர்ப்பணிப்பு அவர்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டு வந்தது. 

- கர்த்தர் அழைத்தவுடனே தன் தகப்பனாரையும், தன் இனத்தையும், தன் தேசத்தையும் விட்டு புறப்பட்டு வந்த ஆபிரகாமின் அர்ப்பணிப்பு, பூமி தாங்கக்கூடாத ஆசீர்வாதத்தை தேவனிடமிருந்து பெற்று தந்தது.

- கர்த்தர் தன்னை பலியாக தன் தந்தையிடம் கேட்டிருக்கிறார் என்று அறிந்த போதும், வாய் திறவாமல் அதற்கு கீழ்ப்படிந்த  ஈசாக்கின் அர்ப்பணிப்பு, நூறத்தனையான பலனை கொண்டு வந்தது.

- தன் பிரியமான மனைவியையும், மகனையும் இழந்த போதிலும், தன் ஜனத்தை வழிநடத்தி வந்த யாக்கோபின் அர்ப்பணிப்பு, செத்து போனதாக நினைத்த அவனது குமாரன் யோசேப்பை திரும்ப கொண்டு வந்தது. மட்டுமில்லாமல் பஞ்சகாலத்தில் ஆகாரம் குறைவில்லாமல் கிடைத்தது.

1 சாமுவேல்: 3:10 - "அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான்."

- சிறு வயது முதல் தேவனுடைய ஆலயத்தில் பணிவிடை செய்து கொண்டிருந்த சாமுவேலை கர்த்தர் அழைத்தார். கர்த்தருடைய அழைப்புக்கு சாமுவேல் தன்னை அர்ப்பணித்தான். அர்ப்பணித்தவுடன், கர்த்தர் அவனுக்கு மறைவான காரியங்களை வெளிப்படுத்தினார். தாண் முதல் பெயர்செபா வரை அவனது பெயரை தேவன் பெருமைப்படுத்தினார். இஸ்ரவேல் நாட்டின் ராஜாக்களை தெரிந்தெடுத்து அபிஷேகம் செய்யும் சிலாக்கியத்தை சாமுவேலுக்கு தேவன் கொடுத்தார். இதற்கு காரணம் - சாமுவேலின் அர்ப்பணிப்பு. "சொல்லும்; அடியேன் கேட்கிறேன்"; சிறுவயதில் மாத்திரமல்ல;  ஒவ்வொரு காரியத்திலும் தேவன் சொல்வதையே சாமுவேல் கேட்டு அதின்படி செய்தார்.

லூக்கா:1:38 - "அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான்.

- தான் கன்னி பெண்ணாக இருக்கையில் திருமணமாகாமலே தான் கருவுற போகிறோம் என்பதை அறிந்தும், இது தேவனால் உண்டானது; மனுக்குலத்தை இரட்சிக்க போகும் கிறஸ்து பிறப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது என்று தன்னை உடனே அர்ப்பணித்தாள்.

இன்னும் வேதத்தில் ஆண்டவருடைய அழைப்புக்கு, நோக்கத்திற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள் உண்டு. நாம் ஒவ்வொரு காரியங்களிலும், தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்து, அர்ப்பணித்து நடக்கும்போது அவரே எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். கர்த்தர் நமது வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டுமென்றால், நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு அர்ப்பணிக்க வேண்டும். நீர் சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்ற அர்ப்பணிப்பின் வார்த்தையை நாம் மறவாமல் நினைவுகூர வேண்டும். 

இந்த இரண்டு காரியங்களே நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான "இதோ". தேவன் நம்மை எதற்காக அழைத்தார், அழைப்பின் நோக்கம் என்ன என்பதை எப்போதும் கவனத்தில் வைக்க வேண்டும். ஒருபோதும், அழைப்பின் நோக்கத்தை விட்டு பின்வாங்கி செல்ல கூடாது. தேவன் நம்மை அழைத்தவுடனே, அதற்கு அர்ப்பணிப்பது மிக அவசியம். நமது அர்ப்பணிப்பு எப்படிப்பட்டது என்பதை கவனிக்க வேண்டும். 

தேவன் நமக்கு சொல்லும் இதோ!

1. புதிதாக்குதலின் இதோ:

வெளி:21:5 - "சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்."

நாம் கவனிக்க வேண்டிய அந்த 2 காரியங்களையும் கவனித்து, தேவனுக்கு பிரியமாக நடக்கும்போது, கர்த்தர் நம்மில் சகலத்தையும் புதிதாக்குகிறார். 

ஏசாயா:41:15 - "இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்."

இதுவரை நாம் மழுங்கி போய், துரு பிடித்து, தூசி படிந்து உபயோகப்படாத ஒரு பொருளைப்போல இருந்திருக்கலாம். ஆனால், கர்த்தரின் அழைப்பை ஏற்று, அர்ப்பணிக்கும்போது நம்மை தூசி தட்டி, புதிதாக, கூர்மையாக மாற்றி, திரும்பவும் உபயோகப்படும் யந்திரமாக மாற்றுகிறார். இதுவரை தடைகளை கண்டு பயந்த நாம், இப்போது தேவன் நம்மை புதிதாக்கினதினால், எல்லா தடைகளையும் தாண்டி பெரிய மலைகளானாலும், குன்றுகளானாலும் தேவபெலத்தை கொண்டு மேற்கொள்ள முடியும்.

ஏசாயா:43:19 - "இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்."

கர்த்தர் நம்முடைய வாழ்க்கையில் புதிய காரியத்தையே செய்ய விரும்புகிறார். ஆனால், நாம் சில வேளையில், சில காரணங்களால் நம்மிடத்தில் இருக்கிற பழைய காரியங்கள் தான் வேண்டும் என்று தேவன் தரவிருக்கும் புதிய காரியத்தை பெற்றுக்கொள்ள நாமே தடையாக நிற்கிறோம். நாம் தேவனுடைய வார்த்தைக்கு அர்ப்பணிக்கும் அந்நேரமே தேவன் தர விரும்பும் புதிய காரியம் நமக்குள்ளே கிரியை செய்ய  தொடங்கும். அவர் இல்லாததை இருக்கிறவைகள் போல் அழைக்கின்றவர்; முடியாததில் தான் காரியத்தை செய்து முடிப்பவர். நம்மால் முடியாது என்று நினைத்து நாம் நிறுத்தி வைக்கும் காரியத்திலிருந்து, தேவன் புதிய காரியத்தை செய்ய தொடங்குவார். 

ஏசாயா:48:6 - "இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்."

ஆபிரகாம் அர்ப்பணித்தான்; சோதோம் பட்டணத்தின் அழிவை குறித்து தேவன் அவனிடம் தெரிவித்தார். சாமுவேல் அர்ப்பணித்தான்; ஏலியின் குடும்பத்தாரை பற்றி தேவன் அவனிடம் தெரிவித்தார். தானியேல் அர்ப்பணித்தான்; வரப்போகும் காரியங்களை குறித்த மறைபொருள்களை தேவன் தெரிவித்தார். யோவான் அர்ப்பணித்தான்; தன்னுடைய இரண்டாம் வருகையை குறித்த காரியங்களை தேவன் தெரிவித்தார். 

ஆம்! நாம் அர்ப்பணிக்கும் போது, தேவன் நமக்கு புதியவைகளையும், அறியாத மறைபொருள்களையும் தெரிவிக்கிறார். 

ஏசாயா:61:4 - "அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க்கட்டுவார்கள்."

அன்று, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களது பாவ, விக்கிரக வாழ்க்கையை விட்டு மனந்திரும்பி தேவனது அழைப்புக்கு திரும்பவும் செவிகொடுத்து, அர்ப்பணிக்கும்போது, தேவன் அவர்களின் பாழான எல்லா பட்டணங்களையும் புதிதாய் கட்ட கிருபை செய்தார். இன்று, தேவன் நமது வாழ்வில் உள்ள பாழானவைகள், இடிந்து போனவைகள், கைவிடப்பட்டவைகள், தோல்வியடைந்த காரியங்கள், நெடுங்காலமாக முடங்கிபோன காரியங்கள் யாவற்றையும் திரும்பவும் எடுப்பித்து புதிதாக கட்டுவார். 

2. ஆசீர்வதிக்கும் இதோ:

  • அதிசயத்தை செய்வார்:

யாத்திராகமம்:34:10 - "அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும்கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்."

கர்த்தர் நம்மோடு கூட இருந்து, சகல ஜனத்தார் மத்தியிலும் அதிசயமான பயங்கரமான காரியங்களை நம்மூலம் செய்வார். நம்மை மற்றவர்கள் மத்தியில் ஆசீர்வாதமாக வைப்பார்.

  • சத்துருவை ஒப்புக்கொடுப்பார்:

யோசுவா:6:2 - "கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்."

யோசுவா:8:1 - "அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்."

கர்த்தர் நாம் யுத்தம் செய்வதற்கு முன்பே, நமது சத்துருவை நம் கையிலே ஒப்புக்கொடுக்கிறவர். இங்கே யோசுவா, மோசே இல்லாமல் யுத்தத்தை சந்திக்க கலக்கமடைந்திருக்கும்போது, கர்த்தர் அவனை திடப்படுத்தி சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் என்று கூறுகிறதை பார்க்கிறோம். நம் சத்துருவின் பலம் அதிகமாக இருக்கலாம். ஆனால், அவனை விட பலமிக்க கர்த்தர் நம்மோடு இருக்கிறார். நாம் எழுந்து போனால் போதும். சத்துருவை கர்த்தர் ஒப்புக்கொடுப்பார். ஏனென்றால், யுத்தம் கர்த்தருடையது.

  • நிந்தையை மாற்றுகிறார்:
யோவேல்:2:19 - "கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதில் திருப்தியாவீர்கள்."

நாம் அனுபவித்து வந்த அவமானங்கள், நிந்தையான பேச்சுகள் யாவற்றையும் கர்த்தர் மாற்றி, செழிப்பான ஆசீர்வாதத்தினால் நம்மை திருப்தியாக்குகிறார். 

3. கூடவே இருப்பதை உறுதிசெய்யும் இதோ:

சகரியா:2:10 - "சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்."

கர்த்தர் நம் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று உறுதி கொடுக்கிறார். ஆகவே நாம் எதைக்கண்டும் கலங்காமல் சந்தோஷமாக கெம்பீரித்துப் பாடுவோம்.

மத்தேயு:28:20 - "நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்."

உலகத்தின் முடிவு வரை நம்மோடு கூட என்றென்றும் இருக்கிறேன் என்று இயேசு உறுதி செய்திருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருப்பது போல, நாமும் தேவனுடன் எப்போதும் நெருங்கி ஜீவிப்பவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். அவர் கட்டளையிட்ட யாவற்றையும் நாம் கைக்கொள்ள வேண்டும். அதை மற்றவர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

வெளி:21:3 - "மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்."

பரலோகத்தில் இருக்கும் நம்முடைய தேவன், அங்கேயிருப்பதைக் காட்டிலும் நம் மத்தியில் வாசம் செய்வதையே அவர் பெரிதும் விரும்புகிறார். நம்மோடு எப்போதும் இருக்கிறார்.

நாம் கர்த்தருடைய அழைப்புக்கு செவிகொடுத்து, பாத்திரவான்களாக நடந்து, அர்ப்பணிக்கும்போது,  கர்த்தர் நம்மை புதிதாக்குவார்; ஆசீர்வதிப்பார்; எப்போதும் நம்மோடு கூட இருப்பார். 

ஆமென்!