ஜூலை 01, 2018

தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள்

Image result for 1sam:16 Ch

தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள்

திறவுகோல்வசனம்: அப்: 13:34 – “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன்”
           
ஏசா: 55:3 – “உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்”

பழைய ஏற்பாடு நியாயப்பிரமாணக்காலம். கிரியைகளினால் நீதிமானாகினார்கள். புதிய ஏற்பாட்டில் கிரியைகளினாலல்ல; விசுவாசத்தினால் நீதிமானாகிறார்கள்.

 தாவீது பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாழ்ந்தாலும் அவன் புதிய ஏற்பாட்டுக்கு முன்னடையாளமானவன் 

எப்படி?


ஏசா: 55:3 – “… தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” என்று வேதம் சொல்கிறது. நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதல் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறியது.

எனவே, நியாயப்பிரமாணம் கிறிஸ்து இயேசுவில் நிறைவேறினபடியால், நிறைவேறி முடிந்தபடியால் அது நித்திய உடன்படிக்கை அல்ல. நித்திய உடன்படிக்கை என்பது குறுகிய காலத்தை உடையதல்ல. அது இம்மைக்கும் மறுமைக்குமானவைகள்.

ஏசாயா தீர்க்கன் சொல்லும்போது “நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்” என்கிறார். “ஏற்படுத்துவேன்” என்ற சொல் “இப்போதல்ல… இனிமேல்” என்கிற எதிர்காலத்தைக் குறிக்கிறது. எனவே, இது ஒரு தீர்க்கதரிசன வார்த்தை.

எப்போது ஏற்படுத்துவார்?  

 புதிய உடன்படிக்கையில்.

எப்போது புது உடன்படிக்கை ஏற்படுத்தப்படும்?

மேசியா இயேசு கிறிஸ்து மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தது முதல் புது உடன்படிக்கையின் காலம் துவங்குகிறது.

எபி: 10:16 – “அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன்”.

 அதாவது, பழைய ஏற்பாட்டுப் பிரமாணத்தை நிறைவேற்றி முடித்து, புதிய ஏற்பாட்டுப் பிரமாணத்தை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்கிறார்.

பழைய ஏற்பாட்டுப் பிரமாணம்:

கண்ணுக்குகண்; பல்லுக்குப்பல் – கல்லான இருதயம் – தேவையின் அடிப்படையில் ஆவியானவர் அருளப்பட்டார். 
                                                         
புதிய ஏற்பாட்டுப் பிரமாணம்: 

கிருபையின் பிரமாணம் (இரக்கத்தின் பிரமாணம்) – சதையான இருதயம் – நிரந்தரமான, நிலைவரமான ஆவியானவராக அருளப்பட்டார்.

எனவே, இதைக்குறித்து எசேக்கியேல் தீர்க்கன் முன்குறித்து சொன்னதாவது:

எசேக்: 36:26,27 – “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும் பண்ணுவேன்.”

எபே: 4:23,24 – “உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.” என வேதம் கூறுகிறபடியினால்… புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் – புதிதான ஆவியுள்ளவர்களாக மாறி, மெய்யான தேவநீதியிலும், பரிசுத்தத்திலும் வாஞ்சையுள்ளவர்களாக தங்களை மறுரூபப்படுத்திக் கொண்ட புது சிருஷ்டியாக, புதிதான மனுஷனாக மாற்றிக் கொள்ளுகிறார்கள்.

இந்த புதிதான ஆவி, புதிய மனுஷனாக மாறியவர்களை தேவனுடைய திவ்விய சுபாவங்களுக்கு ஏதுவாக நடத்திச் செல்கிறார். ஒவ்வொரு கர்த்தருடைய பிள்ளையும் தேவனுடைய திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு (2பேது: 1:4), பரிசுத்தாவியானவர் நமக்கு ஆவியின் கனிகளைத் (கலா: 5:22,23) தரவும், தேவனுடைய திவ்விய சுபாவத்தில் நடத்தவும் (1பேது: 1:5-7) நமக்கு போதிக்கிறார். அதில் நிலைத்திருக்க கிருபைகள் தேவை.

நல்ல நல்ல குணங்கள் மனிதனிடம் காணப்படலாம். ஆனால், கிருபைகள் இல்லாவிடில், மனுஷன் வேஷமாகவே திரிவான் (சங்: 39:6). தனது சுயநலத்திற்காக தன்னை நல்ல குணமுள்ள மனிதனாக, மற்றும் குணசாலியாக காண்பிப்பான். அவன் எதிர்பார்த்த தேவை பூர்த்தியானதும், அவனது மற்றொரு முகத்தை, குணத்தை காண்பிப்பான். ஒருவனது கிருபையற்ற குணநலன்கள் வெளியாக நாட்கள் செல்லும்.

தேவனற்ற, இரட்சிப்பற்ற ஒருவனுக்கு – புதிய ஆவி, புதிய மனுஷன் என்கிற ஆவிக்குரிய அனுபவம் அவனிடத்தில் இராது.

உறுதியளிக்கப்பட்ட கிருபைகள் இரட்சிக்கப்பட்ட தேவபிள்ளைக்கு எப்போதும் உண்டு. அது அவனை ஆவிக்குரிய வாழ்வில் திசைமாறிப் பயணப்பட்டு விடாமல் பாதுகாப்பதற்காக தேவனாகிய கர்த்தர் நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துகிறார். (ஏசா: 54:10).

ஒருவேளை திசைமாறினாலும்… புது உடன்படிக்கையாகிய நித்திய உடன்படிக்கையினிமித்தம் மீண்டும் மீண்டும் தன்னிடமாய் அவர் இழுத்துக் கொள்வார். இதைத்தான், “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள்” என்று வேதம் குறிப்பிடுகிறது.

ஆவியின் கனிகளோ, திவ்விய சுபாவங்களோ இரா விட்டால் … நியாயப்பிரமாண காலத்தைப்போல கல்லான இருதயங்கொண்டவர்களைப்போலக் காணப்படுவோம்.  நாம் அதற்காக அழைக்கப்படவில்லை. நாம் அப்படி இருப்போமானால் இருதயக்கடினம் கொண்டவர்கள் என வேதம் கூறுகிறது. (மத்: 19:8 / மாற்: 10:5 / 3:5).

சதையான இருதயம் கொண்ட புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஆவியின் கனிகள் உடையவராய், திவ்விய சுபாவங்கள் நிறைந்தவராய் காணப்பட வேண்டியது அவசியம். இவை இன்று அநேகரிடத்தில் இல்லாததினால்தான் கர்த்தருடைய நாமம் அப்படிப்பட்டவர்களால் பரிசுத்த குலைச்சாலாகிறது. சாட்சியில்லாமல் போகிறது.

தாவீது பழைய ஏற்பாட்டைச் சேர்ந்தவனாயிருந்தாலும், புதிய ஏற்பாட்டுக்கு எதனால்? எப்படி முன்னடையாளமானவனாய் இருக்க முடியும்? காரணம் என்ன?

தாவீது பழைய ஏற்பாட்டைச் சேர்ந்தவனாயிருந்தாலும் … அவனது தனிப்பட்ட வாழ்வில், கர்த்தருக்கு முன்பாக புதிய ஏற்பாட்டு விசுவாசிக்கு காணப்பட வேண்டிய திவ்விய சுபாவங்களும், கனி நிறைந்த வாழ்வும் அவனிடத்தில் காணப்பட்டது. நியாயப் பிரமாணத்தின்படி அவனது இருதயமானது, கடினத்தன்மை கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் மாறாக இரக்கம் நிறைந்ததாக காணப்பட்டது.

சங்: 40:8 – “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்”

சங்: 51:16, – “பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.” – இது பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணம்.

சங்: 51:17 – “தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.” – இது புதிய ஏற்பாட்டு கிருபையின் பிரமாணம்.

பழைய ஏற்பாட்டு காலத்தில் ஒரு மனிதனுடைய பாவத்தை நிவர்த்தி செய்ய பலிகள் போதுமானவைகளாக இருந்தது. அதை ஒருவன் நிறைவேற்றி விட்டால் போதும் என கருதினார்கள். ஆனால், அது பூரணமில்லை என கண்டறிந்தவன் தாவீது மட்டுமே. அதற்கு கிருபைகள் வேண்டும். பலி செலுத்தி நிவர்த்தி செய்து விட்டால் மனதில் அதற்குப் பின்பு பூரண சமாதானம் ஏற்ப்பட வேண்டுமே. ஆனால், அதற்கான மார்க்கமில்லையே. மனது வாதிக்கிறதே. அப்படியானால்… பலிகளில் ஏதோ குறைபாடுகள் இருக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது. அதற்கு என்ன வழி?

புதிய ஏற்பாட்டில் மனிதனுடைய பாவங்களை நிவர்த்தி செய்ய இயேசு கிறிஸ்துவின் கிருபாதாராபலியே போதுமானது (1யோவா: 1:9 / 2:2 / 4:10).

கிருபை நம்மில் என்ன செய்கிறது?

பாவ உணர்வடைந்து, அதை அறிக்கையிட இயேசு கிறிஸ்துவினிடம் நம்மை உந்தித் தள்ளுகிறது. மனதார அறிக்கையிட்டு ஜெபிக்க ஏவுகிறது. பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொள்ள தூண்டி விடுகிறது. பாவமன்னிப்பின் நிச்சயத்தை பெற்றவர்கள், இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டப்பின், இப்போது சுத்த மனசாட்சி உள்ளவர்களாய் மாறிவிடுகிறார்கள். குற்ற மனசாட்சி இப்பொழுது அவர்களை வாதிப்பதில்லை. பலிகளால் பூரணப்படாத ஒன்றை இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் பூரணப்படுத்துகிறது.

தாவீதின் வாழ்வை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால் … அவனிடத்தில் காணப்படுகிற ஒவ்வொரு சுபாவமும், நடவடிக்கைகளும், புதிய ஏற்பாட்டு விசுவாச ஜீவியமே அதிகம் காணப்படுகிறதை அறியலாம். தாவீதின் வாழ்வை தியானித்தால் அவனது கனிநிறைந்த வாழ்வை, திவ்விய சுபாவங் கொண்ட குணம் நமக்கு வெளிப்படும். இதனாலேயே தாவீதை நாம் “புதிய ஏற்பாட்டு விசுவாச ஜீவியத்திற்கு முன்னடையாளமானவன்” என்கிறோம்.

தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகள் – கனிகளும், திவ்விய சுபாவங்களுமே. அதை நாம் ஏன் தியானிக்க வேண்டும்? பழைய ஏற்பாட்டு யூதர்களுக்கு அடையாளமே – அவர்களுடைய கடின இருதயம்தான். நியாயப்பிரமாணத்தை கைக்கொண்ட அவர்கள் இரக்கத்தை விட்டு விட்டார்கள் என்று நமதாண்டவர் இயேசு கிறிஸ்து அவர்களை கடிந்து கொண்டாரே!  (மத்: 9:13 / 12:7 / 23:23)

 நியாயப்பிரமாண காலத்தில் வாழ்ந்த தாவீது –  நியாயப்பிரமானத்தின்படி  கடினமாக வாழாமல் புதிய ஏற்பாட்டு பரிசுத்தவானைப்போல வாழ்ந்தது எவ்வளவு ஆச்சர்யம்!

தாவீது திவ்விய சுபாவமுள்ளவனாய் வாழ வாழ தேவனாகிய கர்த்தர் அவனை எவ்வளவாய் மகிமைப்படுத்துகிறார் என்பதை கீழ்க்கண்ட காரியங்களை வாசித்துப் பாருங்கள். ஆச்சர்யப்படுவீர்கள். தாவீது கர்த்தரை மகிமைப்படுத்துகிறபடி வாழ்ந்தான். அவனை கர்த்தர் மகிமைப்படுத்துகிறதை கீழே வாசிக்கலாம்.

1. என் தாசனாகிய தாவீது (2சாமு: 3:18)
2. தாவீதின் நகரம் (2சாமு: 5:7)
3. தாவீதின் வீடு (2சாமு: 7:26)
4. தாவீது இஸ்ரவேலின் விளக்கு (2சாமு: 21:17)
5. தாவீதின் சிங்காசனம் (1ராஜா: 2:45)
6. தாவீதின் ஸ்தானம் (1ராஜா: 3:7)
7. தாவீதின் சத்துருக்களை கீழ்ப்படுத்துகிறவர் (1ராஜா: 5:3)
8. தாவீதின் சந்ததி (1ராஜா: 11:39)
9. தாவீதின் வம்சம் (1ராஜா: 12:20)
10. தாவீதின் இருதயம் (1ராஜா: 15:3)
11. தாவீதின் பட்டணம் (2ராஜா: 15:38)
12. என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் (2ராஜா: 19:34)
13. தாவீவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் (2ராஜா: 20:5)
14. தாவீதின் வழி (2ராஜா: 22:2)
15. தாவீதின் நாட்கள் (1நாளா: 7:2)
16. தாவீதின் கீர்த்தி (1நாளா: 14:17)
17. தாவீதின் கோபுரம் (உன்.பாட்: 4:4)
18. தாவீதின் கூடாரம் (ஏசா: 16:5)
19. தாவீதின் குமாரனே (மத்: 9:27)
20. தாவீதின் ராஜ்யம் (மாற்: 11:10)
21. தாவீதின் ஊர் (லூக்: 2:5)
22. தாவீதின் வாக்கு (அப்: 1:16)
23. தாவீதின் சங்கீதம் (எபி: 4:7)
24. தாவீதின் திறவுகோல் உடையவர் (வெளி: 3:7)
25. தாவீதின் வேரூமானவர் (வெளி: 5:5)
26. இருதயத்திற்கேற்ற மேய்ப்பன் (1சாமு:13:14)

 மேற்கண்ட  காரியங்கள் வேதத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட இடங்களில் திரும்பத்திரும்ப குறிப்பிடப்படுகிறதை நாம் காணும்போது, தேவன் அவன் மேல் எவ்வளவு பிரியமாயிருந்தார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

வேதத்தில் உள்ள பரிசுத்தவான்கள் ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு அந்தஸ்தை தேவன் கொடுத்திருப்பதை வாசிக்கிறோம்.

மோசே - கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன்;
ஆபிரகாம் - கர்த்தருடைய சிநேகிதன்;
யோசுவா - ஆசரிப்புக் கூடாரத்தை விட்டு நீங்காத வாலிபன்;
யோபு - என் தாசன்;
தானியேல் - பிரியமானவன் என மகிமைப்படுத்துகிறதை பார்க்கிறோம்.

ஆனால், தாவீதுக்கு மட்டுமே 26  அந்தஸ்தை கொடுக்கிறதைக் காண்கிறோம்.

சங்: 103:21 – “கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.” அவருக்குப் பிரியமானதை நாம் செய்தால், தாவீதை இவ்விதமாய் மகிமைப்படுத்தின கர்த்தர் நம்மையும் மகிமைப்படுத்த வல்லவராயிருக்கிறார்.

ஒவ்வொரு ஜீவராசியும் அதனதன் மரபு வழிப்படிதான் அதனதனுடைய சுபாவப்படி வாழ்ந்து வருகிறது. மனிதர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படியிருக்க… தாவீது தன்னை அழைத்து தெரிந்தெடுத்த தேவனுக்கு ஏற்றபடி வாழ்ந்தது எப்படி? எப்படி அவனால் மட்டும் முடிந்தது? அவனுக்கு கிடைத்த கிருபைகள் இன்று நமக்கும் கிடைத்தால் நாமும் கர்த்தருக்கு சாட்சியாக வாழலாம் அல்லவா?

அப்: 13:34 – “தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன்” என்று வாக்குப் பண்ணியுள்ள தேவன் வாக்கு மாறாதவர். அந்த கிருபைகளை பெற்றுக் கொள்ள, தாவீதிடம் இருந்த திவ்விய சுபாவங்களைக் குறித்து நாம் தியானித்து பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம் வாருங்கள்.

சங்: 143:10 – “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.” தாவீதை நடத்திச் சென்ற நல்ல ஆவியானவர், இப்போதே நம் ஒவ்வொருவரையும் செம்மையான சத்தியத்திற்குள் வழி நடத்திச் செல்வாராக! ஆமென்!

தாவீதின் வாழ்வில் திவ்விய சுபாவங்கள்


தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கருளின நிச்சயமான கிருபைகள் – “திவ்விய சுபாவங்களே”

1. தாவீது – அபிஷேகம் பெற்றவன் 


1சாமு: 16:3 - “… நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார்”

1சாமு: 16:13 – “அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள் முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்

தாவீதின் ஆரம்ப அறிமுகமே அபிஷேகம்தான். ஆடுகள் மேய்த்தவனைக் கர்த்தர் அழைத்து அபிஷேகிக்கிறார். தாவீதுக்கு எடுத்த எடுப்பிலேயே பெந்தேகொஸ்தே அனுபவம்தான். அபிஷேகம் சகல நுகங்களையும் முறிக்கும்; அபிஷேகம் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தும். ஆமென்! அல்லேலூயா!.

ஆடுகள் மேய்த்த ஒருவனை தேவன் அழைத்து அபிஷேகிக்கிறார் என்றால் … தேவனுடைய பார்வையில் அவன் எவ்வளவு தகுதியுள்ளவனாக இருந்திருக்க வேண்டும்?!

 ஒரு நாட்டை ஆள ஒரு அபிஷேகம் தேவை. ஒரு சபையை நடத்திச் செல்ல ஒரு அபிஷேகம் தேவை. ஒரு குடும்பத்தை நடத்திச் செல்ல ஒரு அபிஷேகம் தேவை.

அபிஷேகம் பெறாத தலைவனால் மோசமான நிர்வாகத்தையே ஜனங்களுக்கு கொடுக்க முடியும். அபிஷேகம் பெறாத சபை தலைவரால் சரியான சத்தியத்தை தேவஜனத்திற்கு கொடுக்க இயலாது. அபிஷேகம் பெறாத குடும்ப தலைவரால் குடும்பத்தை ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக கொண்டு செல்ல இயலாது.

தாவீதை தேவன் தெரிந்தெடுத்து அழைத்த அழைப்பிலேயே முதன் முதலாக அபிஷேகத்தை ஊற்றியே துவக்குகிறதைக் காண்கிறோம். அபிஷேகத்தை போதிக்காத தலைவர்கள், அபிஷேகத்தின் வல்லமையை அறியாதவர்கள். அறியாமை இருளுக்குள் இருந்து கொண்டு, அபிஷேகத்தை ஏளனம் செய்வார்கள். அப்படிப்பட்டவர்கள் உலக ஞானிகளைப்போல, கல்விமான்கள் போல பகுத்தறிவினால் பரிசுத்தாவியானவரை மதிப்பிடுவார்கள். அப்படிப்பட்ட பகுத்தறிவினால் அவரை அறியவோ, பெறவோ இயலாது. விசுவாசத்தினால்தான் அவரை அறிய இயலும். பெற முடியும்.

தாவீது இஸ்ரவேலை ஆள்வதற்காகத்தான் இராஜ அபிஷேகம் பெற்றார்; நீங்கள் சொல்கிறபடி அந்த அபிஷேகத்தைப் பெறவில்லை என சொல்லும் பகுத்தறிவாளர்களே! கொஞ்சம் செவிகொடுத்துச் சேருங்கள். அபிஷேகம் என்றாலே அது பரிசுத்தாவியானவரிடமிருந்து பெறப்படுவதுதான். உலகில் தேவசித்தம் செய்யப்படுவதற்கு, தேவன் தேவ ஜனத்தைக் கொண்டு ஆளுகை செய்வதற்கும், குறிப்பிட்ட பரிசுத்தவான்களை குறிப்பிட்ட நோக்கத்திற்காக அபிஷேகிக்கிறார். விசுவாசிக்க மனதாயிருந்தால் விசுவாசியுங்கள். (ஏசா: 28:10-12)

தாவீது சமஸ்த இஸ்ரவேலை சமாதானமாக நாற்பது ஆண்டு காலம் வழி நடத்திச் செல்ல முடிந்தது என்றால் … அதற்கு அவன் பெற்றுக் கொண்ட அபிஷேகமே முதல் காரணம். ஜீவனுள்ள நாளெல்லாம் உன் வாழ்வில் சாமாதானத்தைக் காண வேண்டுமானால் … இன்றே … இப்பொழுதே … அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் தொழிலில் உள்ள கட்டுகள், நுகங்கள் உங்கள் முன்னேற்றத்தை தடை செய்கிறதா? அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டு நுகங்களை முறித்திடுங்கள். அழையுங்கள் உங்கள் ஆவிக்குரிய போதகரை. கட்டுகள் உடைக்கப்பட தொழிற் கூடங்களில், உங்கள் தனி அலுவலகத்தில் ஒருநாள் உபவாசத்தோடு அபிஷேகக் கூட்டத்தை நடத்தும்படி பணியுங்கள். அப்போது அபிஷேகம் இறங்கும் நுகங்கள் முறியும். மேன்மையையும், வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.

திவ்விய சுபாவங்களில் ஒன்று அபிஷேகம் பெற்றவனாயிருப்பது.

2. தாவீது – சாட்சியுள்ளவன்: 


1சாமு: 16:18 – “… கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார்” – தாவீதைப் பற்றி சவுலின் வேலைக்காரனுடைய சாட்சி.

மத்: 5:15 – “விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.”

லூக்: 8:16 – “ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்”

மத்: 5:14 – “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.”

1தீமோ: 5:25 – “சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்;”

தாவீதை அபிஷேகித்த தேவன் அவனை மரக்காலால் மூடி வைப்பாரோ?!

 அப்: 1:8 – “பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”

அபிஷேகம் நம்மை சாட்சியாக நிறுத்தும். அந்த சாட்சி அநேகருக்கு வெளிப்படும். எப்படி?

1. வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் (மத்: 5:15)
2. உள்ளே பிரவேசிக்கிறவர்களுக்கு வெளிச்சம் (லூக்: 8:16)
3. உலகத்துக்கே வெளிச்சம் (மத்: 5:14)
4. மலையின் மேல் இருக்கிற பட்டணம் (மத்: 5:14)
5. நற்கிரியைகள் வெளியரங்கமாயிருக்கும் (1தீமோ: 5:25)

தாவீது உடன் தேவனாகிய கர்த்தர் கூட இருக்கிறார் என்பது வேலைக்காரனுக்கு எப்படி தெரியும்?

1சாமு: 16:18 – “அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.”

கண்ணால் கண்டிருக்கிறேன் என சாட்சியிடுகிறான். என்னத்தைக் கண்டான்?

1. வாசிப்பதில் தேறினவன்
2. பராக்கிரமசாலி
3. யுத்த வீரன்
4. காரிய சமர்த்தன்
5. சவுந்தரியமுள்ளவன்
6. கர்த்தரை தன்னகத்தே கொண்டவன்

இந்த ஆறு விஷயங்களை தாவீதிடம் இருக்க கண்டிருக்கிறான். தாவீதை தேவன் ஆறுவித தாலந்தினால் நிரப்பியிருப்பதை கண்டிருக்கிறான். அது அவனில் செயல்பட்டவிதத்தையும் அனுபவப்பூர்வமாக கண்டிருக்கிறான். எனவே, சாட்சி கொடுக்கிறான்.

அபிஷேகம் வந்தால் கூடவே வரங்களும், தாலந்துகளும், கனிகளும், திவ்விய சுபாவங்களும் கொடுக்கப்படுகிறதை தாவீதின் வாழ்விலிருந்து நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

நமக்குள் அபிஷேகம் இருந்தால்,,,

  உலகில் யாரோ நம்மை கவனித்துக் கொண்டுதான் இருப்பார்கள். தக்க சமயத்தில் அதின் மகிமையை அவர்கள் மூலமாக வெளிப்படச் செய்வார்.

திவ்விய சுபாவங்களில் ஒன்று சாட்சி வாழ்வைக் காத்துக் கொள்வது.

3. தாவீது – தன் தாலந்துகளை பயன்படுத்துபவன்: 


1சாமு: 16:23 – “… தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; …”

தாவீது எப்போதும் தன்னிடமுள்ள தாலந்துகளை சமயம் வாய்க்கும்போதெல்லாம், தாமதியாமலும்,  தயங்கி நிற்காமலும், தாலந்துகளை உபயோகப்படுத்துகிறவனாயிருந்தான்.

தாவீது மட்டும் தன்னிடமுள்ள தாலந்துகளை செயல்படுத்தாமலிருந்திருந்தால், சவுலின் வேலைக்காரனுக்கு தெரிந்திருந்திருக்க வாய்ப்பில்லை. சவுலிடம் தாவீதை அறிமுகப்படுத்த எவ்வித முகாந்திரமும் வேலைக்காரனுக்கு இல்லாதிருந்திருக்கும்.

தாலந்துகள், வரங்கள் நம்மிடம் இருப்பதை நாம் முதலில் அறிந்திருக்க வேண்டும். அறிந்தபின் அதை உபயோகப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்போது, ஆதாயத்தை எதிர்பாராமல், தயங்கி நின்று விடாமல் செயல்படுத்த வேண்டும். நம்மிடம் இருப்பது என்னவென்று அறியாத உலகம் நமக்கு வாய்ப்புகளை மட்டும் எப்படி கொடுக்க முன் வரும்?

உலக மனிதர்கள், தங்களிடம் உள்ள தாலந்துகளை ஆதாயத்திற்கு ஏற்றவாறு குறைத்தோ, அதிகரித்தோ செயல்படுத்துவார்கள். “காசுக்கேற்ற எள்ளுருண்டை; கையிலே காசு, வாயிலே தோசை” – என்கிற பழமொழிக்கேற்ப தாலந்துகளை ஆதாயத்திற்கேற்றவாறு செயல்படுத்துவார்கள். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமோ… எதைச் செய்தாலும் கிறிஸ்துவின் நாம மகிமைக்கென்று முழுமனதோடு, உண்மையாக செய்ய வேண்டும். ஏற்ற சமயத்தில் நமது உண்மைக்கு ஏற்ற நன்மைகளை பரிசுத்த ஆவியானவர் நமக்கு தருவார்.

மத்: 25:18 – “ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.” – இருக்கிற தாலந்தை புதைக்கிறவர்களாயிராமல்… அதை கர்த்தருக்கென்று பயன்படுத்த வேண்டும்.

 மத்: 25:26 – தாலந்துகளை புதைக்கிறவனை – “பொல்லாதவன், சோம்பலுள்ளவன்” என்று நமது ஆண்டவர் இயேசு கடிந்து கொள்கிறார்.

திவ்விய சுபாவங்களில் ஒன்று தாலந்துகளை பயன்படுத்துதல்.

4. தாவீது – பொறுப்புள்ளவன்:


1சாமு: 17:15 – “தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.”

1சாமு: 17:28 – “அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான்.”

1சாமு: 17:20 – “தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; …”

தாவீது கடமையில் சிறந்தவன்; கடமை தவறாதவன். சவுல் வீட்டில் வேலையில்லை. சவுல் பெலிஸ்தியரிடம் யுத்தத்திற்குப் போய் விட்டான். உடனே தன் தகப்பன் ஆடுகளை மேய்க்க பெத்லகேம் வந்துவிட்டான். விடுமுறை கிடைத்து விட்டதே என்று ஓய்வெடுக்க போய்விடாமல், சோம்பலாக இருந்து விடாமல் ஆடு மேய்க்க போய் விட்டான்.

தாவீதுடைய அண்ணன்மார்களுக்கு எப்படி இராஜாவின் இராணுவத்தில் வேலை பார்த்தார்களோ, அதேபோல, தாவீதும் இராஜாவின் அரமணையில் வேலை பார்த்தான். அரமணையில் வேலை பார்த்த தாவீதுக்கு அகங்காரம் இல்லை. எதனால் அறிகிறோம்? அரமணையில் வேலையில்லை. பழையபடி ஆடு மேய்க்க புறப்பட்டு விட்டான். அரமணையில் இராஜாவுக்கே வேலை பார்ப்பவன் நான்; ஆடு மேய்ப்பதாவது?! என்ற மேட்டிமையோ… அகந்தையோ அவனுக்கில்லை என அறிகிறோம்.

அரமணையில் தாவீது தன் வேலையில் வெற்றியைக் காண்பித்தான். ஆம்! அவன் சுரமண்டலத்தை எடுத்து வாசித்தால் பொல்லாப்புச் செய்கிற ஆவி சவுலை விட்டு நீங்கினது. சவுல் ஆறுதல் அடைந்தான்.

ஆனால், தாவீதின் அண்ணன்மார்களோ… தாங்கள் வேலை பார்த்த இராணுவத்தில் பல நாட்கள் இருந்தும் இராஜாவுக்கு ஒரு வெற்றியும் பெற்றுத்தரவில்லை. வெறுமனே இராணுவத்தில் தண்டச்சம்பளம் வாங்கிக் கொண்டு, நாங்கள் இராணுவத்தினர் என மிடுக்காக சொல்லிக் கொண்டு கையாலாகாதவர்களாய் பல நாட்கள் தோல்வியாளர்களாய் தங்களை விளங்கிப்பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதை அவர்கள் உணராதிருந்தார்கள்.

ஆனால், அபிஷேகம் பெற்றவனோ, பொறுப்புள்ளவனோ வந்த ஒரு நொடியில் சூழ்நிலைகள் அனைத்தையும் கிரகித்து உணர்ந்து கொண்டான். அதுதான் அபிஷேகத்தினுடைய நடத்துதல்.

மத்: 21:28-31 – “ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள்.”

அக்கறை, கரிசனை, பொறுப்பு இல்லாதவன் – தன் சொந்த சரீரத்திற்கும், சொந்த குடும்பத்திற்கும், தன்னைச் சார்ந்த அனைவருக்கும் எவ்வித பிரயோஜனமற்றவனாய் இருப்பான். இப்படிப்பட்டவனால் அநேகருக்கு துன்பமும், வேதனையும், அவமான நிந்தையும் தவிர வோறொன்றும் மிஞ்சாது. இப்படிப்பட்டவர்களை விட்டு விலகுவதே சிறந்தது.

பொறுப்புள்ளவன் – அனைத்திலும் பொறுப்புள்ளவனாயிருப்பான். கொஞ்சத்தில் உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருப்பான். செய்யும் வேலையில், குடும்பத்தில், சபையில், பிறரிடத்தில் உண்மையும் பொறுப்பையும் வெளிப்படுத்துவார்கள்.

 திவ்விய சுபாவங்களில் ஒன்று – பொறுப்புள்ளவனாக இருப்பது.

5. தாவீது – பக்தி வைராக்கியமுள்ளவன்:


1சாமு: 17:26 – “ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான்”

தேவனுடைய சேனைகள், கோலியாத் அளவிற்கு பலசாலிகளாயிராமல் இருக்கலாம்; உயரத்தில் குறைந்தவர்களாயிருக்கலாம்; மனபலம் குறைந்தவர்களாயிருக்கலாம். யுத்தத்திற்கு வந்தாகி விட்டது. யுத்தத்திற்கு அழைக்கலாமே தவிர – கர்த்தருடைய சேனைகளை நிந்திப்பதற்கு எவ்வித முகாந்தரமும் கோலியாத்திற்கு இல்லை. பலசாலியைக் கண்டால் சற்று பயமாகத்தான் இருக்கும். அது மனித பலவீனம். நமது பலவீனத்திலே கர்த்தருடைய பலம் விளங்குமே. அதை கோலியாத் போன்ற விருத்தசேதனமற்றவர்கள் அறிய மாட்டார்களே!

தாவீது, ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளின்மேல் பக்தி வைராக்கியமுள்ளவனாயிருந்தான். நம் தேவனும் அப்படிப்பட்டவரே! அப்: 9:5 – “அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார்.” – தேவஜனத்தின் துன்பம் – தன்னுடைய துன்பம் என கர்த்தராகிய இயேசு சவுலிடம் கூறினார். தேவன் நம்மேல் வைராக்கியம் உள்ளவராயிருக்கிறார்.



தொடரும் ...

ஜூன் 29, 2018

“இரண்டு தூண்கள்”

Image result for Two Pillars

“இரண்டு தூண்கள்”

திறவுகோல் வசனம்: 2 நாளா: 3:15,17 – “ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டுதூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி, … அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்”.

1.   வலது பக்கத்தூண் – யாகீன் (Jachin) – “பெருகுதல்” – ஆங்கிலத்தில் “He Shall Establish”

2.   வலது பக்கத்தூண் – போவாஸ் (Boaz) – “பெலன்”; ஆங்கிலத்தில் “Strength”. இன்னொரு பொருளும் உண்டு: “ஆஸ்தியுள்ளவன்”

இவ்விரு தூண்களின் உயரம்: ஒவ்வொரு தூணும் -  35 முழம் – சுமார் 52.5” அடிகள்

தூண்களின் இருப்பிடம்: ஆலயத்திற்கு முன்பாக (2நாளா: 3:15)
இவ்விரு தூண்களும் ஆலயத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, அவையிரண்டும் எதையும் தாங்கி நிற்கவில்லை. வெறுமனே நிற்க வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு தூண்களின் பொருள் என்ன? 

அதை அறிய வெளிப்படுத்தலுக்குள் கடந்து செல்ல வேண்டும்.

வெளி: 3:12 – ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன்”

எதிலே ஜெயம் பெற வேண்டும்?


1யோவான்: 2:15-17 – உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்”

1யோவான்: 3:8,9 – “பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்”

1. உலகம்  2. மாம்சம்  3. பிசாசு – இம்மூன்றிலே ஜெயம் பெற வேண்டும். இம்மூன்றிலே ஜெயம் பெறுகிறவனை ஆலயத்தில் தூணாக்குவேன் என்கிறார்.

இவ்விரண்டு தூணின் முழுப்பொருள்: “கர்த்தருக்குள் ஜெயங்கொள்ளுகிறவன், பெருகவும் பெலனடையவும் செய்வேன்”  (பெருகுதல் – யாகீன்; பெலன் – போவாஸ்)

இவ்விரண்டு தூண்களைக்குறித்து பல பேர் பலவித கருத்துக்களை சொல்லி வருகின்றனர். ஒருசாரார் இவ்விரண்டு தூண்களும் தாவீது, சாலமோனைக் குறிக்கிறது என்கின்றனர். மறுசாரார் இல்லை… இவ்விரண்டும் உருவகப் பெயர்கள். எனவே, இவை எதையும் யாரையும் குறிப்பிடப்படவில்லை என்கின்றனர். நானோ … இவையிரண்டையும் மறுக்கிறேன். 

யார் இந்த யாகீன்? போவாஸ்? எதற்காக இவ்விரு தூண்களுக்கும் இவ்விரண்டு பேரின் பெயர்களும் வைக்கப்பட வேண்டும்? அப்படி இவர்கள் என்ன செய்திருப்பார்கள்? அல்லது சாதித்திருப்பார்கள்? இவைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் சத்தியம் என்ன? என்பதை தியானிப்போம் வாருங்கள்.

Image result for Two Pillars

யாகீன்


  இந்த பெயரில் வேதத்தில் மொத்தம் இரண்டுபேர் இருக்கிறார்கள். அவர்கள்:

1.   ஆதி: 46:10 – சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள்.” – சிமியோனின் நான்காம் குமாரன் இந்த யாகீன். வம்ச அட்டவணைகளில் தொடர்ந்து இவ்விதமாகவே குறிப்பிடப்படுகிறதை நாம் காணலாம். (யாத்: 6:15 / எண்: 26:12 / 1நாளா: 4:24)

2.   நெகே: 11:10 – ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும்” – ஆசாரியனாகிள யாகீன். இவன் சாலமோன் காலத்திற்குப் பிந்தி வந்தவனானபடியால் … இவனது பெயரை இவ்விரு தூண்களில் ஒன்றிற்கு வைக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.

எனவே, முதல் குறிப்பில் உள்ள சிமியோனின் நன்காவது குமரான் யாகீனை நாம் எடுத்துக் கொள்கிறோம். வலதுபக்க தூணிற்கு இந்த யாகீனின் பெயரையே வைக்கும்படி சாலமோனிடம் தேவன் சொலல்லியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.

ஆலயத்தில் தூணாக இருப்பதற்கு தகுதி

உலகம், மாமிசம், பிசாசை ஜெயிக்கிறவன், ஜெயங்கொள்ளுகிறவன் தகுதி பெறுகிறான். ஒரு பரிசுத்தவான் இம்மூன்றையும் ஜெயித்தவனாய் இருக்க வேண்டும். யாகீன் இந்த மூன்றிலும் ஜெயம் பெற்றிருந்தவனாக இருந்திருக்க வேண்டும்.

யாகீனுடைய கிரியைகள் பற்றிய விபரம், வாழ்க்கைமுறை, சம்பவங்கள் என எதுவும் எழுதப்படவில்லை. ஆகிலும், அவன் ஜெயம் பெறாமல், அவன் பெயரை இருதூண்களில் ஒன்றிற்கு வைக்க தேவன் அனுமதியார். ஏதோ ஒரு தேவநோக்கத்திற்காக, தேவனாகிய கர்த்தர் அதை மறைபொருளாக வைத்துள்ளார்.

தேவன் வேதத்தில் பல காரியங்களை மறைபொருளாக வைத்துள்ளார். உதாரணமாக, மோசேயினுடைய சரீர அடக்கம். அதுபோல இதுவும் ஒன்று. தேவ சித்தமின்றி, தேவ அனுமதியின்றி, தேவனுடைய சிபாரிசு இல்லாமல், ஆவியின் ஏவுதல் இல்லாமல் சாலமோன் யாகீன் பெயரை தூணுக்கு வைத்திருக்கமாட்டார் என்பது தெளிவு.

யாகீன் பற்றி நமக்கு விபரம் தெரிவிக்கப்படவில்லை என்பதினால் … அவன் யாதொரு கிரியையும், ஜெயமும் எடுக்கவில்லை என அர்த்தமாகாது. தேவனுக்கு அவனைப் பற்றி தெரியும். அவனவன் செய்யும் கிரியை அவரோடுகூட வருகிறது. நமக்கு தெரியாவிட்டால் அது பொய்த்து விடாது. யாகீன் ஜெயம் பெற்றவன். தேவனாகிய கர்த்தர் சாலமோனுக்கு வெளிப்படுத்தியிருக்கலாம். வெளிப்படுத்தாமலும் இருக்கலாம். அது அவருடைய விருப்பம். ஆனால், தேவன் சாலமோனுக்குச் சொன்னதை அவன் செய்து முடித்தான். எனவே, ஆதி:46:10 – ல் உள்ள யாகீன் பெயரை வலதுபுற தூணிற்கு இட்டான்.

போவாஸ் (Boaz


போவாஸ் என்றால் ‘பெலன்’ (அல்லது) ‘ஆஸ்தியுள்ளவன்’. (ரூத்:2:1)

போவாஸ் – ரூத்  ® ஓபேத்தை பெற்றார்கள். (ரூத்:4:17

ஓபேத் ® ஈசாயை பெற்றான்.(ரூத்:4:17) 

ஈசாய் ® தாவீதைப் பெற்றான்.(ரூத்:4:22)

தாவீதின் வம்சத்தில் இயேசு கிறிஸ்து பிறந்தார்.

மேசியா – இயேசு கிறிஸ்துவின் மீட்பின் திட்டத்தில் ஜெயம் பெற்றவன் “போவாஸ்”


ரூத்:4:6 – ரூத்தின் சுதந்தரவாளி மீட்கவேண்டியதை மீட்கமாட்டேன் என்று மறுத்துவிட்டான்.

ரூத்:4:9,10 – மீட்கவேண்டியதை முறைப்படி மீட்டுக்கொண்டு, மேசியா இவ்வுலகில் வெளிப்பட, மீட்பின் திட்டம் செயல்பட தன்னை தேவசித்தமும், தேவ திட்டம் செயல்பட அர்ப்பணித்துக் கொண்டான்.

தேவசந்ததி அற்றுப்போகாதபடிக்கு, தேவனுடைய மீட்பின் திட்டம் பூமியில் செயல்பட, சுதந்தரவாளியை ஜெயித்தான். தேவசந்ததி அற்றுப்போகும்படிக்கு, சாத்தான் சுதந்தரவாளியைக் கொண்டு, ரூத்தின் மூலம் இவ்வுலகில் நகோமிக்கு சந்ததி தழையாதபடி தடுக்கப் பார்த்தான். ஆனால் போவாஸ் அதை ஜெயித்தான்.

இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வரும் மீட்பின் திட்டம் வெற்றி பெற வழி செய்தான். வம்ச அட்டவணைக்கு வழி வகுத்தான். பிசாசின் சதி திட்டத்தை அழித்தான். எனவே ஆலயத்தில் இடதுப்புற தூணிற்கு போவாசின் பெயர் சூட்டப்படும்படி கர்த்தர் உதவினார்.
  
ஒருசிலர் இவ்விரண்டு தூண்களும் தாவீது, சாலமோனைக் குறிக்கிறது என்றும் ; அவை உருவகப் பெயர்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். மேற்கண்ட வேத ஆய்வின்படி, யாகின், போவாஸ் என்பது உருவகப் பெயர்கள் அல்ல; யாகின், போவாஸ் இருவரும் ஜெயம் பெற்ற ஜெயவீரர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, இவ்விரண்டு தூண்கள் தாவீது, சாலமோனை குறிப்பிடாது என்பது தெளிவாகிறது.

இவ்விரண்டு தூண்களை ஆலயத்திற்கு முன்னால் எதற்காக வைத்தார்?


v  ஆலயத்திற்க்குள் நுழையும் முன் இவ்விரண்டு தூண்களையும் கடந்துதான் உள்ளே, வெளியே செல்ல முடியும்.

v  உள்ளே நுழையும்போது இடதுபுற யாகீன் தூண்புறமாய் பிரவேசிப்போம். இது எதைக்காட்டுகிறது? தேவனுடைய ஆலயத்திற்குள் யார் எப்போது பிரவேசித்தாலும், பிரவேசிக்கும் எவரும் “பெருக்கம்” அடைவர் என்பதைக் காட்டுகிறது.

v  ஆராதனை முடிந்து ஆலயத்திலிருந்து வெளிவரும்போது வலதுபுற (போவாஸ்) பக்கத்தூண் உள்ள பக்கமாய் வெளிவருவர். இது எதைக்காட்டுகிறது? ஆராதனை முழுவதும் பங்குபெற்று முடிந்து வெளிவரும் ஒவ்வொருவரும் “பெலன்” பெற்று வெளிப்படுவார்கள் என்பதையே இது காட்டுகிறது.

ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ (வெற்றி) அவனை என் தேவனுடைய ஆலயத்தின் தூணாக்குவேன் என்ற வசனத்தின்படி ஜெயம் பெற்ற இருவரின் பெயர்களை அவ்விரு தூண்களுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அப்படியானால் பரிசுத்தாவியானவர் சொல்ல வருகிறதென்ன?

தேவனாகிய கர்த்தரை ஆராதிக்க வருகிற தேவஜனங்கள் எவராயிருப்பினும், உள்ளே பிரவேசிக்கையில் பெருக்கமான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கவும், ஆராதனை முடிந்து வெளியேறுகையில் பெலன் பெற்று, இவ்வுலக வாழ்வில் வெற்றி மீது வெற்றி பெறுகிற கிருபையை கொடுத்தனுப்புகிறார்.

ஆலயத்திற்குள் பிரவேசிக்கும்போது – பெருக்கம் – பெருக்கத்தின் ஆசீர்வாதம்
                                                                  வெளியேறும்போது – பெலன் – பெலத்தின் ஆசீர்வாதம்

மேசியா இயேசுகிறிஸ்துவின் மீட்பின் திட்டத்தில் பங்காற்றும் எவரும் பெருக்கமும், பெலனும் ஜெயமும் பெறுவார்கள். வாரந்தோறும் ஆராதனைக்கு வரும்போது என்ன விதமான நன்மைகளை பெறுகிறோம் என்பதை நாம் அறியும்படிக்கு பரிசுத்த ஆவியானவர் நமக்கு இவைகளின் மூலம் விளங்கப்பண்ணியுள்ளார். 

நமது ஆலயமோ, ஆராதனையோ ஒருபோதும் வெறுமையாய் நம்மை அனுப்பி விடாது. வருகிற பிரவேசிக்கிற யாவரையும் பெருக்கத்திற்கும் பெலனுக்குள்ளும் நடத்துகிறதாய் இருக்கிறது. ஆலயமும் ஆராதனையும் நம்மை இவ்விதமான ஆசீர்வாதத்திற்கேதுவாய் நம்மை நடத்துகிறது.

எனவே, நாம் பெருக்கமடையவும், பெலனடையவும் தவறாது ஆலயத்திற்கும், ஆராதனைக்கும் குடும்பமாக சென்று ஆசீர்வதிக்கப்பட அர்ப்பணிப்போம். தேவனாகிய கர்த்தாம் தாமே நம்மைனவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென். அல்லேலூயா!

                         
                                                       







ஜனவரி 31, 2018

இடைவிடாமல்

Image result for continually

“இடைவிடாமல்”

“இடைவிடாமல்” என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில்,  “Continually”,  “Without any Intermission”,  “instantly”,  “Allways”,  “Without Ceasing” என இத்தனை சொற்கள் பொருள் தரக்கூடிய வகையில் எடுத்தாளப்பட்டுள்ளது. இடைவிடாமல் என்ற சொல் வேதத்தில் சுமார் 16 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் நம்மை ஏதோ ஒரு ஆவிக்குரிய காரியத்தை செய்யும்படி ஏவுகிறதாக அது அமைந்துள்ளதைக் காணலாம். நமக்குள் ஒரு ஆவிக்குரிய வலிமையை ஏற்படுத்தவும், தேவனை நாம் பிரியப்படுத்தவும் இந்த வார்த்தையானது நம்மை நடத்திச் செல்ல விரும்புவதையும் நாம் காண முடிகிறது.

ஆவிக்குரிய வாழ்வில் தேவஜனங்கள் இடைவிடாமல் செய்ய வேண்டிய சில காரியங்கள் உண்டு. அவைகளை நாம் இடைவிடாமல் செய்திட வேண்டும் என்று நம் பரலோக தகப்பன் விரும்புகிறார். அவைகளையெல்லாம் நம் செய்திட முடியுமா? அது சாத்தியம்தானா?! என்ற ஒரு கேள்வி நம் மனதில் தோன்றலாம். தவறில்லை. கூடுமானவரை அதை நிறைவேற்றிடவாவது முயற்சிக்கலாமே!. நமக்கு முன் வாழ்ந்த பரிசுத்தவான்கள் அவைகளை இடைவிடாமல் செய்திருப்பார்களானால் … நாமும் செய்வதுதானே முறையாக இருக்கும். அவர்களால் செய்ய முடிந்ததானால்… நம்மாலும் முடியும்தானே! “நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலனுண்டே!

நம் ஆவிக்குரிய வாழ்வில் அனுதினமும் இடைவிடாமல் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்பதை நாம் வேதத்தின் வழியே தியானிப்போம் வாருங்கள்.

1.   இடைவிடாமல் துதிபலியிடு:

யாத்திராகமம்: 29:37-39,43 – “… பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும். பலிபீடத்தின் மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக. அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்”.

தினந்தோறும் காலையிலும் மாலையிலும் துதிபலி, நன்றி பலி ஏறெடுக்க வேண்டும். காலையில் துதிபலியும், மாலையில் நன்றி பலியும் ஏறெடுக்க வேண்டும். காலையில் கர்த்தரை பாடித் துதிக்க வேண்டும். மாலையில் தேவன் நம்மை நடத்திய நடத்தின நன்மை கிருபைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதை இடைவிடாமல் நாள்தோறும் காலைமாலை செய்திட வேண்டும் என தேவனாகிய கர்த்தர் விரும்புகிறார்.

அலுவலகத்திற்கு காலையில் செல்லும்போது, மேலாளருக்கு ‘குட்மார்னிங்’ என்றும், மதியம் ‘குட்ஆஃப்’ என்றும் மாலையில் ‘குட்ஈவ்னிங்’ என்றும் வந்தனங்களை தினமும் சொல்கிறோம். அதை விருப்பப்பட்டோ, அல்லது அலுவலக ஒழுங்கிற்கோ, அல்லது நமது குணநலத்தின்படியோ, அல்லது அவருக்குப் பயந்தோ சொல்கிறோமே!. ஒரு மனிதனுக்கு, ஒரு மேலாளருக்கு அனுதினமும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது அந்தந்த நேரத்திற்கு அந்தந்த வந்தனங்களைச் சொல்வதுபோல, நம்மைப் படைத்த தேவாதிதேவனுக்கு நாம் துதிபலி, நன்றி பலி செலுத்துவது நம் கடமையல்லவா?!

பலிபீடம் – நாம் ஜெபிக்கும் இடம், நேரம் என இங்கு குறிப்பிடுகிறேன். ஜெபிக்கும் நேரம் நாம் பரிசுத்தமாகிறோம். காலை மாலை தேவனை துதித்து நன்றிபலி செலுத்தும் எவரையும் தேவன் அந்நேரத்திலே சந்திப்பது அதிக நிச்சயம். துதிநேரம், ஜெபநேரம் நாம் தேவனுடைய மகிமையினால் நிரப்படுவோம் என வேதவசனம் கூறுகிறதே. இவ்வளவு ஆவிக்குரிய நன்மை இருக்கும்போது, நம்மால் காலைமாலை தேவனுக்கு துதிபலி நன்றிபலி செலுத்தாமல் இருக்க முடியாது. ஆமென்! அல்லேலூயா!

2.   இடைவிடாமல் பிரமாணங்களை நடைமுறைப்படுத்து;

சங்கீதம்: 119:112 – “முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்”.

தாவீது, கர்த்தருடைய இடைவிடாமல் வேதப்பிரமாணங்களின்படி செய்ய தன் இருதயத்தைச் சாய்த்தான் என்று வாசிக்கிறோம். இவ்வுலகில் வாழும் ஜனங்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒரு மனிதனுடைய பேச்சைக் கேட்டு, ஆலோசனையைக் கேட்டு அல்லது கொள்கைகளை பார்த்து இன்னும் சிலர் பழமொழி, சொலவடை, சொலவேந்திரம், தலையணை மந்திரம் கேட்டு வாழ்ந்து வருவதை காண்கிறோம். இன்னும் சிலர் பெற்றோர், மாமானார், மாமியார் சொல்கேட்டு தவறாமல் பின்பற்றுகிறதையும் காண்கிறோம். தொண்டர்கள் தலைவனுடைய வார்த்தைகளாலும், அரசியல்வாதி பணம், பதவி ஆசையினால் சொந்த புத்தி, குறுக்குப்புத்தியினாலும் வழிநடத்தப்படுகின்றனர். பாவ இச்சைகளினால் இழுக்கப்பட்டவர்கள் சாமியார்களாக மாறி மடங்களை ஏற்படுத்திக் கொண்டு, பாவங்களை துணிகரமாக செய்து வருகிறார்கள். இதனால், மனித சமுதாயத்திற்கு நன்மைகளைவிட தீமைகளே அதிகம் ஏற்படுகிறது.

தாவீதோ, மேற்கண்ட எதையும் பின்பற்றாமல், தன்னைப் படைத்த தேவன் தந்த பிரமாணங்களை இடைவிடாமல் செய்ய இருதயத்தை சாய்க்கிறதை காண்கிறோம். எந்தவொரு மனிதனும் சுயநலத்திற்காக கொள்கைகளையும், சொற்பொழிவுகளையும் பேசி, தீமையை நன்மையைப்போல காண்பித்து மக்களை நம்பவைப்பார்கள். அதைப் பின்பற்றுபவர்கள் முடிவிலே ஏமாற்றத்தையும் அதன் மூலம் எரிச்சலையும் அடைந்து தெய்வத்தின்மேல் உள்ள நம்பிக்கையையும் அதேபோல அவநம்பிக்கையான வார்த்தைகளை வெளிப்படுத்துவார்கள். மனிதனுடைய புத்திமதி, பழமொழி, கொள்கையெல்லாம் அதில்தான் போய் முடியும்.

ஆனால், கர்த்தருடைய பிரமாணங்களை கைக்கொள்ளும்போதோ … அது பரிசுத்தத்திலும், தேவபக்தியிலும், விசுவாசத்திலும், இரட்சிப்பிலும், மீட்பிலும் கொண்டுபோய் சேர்க்கும். பிரமாணங்களை கைக்கொள்ளும் ஆத்துமா ஈடேறும்.

ரோமர்: 8:2 – “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”.

3.   இடைவிடாமல் கண்ணீர் சிந்து:

புலம்பல்: 3:48-50 – “என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது”.

புலம்பலின் புத்தகத்தை எரேமியா எழுதினார். எரேமியாவை “அழுகையின் தீர்க்கதரிசி” என்றும், “கண்ணீரின் தீர்க்கதரிசி” என்றும், “புலம்பலின் தீர்க்கதரிசி” என்றும் அழைக்கிறார்கள். காரணம்? எரேமியா: 8:21 – 9:1 – “என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது. கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற் போனாள்? ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்”.

எதற்காக கண்ணீர் சிந்த வேண்டும்?

அ) சபை மக்களிடையே வரும் பெலவீன இடறல்களுக்காக …

2கொரிந்தியர்: 11:29 – “ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?”.
எரேமியா: 14:17 – “என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்”.

ஆ) தேசத்திற்காக …

எசேக்கியேல்: 22:30 – “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்”
சங்கீதம்: 10622,23 – “தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள். ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்”.

இ) காணாமல் போன ஆத்துமாக்களுக்காக …

லூக்கா: 15:4,5 – “உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,”

4.   இடைவிடாமல் ஆராதனை செய்:

தானியேல்: 6:16,20 – “அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்”.

அலுவலகத்திலோ அல்லது வேலை ஸ்தலத்திலோ இருக்கும்போது, இடைவிடாமல் ஆராதனை செய்வது என்பது சாத்தியமா? என நீங்கள் என்னைக் கேட்கலாம். தானியேலுக்கு மட்டும் இது சாத்தியமாயிருந்தது எப்படி? அதுவும் கர்த்தரை அறியாத, வேற்றுமத வழிபாடு நிறைந்த தேசத்தில் இது சாத்தியமானது எப்படி?

தானியேல் பாபிலோனில் சிறையிருப்பில் கொண்டுபோகப்பட்டவன். அங்கு கர்த்தர் அவனை அரண்மனையில் மட்டுமல்ல, தேசத்திலும் உயர்பதவி அடைய செய்தார். காரணம் என்ன? பதில் ஒன்றுதான். இடைவிடாமல் ஆராதித்ததுதான். ஏசாயா: 48:14 –“நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்”.

சிறுசிறு கற்பனை:

தானியேல் அரண்மனையில் வேலைபார்க்கும்போது, ராஜாவுக்கு கணக்கு கொடுக்கும்போது இடைஇடையே “ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்” என்றும், “அல்லேலூயா அல்லேலூயா” என்றும் சொல்லிக் கொண்டே அலுவல்களை பார்த்திருந்திருப்பான். அதை மனதிற்குள் சொல்லியிருக்க மாட்டான். வாய்விட்டு மனதார தேவனை துதித்துக்கொண்டே செய்திருப்பான். அதை இராஜாவுடன் அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் மந்திரி பிரதானிகள் யாவரும் கேட்டிருந்திருப்பார்கள். அதனால் அமைச்சர், மந்திரி பிரதானிகளுக்கு எரிச்சல் வந்திருந்தாலும், ராஜா அதைக்குறித்து ஒன்றும் சொல்லாததினால் அவர்கள் மனதிற்குள் புகைச்சலோடு கறுவிக் கொண்டு சமயம் வரட்டும், வஞ்சம் தீர்த்துக் கொள்வோம் என இருந்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இடைவிடாமல் ஆராதனை செய்கிற தேவபிள்ளைக்கு விரோதமாக எந்தவொரு ஆயுதமும் வாய்க்காதே போகும். ஆமென்! அல்லேலூயா!

தானியேலின் விசுவாசத்தையும், தேவபக்தியையும், துதி ஆராதனையையும் நன்கு அறிந்திருந்த ராஜா தானியேலைக்குறித்து நல்லதொரு சாட்சியை கொடுப்பதை நாம் வேதத்திலே வாசிக்கிறோமே!

தாவீது – ஆடுகளை மேய்க்கும்போது தேவனை கர்த்தரைத் துதித்துப் பாடி ஆராதிக்கிறவன் என்பதை நாம் நன்கு அறிவோம். தாவீது தேவனை இடைவிடாமல் ஆராதிக்கிறவன். தேவனை ஆராதித்து, ஆராதித்து அரசனாக உயர்ந்தவன் தாவீது. இடைவிடாமல் ஆராதனை செய்ய நம்மால் நிச்சயம் முடியும். தானியேலும், தாவீதும், தங்களின் விசுவாசத்தையும், தேவபக்தியையும், ஆராதனையில் தயங்காமல் அனைவருக்கு முன்பாகவும் வெளிப்படுத்தி நல்ல முன் உதாரணமாக விளங்கினார்கள். அதனால், தேசத்தில் உயர் அந்தஸ்தினையும் அடைந்தார்கள் என அறிகிறோமே!. நாம் ஏன் தேவனை இடைவிடாமல் ஆராதிப்பதற்கு முன்வரக்கூடாது?

5.   இடைவிடாமல் தேவனை நம்பு:

ஓசியா: 12:6 – “…இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு”.
யோபு: 13:15 – “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்”
2நாளாகமம்: 20:20 – “யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்”

இடைவிடாமல் தேவனை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:

அ) சங்கீதம்: 5:11- “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக”
ஆ) சங்கீதம்: 17:7 – “உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! 
இ) சங்கீதம்: 18:30 – “ தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்”
ஈ) சங்கீதம்: 31:19 – “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”
உ) சங்கீதம்: 34:22 – “ அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது”
ஊ) சங்கீதம்: 115:9-11 – “இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்”
எ) சங்கீதம்: 125:1 – “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்”
ஏ) நீதிமொழிகள்: 28:25 – “ கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்”
ஐ) நீதிமொழிகள்: 29:25 – “கர்த்தரைநம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்
ஒ) எரேமியா: 49:11 – “திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக”
ஓ) ரோமர்: 6:8 – “ கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்”
ஔ) நாகூம்: 1:7 – “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்”

     6. இடைவிடாமல் உபதேசம் பண்ணு:

அப்போஸ்தலர்: 5:42 – “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்”
மத்தேயு: 28:20 – “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”

உபதேசம் யாருக்கு? – ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு, இரட்சிக்கப்பட்டவர்களுக்கு
சுவிஷேசம் யாருக்கு? – இயேசுகிறிஸ்துவை அறியாதோருக்கு

அறியாதவர்களுக்கு உபதேசமும், இரட்சிக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷமும் என்கிற முறையில் செயல்பட்டுவிடக்கூடாது. இங்கு சொல்லப்படுகிற இடைவிடாமல் உபதேசம் பண்ணு என்பது எதை வலியுறுத்துகிறது? புது ஆத்துமாக்களுக்கான உபதேசமல்ல. சபையில் இரட்சிக்கப்பட்ட அனுபவத்துடன் இருக்கிற விசுவாசிகளுக்கு – அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி அடைய உபதேசம் பண்ணப்பட வேண்டும் என்பதையே.

எதற்காக இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இப்படிப்பட்ட உபதேசம் தேவைப்படுகிறது? என்றால் … அவர்களுடைய சுபாவங்கள், குணநலன்கள், நடத்தைகள், பேச்சுக்கள், பார்வைகள், கண்ணோட்டங்கள், அனைத்தும் நற்குணசாலிகளாகவும், முன்மாதிரியாகவும் சாட்சியுள்ளவைகளாகவும், காணப்பட வேண்டும் என்பதற்காக. அதுமட்டுமல்ல… துர் உபதேசங்கள் வராமலிருக்கவும், சுத்த சத்தியத்தை அறியவும், கள்ள போதனைகளால் மற்றும் கள்ளச் சகோதரர்களால் பாதியாமலும் இருக்க அவர்களுக்கு இடைவிடாமல் போதிக்கப்பட வேண்டியது மிக அவசியம். அஸ்திபார உபதேசங்களில் வளரவும், வேதத்தின் மகத்துவங்களை அறிந்து அதை பிறர்க்கு எடுத்துரைக்கவும், தாழ்மைப்படவும் உபதேசம் தேவை.

விசுவாசிகள் அக்கினியாக இருக்க வேண்டுமானால் அவர்களை உபதேசத்தில் அனலாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். கர்த்தருடைய உபதேசங்களை விட்டு, வலதுபுறமாவது, இடதுபுறமாவது வழிவிலகாமலிருக்க உபதேசம் அவர்களை காத்துகொள்ளும். ஒரு விறகு அடுப்பில் அக்கினி எரிந்து கொண்டிருக்கும்போது, அதிலிருக்கும் தழல் அக்கினி தழலாகக் காணப்படும். தழலை அடுப்பை விட்டு எடுத்து வெளியே வைத்துவிட்டால் சிறிது நேரத்தில் அது கரிக்கட்டையாகி விடும். அதுபோல ஒரு விசுவாசி எப்போதும் கர்த்தருடைய உபதேசத்தில் நிலைத்திருக்கிற வரைக்கும்தான் அக்கினியாக காணப்படுவார்கள். கர்த்தருடைய உபதேசத்தைவிட்டு எப்போது வழிவிலகுகிறார்களோ… அப்போதிலிருந்து அவர்கள் அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் ஒரு வெதுவெதுப்பான நிலைமைக்கு ஆளாகிறார்கள். அப்படி இருந்தால் ஆவியானவர் அப்படிப்பட்டவர்களை வாந்திபண்ணிப் போடுவேன் என்கிறார். எனவே, ஒரு போதகர், தன் சபை மக்களுக்கு எப்பொழுதும் கர்த்தருடைய உபதேசத்திலே நிலைத்திருக்க இடைவிடாமல் உபதேசம் செய்யவேண்டும் என வேதம் கூறுகிறது.

7. இடைவிடாமல் ஊழியத்தில் தரித்திரு:

அப்போஸ்தலர்: 6:4 – “நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்”
இரண்டு விஷயங்களில் உறுதியாய் அப்போஸ்தலர்கள் தரித்திருந்தார்கள். 1. ஜெபம் பண்ணுவதில் 2. போதிக்கிற ஊழியத்தில். இக்காலத்தில் உள்ள தேவஜனங்கள் – இது தேவஊழியர்களுடைய வேலை என்று அஜாக்கிரதையாய் இருந்துவிடலாகாது. ஒரு குடும்பத்தில் தாயும் தகப்பனும் இணைந்து செயல்பட்டு குடும்பத்தைக் காப்பதுபோல, ஊழியனும் மக்களும் இணைந்து செயல்படும்போது எழுப்புதல் ஏற்படும்.

8. இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்:

கொலோசெயர்: 4:2 – “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்”.
1தெசலோனிக்கேயர்: 5:17 – “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்”

நாம் தேவனோடு தொடர்பு கொள்ளும் சாதனங்களில் ஒன்று ஜெபம். தேவனோடு பேச உதவுவது ஜெபம். இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும் என்று வேதம் மிகவும் வலியுறுத்துகிறது. தேவனோடு பேசுவதை நிறுத்தி விட்டால் … உலகம், மாமிசம், பிசாசு நம்மோடு பேச ஆரம்பித்து விடுவான்.

உலகம் பேசினால் – பூமிக்குரிய கீழானவைகளை போதிக்கும். அசுத்தமானவைகளை, அபத்தமானவைகளை, இழிவானவைகளை நாட போதிக்கும்.
மாமிசம் பேசினால் – மாம்சத்தின் கிரியைகளை போதிக்கும்.
பிசாசு பேசினால் – ஆயுள் சக்கரத்தையே அழித்து விடுவான்.
அப்படியானால் … நீங்கள் யாரோடு பேச விருப்பமாயிருக்கிறீர்கள் என்பதை தாமதமின்றி உடனே முடிவு செய்யுங்கள்.

     9. இடைவிடாமல் நினைவுகூறு:

யாத்திராகமம்: 12:14 – “அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக்கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்”
யாத்திராகமம்: 12:11 – “… கர்த்தருடைய பஸ்கா”  யாத்திராகமம்: 12:17 – “புளிப்பில்லா அப்பப்பண்டிகை”

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட நாளை நினைகூர்ந்து வருடந்தோறும் அதை ஆசரிக்க வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார். அது பஸ்கா என்றும், புளிப்பில்லா அப்பப்பண்டிகை என்றும் அழைக்கப்பட்டது. இதை அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் நினைவுகூர வேண்டும் என்ற கட்டளையை தேவனிடத்தில் பெற்றிருந்தனர்.

புதிய ஏற்பாட்டிலோ… கிறிஸ்து இயேசுவால் மீட்கப்பட்டவர்கள் யாவரும், அவரது மரணத்தை நினைவுகூறும் வகையில் நற்கருணை அல்லது திருவிருந்து என்று சொல்லப்படக்கூடிய கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க வேண்டும் என்பது கிறிஸ்துவின் கட்டளை. கிறிஸ்தேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும், இரட்சிக்கப்பட்ட அனைவரும் அல்லது ஒவ்வொருவரும் சாட்சியாயிருக்கிறார்கள்.

அவர் என் அக்கிரமங்களுக்காக மரித்தார்; என் மீறுதலுக்காக காயப்பட்டார்; என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார்; எனக்காக அவர் அடக்கம் பண்ணப்பட்டார்; எனக்காகவே அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் எனக்காகவே மீண்டும் வருவேன் என்று வாக்குரைத்திருக்கிறார் என்பதை நாம் இடைவிடாமல் நினைவுகூர வேண்டும். அவர் வருமளவும் அவரது மரணத்தை நாம் நினைவுகூர வேண்டும் (1கொரிந்தியர்: 11:23-33).

10. தேவமனிதர்கள் இடைவிடாமல் நினைவுகூர வேண்டியவைகள்:

தேவமனிதர்கள் இடைவிடாமல் நினைவுகூர வேண்டியவைகள் என்னென்ன என்பதையும், தான் எதையெல்லாம் நினைவுகூறுகிறேனென்றும் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதை கீழே நாம் காண்போம்.

அ) எபேசியர்: 1:16 – “இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,”; 1தெசலோனிக்கேயர்: 1:4 – “எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.”
ஆ) கொலோசெயர்: 1:9 – “… நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம் …”
இ) 1தெசலோனிக்கேயர்: 1:2 – “தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,”
ஈ) 1தெசலோனிக்கேயர்: 2:13 – “ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; “.

மேற்கண்ட பவுலின் வார்த்தைகள் நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகிறது? ஒரு தேவமனிதன் தன் கையில் தேவன் தந்திருக்கிற ஆத்துமாக்களுக்காக எந்தளவிற்கு பாரமெடுக்க வேண்டும். ஆத்துமாக்களுக்காக எவ்வளவு நன்றியுடையவனாய், நேசிக்கிறவனாய், ஜெபிக்கிறவனாய், தேவனுக்கு முன்பாக அவர்களை நினைவுகூறுபவனாய் இருக்க வேண்டும் என்பதையே நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.

மார்ப்பதக்கம்:  
                                                    
பழைய ஏற்பாட்டிலும் தேவனாகிய கர்த்தர் இதைக்குறித்து எவ்வளவு அழகாக செய்து காண்பித்துள்ளார் என்பதை பிரதான ஆசாரியனின் மார்பில் இருக்கும் மார்ப்பதக்கம் நமக்கு விளங்கப்பண்ணுவதை நாம் காணலாம்.

யாத்திராகமம்: 39:8-14 – “மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி, அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றிலும் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது”.

யாத்திராகமம்: 28:29 – “ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலேகர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.”

யாத்திராகமம்: 28:30 – “நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.”

மார்ப்பதக்கம் சொல்லும் சத்தியம்:

இஸ்ரவேல் புத்திரர் எவ்வளவுபேர் இருந்தாலும் அவர்கள் பன்னிரண்டு கோத்திரத்திற்குள் அடக்கம். அந்த பன்னிரண்டு கோத்திரத்தாரின் நாமம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கல் வீதம் பன்னிரண்டு கற்கள் முத்திரை வெட்டாய் வெட்டி மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்டிருந்தது. அது ஆசாரியனின் மார்பில் அதாவது இருதயத்தின்மேல் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கிற போதெல்லாம் எப்போதும் இருக்கும் வண்ணம் அதை அணிந்திருக்க வேண்டும். இது எதைக் காட்டுகிறது? ஒரு ஊழியன் கர்த்தருடைய சமூகத்தில் வரும்பொதெல்லாம் தேவஜனத்தை இருதயத்திலே சுமந்து சென்று அவர்களுக்காக நினைவுகூர்ந்து எப்போதும் ஜெபிக்கிறவனாய் காணப்படவேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

நாம் இதுவரை பத்து காரியங்களைக் கண்டோம். தேவன் விரும்புகிற இடைவிடாமல் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்னவென்று நாம் தியானித்தோம். இவைகளின்படி செய்ய நாம் தீர்மானிப்போம்.

கர்த்தருடைய நாளில் அதற்குரிய பலனை நாம் அறுவடை செய்வோம். கர்த்தர் தாமே இதை பொறுமையோடு வாசித்து தியானித்த உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

நம் தளத்தில் வரும் தேவசெய்திகள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்… இத்தளத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம். அல்லது பிறருக்கு அறிமுகம் செய்யலாம். நன்றி!