ஜனவரி 20, 2020

எல்லாம் தவறாக நடக்கும்போது தேவன் எங்கே? - Where is God when Everything goes wrong?








ஆதியாகமம்:39:20,21 - "யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்.   கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார்."

- யோசேப்பின் வாழ்வில் அநேக இருளான நாட்கள் இருந்தது. பல காரியங்கள் தவறாகவே நடந்தது. அவன் ஒரு இருளான அழுக்கான அறையில் சிறை வைக்கப்பட்டான்.

   தவறு செய்ததற்காக அல்ல; சரியானதை செய்ததால்!
   மோசமான குற்றத்திற்காக அல்ல; நல்ல குணத்தின் காரணமாக!

- யோசேப்பு உயர்மலையிலிருந்தாலும் சமவெளியிலிருந்தாலும் கர்த்தர் மேல் முழு நம்பிக்கையுடன் இருந்தார். ஆகவே துன்பத்தையும் செழிப்பையும் எப்படி கையாள்வது என்பது அவருக்கு தெரியும்.

- யோசேப்பின் வாழ்க்கையில் பல நேரங்களில் வாசல்கள் அடைக்கப்பட்டது. இருளான வேளைகள் வந்தது. அவனது வாழ்வில் அநீதிகள் நடந்தது. எவ்வளவு தான் உத்தமமாக உண்மையாக உழைத்தாலும் அவனுக்கு அதற்கேற்ற ஊதியமில்லாமல் அநீதி மட்டுமே கிடைத்தது.

- கதவுகள் அடைக்கப்பட்ட நிலை, விலக்கப்பட்ட நிலை, வரவேற்கப்படாத நிலை, வாய்ப்புகள் கொடுக்கப்படாத நிலை, கனவுகள் நிறைவேறாத நிலை - இப்படிப்பட்ட நிலையில் தான் யோசேப்பு இருந்தார். ஆனாலும் கர்த்தர் அவனோடு கூட இருந்தார்.

யோசேப்பின் வாழ்வில் நடந்த 3 அநீதிகள்:

1. கீழ்ப்படிந்து நடந்த போதும் வெறுக்கப்பட்டான் -  Obedient, But hated


ஆதியாகமம்:37:2-4 - "யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய  துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லி வருவான்.   இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.  அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள்."

- யோசேப்பு தன் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். தன் சகோதரர்கள் துன்மார்க்கமான காரியங்களை செய்யும்போது அவர்களுடன் சேர்ந்து அந்த காரியத்தில் ஈடுபடாமல், தேவனுக்கு பயந்து கீழ்ப்படிந்து தன்னை பரிசுத்தமாக காத்துக்கொண்டான்.

- யாக்கோபு யோசேப்புக்கு தன் குடும்பத்தின் காரியங்களை கவனிக்கும்படி பொறுப்புகளைக் கொடுத்து, அதிகம் நேசித்து, பலவர்ண அங்கியை கொடுத்து உயர்த்தி வைத்தான்.

- யோசேப்பு சரியான காரியங்களையே செய்து வந்தான். அவன் தன் தகப்பனுக்கும், தேவனுக்கும் கீழ்ப்படிந்து நடந்தான். ஆனால் அது அவன் சகோதரர்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியது. அடிமையாக விற்கப்பட்டான்.

2. மரியாதையாக நடந்த போது தூஷிக்கப்பட்டான்    -  Honourable, But Slandered

ஆதியாகமம்:39:2-5 - "கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு: யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினது முதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது."

- குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு அடிமையாக அந்நிய தேசத்தில் விற்கப்பட்ட போதிலும், கர்த்தருக்கு கீழ்ப்படிந்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறமையாக செய்து வந்தான்.

- யோசேப்புடன் கர்த்தர் இருப்பதை போத்திபார் கண்டு, அவனிடம் தன் வீட்டின் பொறுப்புகளை கொடுத்தான். அவன் மற்ற அடிமைகள் மத்தியில் கௌரவமாக மதிக்கப்பட்டான்.

- தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையாக நடந்து திறம்பட செய்தான். அவன் மூலம் போத்திபாரின் வீட்டை கர்த்தர் ஆசீர்வதித்தார்.

ஆதியாகமம்:39:19,20 - "உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது.  யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான்."

சங்கீதம்:105:17-19 - "அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.   கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது."

இம்முறையும் யோசேப்பு நல்லதையே செய்தான். தன்னுடைய ஆத்துமாவை பரிசுத்தமாக காத்துகொண்டான். ஆனால் அவன் தூஷிக்கப்பட்டான்.


3. கர்த்தரால் பயன்படுத்தப்பட்டான்; மறக்கப்பட்டான்-    Used of God; But Forgotten


ஆதியாகமம்:40:13-15 - "மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான்."


- சிறையில் அடைக்கப்பட்ட பார்வோனின் பிரதானிகளை கவனிக்கும்படி யோசேப்பு ஏற்படுத்தப்பட்டான். அவர்கள் இருவருக்கும் வந்த சொப்பனத்தினிமித்தம் அவர்களின் முகம் துக்கமாயிருப்பதை கண்டு யோசேப்பு அவர்களை விசாரித்து அதற்கு விளக்கம் கொடுத்தான்.

- யோசேப்புக்கு தேவன் சொப்பனத்திற்கு விளக்கம் கொடுக்கும் ஞானத்தை கொடுத்திருக்கிறார்.

ஆதியாகமம்:40:8 - "அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான்."

- கர்த்தர் கொடுத்திருக்கும் ஞானத்தினால் பானபாத்திரக்காரனுடைய சொப்பனத்திற்கு விளக்கம் கூறி அவனுடைய நிலையை மாற்றினான். ஆனால், அவனோ தனது ஸ்தானத்திற்கு திரும்பியதும் யோசேப்பை மறந்து போனான்.

ஆதியாகமம்:40:22,23 - "சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப் போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்."

இந்த காரியத்திலும் யோசேப்பு நல்லதையே செய்தான். ஆனால் அவன் மறக்கமாட்டான். யோசேப்புக்கு அநீதியான காரியங்கள் நடந்தாலும், எல்லா காரியங்களிலும் கர்த்தர் அவனோடு கூட இருந்தார்.

எல்லாமே தவறாக நடந்தாலும், யோசேப்பின் வாழ்விலிருந்து அதை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்கிற பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.

கர்த்தர் தந்த வாக்குத்தத்தங்களை நினைவுகூறு: Remember the Promises given by the Lord 

ஆதியாகமம்:37:5-11  - கர்த்தர் யோசேப்புக்கு 2 சொப்பனங்களின் மூலம் வார்த்தையை கொடுத்தார். இதுவே தேவன் அவனுக்கு கொடுத்த வாக்குத்தத்தம்!

முதல் சொப்பனத்தில் யோசேப்பை உலக செல்வங்களில் (Worldly Resources) உயர்த்த போவதாக தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார்.

இரண்டாம் சொப்பனத்தில் யோசேப்பை உலக ஆட்சியாளர்களுக்கு (Worldly Rulers) மேலாக உயர்த்த போவதாக வாக்குகொடுத்தார். 

- யோசேப்பு தனது பிரச்சனைகளை நினைத்து வாழ்வதை பார்க்கிலும், தேவன் தந்த வாக்குத்தத்தங்களை நம்பியே வாழ்ந்தான்.

அவன் மனதிலும், இதயத்தின் ஆழத்திலும், தேவன் உயரத்தையும் (Elevation), உயர்வையும் (Exaltation) கொடுக்க போகிறார் என்ற வாக்குத்தத்தம் இருந்து கிரியை செய்து கொண்டே இருந்தது.

- உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்பாராத காரியங்கள் நடந்து பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை நினைத்து வருத்தப்படாமல் கர்த்தர் தந்த வாக்குறுதிகளை உறுதியாக பிடித்துக்கொள்ளுங்கள்.

நீதிமொழிகள்:3:25,26 - "சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்."

யோசேப்பு பானபாத்திரக்காரனிடம் வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினையென்று சொன்னான். ஆனால் அவன் உயர்வுக்கு சென்ற பின், யோசேப்பை நினையாமல் மறந்து போனான்.

மனிதர்கள் மாறலாம்; மறந்து போகலாம். ஆனால், நம்மை அழைத்த தேவன் நம்மை ஒருபோதும் மறவார். அவர் சொன்ன வார்த்தை ஒன்றும் தரையில் விழுவதில்லை. வாக்கை நிறைவேற்றுவார். If he says, He'll do it!

கர்த்தரை உறுதியாக பற்றிக்கொள்ளுங்கள்:Hold the Lord Firmly

- யோசேப்பு குழியில் தள்ளப்பட்டு குடும்பத்தினரால் கைவிடப்பட்டான். பிறகு, சிறையில் தள்ளப்பட்டு, நண்பர்களால் மறக்கப்பட்டான்.

தவறு செய்ததற்காக அல்ல; சரியானதை செய்ததற்காக!

1. யோசேப்பின் கனவுகளால், தகப்பன் அவனுக்கு கொடுத்த மேலங்கியினால் சகோதரர்கள் பொறாமைப்பட்டு குழிக்குள் தள்ளினர்.
2. போத்திபாரின் மனைவி யோசேப்பின் அர்ப்பணிப்புள்ள பயபக்தியுள்ள வாழ்வின் காரணமாக சிறையில் தள்ளினாள்.

- யோசேப்பு தன்னுடைய தூய்மையை காத்துக்கொண்டதினால், நேர்மையாக நடந்ததினால், தனது சுதந்தரத்தை இழந்தான். ஆனாலும் அவன் கர்த்தரை இழக்கவில்லை. உறுதியாக பற்றிக்கொண்டான்.

1பேதுரு:2:20 - "நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்"

யோபு:12:13-16 - "அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்க முடியாது. இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும். அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.

- கர்த்தர் அனுமதிக்காமல், ஒரு காரியமும் நம் வாழ்வில் நடைபெறாது. எந்த ஒரு காரியமும் நம்மை சோர்வுக்குள்ளாக நடத்தினாலும் கர்த்தரை உறுதியாக பற்றிக்கொண்டால் போதும்.  

ரோமர்:8:28 - "அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்."

சங்கீதம்:138:8 - "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்"

- மனிதர்கள் உங்களை கைவிடலாம்; குழியில் தள்ளிவிடலாம்; ஆனால் தேவன் உங்களை கரம்பிடித்து நடத்துவார்.

ஏசாயா:2:22 - "நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு விடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்."

ஆம்! அடுத்த சில நிமிடங்களுக்கு சரியாக மூச்சு விட முடியாமல் திணறினால் இறந்து விடும் மனிதர்களை நம்பாமல், ஜீவ சுவாசத்தை தரும் தேவனை நம்புங்கள். 

எரேமியா:17:7,8 - "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும் கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனிகொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான்."

- மனிதர்மேல் நம்பிக்கை வைக்காமல், கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்போது நம்மை கனிகொடுக்கிற மரத்தை போல மாற்றுவார்.

சில ஆசீர்வாதங்கள் நாம் பெறுவதற்கு முன்பு தேவன் நம்மை தகுதிப்படுத்துகிறார். நாம் காத்திருந்து, சோதனைகளை சகித்து கொண்டு உயர்வுக்காக கர்த்தரை பற்றிக்கொண்டால், கர்த்தர் ஏற்றகாலத்திலே நம்மை உயர்த்துவார். 

ஏசாயா:40:31 - "கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்."

கர்த்தருடைய வழிகளும் நினைவுகளும் நம்மை போன்றதல்ல; அவரது நேரம் எப்போதும் சரியானதாக இருக்கும். 

ஆதியாகமம்:50:20 - "நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்."

- யோசேப்பு எத்தனையோ வலிகள், சோர்வுகள், இழப்புகள்,வேதனைகள் ஊடே வந்தாலும் முடிவில் அவனுக்கு தேவன் தாம் சொன்னபடி, காண்பித்தபடி உயரத்தையும் உயர்வையும் அடைய செய்தார்.

- யோசேப்பு சந்தித்த ஒவ்வொரு ஏமாற்றமும் தேவனது மகத்தான திட்டத்தை கொண்டுவருவதில் பங்களித்தது.


  • யோசேப்பின் நன்மை (ஆதி:41:39-44)
  • அவனுடைய மக்களின் நன்மை (ஆதி:45:17-20)
  • கர்த்தரின் மகிமைக்கான திட்டம் (யாத்:14:17,18)


"உங்களுடைய வாழ்வில் இழப்புகளையும் ஏமாற்றங்களையும் மட்டுமே சந்தித்தால், கர்த்தர் ஒரு உன்னத திட்டத்திற்காக உங்களை ஆயத்தம்செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். "


நமக்கு எல்லாமே தவறாக நடக்கும்போது தேவன் எங்கே இருக்கிறார்? 

           அவர் நம்மோடு தான் இருக்கிறார். நமக்காகவே தான் இருக்கிறார். ஆனால் ஒருநாள் நாம் கேட்கவோ கற்பனை செய்யவோ முடியாத அளவிற்கு உயர்த்தி வைக்க போகிறார். இக்காலத்தில் நாம் அனுபவிக்கிற பாடுகளையும் இழப்புகளையும் தேவன் நாம் உயர்வை அடைய எவ்வாறு அதை பயன்படுத்தினார்... நம்மை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பதை பிற்காலத்தில் நாம் உயர்வை அடையும் போது நினைத்து பார்ப்போம்.

2கொரிந்தியர்:4:17 - "மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது."

சில பாடுகள் வரும்போது கர்த்தர் உங்களை கைவிட்டது போல காணப்படலாம். ஆனால் அவர் உங்களோடு தான் இருப்பார். 

  • யோசேப்பு குழியில் தள்ளப்பட்ட போதும் கர்த்தர் அவனோடு இருந்தார். போத்திபாரிடம் அடிமையாக இருந்த போதும்  கர்த்தர் அவனோடு இருந்தார். சிறைச்சாலையில் இருந்த போதும் கர்த்தர் அவனோடு இருந்தார். பார்வோனுக்கு அடுத்த அதிபதியாக இருந்த போதும் கர்த்தர் அவனோடு இருந்தார். 
  • சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ நெருப்பில் போடப்பட்ட போதும் நான்காவது நபராக அவர்களுடைய முடிகூட கருகாமல் பாதுகாக்க கர்த்தர் அவர்களோடு இருந்தார்.
  • தானியேல் சிங்க கெபிக்குள் தள்ளப்பட்ட போதும், சிங்கத்தின் வாயை கட்டிப்போட கர்த்தர் அவனோடு இருந்தார். 
  • கடும் புயல்கள், அலைகள் மத்தியில் சீஷர்கள் படகில் தத்தளித்து கொண்டிருக்கும் போதும், கர்த்தர் அவனோடு இருந்தார். 
இவர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நிலைகள் வந்த போதும், இவர்களோடு கூட இருந்து பாதுகாத்து உயர்த்தின தேவன் உங்களையும் எல்லா வித பாதகமான சூழ்நிலையிலிருந்து மீட்டு உயர்த்த வல்லவராயிருக்கிறார். 


ஏசாயா:43:2 - "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது."


Where is God when Everything goes wrong? 

 Yes, He's right here with us !!!

ஆமென்!

ஜனவரி 02, 2020

Memories of NTAG in 2019







நேசரின் தோட்டம் ஏஜி சபையின் 2019 ஆம் ஆண்டின் நினைவலைகள்.... கடந்த ஆண்டில் நடந்த முகாம்கள், கூட்டங்கள், பண்டிகைகள் குறித்த சில தொகுப்புகள், தேவன் தந்த புதிய திட்டமான ஆலயம் கட்டுதல்......

Sing to the lord - Hebrew song Dance for Christmas 2019