மார்ச் 24, 2019

நம் வாழ்வில் வரும் தடைகளை நீக்கி ஆசீர்வாதம் பெறுவது எப்படி?




திறவுகோல் வசனம்: மீகா:2:13 தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார்கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.”

நம் வாழ்வில் தடைகள் பல ரூபங்களில் வரும். தடைகளை கண்டு சோர்ந்து போய் விட்டால், தடைகள் நம் கண்ணெதிரே பெரிதாக தான் இருக்கும். ஆனால் தேவ பெலனைக் கொண்டு நம் முன் நிற்கும் தடைகளை பார்க்கும் போது, அது நொருங்கி விழும்.

-        கர்த்தர் தடைகளை நீக்கிப் போடுகிறவராயிருக்கிறார். சாத்தான் நமக்கு சோர்வை கொண்டு வருவதற்கும், விசுவாசத்தில் பலவீனம் ஏற்படுவதற்கும் நம்; வாழ்வில் தடைகளை கொண்டு வருவான். எப்படியென்றால், நாம் எந்த ஒரு காரியத்தை செய்ய முயன்றாலும் அது நடக்காது. ஏதாவது தடைகள் வரும்.  
                
உதாரணத்திற்கு, ஒரு வீடு கட்டு வேண்டும் என்று நீங்கள் நீண்ட நாள் கனவு கண்டு அதற்காக மிகுந்த பிரயாசப்படுவீர்கள். பல பேரிடம் பணம் கேட்டிருப்பீர்கள். கேட்ட இடத்திலெல்லாம் தருகிறேன் தருகிறேன் என்று சொல்லி விட்டு, வேலை ஆரம்பித்த பின்னர், ஏதாவது காரணங்கள் கூறி, இப்போது பணமில்லை என்று கையை விரித்து விடுவார்கள். நம்பினவர்கள் நம்மை கைவிட்டுவிடுவார்கள். உடனே வீடு கட்ட முடியாமல் தடையாகி விடும்.

இது போல பல காரியங்கள் நம் வாழ்வில் நடக்கும். தடைகள் அடுத்தடுத்து வரும்போது நாம் சோர்ந்து போய் “ஏன் எனக்கு மட்டும் இப்படி தடைகள் வருகிறது?” என்று தேவனிடம் கேட்பதுண்டு. 

ஆனால் தடைகள் ஏற்படுவதற்கு முன்பே நம் வழியை செவ்வைப்படுத்திக் கொண்டால் இந்த கேள்வியை கேட்க வேண்டிய அவசியமில்லை.
தடைகள் வந்த பின்னர் தான் நாம் தடைகளை நீக்கும் தேவனை பார்க்கிறோம். ஆகையால் நாம் எந்த காரியத்தை செய்யும் முன்பு தேவனிடம் முதலாவது ஒப்புக்கொடுக்க வேண்டும்.

யோபு:42:2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.”

அவர் உனக்காக ஒன்றை செய்ய நினைத்தால் அதை எந்த மனிதனாலும் தடுக்க முடியாது. அவர் சகலத்தையும் செய்ய வல்லவர்.

ஏசாயா:43:13 நாள்  உண்டகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்?”

ஆம்! கர்த்தர் நமக்கு ஆசீர்வாதத்தை கொடுக்க நினைத்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது.

“உன் முன் நிற்கும் தடைகளை பார்க்காதே!          
தடைகளை நீக்கும் தேவனை நோக்கி பார்!”

ஏசாயா:14:24,27 – “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலை நிற்கும்  என்று சேனைகளின் கர்த்தர்   ஆணையிட்டுச் சொன்னார். சேனைகளின் கர்த்தர்  இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது,  யார் அதைத் திருப்புவான்?”

நமக்கென்று தேவன் ஒரு ஆசீர்வாதத்தை நிர்ணயித்து விட்டால், அதை ஒருவனாலும் தடுக்க முடியாது. ஏனென்றால் அவர் நிர்ணயித்தது நிலைநிற்கும்.

யோர்தானை மேற்கொண்டு ஆசீர்வாதம் பெறுவது எப்படி?




யோசுவா:1:2 என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்

நம் முன் நிற்கும் தடைகளை மேற்கொண்டு தான் ஆசீர்வாதத்தை பெற முடியும். யோர்தானை கடந்து தான் கானானுக்குள் நுழைய முடியும். யோர்தானை கண்டு இது எப்படி முடியும் என்று சோர்ந்து விட்டால் கானானுக்குள் பிரவேசிக்க முடியாது.

1.   தேவ திட்டத்தை பின்பற்ற வேண்டும்

யோசுவா:1:11 நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப்  போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய  கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான்.”

-    மூன்று நாளைக்குள்ளாக யோர்தானை கடக்க வேண்டும். இது தேவனின் திட்டம்.
-    தேவனின் சித்தம் மற்றும் திட்டத்தை அறிந்து அதின்படி நடக்க வேண்டும். அவரின் சித்தத்துக்கு முற்றிலும் நம்மை முதலாவது அர்ப்பணிக்க வேண்டும்.

2.   ஆயத்தம் வேண்டும்

யோசுவா:1:8 - இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாகஅப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய்.”

எந்தவொரு காரியம் செய்வதற்கு முன்பாக நம்மை ஆயத்தம் செய்து கொள்வது மிக அவசியம். ஆயத்தமில்லாமல் ஒரு காரியத்திலேயும் வெற்றி கிடைக்காது.

நம் வாழ்வில் யோர்தானை மேற்கொள்ள, நாம் அனுதினமும் வேதத்தை வாசித்து, தியானித்து, அதின்படி நடந்து, நம்மை நாமே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வேதத்தை வாசிப்பதின் மூலம் நம் வழியை செவ்வைப்படுத்திக் கொள்ள முடியும்.

3.   இடையூறுகளை தவிர்க்க வேண்டும்

யோசுவா:1:7 – என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படி எல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.”

நமது கிறிஸ்தவ பாதைக்கு எதிராக வரும் இடையூறுகளை தவிர்க்க வேண்டும். இடையூறுகள் எந்த ரூபத்திலும் வரலாம். ஒருவேளை நமது குடும்பத்தார் மூலமாக, நண்பர்கள் மூலமாக வரும். அதை நாம் தவிர்க்க வேண்டும்.

“உங்களை சுற்றி இருக்கும் சூழ்நிலைகளை பார்க்காதீர்கள்.
சூழ்நிலையை மாற்றும் தேவனை நோக்கி பாருங்கள் !!!      
கர்த்தர் பாதகமான சூழ்நிலையையும் சாதகமாக மாற்ற வல்லவர் !”

ஆராதனைக்கு வரும் நேரத்தில் குடும்பத்தில் குழப்பங்கள் வரும். ஊழியத்துக்கு போக நினைக்கும் போது, ஏதாவது தடைகள் வரும். ஜெபத்திற்கு பெயர் கொடுத்துவிட்டு, வரமுடியாமல் தடைகள் வரும். இவையெல்லாம் நமது கிறிஸ்தவ பாதைக்கு எதிராக வரும் இடையூறுகள். இதையெல்லாம் நாம் தவிர்க்க வேண்டும்.

4.   விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும்

எண்ணாகமம்: 32:7 – கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன?”

வாக்களித்த தேவன் பொய்யுரையாதவர். அவர் நிர்ணயித்தது நிலைநிற்கும். ஆனால் நாம் அதை விசுவாசித்து பெற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியமும் கஷ்டப்படாமல் பெற்றால் அதன் மதிப்பு நமக்கு தெரியாது. ஆகையால் சில காரியங்களை நமக்கு தருவதற்கு தேவன் தாமதிப்பார். நமது விசுவாசத்தின் அளவை சோதிப்பார்.

எபிரேயர்: 11:6 - விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”

ஆபிரகாமின் விசுவாச அளவை சோதித்தார். யோபுவின் விசுவாச அளவை சோதித்தார். அன்னாளின் விசுவாச அளவை சோதித்தார். எலிசபெத்தின் விசுவாச அளவை சோதித்தார். இவர்களெல்லாரும் தங்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்தார்கள்.

(2கொரிந்தியர்:5:6) நாம் தரிசித்து அல்ல; விசுவாசித்து நடக்க வேண்டும். ஆண்டவர் ஒரு காரியத்தை சொன்னால் புரிந்து கொள்வது, சரியா தவறா என்று நிதானிப்பது நம் வேலையல்ல; கீழ்ப்படிதலே அவசியம். கீழ்ப்படிந்து அவர் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும்.

அர்ப்பணிப்புள்ள விசுவாசம் தேவை. நீண்ட நாள் பொறுமையாக இருந்து சோர்வுகள் வந்திருக்கலாம். எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனாலும் கர்த்தரிடம் காத்திருங்கள். இதை வீணாக நேரம் செலவழித்தல் என நினைக்க வேண்டாம். 

ஆண்டவர் உங்கள் இதயத்தில் பேசும் போது, ‘ஒரு முழுவருஷத்திலும் உங்களால் செய்ய முடியாதவைகளை ஒரு நொடியில் செய்து விடுவார்.’

“கர்த்தரிடத்தில் காத்திருங்கள். பெரிய காரியங்களை காண்பீர்கள்”

நமது தெளிவற்ற ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்க முடியவில்லை. குறிப்பிட்ட காரியத்தை பற்றி தெளிவோடும் முழு நிச்சயத்தோடும் தேவனிடத்தில் கேட்க வேண்டும்.

லூக்கா:18:37-43 வாசித்து பாருங்கள். பர்திமேயு குருடன் பார்வையடைவதை பற்றி திட்டமாக ஜெபிக்காத போது கிறிஸ்து ஆரோக்கியத்தை வாக்களிக்கவில்லை. அவனுக்கு எது தேவையோ அதை அவனே திட்டமும் தெளிவுமாக கேட்கும்படி இயேசு விரும்பினார்.

உங்கள் தேவை எதுவாக இருப்பினும் அதற்கான ஆதாரம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது. நாளைக்கல்ல, இன்றைக்கல்ல. இப்பொழுதே உங்களுக்குள் இருக்கிறார். உங்கள் சிந்தனை, தரிசனம், விசுவாசம் மூலமேயல்லாமல் தேவன் தானாக கிரியை செய்வதில்லை. நீங்களே அந்த வாய்க்கால்.

நீங்கள் விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு அதன் மூலம் நீங்கள் தேவனோடு ஒத்துழைக்காவிட்டால், தேவன் கிரியை செய்ய முடியாது. நீங்கள் எந்த அளவு அவரை அனுமதிக்கிறீர்களோ அந்த அளவு கிரியை செய்கிறார்.

ஆகவே, நம் வாழ்வில் அநேக தடைகள் யோர்தானை போல வரும். ஆனால் யோர்தானைக் கடந்தால் தான் ஆசீர்வாதமான கானானுக்குள் போக முடியும். ஆகவே தடைகளை மேற்கொள்ள இந்த 4 காரியங்களை நம் வாழ்வில் அப்பியாசப்படுத்தினால் நிச்சயம் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

நாம் தடைகளை தகர்த்தெறிய வல்லமையுள்ள தேவனுடைய ஜனமாயிருப்பதால் நாம் எதற்குமே பயப்படத்தேவையில்லை. தடைகளை நீக்கிப்போடும் தேவன் நம் முன்னே செல்வார். நம்மை அவருக்கு அர்ப்பணிப்போம். அவர் பெரிய காரியங்களை செய்வார்.

“கர்த்தரிடம் பெரிய காரியங்களை எதிர்ப்பார்.        
கர்த்தருக்காக பெரிய காரியங்களை சாதிக்கப்பார்.”

                                 -    மிஷனரி. வில்லியம் கேரி

பெரிய காரியங்களை எதிர்பாருங்கள்; காத்திருங்கள்; பெற்றுக்கொள்ளுங்கள். 
ஆமென்!