ஜனவரி 31, 2018

இடைவிடாமல்

Image result for continually

“இடைவிடாமல்”

“இடைவிடாமல்” என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில்,  “Continually”,  “Without any Intermission”,  “instantly”,  “Allways”,  “Without Ceasing” என இத்தனை சொற்கள் பொருள் தரக்கூடிய வகையில் எடுத்தாளப்பட்டுள்ளது. இடைவிடாமல் என்ற சொல் வேதத்தில் சுமார் 16 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் நம்மை ஏதோ ஒரு ஆவிக்குரிய காரியத்தை செய்யும்படி ஏவுகிறதாக அது அமைந்துள்ளதைக் காணலாம். நமக்குள் ஒரு ஆவிக்குரிய வலிமையை ஏற்படுத்தவும், தேவனை நாம் பிரியப்படுத்தவும் இந்த வார்த்தையானது நம்மை நடத்திச் செல்ல விரும்புவதையும் நாம் காண முடிகிறது.

ஆவிக்குரிய வாழ்வில் தேவஜனங்கள் இடைவிடாமல் செய்ய வேண்டிய சில காரியங்கள் உண்டு. அவைகளை நாம் இடைவிடாமல் செய்திட வேண்டும் என்று நம் பரலோக தகப்பன் விரும்புகிறார். அவைகளையெல்லாம் நம் செய்திட முடியுமா? அது சாத்தியம்தானா?! என்ற ஒரு கேள்வி நம் மனதில் தோன்றலாம். தவறில்லை. கூடுமானவரை அதை நிறைவேற்றிடவாவது முயற்சிக்கலாமே!. நமக்கு முன் வாழ்ந்த பரிசுத்தவான்கள் அவைகளை இடைவிடாமல் செய்திருப்பார்களானால் … நாமும் செய்வதுதானே முறையாக இருக்கும். அவர்களால் செய்ய முடிந்ததானால்… நம்மாலும் முடியும்தானே! “நம்மை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய நமக்கு பெலனுண்டே!

நம் ஆவிக்குரிய வாழ்வில் அனுதினமும் இடைவிடாமல் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்ன என்பதை நாம் வேதத்தின் வழியே தியானிப்போம் வாருங்கள்.

1.   இடைவிடாமல் துதிபலியிடு:

யாத்திராகமம்: 29:37-39,43 – “… பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும். பலிபீடத்தின் மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக. அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும்”.

தினந்தோறும் காலையிலும் மாலையிலும் துதிபலி, நன்றி பலி ஏறெடுக்க வேண்டும். காலையில் துதிபலியும், மாலையில் நன்றி பலியும் ஏறெடுக்க வேண்டும். காலையில் கர்த்தரை பாடித் துதிக்க வேண்டும். மாலையில் தேவன் நம்மை நடத்திய நடத்தின நன்மை கிருபைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். இதை இடைவிடாமல் நாள்தோறும் காலைமாலை செய்திட வேண்டும் என தேவனாகிய கர்த்தர் விரும்புகிறார்.

அலுவலகத்திற்கு காலையில் செல்லும்போது, மேலாளருக்கு ‘குட்மார்னிங்’ என்றும், மதியம் ‘குட்ஆஃப்’ என்றும் மாலையில் ‘குட்ஈவ்னிங்’ என்றும் வந்தனங்களை தினமும் சொல்கிறோம். அதை விருப்பப்பட்டோ, அல்லது அலுவலக ஒழுங்கிற்கோ, அல்லது நமது குணநலத்தின்படியோ, அல்லது அவருக்குப் பயந்தோ சொல்கிறோமே!. ஒரு மனிதனுக்கு, ஒரு மேலாளருக்கு அனுதினமும் ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது அந்தந்த நேரத்திற்கு அந்தந்த வந்தனங்களைச் சொல்வதுபோல, நம்மைப் படைத்த தேவாதிதேவனுக்கு நாம் துதிபலி, நன்றி பலி செலுத்துவது நம் கடமையல்லவா?!

பலிபீடம் – நாம் ஜெபிக்கும் இடம், நேரம் என இங்கு குறிப்பிடுகிறேன். ஜெபிக்கும் நேரம் நாம் பரிசுத்தமாகிறோம். காலை மாலை தேவனை துதித்து நன்றிபலி செலுத்தும் எவரையும் தேவன் அந்நேரத்திலே சந்திப்பது அதிக நிச்சயம். துதிநேரம், ஜெபநேரம் நாம் தேவனுடைய மகிமையினால் நிரப்படுவோம் என வேதவசனம் கூறுகிறதே. இவ்வளவு ஆவிக்குரிய நன்மை இருக்கும்போது, நம்மால் காலைமாலை தேவனுக்கு துதிபலி நன்றிபலி செலுத்தாமல் இருக்க முடியாது. ஆமென்! அல்லேலூயா!

2.   இடைவிடாமல் பிரமாணங்களை நடைமுறைப்படுத்து;

சங்கீதம்: 119:112 – “முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்”.

தாவீது, கர்த்தருடைய இடைவிடாமல் வேதப்பிரமாணங்களின்படி செய்ய தன் இருதயத்தைச் சாய்த்தான் என்று வாசிக்கிறோம். இவ்வுலகில் வாழும் ஜனங்கள் ஒவ்வொருவரும் யாரோ ஒரு மனிதனுடைய பேச்சைக் கேட்டு, ஆலோசனையைக் கேட்டு அல்லது கொள்கைகளை பார்த்து இன்னும் சிலர் பழமொழி, சொலவடை, சொலவேந்திரம், தலையணை மந்திரம் கேட்டு வாழ்ந்து வருவதை காண்கிறோம். இன்னும் சிலர் பெற்றோர், மாமானார், மாமியார் சொல்கேட்டு தவறாமல் பின்பற்றுகிறதையும் காண்கிறோம். தொண்டர்கள் தலைவனுடைய வார்த்தைகளாலும், அரசியல்வாதி பணம், பதவி ஆசையினால் சொந்த புத்தி, குறுக்குப்புத்தியினாலும் வழிநடத்தப்படுகின்றனர். பாவ இச்சைகளினால் இழுக்கப்பட்டவர்கள் சாமியார்களாக மாறி மடங்களை ஏற்படுத்திக் கொண்டு, பாவங்களை துணிகரமாக செய்து வருகிறார்கள். இதனால், மனித சமுதாயத்திற்கு நன்மைகளைவிட தீமைகளே அதிகம் ஏற்படுகிறது.

தாவீதோ, மேற்கண்ட எதையும் பின்பற்றாமல், தன்னைப் படைத்த தேவன் தந்த பிரமாணங்களை இடைவிடாமல் செய்ய இருதயத்தை சாய்க்கிறதை காண்கிறோம். எந்தவொரு மனிதனும் சுயநலத்திற்காக கொள்கைகளையும், சொற்பொழிவுகளையும் பேசி, தீமையை நன்மையைப்போல காண்பித்து மக்களை நம்பவைப்பார்கள். அதைப் பின்பற்றுபவர்கள் முடிவிலே ஏமாற்றத்தையும் அதன் மூலம் எரிச்சலையும் அடைந்து தெய்வத்தின்மேல் உள்ள நம்பிக்கையையும் அதேபோல அவநம்பிக்கையான வார்த்தைகளை வெளிப்படுத்துவார்கள். மனிதனுடைய புத்திமதி, பழமொழி, கொள்கையெல்லாம் அதில்தான் போய் முடியும்.

ஆனால், கர்த்தருடைய பிரமாணங்களை கைக்கொள்ளும்போதோ … அது பரிசுத்தத்திலும், தேவபக்தியிலும், விசுவாசத்திலும், இரட்சிப்பிலும், மீட்பிலும் கொண்டுபோய் சேர்க்கும். பிரமாணங்களை கைக்கொள்ளும் ஆத்துமா ஈடேறும்.

ரோமர்: 8:2 – “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே”.

3.   இடைவிடாமல் கண்ணீர் சிந்து:

புலம்பல்: 3:48-50 – “என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது”.

புலம்பலின் புத்தகத்தை எரேமியா எழுதினார். எரேமியாவை “அழுகையின் தீர்க்கதரிசி” என்றும், “கண்ணீரின் தீர்க்கதரிசி” என்றும், “புலம்பலின் தீர்க்கதரிசி” என்றும் அழைக்கிறார்கள். காரணம்? எரேமியா: 8:21 – 9:1 – “என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது. கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற் போனாள்? ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்”.

எதற்காக கண்ணீர் சிந்த வேண்டும்?

அ) சபை மக்களிடையே வரும் பெலவீன இடறல்களுக்காக …

2கொரிந்தியர்: 11:29 – “ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?”.
எரேமியா: 14:17 – “என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்”.

ஆ) தேசத்திற்காக …

எசேக்கியேல்: 22:30 – “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்”
சங்கீதம்: 10622,23 – “தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள். ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்”.

இ) காணாமல் போன ஆத்துமாக்களுக்காக …

லூக்கா: 15:4,5 – “உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? கண்டுபிடித்த பின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,”

4.   இடைவிடாமல் ஆராதனை செய்:

தானியேல்: 6:16,20 – “அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்”.

அலுவலகத்திலோ அல்லது வேலை ஸ்தலத்திலோ இருக்கும்போது, இடைவிடாமல் ஆராதனை செய்வது என்பது சாத்தியமா? என நீங்கள் என்னைக் கேட்கலாம். தானியேலுக்கு மட்டும் இது சாத்தியமாயிருந்தது எப்படி? அதுவும் கர்த்தரை அறியாத, வேற்றுமத வழிபாடு நிறைந்த தேசத்தில் இது சாத்தியமானது எப்படி?

தானியேல் பாபிலோனில் சிறையிருப்பில் கொண்டுபோகப்பட்டவன். அங்கு கர்த்தர் அவனை அரண்மனையில் மட்டுமல்ல, தேசத்திலும் உயர்பதவி அடைய செய்தார். காரணம் என்ன? பதில் ஒன்றுதான். இடைவிடாமல் ஆராதித்ததுதான். ஏசாயா: 48:14 –“நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்”.

சிறுசிறு கற்பனை:

தானியேல் அரண்மனையில் வேலைபார்க்கும்போது, ராஜாவுக்கு கணக்கு கொடுக்கும்போது இடைஇடையே “ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்” என்றும், “அல்லேலூயா அல்லேலூயா” என்றும் சொல்லிக் கொண்டே அலுவல்களை பார்த்திருந்திருப்பான். அதை மனதிற்குள் சொல்லியிருக்க மாட்டான். வாய்விட்டு மனதார தேவனை துதித்துக்கொண்டே செய்திருப்பான். அதை இராஜாவுடன் அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் மந்திரி பிரதானிகள் யாவரும் கேட்டிருந்திருப்பார்கள். அதனால் அமைச்சர், மந்திரி பிரதானிகளுக்கு எரிச்சல் வந்திருந்தாலும், ராஜா அதைக்குறித்து ஒன்றும் சொல்லாததினால் அவர்கள் மனதிற்குள் புகைச்சலோடு கறுவிக் கொண்டு சமயம் வரட்டும், வஞ்சம் தீர்த்துக் கொள்வோம் என இருந்திருக்கிறார்கள் என அறிய முடிகிறது. இடைவிடாமல் ஆராதனை செய்கிற தேவபிள்ளைக்கு விரோதமாக எந்தவொரு ஆயுதமும் வாய்க்காதே போகும். ஆமென்! அல்லேலூயா!

தானியேலின் விசுவாசத்தையும், தேவபக்தியையும், துதி ஆராதனையையும் நன்கு அறிந்திருந்த ராஜா தானியேலைக்குறித்து நல்லதொரு சாட்சியை கொடுப்பதை நாம் வேதத்திலே வாசிக்கிறோமே!

தாவீது – ஆடுகளை மேய்க்கும்போது தேவனை கர்த்தரைத் துதித்துப் பாடி ஆராதிக்கிறவன் என்பதை நாம் நன்கு அறிவோம். தாவீது தேவனை இடைவிடாமல் ஆராதிக்கிறவன். தேவனை ஆராதித்து, ஆராதித்து அரசனாக உயர்ந்தவன் தாவீது. இடைவிடாமல் ஆராதனை செய்ய நம்மால் நிச்சயம் முடியும். தானியேலும், தாவீதும், தங்களின் விசுவாசத்தையும், தேவபக்தியையும், ஆராதனையில் தயங்காமல் அனைவருக்கு முன்பாகவும் வெளிப்படுத்தி நல்ல முன் உதாரணமாக விளங்கினார்கள். அதனால், தேசத்தில் உயர் அந்தஸ்தினையும் அடைந்தார்கள் என அறிகிறோமே!. நாம் ஏன் தேவனை இடைவிடாமல் ஆராதிப்பதற்கு முன்வரக்கூடாது?

5.   இடைவிடாமல் தேவனை நம்பு:

ஓசியா: 12:6 – “…இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு”.
யோபு: 13:15 – “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்”
2நாளாகமம்: 20:20 – “யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான்”

இடைவிடாமல் தேவனை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:

அ) சங்கீதம்: 5:11- “உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக”
ஆ) சங்கீதம்: 17:7 – “உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! 
இ) சங்கீதம்: 18:30 – “ தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்”
ஈ) சங்கீதம்: 31:19 – “உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”
உ) சங்கீதம்: 34:22 – “ அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது”
ஊ) சங்கீதம்: 115:9-11 – “இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்”
எ) சங்கீதம்: 125:1 – “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்”
ஏ) நீதிமொழிகள்: 28:25 – “ கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்”
ஐ) நீதிமொழிகள்: 29:25 – “கர்த்தரைநம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்
ஒ) எரேமியா: 49:11 – “திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக”
ஓ) ரோமர்: 6:8 – “ கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்”
ஔ) நாகூம்: 1:7 – “கர்த்தர் நல்லவர், இக்கட்டு நாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்”

     6. இடைவிடாமல் உபதேசம் பண்ணு:

அப்போஸ்தலர்: 5:42 – “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்”
மத்தேயு: 28:20 – “நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்”

உபதேசம் யாருக்கு? – ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு, இரட்சிக்கப்பட்டவர்களுக்கு
சுவிஷேசம் யாருக்கு? – இயேசுகிறிஸ்துவை அறியாதோருக்கு

அறியாதவர்களுக்கு உபதேசமும், இரட்சிக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷமும் என்கிற முறையில் செயல்பட்டுவிடக்கூடாது. இங்கு சொல்லப்படுகிற இடைவிடாமல் உபதேசம் பண்ணு என்பது எதை வலியுறுத்துகிறது? புது ஆத்துமாக்களுக்கான உபதேசமல்ல. சபையில் இரட்சிக்கப்பட்ட அனுபவத்துடன் இருக்கிற விசுவாசிகளுக்கு – அவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சி அடைய உபதேசம் பண்ணப்பட வேண்டும் என்பதையே.

எதற்காக இரட்சிக்கப்பட்டவர்களுக்கு இப்படிப்பட்ட உபதேசம் தேவைப்படுகிறது? என்றால் … அவர்களுடைய சுபாவங்கள், குணநலன்கள், நடத்தைகள், பேச்சுக்கள், பார்வைகள், கண்ணோட்டங்கள், அனைத்தும் நற்குணசாலிகளாகவும், முன்மாதிரியாகவும் சாட்சியுள்ளவைகளாகவும், காணப்பட வேண்டும் என்பதற்காக. அதுமட்டுமல்ல… துர் உபதேசங்கள் வராமலிருக்கவும், சுத்த சத்தியத்தை அறியவும், கள்ள போதனைகளால் மற்றும் கள்ளச் சகோதரர்களால் பாதியாமலும் இருக்க அவர்களுக்கு இடைவிடாமல் போதிக்கப்பட வேண்டியது மிக அவசியம். அஸ்திபார உபதேசங்களில் வளரவும், வேதத்தின் மகத்துவங்களை அறிந்து அதை பிறர்க்கு எடுத்துரைக்கவும், தாழ்மைப்படவும் உபதேசம் தேவை.

விசுவாசிகள் அக்கினியாக இருக்க வேண்டுமானால் அவர்களை உபதேசத்தில் அனலாக எப்போதும் வைத்திருக்க வேண்டும். கர்த்தருடைய உபதேசங்களை விட்டு, வலதுபுறமாவது, இடதுபுறமாவது வழிவிலகாமலிருக்க உபதேசம் அவர்களை காத்துகொள்ளும். ஒரு விறகு அடுப்பில் அக்கினி எரிந்து கொண்டிருக்கும்போது, அதிலிருக்கும் தழல் அக்கினி தழலாகக் காணப்படும். தழலை அடுப்பை விட்டு எடுத்து வெளியே வைத்துவிட்டால் சிறிது நேரத்தில் அது கரிக்கட்டையாகி விடும். அதுபோல ஒரு விசுவாசி எப்போதும் கர்த்தருடைய உபதேசத்தில் நிலைத்திருக்கிற வரைக்கும்தான் அக்கினியாக காணப்படுவார்கள். கர்த்தருடைய உபதேசத்தைவிட்டு எப்போது வழிவிலகுகிறார்களோ… அப்போதிலிருந்து அவர்கள் அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல் ஒரு வெதுவெதுப்பான நிலைமைக்கு ஆளாகிறார்கள். அப்படி இருந்தால் ஆவியானவர் அப்படிப்பட்டவர்களை வாந்திபண்ணிப் போடுவேன் என்கிறார். எனவே, ஒரு போதகர், தன் சபை மக்களுக்கு எப்பொழுதும் கர்த்தருடைய உபதேசத்திலே நிலைத்திருக்க இடைவிடாமல் உபதேசம் செய்யவேண்டும் என வேதம் கூறுகிறது.

7. இடைவிடாமல் ஊழியத்தில் தரித்திரு:

அப்போஸ்தலர்: 6:4 – “நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்”
இரண்டு விஷயங்களில் உறுதியாய் அப்போஸ்தலர்கள் தரித்திருந்தார்கள். 1. ஜெபம் பண்ணுவதில் 2. போதிக்கிற ஊழியத்தில். இக்காலத்தில் உள்ள தேவஜனங்கள் – இது தேவஊழியர்களுடைய வேலை என்று அஜாக்கிரதையாய் இருந்துவிடலாகாது. ஒரு குடும்பத்தில் தாயும் தகப்பனும் இணைந்து செயல்பட்டு குடும்பத்தைக் காப்பதுபோல, ஊழியனும் மக்களும் இணைந்து செயல்படும்போது எழுப்புதல் ஏற்படும்.

8. இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்:

கொலோசெயர்: 4:2 – “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்”.
1தெசலோனிக்கேயர்: 5:17 – “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்”

நாம் தேவனோடு தொடர்பு கொள்ளும் சாதனங்களில் ஒன்று ஜெபம். தேவனோடு பேச உதவுவது ஜெபம். இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும் என்று வேதம் மிகவும் வலியுறுத்துகிறது. தேவனோடு பேசுவதை நிறுத்தி விட்டால் … உலகம், மாமிசம், பிசாசு நம்மோடு பேச ஆரம்பித்து விடுவான்.

உலகம் பேசினால் – பூமிக்குரிய கீழானவைகளை போதிக்கும். அசுத்தமானவைகளை, அபத்தமானவைகளை, இழிவானவைகளை நாட போதிக்கும்.
மாமிசம் பேசினால் – மாம்சத்தின் கிரியைகளை போதிக்கும்.
பிசாசு பேசினால் – ஆயுள் சக்கரத்தையே அழித்து விடுவான்.
அப்படியானால் … நீங்கள் யாரோடு பேச விருப்பமாயிருக்கிறீர்கள் என்பதை தாமதமின்றி உடனே முடிவு செய்யுங்கள்.

     9. இடைவிடாமல் நினைவுகூறு:

யாத்திராகமம்: 12:14 – “அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக்கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள்”
யாத்திராகமம்: 12:11 – “… கர்த்தருடைய பஸ்கா”  யாத்திராகமம்: 12:17 – “புளிப்பில்லா அப்பப்பண்டிகை”

பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்ட நாளை நினைகூர்ந்து வருடந்தோறும் அதை ஆசரிக்க வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டார். அது பஸ்கா என்றும், புளிப்பில்லா அப்பப்பண்டிகை என்றும் அழைக்கப்பட்டது. இதை அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் நினைவுகூர வேண்டும் என்ற கட்டளையை தேவனிடத்தில் பெற்றிருந்தனர்.

புதிய ஏற்பாட்டிலோ… கிறிஸ்து இயேசுவால் மீட்கப்பட்டவர்கள் யாவரும், அவரது மரணத்தை நினைவுகூறும் வகையில் நற்கருணை அல்லது திருவிருந்து என்று சொல்லப்படக்கூடிய கர்த்தருடைய பந்தியை ஆசரிக்க வேண்டும் என்பது கிறிஸ்துவின் கட்டளை. கிறிஸ்தேசுவின் மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும், இரட்சிக்கப்பட்ட அனைவரும் அல்லது ஒவ்வொருவரும் சாட்சியாயிருக்கிறார்கள்.

அவர் என் அக்கிரமங்களுக்காக மரித்தார்; என் மீறுதலுக்காக காயப்பட்டார்; என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டார்; எனக்காக அவர் அடக்கம் பண்ணப்பட்டார்; எனக்காகவே அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் எனக்காகவே மீண்டும் வருவேன் என்று வாக்குரைத்திருக்கிறார் என்பதை நாம் இடைவிடாமல் நினைவுகூர வேண்டும். அவர் வருமளவும் அவரது மரணத்தை நாம் நினைவுகூர வேண்டும் (1கொரிந்தியர்: 11:23-33).

10. தேவமனிதர்கள் இடைவிடாமல் நினைவுகூர வேண்டியவைகள்:

தேவமனிதர்கள் இடைவிடாமல் நினைவுகூர வேண்டியவைகள் என்னென்ன என்பதையும், தான் எதையெல்லாம் நினைவுகூறுகிறேனென்றும் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுவதை கீழே நாம் காண்போம்.

அ) எபேசியர்: 1:16 – “இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து,”; 1தெசலோனிக்கேயர்: 1:4 – “எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.”
ஆ) கொலோசெயர்: 1:9 – “… நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம் …”
இ) 1தெசலோனிக்கேயர்: 1:2 – “தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகியஇயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து,”
ஈ) 1தெசலோனிக்கேயர்: 2:13 – “ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; “.

மேற்கண்ட பவுலின் வார்த்தைகள் நமக்கு எதைச் சுட்டிக் காட்டுகிறது? ஒரு தேவமனிதன் தன் கையில் தேவன் தந்திருக்கிற ஆத்துமாக்களுக்காக எந்தளவிற்கு பாரமெடுக்க வேண்டும். ஆத்துமாக்களுக்காக எவ்வளவு நன்றியுடையவனாய், நேசிக்கிறவனாய், ஜெபிக்கிறவனாய், தேவனுக்கு முன்பாக அவர்களை நினைவுகூறுபவனாய் இருக்க வேண்டும் என்பதையே நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.

மார்ப்பதக்கம்:  
                                                    
பழைய ஏற்பாட்டிலும் தேவனாகிய கர்த்தர் இதைக்குறித்து எவ்வளவு அழகாக செய்து காண்பித்துள்ளார் என்பதை பிரதான ஆசாரியனின் மார்பில் இருக்கும் மார்ப்பதக்கம் நமக்கு விளங்கப்பண்ணுவதை நாம் காணலாம்.

யாத்திராகமம்: 39:8-14 – “மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி, அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது. இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றிலும் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது”.

யாத்திராகமம்: 28:29 – “ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலேகர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.”

யாத்திராகமம்: 28:30 – “நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.”

மார்ப்பதக்கம் சொல்லும் சத்தியம்:

இஸ்ரவேல் புத்திரர் எவ்வளவுபேர் இருந்தாலும் அவர்கள் பன்னிரண்டு கோத்திரத்திற்குள் அடக்கம். அந்த பன்னிரண்டு கோத்திரத்தாரின் நாமம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கல் வீதம் பன்னிரண்டு கற்கள் முத்திரை வெட்டாய் வெட்டி மார்ப்பதக்கத்தில் பதிக்கப்பட்டிருந்தது. அது ஆசாரியனின் மார்பில் அதாவது இருதயத்தின்மேல் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கிற போதெல்லாம் எப்போதும் இருக்கும் வண்ணம் அதை அணிந்திருக்க வேண்டும். இது எதைக் காட்டுகிறது? ஒரு ஊழியன் கர்த்தருடைய சமூகத்தில் வரும்பொதெல்லாம் தேவஜனத்தை இருதயத்திலே சுமந்து சென்று அவர்களுக்காக நினைவுகூர்ந்து எப்போதும் ஜெபிக்கிறவனாய் காணப்படவேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

நாம் இதுவரை பத்து காரியங்களைக் கண்டோம். தேவன் விரும்புகிற இடைவிடாமல் செய்ய வேண்டிய காரியங்கள் என்னென்னவென்று நாம் தியானித்தோம். இவைகளின்படி செய்ய நாம் தீர்மானிப்போம்.

கர்த்தருடைய நாளில் அதற்குரிய பலனை நாம் அறுவடை செய்வோம். கர்த்தர் தாமே இதை பொறுமையோடு வாசித்து தியானித்த உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென்! அல்லேலூயா!

நம் தளத்தில் வரும் தேவசெய்திகள் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால்… இத்தளத்தில் உங்களை இணைத்துக் கொள்ளலாம். அல்லது பிறருக்கு அறிமுகம் செய்யலாம். நன்றி!

ஜனவரி 26, 2018

“தேவசாயல்”

“இயேசுவின் சாயலைத் தரிப்போம்” (அ) “தேவசாயல்”

திறவுகோல்வசனம்: சங்கீதம்: 17:15 – “நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்”

விழிப்பில் இருவகை: 1. தூக்கத்திலிருந்து விழித்தல் 2. மரண நித்திரையிலிருந்து விழித்தல்

எப்படி விழித்தாலும் ஒவ்வொரு நாளும் அவரது சாயலோட நாம் விழிக்க வேண்டும். முதல் விழிப்பில் அவரது சாயலை தரித்துக் கொள்ள வாஞ்சித்து விழிக்க வேண்டும். இரண்டாவது விழிப்பில் நாம் அவரது சாயலை தரித்தவர்களாய் விழிக்க வேண்டும்.

இன்றைய உலகில் வாலிபர்கள் கிரிக்கெட் வீரர்களைப்போல, நடிகர்களைப்போல சிகையலங்காரம் செய்து கொள்கின்றனர். நடை, உடை, பாவனைகளில் அவர்களது சாயலை தங்களது சரீரத்தில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைப்போல பேசவும், செய்தும் காட்டுகிறார்கள். தங்கள் செய்கைகளில் பெற்றோர்களின் சுபாவங்களை வெளிப்படுத்துகிறார்கள்.

நாமோ கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவின் சாயலை தரித்தவர்களாய், அவரது நற்கிரியைகளையும், நற்பண்புகளையும், ஆவியின் கனிகளையும் வெளிப்படுத்துகிறவர்களாய் இருப்போம்.

தேவசாயல் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கிறோமோ இல்லையோ. சாத்தான் அதை நன்கு அறிந்தவனாயிருக்கிறான். கடவுளின் உன்னதப்படைப்பாகிய மனிதன் அவரது சாயலை உடையவனாயிருப்பது சாத்தானுக்கு கடுமையான கோபமும் வெறுப்புணர்வும் கொண்டு வருகிறது. காரணம் … சாத்தான் தேவமகிமையை, தேவபிரசன்னத்தை, தேவசாயலை இழந்தவனாய் இருக்கிறான். தன்னைப்போல மனிதனும் இவைகளை இழந்தவனாக காணப்பட வேண்டும் என்பதே அவனது விருப்பம். நம்மை வெறுக்கவும் அழிக்கவும் காரணமும் அதுதான். நம்மை அவன் காணும்போதெல்லாம் தேவசாயலை காண்கிறான். ஆகவே, அச்சாயலை நம்மிலிருந்து அழித்து அவர்களில் ஒருவனாக நம்மை மாற்ற விரும்புகிறான்.

நாம் ஏன் இயேசுவின் சாயலை தரிக்க வேண்டும்? இப்பொழுது இருக்கிற சாயலில் என்ன குறைபாடு? என்பதைப் பற்றி நாம் விரிவாக தியானிப்போம் வாருங்கள்.

வேதம் சொல்லும் சாயல்கள்:

மனிதனை தேவன் படைக்கும்போது அவனை தன் சாயலாகவே அதாவது தேவசாயலாகவே படைத்தார். ரூபமும் அதாவது சரீர அமைப்பும் தேவனுடைய ரூபமாகவே படைத்தார். தேவன் படைத்த சாயலை, அடையாளத்தை சாத்தான் ஒரு பக்கம், மனிதன் மறுபக்கமாக சேர்ந்து அடையாளத்தையும், சாயலையும் மாற்றப்பார்க்கிறார்கள். அல்லது மாற்றி விடுகிறார்கள். தேவனும் வேதமும் நமக்கு கொடுக்கும் சாயல் ஒன்றே ஒன்று மட்டும்தான். அது தேவசாயல். வேதத்தில் உள்ள மற்ற சாயல்கள் யார் கொடுத்தது? வேதம் சொல்லும் சாயல்கள் யாரால் எப்படி வந்தது?

1.   தேவசாயல்:

ஆதியாகமம்: 1:26,27 – “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக…” ; “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்…” என்னே தேவனின் அன்பு?! அனைத்து சிருஷ்டிகளையும் அவர் எண்ணப்படி  அல்லது அவர் மனதில் இருந்ததின்படி சிருஷ்டித்தார். ஆனால், மனிதனையோ அவரது சித்தப்படி – அவரது சாயலாகவும், அவரது ரூபமாகவும் உண்டாக்கினார். அவரது சிருஷ்டிப்பிலே உயர்ந்தது எது என்று சொன்னால் … மனிதனே!

2.   மனித சாயல்:

அ) ஆதியாகமம்: 2:21-23 – “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்”.

1கொரிந்தியர்: 11:7 – “புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்”

ஆ) ஆதியாகமம்: 5:3 – “ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான்”.

3.   விக்கிரக சாயல்:

உபாகமம்: 4:23 – “நீங்களோ உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்”.

2பேதுரு: 2:19,20 – “… எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.

கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளால் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்”.
விக்கிரகத்துக்கு ஒருவன் அடிமைப்பட்டால், அவன் விக்கிரகசாயலை தரித்தவனாகிறான்.

4.   மூலவியாதியின் சாயல்:

1சாமுவேல்: 6:4 – “…பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்” தேசத்தில் கர்த்தருடைய மகிமையை பாகலுக்கு ஈடாக கீழ்ப்படுத்த நினைப்பவர்களுக்கு வரும் சாயல். மூலவியாதியின் சாயல் என்பது – வாதையின் வலியையும் வலிமையையும் காண்பிக்கிறதாய் இருக்கிறது.

ரோமர்: 1:23 – “அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்”

5.   மாட்டின் சாயல்:

சங்கீதம்: 106:19,20 –  “அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள்” ; “தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள்”. கோமாதா என்றும், காமதேனு என்று மாற்றி கோமியத்தை நிவாரணி என குடித்து தங்களை மாட்டின் சாயலாக மாற்றுகிறார்கள்.

வேதம் சொல்லும் ஐந்து சாயல்களில் முதல் சாயலாகிய தேவசாயலைத் தவிர்த்து, மீதமுள்ள நான்கு சாயல்களும் பாவத்தினால் வந்த சாயல்களாகும். பாவத்தின் சாயல்கள்: மனித சாயல், விக்கிரக சாயல், மூலவியாதியின் சாயல், மாட்டின் சாயல் ஆகியவை. இந்நான்கும் சேர்ந்த சாயல்தான் “பாவ மாம்ச சாயல்” என வேதம் சொல்கிறது.

v  மனிதனை தேவன் படைக்கும்போது பாவ மாம்ச சாயலாக படைக்கவில்லை. அவனைத் தேவசாயலாகவே படைத்தார். தேவசாயலாக இருந்த மனிதனை பாவ மாம்ச சாயலாக மாற்றியவன் பிசாசு. பிசாசினால் வந்த பாவ மாம்ச சாயலை மீண்டும் தேவசாயலாக மாற்ற தேவன் சித்தங்கொண்டார்.

ரோமர்: 8:3 – “…மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி,”

பாவ மாம்சத்தின் சாயலாக மாற வேண்டிய அவசியம் யாரால் ஏற்பட்டது? பிதாவினாலா? மனிதனாலா? பதில்: “மனிதனே”

தேவசாயலை இழந்த, மனித சாயல் எப்படிப்பட்டது?

அ) வெறுமையானது  ஆ) அடிமைத்தனமானது – தேவசாயலை இழந்த மனிதனின் நிலை இப்படித்தான் இருக்கும். வெறுமையான மனிதன் ஒழுங்கற்றவனாவான். ஒழுங்கற்ற செயலுக்கு அதிபதி சாத்தான். ஆகவே, ஒழுங்கற்ற நிலை மனிதனை சாத்தானுக்கு அடிமையாக்கும். இப்படி பாவத்திற்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் மனிதனை மீட்கவே, இயேசு, “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலிப்பியர்: 2:7) என்று வேதம் கூறுகிறது.

பாவ மாம்ச சாயலை நீக்குவது எப்படி?

2கொரிந்தியர்: 3:18 – “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்”

“கண்ணாடி” என்பது பரிசுத்த வேதாகமத்தைக் குறிக்கிறது. கர்த்தருடைய மகிமையின் சாயலை வேதத்தின் வழியே அதாவது வேத வசனத்தின் வழியே கண்டு, தேவன் விரும்புகிற சாயலாக மாறி மறுரூபப்பட வேண்டும் என வேதம் கூறுகிறது.

மாறாக, “ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்” (யாக்கோபு: 1:23,24). தேவசாயலையும் அவன் இழக்க நேரிடும் என்று வேதம் கூறுகிறது.

எனவே, பாவ மாம்ச சாயலை நீக்க, முதலில் வேதவசனத்தின் மூலம் மறுரூபப்பட வேண்டும்.

இரண்டாவதாக, ரோமர்: 8:10 – “மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால், சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்”.

கிறிஸ்து இயேசுவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, நமது பாவ மாம்ச சரீரம் மரித்து, நீதியின் அவயவயங்களாய் மாறுகிறது.
ரோமர்: 6:13 – “நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்”.

எபேசியர்: 5:30 – “நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்”

தேவசாயல் நமக்குள் எப்படி பெலன் செய்கிறது?

அ) 2கொரிந்தியர்: 4:4 – “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி …”.

சுவிஷேசத்தில் தேவசாயலை கர்த்தர் வைத்திருக்கிறார்.

 இயேசுகிறிஸ்துவைப் பற்றிய மகிமையான சுவிஷேசத்தை யார் ஒருவர் கேட்டு விசுவாசிக்கிறாரோ … அவர் அந்த மகிமையான சுவிஷேத்தின் ஒளியால் தேவசாயலைப் பெறுகிறார். ஆகவேதான், சாத்தான் எந்த ஒரு மனிதனும் இரட்சிக்கப்படக்கூடாதபடிக்கு, ஜனங்களின் மனதை குருடாக்கி வைத்துள்ளான் என்று வேதம் கூறுகிறது.

2கொரிந்தியர்: 4:4 – “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்”.

ஆ) எபேசியர்: 4:24 – “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்”.

1. மெய்யான நீதி  2. பரிசுத்தம் – இவ்விரண்டும் தேவசாயலுக்குள் மறைந்துள்ளது. நம்முடைய நீதிகள் அழுக்கான கந்தை என்று வேதம் சொல்கிறது. ஏசாயா: 64:6 – “… நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது …”. தேவனுடைய நீதியே நிலைத்திருக்கும் நீதி.

ரோமர்: 1:17 – “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது”

ரோமர்: 3:22 – “… இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும் … ”

1பேதுரு: 1:16 – “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் …” தேவசாயலானது நமக்கு தேவனுடைய நீதியையும், தேவன் விரும்பும் பரிசுத்தத்தையும் தருகிறது.

இ) சங்கீதம்: 68:13 – “நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்”.

இந்த வசனத்தை சகோதரிகளுக்கு ஒப்பிட்டுப் பேசாத பிரசங்கிமார்களே கிடையாது எனலாம். ஆனால், இன்று சகோதரிகளைவிட, சகோதரர்கள் தான் வீட்டிலும், உணவு விடுதிகளிலும் பெரும்பாலும் அடுப்பினடியில் கிடக்கிறார்கள். கிறிஸ்துவுக்குள் ஆணென்றுமில்லை, பெண்ணென்றுமில்லை.

எனவே, அடுப்பினடியில் கிடக்கிற விசுவாசமார்க்கத்தார் யாராயிருந்தாலும் சரி. அவர்கள் வெள்ளியினால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பார்கள் என்று வேதம் சொல்கிறது.

வெள்ளி – வேதவசனத்தையும், பசும்பொன் – ஞானம் மற்றும் விசுவாசத்தையும் காட்டுகிறது.

நீதிமொழிகள்: 10:20 – “நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி …”.

தேவசாயலுடைய மனிதனின் நாவு சுத்த சுவிஷேசத்தை, வசனத்தை இன்பமாய் வசனிப்பான்.

பசும்பொன்னுக்கு ஒப்பான ஞானத்தை உடையவனாக இருப்பான் (நீதிமொழிகள்: 8:10).

இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்கிறோம்?

தேவசாயல் நமக்கு கொடுக்கிற பெலன், அடையாளம், தெய்வீக சுபாவம் இதில் அடங்கியுள்ளதையும், அது நமக்குள் பெலன் செய்கிறது என்பதனையும் அறிந்துகொள்ள நம்மால் முடிகிறது.

நாம் ஏன் தேவசாயலாக மாற வேண்டும்?

தேவசாயலாக மாறா விட்டால் … உயிர்த்தெழுதலின் சாயல் நமக்கு அறவே கிடையாது என்பதை நாம் அறிவோமாக. தேவசாயல் இல்லாவிடின் பாவ மாம்ச சாயல்தானே மீதம் இருக்கும். பாவ மாம்ச சாயல் எவ்விதம் நம்மை இயேசுவின் இரண்டாம் வருகையில் நம்மை உயிர்பெறச்செய்யும்? தேவசாயலாக மாறி, தேவனோடு இருக்கச் செய்வதுதானே தேவனுடைய சித்தம். அதற்காகத்தானே இயேசு வந்தார்.

ரோமர்: 6:5 – “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்”.

அவரது மரணத்தின் சாயலில் எப்படி இணைக்கப்படுவது?

ஞானஸ்நானத்தின் மூலமாக அவரது மரணத்தின் சாயலைப் பெறுகிறோம்.

கொலோசெயர்: 1:22,23 – “முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும்”.

கொலோசெயர்: 2:6,7 – “ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக.”

கொலோசெயர்: 2:12 – “ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்”.

பிசாசு ஒவ்வொருநாளும் நம்மை பாவ மாம்ச சாயலாக மாற்ற விரும்புகிறான். நாமோ அனுதினமும் தேவசாயலாக மாற விரும்புகிறோம். நாம் தேவசாயலாக மாறிடவும், தேவசாயலில் நிலைத்திருக்கவும், நாம் விழிக்கும் ஒவ்வொரு நாளிலும் அவரது சாயலால் திருப்தியடையத்தக்கதாக அவரைத் தேட வேண்டும்.

 ஜெபத்திலும், வேதவாசிப்பிலும், உபவாசித்து அவரைத் தேட வேண்டும். நாம் விழிக்கும்போது “தேவசாயலாக இன்று மாற வேண்டும்” என்கிற சிந்தையோடே விழிப்போம். ஆமென்! அல்லேலூயா!