அக்டோபர் 22, 2016

வரும் ஆபத்துகளிலிருந்து தப்புவது எப்படி?

Image result for Rev:12:12

 வரும் ஆபத்துகளிலிருந்து தப்புவது எப்படி?

திறவுகோல் வசனம்: வெளி: 12:12 – “… ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும் என்று சொல்லக்கேட்டேன்”

சாத்தான் ஆதிமுதற்கொண்டு மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான் என்று வேதம் சொல்கிறது. பழைய ஏற்பாட்டுக்காலங்களில் வேதபுருசர்களுக்கு பல்வேறுவிதமான சோதனைகளை கொடுத்து அழிக்க நினைத்தான். அதிலிருந்து தப்பும்படி,  தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்தார்.

அவனது கோபம் இப்புதிய ஏற்பாட்டுக்காலங்களில் இன்னும் அதிகமாக தீவிரமடைந்திருக்கிறது. காரணம்? அவனுக்கு  இன்னும் கொஞ்சகாலம் மாத்திரம் உண்டென்பதை அறிந்தபடியால்... அழிவை அதிவேகப்படுத்த முனைகிறதை நாம் அறிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் சாத்தானால் மோசம் போகாதபடிக்கும், அழிவிலிருந்து தப்பும்படிக்கும் நம்மைக் காத்துக்கொள்ள இயலும்.

பழைய ஏற்பாட்டின் நாட்களிலும் சரி, புதிய ஏற்பாட்டு நாட்களிலும் சரி... சாத்தானின் சோதனைகள், அழிவுகளின் அளவுகளில் மாற்றமில்லை. வழிமுறைகளிலும் மாற்றமில்லை என்பதை வேதம் நமக்கு சுட்டிக்காட்டுகிறதை கவனமாய் வாசித்து அறிய வேண்டியது  மிக அவசியம். (பிரசங்கி: 1:1-11 ; மத்தேயு: 24:37-39 வாசித்துப் பாருங்கள்).

 பிரசங்கி: 1:9 - "முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக்கீழே நூதனமானது ஒன்றுமில்லை".

மத்தேயு: 24:39 - "ஜலப்பிரளயம் வந்து அனைவரையும்  வாரிக் கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.

ஒருகூட்டமக்கள் தங்கள் அறியாமையினாலே ... யாரிடத்திலிருந்து  எவைகளிடத்திலிருந்து ஆபத்து வருமோ... அதனிடத்திலேயே போய் தஞ்சமடைவதும், சேவிப்பதுமாயிருக்கிறதை நாம் இந்நாட்களில் புறஜாதிகள் நடுவிலே காண்கிறோம். இவையெல்லாம் நோவாவின் நாட்களில் நடந்ததுபோலத்தான் இனியும் நடக்கும் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. உணராதிருந்தார்கள். அறியாதிருந்தார்கள்.

பிசாசின் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும், அவனது தாக்குதல் முறைகளையும் நாம் அறிந்திருந்தால்தான் அவைகளிலிருந்து தப்பிக் கொள்ள முடியும்.

இப்புதிய ஏற்பாட்டு நாட்களில் பிசாசின் தந்திரங்களிலிருந்தும், சூழ்ச்சிகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள தேவனாகிய கர்த்தர் நமக்கு சர்வாயுவர்க்கத்தை (எபேசியர்: 6:10-17) கொடுத்திருக்கிறார். அதை நீங்கள் விவேகமாக எடுத்துக்கொள்வதும், எடுத்துக்கொள்ளாததும் உங்கள் விருப்பம்.

நீதிமொழிகள்: 22:3 - "விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்". நாம் விவேகமாய் (ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திற்குள்)  நம்மை மறைத்துக்கொண்டு நம்மைக் காத்துக்கொள்வதில் கவனமாயிருப்பது எப்படி என்பதையும், அவனது தாக்குதல்கள் எப்படிப்பட்டது என்பதையும் தியானிப்போம் வாருங்கள்.

1.   நடைபிணமாக்குதல்:

நியாயாதிபதிகள்: 1:7 – “அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமுக்கு கொண்டு போனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்”.

ஒரு அரசன் இன்னொரு நாட்டைக் கைப்பற்றும்போது, எதிரிநாட்டு அரசனை கைது செய்து பாதாளச்சிறையில் போட வேண்டும். இல்லையென்றால், கைப்பற்றிய நாட்டை திரும்ப அவனுக்கே கொடுத்துவிட்டு, தனக்கு மாதம்தோறும் அல்லது வருசந்தோறும் கப்பம் கட்டச் சொல்ல வேண்டும். அதுவும் இல்லையென்றால், சிரச்சேதம் பண்ண வேண்டும். அதுதான் உலகம் முழுவதும் பின்பற்றி வரும் அரசகட்டளை மற்றும் விதிமுறைகள்.

ஆனால், இங்கு என்ன நடக்கிறது? அதோனிபேசேக் செய்வது என்ன? 70 ராஜாக்களின் கைகால் பெரு விரல்களை தறிக்கச்செய்து, மேஜையின் கீழ்விழும் துணிக்கைகளை நாய்தான் பொறுக்கித்தின்னும். அதை 70 ராஜாக்களை செய்ய வைத்து இழிவுபடுத்தி, அவமதிப்புக்குள்ளாக்குகிறான்.

கை, கால்களில் பெருவிரல்கள் இல்லையென்றால் …

-     அம்பை நாணேற்ற முடியாது
-     உணவை அள்ளி உண்ண முடியாது
-     காலூன்றி நிற்கவோ, நடக்கவோ முடியாது
-     எழுதுகோல் பிடித்து எழுத இயலாது
-     வாழ்நாள் முழுவதும் சித்ரவதைதான்.

மொத்தத்தில் நடைபிணமான வாழ்வுதான். சாத்தான் இதை செய்யவே விரும்புகிறான்.

2.   நிந்தையை வரப்பண்ணுதல்:

1சாமுவேல்: 11:2 – “அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தையை வரப் பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்”.

முதலில் கண்களை பிடுங்கி – தரிசனத்தை இழக்கச் செய்தல்
பின்பு, நிந்தையை வரப்பண்ணுதல்

நியாயாதிபதிகள்: 16:21, 25 – சிம்சோன் கண்களை தறித்து மாவரைக்கச் செய்தனர்.

மொத்தத்தில் செயல்பட விடாமல் முடக்கி வைப்பதே சாத்தானின் சதித்திட்டம்.

மனிதன் தனக்காகவோ, தேவனுக்காகவோ செயல்பட்டுவிடக்கூடாது என்பதில் சாத்தான் எவ்வளவு கவனமாயிருக்கிறான் என்று பாருங்கள்.

3.   பயமுறுத்துதல்:

1சாமுவேல்: 17:16, 24 – “அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்து வந்து நிற்பான்”. “இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்”.

-     கோலியாத்தின் ஆயுதங்கள், தோற்றம், வாய் சவடாலை கண்டு, இஸ்ரவேலரின் மாபெரும் சேனை பயந்தது.

-     வெறும் வாய் சவடாலினால் 40 நாள் பயமுறுத்தி அசைய விடாமல் கட்டிப் போட்டிருந்தான் கோலியாத்.

கர்த்தரை சார்ந்திருக்க வேண்டிய சேனை - அச்சுறுத்தலுக்கு ஆளாகி, நாற்பது நாட்களை வீணாக்கிக் கொண்டிருக்கிறது. விசுவாச வீரன் தாவீது வரும்வரை விடுதலையில்லை. இன்னும் 40 நாள் சென்றாலும் இதேநிலைதானே ஒழிய, ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை.

கர்த்தரை சார்ந்திருந்தால் ... நாற்பது நாள் அல்ல... நான்கு நிமிடத்தில் முடிந்திருக்கும். நான்கு நிமிடத்தில் முடிய வேண்டிய ஒரு வேலையை 40 நாள் இழுத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

கர்த்தருடைய அபிஷேகமும், தாவீதின் விசுவாசமும் ஒன்று சேரும்போது ஏற்படும் வல்லமையை கண்டீர்களா?! இதை அறியாமல்தான் இஸ்ரவேலின் சேனை அச்சுறுத்தலுக்கு ஆளாகி 40 நாளை வீணடித்துக் கொண்டிருந்தார்கள்.

கர்த்தருடைய அபிஷேகத்தையும், அவரைச் சார்ந்திருக்கிற விசுவாசத்தினால் வெளிப்படும் ஆற்றலையும் இஸ்ரவேலின் சேனை முழுவதும் அறியச் செய்வதே தாவீது என்னும் மேய்ப்பனின் நோக்கம்.

அந்த நோக்கத்தை நிறைவேற்ற அர்ப்பணிக்கும்போது தேவன் எவரையும் எடுத்து பயன்படுத்துவார் என்பதை நாம் அறிந்திட வேண்டும்.

தேவனாகிய கர்த்தரோ … 1சாமுவேல்: 17:47 – “கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக் கொடுப்பார் என்றான்”.

விஷயம் இதுதான்… மாபெரும் சேனையினால் முடியாததை சிறு பொடியனாலும், சிறு கல்லினாலும் செய்ய வல்லவர் – என்பதை அனைவரும் அறிய வேண்டும். மனுஷரால் கூடாதது தேவனாலே கூடும்.

4.   பழிவாங்குதல்:

2சாமுவேல்: 21:16 – “அப்பொழுது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக் கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்ட வேண்டும் என்று இருந்தான்”.

இஸ்ரவேலின் மேய்ப்பனாகிய தாவீதை எதற்காக வெட்ட வேண்டும்?

சகரியா: 13:7 – “…மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்…”(மத்தேயு: 26:31).

தாவீது கர்த்தருடைய இருதயத்திற்கேற்ற மேய்ப்பனாயிருந்தான். தன் ஆடுகளை சிங்கத்திடமிருந்தும், கரடியினிடமிருந்தும் காத்தது  போல இஸ்ரவேலை காத்தும், மேய்த்தும் வந்தான்.

சவுல், இஸ்ரவேலை காப்பதற்கு பதிலாக, தன் பதவியைக் காத்துக்கொள்வதில்தான் அதிக கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டான். பதவியைக் காத்துக்கொள்ள சாமுவேலின் சால்வையைக் கிழித்துப் போட்டான். தன் பதவியைக் காத்துக்கொள்ள,  தாவீதை கொலை செய்ய முழு இராணுவத்தையே தேடும்படி பணித்தான். ஒரு அரசனுக்கு இதுவா வேலை? இதற்காகவா தேவனாகிய கர்த்தர் இவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்?! அதை உணர்த்தவே தாவீது சவுலைப் பார்த்து சொல்கிறான்: "ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியை தேடவா வந்தீர்?" (1சாமுவேல்: 24:14)  என்கிறான்.

ராஜா நாட்டை பரிபாலனம் செய்து, எதிரிகளிடமிருந்து நாட்டைக் காக்க, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து, வேண்டாத காரியங்களெல்லாம் செய்கிறான். எனவே, இவன் இஸ்ரவேலை மேய்க்கும் தகுதியை இழந்து விட்டான். தாவீது அதை மேய்க்கும் மேய்ப்பனாகிற பொறுப்பை அடைந்தான்.

 தாவீது இப்பொழுது இஸ்ரவேலின் மேய்ப்பன். எனவே, மேய்ப்பனை வெட்டினால்... இஸ்ரவேல் என்னும் மந்தை சிதறிப்போகும் என்பதை சாத்தான் நன்கு அறிவான். எனவே, தாவீதை வெட்டுவதற்கு கோலியாத்தின் சகோதரரரில் ஒருவனாகிய இஸ்பிபெனோப் என்பவனை சாத்தான் பயன்படுத்துகிறதை பார்க்கிறோம். இவனை அபிசாய் கொன்று போட்டான்.

எதற்காக ஐந்து கற்களை தாவீது பொறுக்க வேண்டும்?

1சாமுவேல்: 17:40 – “… ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கற்களைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பையிலே போட்டு,…”

தாவீது ஒரு கல்லை உபயோகப்படுத்தி விட்டான். மீதம் நான்கு கற்களை வைத்திருக்கிறான்.

ஏனென்றால், கோலியாத்தின் சகோதரர்கள் இன்னும் நான்குபேர் மீதம் உண்டு (2சாமுவேல்: 21:22). அவர்களுக்காகவும் சேர்த்து கற்களை பொறுக்கினான்.

இது எதற்கு ஒப்பனையாக இருக்கிறதென்றால்…

எபேசியர்: 4:13 – ல் சொல்லப்பட்டுள்ள ஐந்துவித ஊழியர்களுக்கு ஒப்பனையாக இருக்கிறது. தேவனுடைய ராஜ்யத்தைக் கட்ட கர்த்தர் ஐந்துவித ஊழியர்களை ஊழியங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார். அதை அழிக்க ஐந்துவித இராட்சதர்களை சாத்தான் வைத்திருக்கிறான்.

முதல் ராட்சதனை தாவீது கொன்று போட்டான். மீதி இராட்சதர்களை அவனது சேவகர்கள் கொன்று போட்டார்கள்.

 அதுபோல … முதல் இராட்சதனாகிய சாத்தானை,  கர்த்தராகிய இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் அவன் தலையை நசுக்கி விட்டார்.

மீதி இருக்கிற இராட்சதர்களை, சபைக்கு விரோதமாக, ஊழியர்களுக்கு விரோதமாக எழும்பாதபடி,  உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபத்தினாலும், உபவாசத்தினாலும் நாம்தான் விரட்டியடிக்க வேண்டும்.

இக்கடைசி நாட்களில் சபைகளை, ஊழியங்களை, ஊழியர்களை பாழாக்குகிறவனுடைய செயல்களை முடக்கி வைக்க அபிசாய், சீப்பெக்காய், எல்க்கானான், யோனத்தான் போன்ற ஜெபிக்கும் பராக்கிரமசாலிகள் தேவை. தாவீதின் அடைப்பையில் உள்ள நான்கு கற்களை உபயோகப்படுத்தக்கூடிய பராக்கிரமசாலிகள் இந்நாட்களில் எழும்ப ஜெபிப்பீர்களா?!

 ஐந்து இராட்சதர்களின் சுபாவங்கள்: (2சாமுவேல்: 21:16-22)

 இக்காலங்களில் நடந்து வரும் ஊழியங்களை, அதை செய்து வரும் ஊழியர்களை சாத்தான் சேதப்படுத்த ஐந்து இராட்சதர்களின் சுபாவங்களை பயன்படுத்த முனைகிறான். அதிலிருந்து ஊழியங்களையும், ஊழியர்களையும் தேவனாகிய கர்த்தர் தற்காக்கும்படியாக  ஜெபிக்க வேண்டியது நமது கடமையாயிருக்கிறது.

1.   கோலியாத்தை தாவீது கொன்றான் – (1சாமுவேல்: 17:50,51) - அழிப்பவன்
2.   இஸ்பிபெனோப் – அபிசாய் கொன்றான் – 2சாமுவேல்: 21:17 – பழிக்குப்பழி வாங்குபவன்
3.   சாப்பை – சீப்பெக்காய் கொன்றான் – 2சாமுவேல்: 21:18 - எதிரானவன்
4.   கோலியாத்தின் சகோதரனை - எல்க்கானான் கொன்றான் – 2சாமுவேல்: 21:19 - பயமுறுத்துபவன்
5.   நெட்டையான ராட்சதன் – யோனத்தான் கொன்றான் 2சாமுவேல்: 21:20,21 - நிந்திப்பவன்

பிசாசின் கூட்டத்தில் இரண்டு வகை உண்டு

1. இப்பொழுது கிரியை செய்து வரும் சாத்தானின் கூட்டம் ஒருவகை.
 2. நித்திய சங்கிலிகளினால் கட்டி வைக்கப்பட்டுள்ள சாத்தானின் கூட்டம் இன்னொரு வகை.

 யூதா: 6 வசனம் - “தங்களுடைய ஆதிமேன்மையைக்  காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்”. 

இதை கடைசி காலத்தில் சிலகாலம் கட்டவிழ்த்து விடப்போகிறார்.

வெளிப்படுத்தல்: 9:14,15 - "எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக் கேட்டேன். அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணி நேரத்திற்கும், ஒரு நாளுக்கும்,  ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்".

வெளிப்படுத்தல்: 20:3,7 – “அதற்குப் பின்பு அது கொஞ்ச காலம் விடுதலை ஆக வேண்டும்”. “அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது, சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி”.

இப்பொழுது கிரியை செய்து வரும் சாத்தானின் கூட்டத்தினால் ஏற்படும் விளைவுகளே நம்மால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

 விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகள் (கலாத்தியர்: 5:19-21) இந்நாட்களில்  ஏராளம் ஏராளமாக தாரளம் தாராளமாக,  இவ்வுலகில் சாத்தான் மனிதர்களை செய்ய வைத்துக்கொண்டிருக்கிறான்.

கடைசிநாட்களில் நித்திய சங்கிலிகளினால் கட்டப்பட்டுள்ள சாத்தானின் மற்றுமொரு கூட்டத்தை கட்டவிழ்த்தால் இந்த உலகம் என்னாகும்? என்பதை யோசித்துப் பாருங்கள்?!

அதைத்தான் வேதம் யாக்கோபுக்கு இக்கட்டுக் காலம் (எரேமியா: 30:7) என்று கூறுகிறது. அக்காலத்தை உபத்திரவகாலம் – மகா உபத்திரவ காலம் என்று நாம் கூறுகிறோம்.

வரும் ஆபத்திலிருந்து தப்புவது அல்லது ஜெயிப்பது எப்படி?

நீதிமொழிகள்: 22:3 - "விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்". நாம் விவேகமாய் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்திற்குள் நம்மை மறைத்துக்கொண்டு நம்மைக் காத்துக்கொள்வதில் கவனமாயிருப்போம்.

வெளிப்படுத்தல்: 12:11 – “மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்”.

சாத்தான் தேவஜனங்களை நடைபிணமாக்கவும், நிந்திக்கவும், பயமுறுத்தவும், பழிவாங்கவும் இக்கடைசி நாட்களில் முற்படுவான். ஏனெனில், அவனுக்கு இன்னும் கொஞ்சம் காலம் மாத்திரமே உண்டு என்பதை அவன் நன்கு அறிவான். அதனால், அநேக தொல்லைகளை தேவஜனத்திற்கு கொடுக்க  நினைப்பான்.

அதிலிருந்து தப்பித்துக்கொள்ள  நாமோ …

1.   இயேசுகிறிஸ்துவின் இரத்தம் 2. சாட்சியின் வசனம் – இவ்விரண்டையும் கொண்டு சாத்தானை ஓடஓட விரட்டி துரத்தியடிப்போம்.

"ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச்சூழ்ந்து கொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கி நிற்கி பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்" (எபிரெயர்: 12:1). வரும் ஆபத்துகளுக்கு தப்பித்துக்கொள்ள வேதத்தின் சாட்சிகள், சாட்சியின் வசனமாக நம்மை சூழ்ந்து கொண்டிருக்க, அந்த சாட்சிகளின் வசனத்தைக் கொண்டு சாத்தானை மேற்கொள்ளுவோம்.


கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.